குழந்தைகளின் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் விதமாக எளிய வடிவில் ஒரு அற்புதமான அறிவியல் கதையை ஆக்கித் தந்திருக்கிறார் நமது அன்பிற்குரிய அறிவியல் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராஜன். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் வெளியீடு பதிப்பகத்தால் 30 ரூபாய் விலையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஒரு தேர்ந்த திரைப்பட இயக்குனர், இந்தக் கதையைத் திகைக்க வைக்கும் திருப்பங்களுடன் சிறந்த திரைக்கதையாக வடிவமைத்து ஒரு வெற்றிகரமான திரைப்படமாக வெளிவருவதற்கான சிறந்த கதைக் கருவும், காட்சிகளும் இந்தப் புத்தகத்தில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
காசிம், ஜோ எனும் ஜோசப், சாய் பல்லவி மூவரும் ஏழாம் வகுப்புப் படிக்கும் தோழர்கள். காசிம், ஜோ இருவரும் சொல் வேட்டையாளர்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும் கேள்விப்படும் புதுப்புதுச் சொற்களைச் சேகரித்து வேட்டையாடிக் கொண்டே இருப்பார்கள். குச்சி மிட்டாய் என்ற அடைப்பெயரைக் கொண்ட சாய் பல்லவி ஒரு கேள்வி ராணி. நீர் ஊற்று போல அவளிடம் இருந்து விதவிதமான கேள்விகள் எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். பள்ளியில் துளிர் அறிவியல் கழகம் உள்ளது. சரளா மேடமும், பாக்கியம் டீச்சரும் தான் ஒருங்கிணைப்பாளர்கள். அறிவியல் ஆசிரியர் முருகானந்தம் சார் பொறுப்பு ஆசிரியர்.
"காசிம் தன் நண்பன் ஜோ காணாமல் போனதிலிருந்து ரொம்பத் தனிமையாக உணர்ந்தான்" என்று கதையின் முதல் வரியில் தொடங்கி, ஜோ கிடைப்பானா? கிடைக்க மாட்டானா? என்ன ஆகி இருக்கும்? என்று வாசிப்பாளரைத் தொடர்ந்து பரபரப்பாக வாசிக்கத் தூண்டி கதைக்குள் இழுத்துச் சென்று விடுகிறார் ஆசிரியர்.
எப்போதும் பள்ளியிலும், வெளியிலுமாக சொல் வேட்டையாடிக் கொண்டு விளையாடுவது நண்பர்களின் விருப்பமான செயல். விடுமுறை நாள்களில் இவ்விளையாட்டு இன்னும் வேகம் எடுக்கும். நாயர் பட்டறையில், வெல்டிங், மின்சார ஆர்க், வாயுச்சுடர், மீயொலி ஈயம் போன்ற சொற்களை வேட்டையாடுவார்கள். சலீம் பாய் கசாப்புக் கடையில் 6 வகையான கத்திகளின் பெயர்களை வேட்டையாடுவார்கள். இப்படி அவர்கள் ஏராளமான சொற்களைச் சேகரித்து வைத்திருந்தார்கள்.
அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் உணவு விடுதியில் சொல் வேட்டையாடிவிட்டு வீடு திரும்பும் வழியில் மங்கிய மாலைப் பொழுதில் சுடுகாட்டில் சொல் வேட்டையாடி விளையாடிக் கொண்டிருக்கும் போது நண்பன் ஜோ காணாமல் போய்விடுகிறான். "இவ்வளவு தைரியமாக சிறுவர்கள் சுடுகாட்டுக்குச் செல்வார்களா?" என்று கேட்டு, ஆசிரியரே அதற்கு பதிலும் சொல்கிறார். "ராத்திரியும், பகலும் சொல் வேட்டையாளர்கள் செல்வார்கள். தான் இருப்பது நிலமோ, கடலோ, மழையோ, சொல் வேட்டையாளர்கள் கண்ணில், காதில் சொற்கள் சிக்கும் வரை விட மாட்டார்கள். அவர்கள் எங்கே வேண்டுமானாலும் செல்வார்கள்"
குழந்தைகளிடம் இப்படியான இயல்பூக்கங்கள் ஏராளமாக உள்ளன. அத்தகைய இயல்பூக்கங்கள் பாதிக்கப்படாமல் சுதந்திரமான சூழலில் இயல்பாக வளரும் குழந்தைகள்தான் நல்ல படைப்பாளர்களாக ஆகிறார்கள். பெரும்பான்மையாக இன்றைய வகுப்பறைகளும், வீடும் குழந்தைகளிடம் உள்ள இயல்பான ஆர்வத்தை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக அவற்றைக் காயடிக்கிற வேலையைத் தான் செய்கின்றன. இக்கதையில் வரும் குழந்தைகள் அறிவியல் மனப்பான்மையுடன் செயல்படுவதற்கு, அவர்கள் சுதந்திரமான குழந்தைகளாக வளர்கிறார்கள் என்பதுதான் காரணம்.
தவறுதலாக சுடுகாட்டில் காணாமல் போனதால், நண்பன் ஜோவைப் பேய்களிடம் பறி கொடுத்தவன் என்று காசிமை ஊர் பேசுகிறது. தர்காவுக்குச் சென்று ஓதிவிட காசிம் வீட்டில் வற்புறுத்தல். ஜோவைக் கண்டுபிடிக்க அவனது வீட்டில் ஜெபக்கூட்டம். இந்த நிலையில் "எப்படியாவது நண்பனைக் கண்டுபிடித்துக் கொடுங்கள்" என்று போலீசிடம் காசிம் கெஞ்சிக் கேட்கிறான். பழமையான நம்பிக்கைகளில் திளைத்திருக்கும் பெரியோர்களுக்கு மத்தியில், காசிம் அறிவியல் மனப்பான்மையோடு செயல்படுவதற்கு, அவனது பள்ளியில் உள்ள துளிர் அறிவியல் கழகம் துணை புரிந்திருக்கிறது.
ஒரு வழியாக 2 வாரங்களுக்குப் பிறகு, ஜோ இருக்கும் இடம் சாய் பல்லவிக்குத் தெரிகிறது. நரபலி கொடுக்கும் பூசாரிகளிடம் அவன் எப்படி சிக்கினான்? 21 ஆம் நூற்றாண்டிலும் மக்களிடம் உள்ள மூடநம்பிக்கை எந்த அளவிற்கு மோசமாக உள்ளது? ஜோ-வைக் காப்பாற்ற காசிம், சாய் பல்லவி இருவரும் செய்யும் பகீரத முயற்சிகள் என்னென்ன? இறுதியாக நண்பன் ஜோ காப்பாற்றப்பட்டானா, இல்லையா? என்பதைத் திரைப்படத்தின் பிற்பாதியில் இருக்கை நுனிக்குப் பார்வையாளரை நகர்த்துவதைப் போல, விறுவிறு என்று கதையை நகர்த்தி வாசகரை வாசிக்கத் தூண்டி இழுக்கும் சுவாரசியத்தைப் புத்தகத்தை வாசித்து ஒவ்வொருவரும் நுகர வேண்டும்.
உயிருக்கு பயந்து பதுங்கு குழியில் ஒளிந்து கொண்டிருக்கும் நிலையிலும் சாய் பல்லவி கேள்விகளை அடக்க முடியாமல் கேட்பதையும், காசிம் அந்த இடத்திலும் சொல் வேட்டை ஆடுவதையும் குழந்தைகளுக்கே உரிய இயல்பு மாறாமல் நகைச்சுவை பொங்கப் படைத்திருக்கும் பாங்கு அழகோ அழகு.
பள்ளியில் உள்ள துளிர் அறிவியல் கழகம் தான் "...வெறும் கேள்விகளால் ஆன வினாத்தாள்களைப் பள்ளிகளில் பரீட்சையில் தருகிறார்கள். இந்தக் கேள்விகளுக்கான விடைகளை ஏற்கனவே மனிதர்கள் அறிவார்கள். இதற்குப் பதிலாக இனிதான் விடை தெரிய வேண்டும் என்கின்ற கேள்விகளைக் கேட்கலாம் அல்லவா?..." என்று காசிமைச் சிந்திக்க வைத்தது. கேள்விகள் கேட்டும், சொல் வேட்டையாடியும் குழந்தைகள் கற்றுக் கொண்டதைத் தங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனையின் போது அறிவியல் வழியில் நின்று தீர்வு காண வைத்ததும் அறிவியல் கழகம் தான். இந்தப் பின்னணியில் பள்ளிகளில் செயல்படுத்தி வரும் மன்றச் செயல்பாடுகளை ஆசிரியர்கள் அணுக வேண்டும்.
குழந்தைகள் சிறு வயதில் இருந்தே எதையும் கேள்விகள் கேட்டு, அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபட்டு, எந்தப் பிரச்சனைக்கும் அறிவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் விடை காணப் பழக்க வேண்டும். இதற்குப் பெரியவர்கள் ஒன்றும் செய்யத் தேவையில்லை. குழந்தைகளின் பாதுகாப்பும், நல்லொழுக்கமும் முக்கியம்தான். அதற்காக, குழந்தைகளின் இயல்பை, சுதந்திரத்தை, உரிமையைப் பறிக்காமல் இருந்தால் மட்டும் போதும். அவர்கள் அறிவியலின் குழந்தைகளாக மிளிர்வார்கள் என்பதை, எவ்விதமான பரப்புரையும் இன்றி மிக இயல்பாக உணர்த்தி விடுகிறது இந்தக் குறு நூல்.
- மாணிக்க முனிராஜ்