அதிதீவிர காலநிலையில் ஒற்றை மர வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் காடுகளை விட பலவகை மரங்கள் உள்ள காடுகள் நிலைத்து நிற்கின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது. ஒரே ஒரு மர இனம் மட்டும் உள்ள காடுகளைக் காட்டிலும் 35% அதிக ஆற்றலுடன் இரண்டு அல்லது மூன்று மரவகைகள் உள்ள காடுகள் காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளை சமாளித்து நிற்கின்றன. 

மனித முயற்சியில் தோட்டங்களாக உருவாக்கப்படும் காடுகளில் உயரமாக வளரும் ஊசியிலை போன்றவையே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. ஆனால் இந்த மரங்கள் புயல் போன்ற அதிவேகத்துடன் வீசும் காற்றால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் மெதுவாக வளரும் ஓக் போன்ற கடினத் தன்மையுடைய மர வகைகள் அதிவேக காற்றால் சேதமடைவதில்லை.

வெப்பமான காற்று அதிக ஈரப்பதத்தை பிடித்து வைத்துக் கொள்வதால் புயல்கள் உருவாகின்றன. காலநிலை பாதிப்பால் உயிரிழப்புகள், சேதம், மின் வெட்டு, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இடர்களை ஏற்படுத்திய பிரிட்டனைத் தாக்கிய இஷா (Isha) போன்ற அதிதீவிர புயல்கள் இனியும் அடிக்கடி ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.forest 393மர மேலாண்மையும் காடுகளின் ஆரோக்கியமும்

புயல்களால் காடுகளில் மரங்கள் அழிவதால் வனங்களுக்கும், வனத்துறையினருக்கும் பிரச்சனைகள் அதிகமாகிறது. 2021ல் பிரிட்டனில் குளிர்காலத்தில் வீசிய புயலால் 12,000 ஹெக்டேர் காடுகள் அழிந்தன.

“பொருளாதாரரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும் பைன் போன்ற ஒரே ஒரு வகை மரங்கள் மட்டும் வளரும் காடுகள் புயல்களால் அதிகம் சேதமடைகின்றன. புயலால் மரங்கள் அழிவதை தடுக்க வனங்களில் மர மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் வனங்கள் காப்பாற்றப்படும்” என்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவரும் பிரான்ஸ் விவசாயம், உணவு மற்றும் சூழல் ஆய்வுகளுக்கான மையத்தின் (Inrae) ஆய்வாளருமான டாக்டர் ஜூலியன் பேரர் (Dr Julien Barrere) கூறுகிறார்.

வெப்பமான, வறண்ட மத்திய தரைக்கடல் பகுதி, குளிர் நிறைந்த வட ஸ்காண்டிநேவியா நாடுகளில் இந்த மரப் பன்மயத்தன்மையால் (tree diversity) அதிக பயன்கள் ஏற்படும். இது பற்றிய ஆய்வுக்கட்டுரை செயல்பாட்டு சூழலியல் (Functional Ecology) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதிதீவிர காலநிலை நிகழ்வுகளின்போது காடுகள் எவ்வாறு அதை சமாளித்து வாழ்கின்றன என்பது பற்றி அறிய ஐரோப்பாவில் இருக்கும் தொன்னூறாயிரத்திற்கும் மேற்பட்ட உண்மையான காட்டுப்பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் ஆராயப்பட்டன. இது வெறும் செயல்முறை பரிந்துரை மட்டும் அல்ல. அறிவியல்ரீதியாக நடத்தப்பட்டு இந்த உண்மைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை மேலும் வலுப்படுத்த கள ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

என்றாலும் ஆய்வாளர்களின் இந்த ஆய்வுகள் 2021ல் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ஆர்வன் புயலால் (Storm Arwen) மில்லியன் கணக்கான ஊசியிலை மரத்தோட்டங்கள் அழிந்தது பற்றிய முந்தைய ஆய்வு முடிவுகளை உறுதிப்படுத்துகிறது.

அழிந்தவை பெரும்பாலும் ஊசியிலை மரம் போன்ற ஒரே வகை இன மரங்கள். உள்ளூர் மர இனங்களை விட புயற்காற்றால் பலவீனமடைந்து சுலபமாக கீழே விழுந்த இவை அனைத்தும் ஒரே வயதுடையவை என்று 2021 ஆய்வு கூறியது.

கிளைகளை தாழ்த்தி வளரும் வயதான மரங்கள்

“பல இன மரங்கள் உயிரி தாவரத்தொகுப்பை (Bio mass) அதிகப்படுத்துவதுடன் அவற்றால் உருவாக்கப்படும் காடுகள் புயல் போன்ற பாதகமான சூழ்நிலை ஏற்படுத்தும் தாக்கத்தில் இருந்து தப்பிக்கின்றன. ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் போடக்கூடாது என்ற பழமொழிக்கேற்ப பல இன மரங்கள் வளரும் காடுகள் உருவாக்கப்பட வேண்டும். இயற்கையான காடுகளில் ஒரே இன மரங்கள் வளர்வதில்லை. பல இன மரங்கள் உள்ளன” என்று ரீடிங் (Reading) பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் மார்ட்டின் லூக்கக் (Prof Martin Lukac) கூறுகிறார்.

பழமையான ஓக் மரங்கள் வயதாகும்போது தங்கள் உறுதித்தன்மையை அதிகரிக்க கிளைகளை கீழ்நோக்கி தாழ்த்தி வளர்கின்றன. இந்த கிளைகளை சூழலியலாளர்கள் வெட்டுவதில்லை, அப்படியே விட்டுவிடுகின்றனர். அதிக இறந்த, வன உயிர்ச் செழுமை வாய்ந்த மரப்பகுதிகள் மூலம் புயல்கள் காடுகளின் உயிர்ப் பன்மயத்தன்மையை அதிகரிக்கின்றன. இது மரத் தோட்டங்களில் அதிக இன வேறுபாடுகளை உருவாக்குகிறது.

ஒரே ஒரு இன மரங்கள் மட்டுமே வளரும் காடுகளை விட 1999ல் பிரான்சில் உள்ள வாஸ்ஜிஸ் (Vosges) காடுகளை தாக்கிய புயலிற்கு பிறகு அங்குள்ள மரங்கள் அதிக நிலைப்பு தன்மையுடையதாக மாறின.

“இன்று நிலவும் மோசமான சூழலில் இந்த ஆய்வு மிகப் பொருத்தமானது. காடுகளின் மர பன்மயத்தன்மையை அதிகரிக்க இப்போது செயல்பட்டால்தான் மரங்கள் வளர்ந்து உரிய பலன் தர சில பல பத்தாண்டுகள் ஆகும்” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் ஜான் மேக்கே (Prof John MacKay) கூறுகிறார்.

இனப் பன்மயத்தன்மை காடுகளின் பெருகிவரும் களைகளின் கட்டுப்பாடு, வறட்சி போன்றவற்றை தாக்குப்பிடித்து தாவரங்கள் வளர உதவுகிறது என்று முந்தைய ஆய்வு கூறியது. “பல பத்தாண்டுகள் மற்றும் அதற்கும் அப்பால் நீடித்திருக்கும் கண்ணோட்டத்துடன் தாவரங்கள் வளர்க்கப்பட வேண்டும். நகர்ப்புற காடுகளில் மரபணு மற்றும் இனப் பன்மயத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்கு லண்டன் க்யூ (Kew) ராயல் சங்க பூங்கா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மோசமாகி வரும் காலநிலையை எதிர்த்து வளர்பவை மட்டும் இல்லாமல் சரியான மரத்தை சரியான இடத்தில் சரியான நேரத்தில் நட்டு வளர்க்க வேண்டும். இதனால் நோய்கள் கட்டுப்படுத்தப்படும். களைகள் இல்லாமல் தாவரங்கள் வளரும். இன்றைய சூழலில் இந்த ஆய்வு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது” என்று லண்டன் க்யூ (Kew) ராயல் தாவரவியல் பூங்காவின் மர சேகரிப்புப் பிரிவு தலைவர் கெவின் மார்ட்டின் (Kevin Martin) கூறுகிறார்.

மரங்கள் வாழ்ந்தால்தான் மனிதன் வாழ முடியும். மர வளர்ப்பில் இந்த ஆய்வு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2024/jan/25/diverse-forests-of-slow-growing-trees-more-resilient-to-storms-study-finds-aoe?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.