மாநிலங்களவையில் அதிர்ச்சித் தகவல்

பார்ப்பனப் பிடியில் உள்ள அய்.அய்.டி. உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியல் இனப் பிரிவினருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடுகள் முழுமையாக நிரப்பப்படுவது இல்லை என்ற புள்ளி விவரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை முனைவர் பட்டத்துக்கான தேர்வுத் திட்டங்களில் பட்டியலின பழங்குடிப் பிரிவு மாணவர்கள் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் கடந்த வெள்ளிக் கிழமை (மார்ச் 6, 2020) அரசு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விவரங்கள் அடங்கியுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமுள்ள 23 அய்.அய்.டி. நிறுவனங்களில் 25007 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வுத் திட்டங்களில் சேர்க்கப்பட்டனர். இதில் பட்டியல் இனப் பிரிவு மாணவர் 9.1 சதவீதம் மட்டுமே. பழங்குடிப் பிரிவினர் 2.1 சதவீதம் மட்டுமே. இரு பிரிவினருக்கும் சேர்த்து 22.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாதியளவுகூட நிரப்பப்படவில்லை.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்டிருப்பதோ 23.2 சதவீதம்தான் மொத்த முனைவர் பட்ட ஆய்வாளர்கள் படிப்புக்கான இடங்களில் 65.6 சதவீதம் பார்ப்பன உயர்ஜாதி மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவைச் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எலமரம் கரீம் மற்றும் கே. சோமபிரசாத் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய மனித வளத் துறை அமைச்சகம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் அடங்கியுள்ளன. இத்தனைக்கும் முனைவர் பட்ட ஆய்வுக்கான இடங்கள் 20 சதவீதம் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பயன் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

முனைவர் பட்டப் படிப்புகளில் 60 சதவீதம் சென்னை, பம்பாய், டெல்லி, கான்பூர் மற்றும் காரக்பூர் அய்.அய்.டி.களில் தான் உள்ளன. ஆனால் மிகவும் பிரபலமான இந்த நிறுவனங்களில்தான் தலித் மாணவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உதாரணமாக கான்பூர் அய்.அய்.டி.யில் 1653 மாணவர்கள் முனைவர் பட்டப்படிப்புக்கு சேர்க்கப்பட்டார்கள். இதில் பழங்குடி மாணவர்கள் 11 பேர் மட்டுமே. இந்த முனைவர் ஆய்வுப் படிப்புக்கான இடங்கள் மற்ற எல்லா நிறுவனங்களையும்விட சென்னை அய்.அய்.டி.யில் தான் அதிகம். 3874 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் பட்டியல் பிரிவு மாணவர்கள் 6.4 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. முன்னணியிலுள்ள மேற்குறிப்பிட்ட 5 அய்.அய்.டி. நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு பூர்த்தி செய்யப்பட்டிருப்பது, சென்னை அய்.அய்.டி. ஒன்றில் மட்டும் தான்.

“மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவில்லை என்று நிர்வாகம் கூறுவது உண்மையல்ல. மேலும் பல தகவல்களை இது குறித்து அரசிடம் கேட்டுள்ளேன். அவைகள் கிடைத்த பிறகு நிர்வாகம் கூறுவது பொய் என்பதை அம்பலப்படுத்துவேன்” என்கிறார், கேள்வி கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சோமபிரசாத்.

அய்.அய்.டி.களில் சமூக நீதி பற்றி ஆய்வு செய்து வரும் பெங்களூரைச் சார்ந்த சித்தார்த் ஜோஷி போதுமான விண்ணப்பங்கள் வரவில்லை என்று கூறுவது உண்மைக்கு மாறானது. இடஒதுக்கீடுக்கான இடங்களை முழுமையாக நிரப்புவது நிர்வாகத்தின் சட்டப்பூர்வ கடமை என்று கூறுகிறார்.

பெரிய அய்.அய்.டி. நிறுவனங்களாக முன்னிலை யில் உள்ள பம்பாய், கான்பூர், டெல்லி, சென்னை, காரக்பூர், அய்.அய்.டி.களில் மாணவர் சேர்க்கை யிலேயே பார்ப்பபனர் உயர்ஜாதி மாணவர்களே அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்படுகிறார்கள். பம்பாய் 71.3 சதவீதம்; கான்பூர் 68.8. சதவீதம்; டெல்லி 76.5 சதவீதம்; சென்னை 64.4 சதவிதம்; கோரக்பூர் 64.9 சதவீதம்.

இந்த நிலையில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத ஒதுக்கீட்டை மோடி ஆட்சி கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Pin It