குழந்தைகள் அழகானவர்கள்...

கதைகள் அப்படித்தான்

சொல்கின்றன...

சிறகுகளற்ற தேவதைகளாக

அவர்கள் சுற்றி வரும்போது

கற்றைக் காகிதங்களோடு

கவிஞர்கள் உதிக்கிறார்கள்...

குண்டுக் கன்னங்களைக்

கிள்ளத் துடிக்கிற கைகளை

அடக்க வேண்டியிருக்கிறது

அவர்களின் கண்களிலிருந்து

கிளம்பித்தான்

சூரியனும் சந்திரனும்

வானத்தில் அடைக்கலமாயின...

அவர்களின் சிரிப்பு...

ஐயோ, அதற்கு எதைச் சொல்வது

மல்லிகைப்பூக் காடுகள் எனலாமா

மத்தாப்பு ஊர்வலம் எனலாமா...?

தத்தும் அந்த நடைக்கு

தங்கச் சுரங்கத்தையே

பரிசளிக்கலாமே...!

குழந்தைகளைத் தொட்டுத் தூக்கிவிட்டு

யாராவது பூக்களைப் பற்றி

நினைக்காமலிருந்து விட முடியுமா?

தென்றல் பலமாக அடித்தாலே

கன்றிப் போய்விடும் பூக்களல்லவோ

குழந்தைகள்...!

அண்டை நிலத்தில்

குண்டுவீச்சு, பசி, தாகம்

கொலைவெறி ராணுவம் என்று

விதவிதமாய்க் குழந்தைகள்

ஆயிரக்கணக்கில் சிதைக்கப்பட்டபோது

அவர்களும் அழகானவர்களாகத்தான்

இருந்திருக்க வேண்டும்...

கைகட்டி உலகம் வேடிக்கை

பார்த்திருக்கலாம்...

காட்டிக் கொடுத்த நாம்

வாளாவிருக்க முடியுமா?

வாருங்கள் அன்பர்களே

கவிதை எழுதலாம்

அந்தக் கவிதை

ஆரம்பமாகட்டும்

குழந்தைகள் அழகானவர்கள்

என்ற முதல்வரியோடு.

 

Pin It