nurse coronaவாழ்வின் சிற்சில தடங்கல்களுக்கெல்லாம் சோர்ந்துவிடும் பலருக்கு மத்தியில், எவ்வளவோ இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் சரிந்துவிடாமல் பணியாற்றும் பணியாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் செவிலியர்கள்.

உயிர்காப்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை:

தற்போது பரவி வரும் இரண்டாம் அலை கொரோனா பெருந்தொற்றினால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் செவிலியர் இந்திரா மற்றும் வேலூர் செவிலியர் பிரேமா ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் உள்ளிட்ட 548 பேர் இதற்கு பலியாகியுள்ளதாக ஒரு வாரத்திற்கு முந்தைய மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறியுள்ளது.

ஆனால் இவ்வளவு பாடுபடும் இந்த மருத்துவப் பணியாளர்களுக்கு ஹெலிகாப்டரிலிருந்தும், பால்கனியிலிருந்தும் மலர் தூவுவதும், கை தட்டுவதும், உச்சமாகச் சென்று காலில் விழுந்து, அழுந்து பாராட்டுவதையும்தான் இதுவரையில் பதிலீடாகச் செய்துள்ளனர்.

இவையெல்லாம் அவர்களுக்கு தேவையுமில்லை, அவர்கள் எதிர்பார்ப்பதுமில்லை. மாறாக தமிழக அரசின் தற்போதைய அறிவிப்புகள் அனைத்தும் நம்பிக்கை ஊட்டுவதாகவும், ஆறுதலாகவும் உள்ளன.

மகிழ்ச்சி தரத்தக்க அறிவிப்புகள்:

1212 செவிலியர்களுக்கு பணிநிரந்தரம், மருத்துவ - தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் மூன்று மாத ஊக்கத்தொகை, கொரோனா தடுப்புப் பணியின்போது இறந்த பணியாளர்களுக்கு நிவாரணமாக 25 லட்சம் என மருத்துவத்துறை சார்ந்த ஒவ்வொரு அறிவிப்பும் முத்தாய்ப்பானதாக உள்ளது. மிகுந்த மனிதநேயத்துடன் உள்ளது.

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புக:

அதையும் தாண்டி மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறையின் காலியாக உள்ள பணியிடங்கள் விரைந்து நிரப்பப்பட வேண்டும். பெருந்தொற்றால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

குறிப்பாகப் பெருந்தொற்றால் அதிகரித்திருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கையையும், மிகுந்த பணிப்பளுவையும் கருத்தில் கொண்டு செவிலியர்களின் காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படவும், கூடுதல் பணியிடங்களை உருவாக்கி பணியமர்த்தப்படவும் வேண்டும்.

தொகுப்பூதிய முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்:

எம்ஆர்பி மூலம் பணியமர்த்தப்படும் செவிலியர்கள் அனைவரும் குறைந்தபட்சம் நான்கு ஆண்டு முதல் அதிகபட்சம் ஏழு எட்டு ஆண்டுகள் வரை தொகுப்பூதியத்தில் மட்டுமே பணியாற்றுகின்றனர். அவர்கள் முதன் முதலில் பணியில் சேரும்போதே நிரந்தர பணியாளராகச் சேரும் வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களாக இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் சொற்பமாக உள்ளனர் என்றாலும் எங்கும் பெரும்பான்மையாக பட்டியல் இன மக்களே பணிபுரிகின்றனர். சொற்பமான கூலி கிடைத்தாலும் அரசு பணி நிரந்தரமான வருமானம் என்கிற பெருமையில் ஒப்பந்த அடிப்படையிலேயே பெரும்பான்மையோர் காலகாலமாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களைப் படிப்படியாகவேனும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஆசிரியர் பணியில் தொகுப்பூதியத்தை முற்றாக ஒழித்த வரலாறு திமுக அரசுக்கு மட்டுமே உள்ளது. உடனடியாக இல்லாவிட்டாலும் அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். உயிர்காக்கும் உன்னத பணியில் ஈடுபடும் ஊழியர்களை நிதி நிலையை காரணம் காட்டி வஞ்சித்தது பழைய காலமாக முடியட்டும்.

அத்தியாவசிய பணியாளர்களுக்கே சலுகையும் பாதுகாப்பும் அவசியம்:

செவிலியர்கள் 10ஏ1 சர்வீஸில் பணியமர்த்தப்படுவதால் மற்ற அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் செவிலியர்களுக்குக் கிடைப்பதில்லை. அத்தியாவசிய பணி பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கும் விடுமுறை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் உறுதி செய்யப்பட வேண்டும்.

சில வேளைகளில் நோயாளிகளுடன் வரும் சிலர் தங்களின் சுயவிளம்பரத்துக்காக செல்போனில் வீடியோ எடுப்பதும், கண்ணியமற்ற வகையில் நடந்து கொள்வதும், வசைபாடுவதுமாக நடந்துக் கொள்கின்றனர். இவர்களிடமிருந்து காக்கும் வகையில் செவிலியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்து ஆணையிட வேண்டும்.

தனிமைப்படுத்துதல் அவசர அவசியம்:

கொரோனா முதல் அலையின் போது ஏழு நாட்கள் பணி செய்தால் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கான விடுமுறையாக அளிக்கப்பட்டது. அது இரண்டாம் அலையில் மூன்று நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா சிறப்பு வார்டில் தன் பாதுகாப்பு உடையை (PPKit) இறுக்கமுடன் நாள் முழுவதும் அணிந்து கொண்டு பணிபுரியும் அழுத்தத்தில் இருந்து மீளவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமும் குழந்தைகளிடமும் சமூக இடைவெளி பேண வேண்டியதன் நலன் கருதியும் ஒரு வார தனிமைப்படுத்தல் விடுமுறை அவர்களுக்கு அவசியமாகிறது. அதைக் கனிவுடன் அரசு பரிசீலிக்க வேண்டும்.

பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ள இந்த நேரத்தில் இது சாத்தியமில்லாத ஒன்றாகக் கருதலாம். ஆனால் அத்தகைய இடைவெளி கொடுக்கப்படாவிட்டால் அது சமூக நலத்துக்கு எதிராகவே முடியும் என்பதை எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும்.

விடுமுறை அளிப்பதில் கரிசனம் தேவை:

பொதுவாகவே மருத்துவ பணியாளர்களின் விடுமுறை நாட்களை அதிகரித்து வழங்க வேண்டும். ஆறு நாட்கள் பணி செய்தால் ஒரு நாள் விடுப்பு தற்போது உள்ளது. இது வாரத்திற்கு இரண்டு நாளாகவோ அல்லது மாதத்திற்குக் குறைந்தபட்சம் 6 வார விடுமுறை நாட்கள் என்றோ மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றினால் அதற்கு ஈடு செய்யும் வகையில் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்வது வழக்கம். இது CoL (Compensatory Leave) எனப்படும் இழப்பீட்டு விடுமுறை ஆகும். வார விடுமுறை கிடைக்கும் நாள் அரசு விடுமுறையாக இருந்தால் அந்த அரசு விடுமுறை பின்னர் CoL ஆகக் கொடுப்பதில்லை.

சில மருத்துவமனைகளில் தொடர்ந்தாற்போல் 2 தற்செயல் விடுப்பைக்கூட வழங்குவதில்லை. CL மற்றும் CoL சேர்த்து 4 நாட்கள் வழங்கினால் ஒரு வாரவிடுமுறைநாள் துண்டிக்கப்படுகிறது. இவையெல்லாம் முறையான அரசு விதிமுறைகளின்படிதான் நடைபெறுகிறதா என்கிற ஐயமும் எழுகிறது.

இரவுப் பணியின்போது தொடர்ந்து 14 மணிநேரம் பணிபுரிகின்றனர் என்பதையும், மற்ற ஊழியர்கள் சனி ஞாயிறு விடுமுறை துய்ப்பதைப் போல குறிப்பிட்ட வார நாட்களில் இவர்களுக்கு விடுமுறை இல்லை என்பதையும், பணிப்பளுவைக் கருத்தில் கொண்டும்  செவிலியர்களின் விடுப்பு விஷயத்தில் மனிதநேயத்துடனும் நெகிழ்வுத் தன்மையுடனும் உரிய சரியான வழிகாட்டுதல்கள் கூடுதல் விடுப்புச் சலுகைகளுடன் சீரமைக்கப்பட வேண்டும்.

பணியிட மாறுதலும் பதவி உயர்வும்:

ஆண்டுதோறும் மற்ற பணியாளர்களுக்கு நடப்பதைப் போலவே செவிலியர்களுக்கும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆனால் தேவையான பெரும்பான்மையான இடங்கள் கலந்தாய்வில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டு குறைவான இடங்கள் மட்டுமே காட்டப்படுவது கடந்த காலங்களில் வழக்கமாக இருந்தது. இதனால் கலந்தாய்வால் மிகக்குறைவான நபர்கள் மட்டுமே பயன்பெற்றனர். அந்த நிலைமை மறுபடியும் தொடராத வண்ணம் சீரமைக்கப்பட வேண்டும்.

தற்போது வழங்கப்பட்டு வரும் மூன்று கட்ட பதவி உயர்வானது மத்திய அரசு செவிலியர்களுக்கு வழங்குவதைப் போன்று ஐந்து கட்ட பதவி உயர்வாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மேலும் இதுநாள் வரை கால தாமதப்படுத்தப்பட்டு வரும் செவிலியர்களுக்கான பதவி பெயர் மாற்ற அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.

உயிர்காக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பணிப்பளு அழுத்தமின்றி மனநிறைவுடன் நிம்மதியாகப் பணியாற்றினால் தான் அவர்கள் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கும் சேவையும் சிறப்பானதாகக் கிடைக்கும். ஆகவே செவிலியர்களின் பணிநலன் சார்ந்த எந்த ஒரு நல்ல நடவடிக்கையும் மறைமுகமாக பொதுச் சமூகத்திற்கு ஆற்றிய சீரிய பணியாகவே நினைவுகூரப்படும்.

- மாணிக்க முனிராஜ்

Pin It