பார்ப்பனிய நஞ்சைச் சுமந்து வரும் வார ஏடு துக்ளக்கில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.(!) அதிகாரி முருகன் என்பவர் மாற்றுத்திறனாளிகள் மீது பாய்ந்து கடித்திருக்கிறார். 30.06.2010 துக்ளக்கில் “உடல் ஊனமுற்றவர்களுக்குச் சலுகை அளிப்பது என்பது வேறு, அவர்களுக்கு அரசு வேலை அளித்து நிர்வாகத்தைச் சீர்குலைப்பது வேறு என்பதைத் தமிழக முதல்வர் உணரவேண்டும் ” என்று எழுதியிருக்கிறார். இதைக் கண்டித்துப் பார்வை யற்றோர் அமைப்புகளின் சார்பாக அனுப்பப்பட்ட கடிதமும் அடுத்த (14.7.2010) துக்ளக் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

handycapeமுன்னாள் அதிகாரி முருகன் தன்னுடைய கட்டுரையில் ஆதாரமில்லாமல் பார்வையற்ற வர்கள் மீது பழிபோட்டு, உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தந்திருப்பதை, பார்வையற்றோர் அமைப்பினர் தங்களுடைய கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அவர் அதிகாரியாக இருந்தபோது எங்கோ ஓரிடத்தில் நடந்த பிழையை, அதுவும் சரியான ஆதரங்களோடு அவரால் நிருபிக்க முடியாத ஒன்றை, ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருத்திப் பொத்தாம் பொதுவாகக் குற்றம் சுமத்தும் பொறுப்பற்ற செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

நிறைகளும், குறைகளும் கலந்திருக்கும் தன்மையுடையவர்கள்தான் மனிதர்கள். மாற்றுத் திறனாளிகளும் சராசரி மனிதர்கள்தானே! பொதுவாக மனிதர்களுக்குள்ள கோபம், தாபம், விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, பிரச்சினைகள், மனவேதனைகள் அவர்களுக்கு மட்டும் இருக்காதா அல்லது இருக்கக் கூடாதா? சமூகத்தின் புறக்காரணிகள் அவர்களையும் பாதிக்கும்தானே ? ஐ.ஏ.எஸ். படித்தவருக்கு இந்த எளிய உண்மை கூடத் தெரியாதா? ஒரு வேளை தெரிந்திருக்கலாம். பிறகு ஏன் அவரது எழுத்தில் இத்தனை காழ்ப்புணர்ச்சி ?

இந்த உலகின் சவால்களைச் சாதாரண மனிதர்களே எத்தனையோ இடர்ப்பாடுகளோடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் மாற்றுத் திறனாளிகளின் நிலையை, அவர்கள் எதிர்கொள் ளுகின்ற சவால்களை எளிதில் சொல்லிவிட முடியாது. சமூகத்தில் தங்களுடைய இருத்தலை உறுதி செய்வதற்கு மிகப்பெரிய அளவில் போராட வேண்டியிருக்கிறது. வெற்றி என்னும் இலக்கைத் தொட மலையளவு முயற்சி தேவைப்படுகிறது, மற்றவர்களைக் காட்டிலும்.

அப்படி மலையளவு முயற்சியுடன், தங்கள் (புறக்)குறைபாடுகளைப் புறந்தள்ளி, குன்றின் மேலிட்ட விளக்காகச் சுடர்விட்ட, சுடர்விட்டுக் கொண்டிருக்கிற மாற்றுத்திறனாளிகள் எத்தனை யோ பேர் நம்மிடையே இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவரைக் கூட அந்த அதிகாரி அறிந்திருக்கவில்லை போலும். பாவம் அவருடைய உலகப்பார்வை அவ்வளவு குறுகியதாக இருக்கிறது.

அவருக்குக் குறைசொல்ல கிடைத்ததோ ஒரே ஒரு நிகழ்ச்சி. ஆனால் மாற்றுத்திறனாளிகளின் திறமைக்கும், சாதனைகளுக்கும் நம்மிடம் கடந்த காலங்களிலும், நிகழ்காலத்திலும் ஓராயிரம் சான்றுகள் இருக்கின்றன.

அவற்றில் ஒருசில மட்டும்...

1980 - 90 களில் தமிழக அரசின் வேலை வாய்ப்புத் துறை உயர் அதிகாரியாக இருந்தவர் திரு. நடேசன் என்பவர். மாற்றுத்திறனாளியான இவர் தன்னுடைய பதவிக் காலத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியமைக்காகச் சாதனையா ளர் விருது பெற்றவர்.

தன்னுடைய 39 வயதில் போலியாவால் பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்த ப்ராங்ளின் டெலானோ ரூஸ்வெல்ட் நான்கு முறை அதிப ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்க அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்தார்.

நிகழ்காலத்துக்கு வருவோம்...

மாற்றுத் திறனாளிகளால் பல வேலைகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்பதைப் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறாராம், அவர் அதிகாரியாக இருந்தபோது. எனவே மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை கொடுத்தால் நிர்வாகச் சீர்கேடுகள் ஏற்படுமாம் - எச்சரிக்கிறார்.

மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய வேலை களைச் சிரமமின்றி செய்வதற்குச் சில சிறப்பு வசதிகளைச் செய்து தர வேண்டியது அரசாங் கத்தின் கடமை. இது தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இது மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச ஒப்பந்தத்திலும், அவர்களுக்கான சட்டங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிமுறை. இவற்றைக் கவனித்து ஆவன செய்ய வேண்டி யதுதான் ஒர் அதிகாரியின் கடமை. அதைவிடுத்து, தவறு செய்த பார்வையற்ற ஒரு தொழிலாளியை பணிநீக்கம் செய்த தன்னுடைய செயலை நியாயப்படுத்திப் பெருமைப்படுகின்ற (!) இவரது அறியாமையை எதில் சேர்ப்பது?

வங்கி வேலை என்பது எளிதானதன்று. அதிலும் உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு, பொறுமை, கணிதத்தில் மேதைமை, மிகச் சிறந்த நிர்வாகத் திறமை கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அப்போதுதான் கோடிகளின் மேல் நடக்கும் வங்கி நிர்வாகத்தைத் திறம்பட செலுத்திக்கொண்டு போக முடியும். அப்படிப் பட்ட வங்கிப்பணிகளிலும் மாற்றுத் திறனாளிகள் தனிமுத்திரை பதித்துக்கொண்டிருக்கின்றனர். சென்னையிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பயிற்சிக் கல்லூரி தலைவராகவும், வங்கி நிர்வாக மேலாளராகவும் பணியாற்றுகின்ற திரு. பாலகோபாலகுருப் போலியோவால் பாதிக்கப் பட்டவர். சக்ரநாற்காலியில் இருந்து கொண்டு, வங்கிப் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி ஆயிரக்கணக்கான திறமையாளர்களை உருவாக்கி வருகிறார்.

பன்முகத் திறமைகளுக்கான பயிற்சிகளை வழங்கிவரும் ஏக் பனேசியா என்ற அமைப்பின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான திரு. இளங்கோவன் பார்வையற்றவர். ஆண்டுக்குச் சராசரியாக 15 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார். பல பன்னாட்டுக் கணினி நிறுவனங்கள், வங்கிகள், தொழில் நுட்பக் கல்லூரிகள், சென்னைப் பல்கலைக்கழகம், பல பொறியியல் கல்லூரிகள் இவருடைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளன. சிறப்பான மென்பொருளின் மூலம், கைபேசி மற்றும் கணினியை மிக இயல்பாகவும், திறமையாகவும் கையாள்கிறார் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூற்றாண்டின் ஈடுஇணையற்ற இயற்பியல் துறை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ், உடலின் பாகங்கள் அனைத்தும் செயலிழந்துவிட்ட மாற்றுத் திறனாளி. அவரது ஆய்வுகளும், அறிவியல் பணிகளும் இன்றும் தொடர்கின்றன.

பார்வையற்றவரின் திறமைகள் பார்வையுள் ளவர்களுக்கு வழிகாட்டுகிற உண்மையை முருகன் ஐ.ஏ.எஸ்.க்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சென்னையிலுள்ள பி.எல். ஹானர் பயிற்சி மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகின்ற திரு. ஏழுமலை கண்பார்வையற்றவர்.

கோவையில் நீதிபதியாகப் பணியாற்றி, இப்பொழுது வேறு பிரிவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு. சக்கரவர்த்தி கண்பார்வை யற்றவர்.

இலக்கியத்துறையில் சிறந்த திறனாய்வாளராக விளங்கும் பத்திரிகையாளர் திரு. கோவை ஞானி கண்பார்வையற்றவர்.

பதிப்புத்துறையில் திரு. மனுஷ்யபுத்திரன் சக்கர நாற்காலியின் உதவியுடன் இயங்கும் ஒரு மாற்றுத்திறனாளி.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் களாகப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் திரு. விஜயகுமார் மற்றும் வெங்கடகிருஷ்ணன் இருவருமே கண்பார்வையற்றவர்கள்.

எத்தனையோ கண் பார்வையற்ற பேராசிரியர்கள் கல்விக் கண் திறக்கும் சேவைப் பணியில் சிறப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். மதுரை பாத்திமா கல்லூரியில் பேரா. பெனடிக்டா (பிரெஞ்ச் மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர்), சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேரா.செயச்சந்திரன், ஆங்கிலப் பேரா.சகாதேவன், புகழ்பெற்ற சென்னை ஐ.ஐ.டியில் டாக்டர் வீரராகவன், திருமதி. சந்திராசாய்நாத் இன்னும் எத்தனையோ மாற்றுத் திறனாளிகள் கல்வித்துறையில் சிறப்புடன் பணியாற்றுகின்றனர்.

விபத்தில் இரண்டு கைகளை இழந்துவிட்ட நிலையிலும் மனம் தளராமல் கால்களால் தேர்வு எழுதி சிறப்பு நிலையில் வெற்றி பெற்றவர்கள் எத்தனை எத்தனை பேர்.

பிறக்கும்போதே குள்ளமான கைகளோடு பிறந்த பத்மாவதி என்னும் பெண், ஐ.ஏ.எஸ் ஆவதே தன்னுடைய இலட்சியம் என்கிறார். அதற்காகச் சென்னை ஐ.ஐ.டியில் தகுதி அடிப்படையில் கிடைத்த வாய்ப்பையும் மறுத்துவிட்டு, கனவை நனவாக்க முழுமூச்சாக முயன்றுவருகிறார்.

இவர்கள் யாருமே முருகன் ஐ.ஏ.எஸ் சின் கண்களுக்குத் தெரியவில்லை போலும். அது சரி வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் புழுதி வாரித் தூற்றுவதற்கு உண்மைகள் எதற்கு?

இடஒதுக்கீடு என்று வரும்போது எப்படித் திறமை, தகுதி என்ற குருட்டுவாதத்தை முன்வைக் கிறார்களோ, அது போன்றதுதான் மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய அந்த அதிகாரியின் நிலையும்.

நலிந்த பிரிவினருக்கு அரசு செய்கின்ற நல்ல காரியங்களைக் கூட இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்ன செய்வது இருக்கின்ற இடம் அப்படி. சிந்தனையில் ஊனம் உடைய இவரைப் போன்றவர்கள் இனியாவது கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

- இரா.உமா

Pin It