அணில் கூடு அப்படியேதான் இருக்கிறது சித்ரா தான் இல்லை என்ற துயரக் குரலை முதல் பத்தியில் வெளிப்படுத்தி , அறச் செல்வி சித்ராவின் வரலாறு முற்றுப்பெற்றது என்று முடியும் அறச்செல்வி சித்திராவின் வாழ்க்கைக் குறிப்பு நூல் யாதாரு புனைவும் இலக்கிய ஜோடிப்பும் அற்று விரிகிறது. பெண் வாழ்க்கையின் இன்றைய வளர்ச்சியுற்ற படிநிலை என்பது தன்னை நிறுவிக் கொள்ளுதல், குடும்பத்தை நிருவகித்தல், அலுவலகங்களில் தகைசான்று இயங்குதல் என்பதே படிநிலை வளர்ச்சியாக இன்றைய பெண் வாழ்வின் வளர்ச்சிப் போக்கு தெரிகிறது . இந்தப் படிநிலையிலிருந்து வளர்ந்து நான்காவது படிநிலையை அடைகிறது சித்ராம்மாவின் வாழ்வு. மேற்கண்ட மூன்று படிநிலை பெற்ற பெண்கள் ஏராளமாக நாட்டில் இருக்கலாம் .

ஒரு பெண் பொருளாதாரத்தில் உயரிய இடத்தை அடைந்து சமூகத்தை நிருவகித்தல் என்கிற நான்காவது படிநிலையை ஒருபெண் அடைவது அரிதினும் அரிது. பேரா சித்ரா அவர்கள் . உள்ளார்ந்த அன்பின் உபசரிப்பால், சாதிச் சுவர் உடைத்து தன்னை அன்பாய் அனைவராலும் கொண்டாடும்படியாக, உதவிகரச் செயல்பாடுகளால் சமூகத்தை நிருவகிக்கும் நான்காவது படிநிலையை அடைந்து, அறமனச்செம்மலாய் கடைசி மூச்சு வரை இந்த வாழ்வுலகிற்கு வழிகாட்டித் திருஉருவை கொடையளித்துவிட்டு பெருமித மனுஷியாய் மறைந்துள்ளார் என்று நூல் பேசுகிறது.

arachelvi chitraநூலை ஒரே மூச்சில் எழுதிமுடித்த 231 பக்கங்களிலும் வாழ்க்கை துணைவர் அரச முரு பாண்டியனின் மூச்சுக்காற்றும் விரவி உள்ளது என்பதைத் தாண்டி பேரறிவாளர், இந்தியாவின் நவீன சிற்பி அம்பேத்கரின் மூச்சுக்காற்றும் பதிவாகியிருப்பது நூலின் காத்திரத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட சமூகங்ககளின் தவிர்க்க முடியாத உரிமைக்குரலாக சமகாலத் தலைவராக நிமிர்ந்து நடைபோடும் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட சமூக மறுமலர்ச்சி இயக்கங்களுடன் தன் வளர்ந்த வாழ்வை இணைத்துக் கொண்டு பேரா சித்திராவும் அரச முருகுபாண்டியனும் தம்பொருளாதார நிழல் பரப்பிய பாங்கு, வாழ்வை அர்த்தச் செறிவுடன் அணுகிச் செல்கிறது.

ஒரு குடும்பம் தன்னளவில் முன்னேறிய செழிப்பை நாடு, மொழி, இனம் என்ற நோக்கில் அரசியல் சமூகப் பொருளாதார விடுதலை குறித்த கவலைப் பாங்குடன் நடைபோட்ட வரலாற்றுக் குறிப்புகள் இடஒதுக்கீட்டால் முன்னேறிய தலித் குடும்பத்தின் ஆகச்சிறந்த வாழ்வியல் முறைக் கையேடாக விரிகிறது.

நூலாசிரியர் அரச முருகுபாண்டியன் நாவல் போக்கின் இயல்பாகிய அத்தியாயங்களாகப் பிரிக்காமல் நிகழ்சிகளையே தலைப்பாகக் கொண்டு வாழ்வின் நிகழ்ச்சிக் குறிப்புகளையே கொண்டு நாவலாசிரியன் கதைசொல்லல் உத்தியில் வரலாறு நகர்கிறது. ஒரு வரலாற்றை நாவல் போலவும் ஒரு நாவலை வரலாற்றை சொல்வதுபோலவும் அமைந்த உத்தி தமிழுக்கு புதியது என்றே தோன்றுகிறது.

நூலாசிரியர் தன் அறிவின் குரலையே ஒரு பாத்திரமாகப் படைத்து நாவலைப் போல் நூல் நகர்கிறது. நாவலுக்கு உண்டான எல்லாவற்றையும் மீறும் நிலையில் புனைவுகளற்ற சித்திரா என்கிற பேராசிரிய ஆளுமையை அப்படியே எழுத்தில் வடிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது நூல். நூலாசிரியர் கதைசொல்லியாக இருந்து அறச் செல்வி சித்ராவை அடிநாள் முதல் முடிவுநாள் வாழ்வுவரை பரிதாபமான மெளனத்தில் வேடிக்கைப் பார்ப்பதுபோல் உள்ளது.

கல்லூரி படிக்கிற காலத்திலேயே ஒரு மாணவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சித்திராம்மா நல்ல சான்று.பாண்டியன் உள்ளபடியே அறத்தைக் கைபற்றித்தான் வாழ்க்கை நடத்தியிருக்கிறார் என்று உணர முடிகிறது. அறத்தை இழப்பது பாண்டியனுக்கு பெரும் துயரமாகி விட்டது. சமூகம் நாடு, உலகம் என எல்லா தளங்களிலும் உள்ள மானுடச்சிக்கல் அறம் பிறழ்வதுதால்தான். தன் குடும்பத்தைத் தாண்டி வேலை தளம், உறவுகளைப் பேணல், சமூக நல்லிணக்கப் பரிவு, எளிய மக்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுதல், சமூக மாற்றத்திற்கான அமைப்புடன் தொடர்பில் இருந்து அதற்கு இயன்றளவு உதவுதல், தன்னிச்சையாய் இயங்கும் சீர்திருத்த கருத்து மேடை அமைப்பை உருவாக்கி நடத்தும் கணவருக்கு தோள் தாங்குதல் என குடும்பம் வாழும் மக்களோடு இணைத்துக் கொண்டு வாழ்ந்த பெருவாழ்வின் சிறப்பைப் படிக்க முடிகிறது

தம்பிள்ளைகள், சொந்த வாகனங்கள், கட்டிய வீடு , செய்த பேராசிரியர் தொழில் இவைகள் எல்லாம் சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி விசாலப் பார்வையால் சமூகத்தை நிருவகித்த விசை வாழ்வு சித்ரா அரச பாண்டியன் வாழ்வு.

"சாதி இந்துக்கள் மூட்டிய நெருப்பில் என் எலும்புகளை எரித்துத்தான் நான் இந்த உரிமைகளை வாங்கித் தந்துள்ளேன் இதைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நவீன பார்ப்பனர்களாக மாறிப் போனார்கள்" என்று அண்ணல் அம்பேத்கர் வருத்தப்பட்டதை நொடியும் மறக்காமல் வாழ்வு நடத்திய விதம் போற்றுதலுக்குரியது. நூற்றுக்கணக்கான தமிழின விடுதலை சமூக மறுமலர்ச்சித் தலைவர்களை களப்பணியாளர்களை நேரடி அன்புத் தொடர்பில் தன்னைப் பதிவு செய்து வாழ்வை நிலைநிறுத்தி எத்தனை அரசு ஊழியர்கள் வாழ்ந்திருப்பர்.

பாணர் குடிலிலும் (தன் வீட்டின் பெயர்) சமூக மலர்ச்சிக்காக வாதிடும் நூல்களை மண்டபம் பிடித்து கூட்டம் நடத்துதல் என குடும்பம் செயல்பாட்டுத் தொண்டுக்கால்களால் நடை போடுகிறது.

பென்னிகுயிக் வாழ்க்கைக் குறிப்பும், ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே போன்ற சமூகத் திருத்தச் செம்மல்களின் பணிகளின் குறிப்புகளும் காணக் கிடைக்கிறது. ஆங்கிலேயர்கள் எளிய மக்களை ரட்சிக்க வந்த தெய்வங்கள் என்கிற கூற்றுக்கு குறிப்பு தருகிறது நூல் இது.

கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் என்பவர் 12 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பை பஞ்சமி நிலமாகத் தந்தார்கள். சீகன்பால்க் அச்சுக்கூடத்தை முதன்முதலாக அமைத்ததுமன்றி, காகித ஆலையை, பெண்கள் பள்ளியை, பெண்கள் காப்பகத்தை தமிழ் அகராதியை, தமிழ் விவிலியத்தை உருவாக்கினார் என்றும் ஹோபிலால் சாந்தா முயற்சியால் முதன் முதலில் குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்து. சார்லஸ் டிர வெல்யான் என்ற சென்னை கவர்னர்தான் பெண்கள் தங்கள் மார்பை மூடிக் கொள்ளும் உடை பண்பாட்டை கொண்டு வந்தார். வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில்தான் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை தடை செய்தார். பொது உரிமை சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற விதி அழுத்தமாக உருவாக்கப்பட்டது. வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் இருந்த டாக்டர் அம்பேத்கர் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தபோது தொழிலாளர்களின் பணி 8 மணிநேரமாக மாற்றப்பட்டது என்பன போன்ற அரிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

சாதி ஒழித்தல் ஒன்று மற்றொன்று தமிழ் வளர்த்தல் இந்த இரண்டில் ஒன்று தவிர்த்தாலும் வாழ்வு செழிக்காது என்பதை பாவேந்தர் கூறியதை மனதில் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியரிடத்திலும், கம்யுனிஸ்டுகளிடத்திலும் திராவிடர் கழகத்தினரிடத்திலும் உள்ள சருக்கலை விமர்சன எடை போட்டுகிற இடமும் இருக்கிறது. அ.மார்க்ஸ், பேரா கோச்சடை, சிம்சன், பிரபா கல்வி மணி, மக்கள் பாவலர் இன்குலாப், கவிஞர் மீரா போன்ற மார்க்சீயப் பார்வை சிந்தனையாளர்களின் வாழ்வோட்டம் அறச்செல்வி சித்ரா வாழ்வோடும் இணைந்து பயணிக்கிறது . அய்யா பகீரத நாச்சியப்பன் போன்றோர் உயர் சமூகப் பின்னணியில் இருந்தாலும் மகளே என்றும், சித்ரா அவரை அப்பா என்றும் கூறி உறவாடும் நிலையில் பல்வேறு குடும்பங்களோடு சமத்துவ மாண்பை உருவாக்கி சமூகத்தை சுய ஆளுமையால் நிருவகிப்பவராக உள்ளார் சித்ரா அவர்கள்.

செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற அமைப்பாலும் மாணவர்களை தரப்படுத்தியிருக்கிறார். சக பேராசிரியர்களிடத்தில், அருகாமை வீட்டாரிடத்தில், தன்னை மகத்தான மனுஷியாக கட்டமைத்துள்ளதை வியக்க முடிகிறது

தங்கவேல் ஆசிரியர் ரஜலெட்சுமி ஆசிரியை பெற்றெடுத்த பிள்ளை பேரா சித்ராவையும், இராஜவேல் ஆசிரியர் கிருஷ்ணாம்பாள் ஆசிரியை பெற்றெடுத்த பிள்ளை அரச முருகுபாண்டியனையும் குடும்பத்துக்கு மட்டுமல்லாது இந்த சமூகத்திற்கே நாட்டிற்கே அர்ப்பணித்த விதமாக நடக்கும் இடம் எல்லாம் நலம் வழங்கும் நதியாய் ஆனா வாழ்வு அறச் செல்வி சித்ராவின் வாழ்வு

அடுத்த சித்ராக்களாக இளவெயினியும் (மகள்) மெசியாவும் (மருமகள்) ஒற்றை அரச பாண்டியனோடு இரண்டு பாண்யன்களாக அம்பேத்கருமாய் (மகன்) முத்து சேகர பாண்டியருமாய் (மருமகன்) ஆகி எ பாண்டியனையும் சித்ராம்மாவையும் குறிதவறாமல் தந்து வாழையடி வாழையாய் விரிந்ததோர் வாழ்வு தொடர்ந்து துலங்க விடப்பட்டிருக்கிறது.பாண்டியன் மனைவியை இழந்த கவலையின் அடர் வெப்பமாய் நூலின் இறுதிப் பகுதி இருந்து வாசிப்பவரை உலுக்குகிறது. சித்ரா அம்மையாரின் மரணம் நம்மை நெகிழ வைத்தாலும் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு நிழலாக விரிய வேண்டும் என்ற அறத்தின் பாங்கை அறச்செல்வி சித்ரா எனும் நூல் விதந்தோதி நிற்கிறது.

புலம் பதிப்பகம்
133 தரைதளம்
3வது பிரதானச் சாலை
நடேசன் நகர்
சென்னை 600 092
பேச 9840603499
விலை ₹300

அகவி

Pin It