உலகில் வாழும் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பெருமிதஉணர்வு உள்ளது. இந்த வரலாற்றுப் பெருமித உணர்வு தேசிய இனங்களுக்கு இருக்கவேண்டியது இன்றியமையாததாகும். நமது தமிழ்த் தேசிய இனம் பெருமைமிக்கப் பாரம்பரியமும், சிறப்பான வரலாறும், புகழ்மிக்க செவ்வியல் இலக்கியமும் கொண்ட இனமாகும். சங்கஇலக்கியத்தை அகம்புறமென வகுத்த பெருமைக்குரிய இனம் நமது இனமாகும். உலகின் வேறு செம்மொழி எதிலும் இந்தப் பாகுபாடு கிடையாது. அதே சங்கஇலக்கியங்களில் வரலாற்றுக் குறிப்புகளும் பொதிந்திருக்கின்றன. அந்தகுறிப்புகளை வகுத்து, தொகுத்து நமக்கு வரலாற்றுப் பெருமித உணர்வை இந்நூலின் மூலம் திரு. கணியன்பாலன் ஊட்டியுள்ளார்.

சங்க இலக்கியம், கல்வெட்டுகள், நாணயங்கள், தொல்லியல் ஆதாரங்கள், வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்புகள், வடஇந்திய வரலாறு, உலக வரலாறு, இனக்குழு வரலாறு, நகர அரசு உருவாக்கம் போன்ற பல தளங்களில் பல்வேறு கோணங்களில் நுண்மாண்நுழை புலமிக்க ஆய்வுசெய்தும், தமது கடும் உழைப்பின் மூலமும் பழந்தமிழக வரலாறு என்னும் சிறந்ததொரு நூலைப் படைத்திருக்கிறார். வெளி, காலம் ஆகிய இரண்டும் அனைத்திற்கும் அடிப்படையானவை என நவீன அறிவியல் கூறுவது போன்று தொல்காப்பியரும் இடம், காலம் என்பதை அனைத்திற்கும் அடிப்படையான முதல் பொருள் எனக் கூறியுள்ளார். இதைக்கண்டு வியந்த செக்நாட்டுத் தமிழறிஞர் கபில்சுவெலபில் "மனித அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்சநிலையை எய்தக்கூடும் என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளில் ஒன்று தொல்காப்பியம்” எனப் பாராட்டியுள்ளார் என்பதையும், தமிழரான தொல்கபிலர் ஒரு புகழ்பெற்ற பொருள்முதல் மெய்யியல் அறிஞர் என்பதையும் ஆய்வாதாரம் மூலம் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

kaniyan balan book on tamil historyபழந்தமிழக வரலாற்றில் மன்னர்கள், புலவர்கள் ஆகியோரின் காலம் குறித்தத் தெளிவு இதுவரை உருவாகவில்லை. இந்நூலின்மூலம் அந்தக்குறையைப் போக்கியுள்ள ஆசிரியர் தமிழ்கூறும் நல்லுலகின் பாராட்டுக்குரியவராவார். சங்கப்புலவர்கள் தங்களின் நிகழ்கால நிகழ்வுகளை குறித்தே பாடியுள்ளனர் என்பதைக் கண்டறிந்து சங்க காலத்திற்கான காலவரிசைப்படியான வரலாற்றை ஆசிரியர் கணித்துள்ள முறை சிறப்பானதாகும். மன்னர்கள் – புலவர்கள் ஆகியோருக்கிடையே உள்ள தொடர்பை முறைப்படுத்தி வரையறுத்துத் தொகுத்து அதனைக் கொண்டு கோட்டியல் வரைபடமுறையை உருவாக்கி சங்ககால வரலாற்றை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் ஆசிரியர் இந்நூலைப் படைத்துள்ளார்.

இனக்குழுநிலையிலிருந்து அரசுஉருவான காலகட்டம் வரையிலான வரலாறு பல்வேறு இனங்களுக்கும் உண்டு. அது போன்ற வரலாறுகளை தமிழக சங்ககாலத்தோடும், அதற்கு முந்தைய காலத்தோடும் ஒப்பிட்டு, சங்ககாலம் என்பது அரசு உருவாகி நிலைப்பெற்ற காலம் என்பதை ஆசிரியர் நன்கு நிறுவிவுள்ளார். கி.மு.750 முதல் கி.மு.50 வரையான சங்கப்பாடல்களில் கி.மு. 350க்கு முந்தைய சங்கப்பாடல்கள் மிகக்குறைவு என்பதையும் அவற்றில் ஆட்சியாளர்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லை என்பதையும் ஆய்ந்தறிந்த ஆசிரியர் கி.மு. 350க்கு முந்தைய வரலாற்றைக் கட்டமைக்க இயலவில்லை என்பதையும் பதிவு செய்துள்ளார். சங்கப் பாடல்களைப் பாடிய 450க்கு மேற்பட்ட புலவர்களில் 126 புலவர்கள் மட்டுமே வரலாற்றுக் குறிப்புகளைத் தந்துள்ளனர். இதில் 109 பேர் மட்டுமே புலவர்கள் ஆவர். மீதமுள்ள 17 பேரும் அரசகுலங்களைச் சேர்ந்த கவிஞர்கள் ஆவர் என்பதை ஆசிரியர் நன்கு நிறுவிவுள்ளார். இந்த 126 புலவர்கள் பாடிய 1647 பாடல்களை மட்டுமே தனது காலகட்டகணிப்புக் குறித்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு பழந்தமிழக வரலாற்றைப் பத்து கட்டங்களாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்த புலவர்கள், அரசர்கள், அவரவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை, பாடிய ஆட்சியாளர்கள் ஆகியவற்றைத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறார்.

தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களின் குடிகள் 2,000 ஆண்டு காலமாக இருந்து வந்துள்ளன என்பதையும் உலகில் வேறு எந்த நாட்டிலும், எந்த அரச குடிகளும் 1,000 ஆண்டுகள் கூடநீடித்து இருந்ததில்லை என்பதையும் ஆசிரியர் எடுத்துக்காட்டும் விதம் பெருமைக்குரியதாகும். சேர, சோழ, பாண்டிய அரசக்குடிகளால் தமிழகம் ஆளப்பட்ட காலத்தில் இம்மூன்று நாடுகளிலும் தமிழே ஆட்சிமொழியாக விளங்கியது. மூன்று நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் பண்பாட்டுத் தேசியத்தின் அடிப்படையில் தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தனர். தமிழக அரசக் குடும்பங்களில் அரச பதவியை அடைவதற்காக ஒருவரையொருவர் கொலைசெய்வது என்பது ஒருபோதும் இருக்கவில்லை. இதற்கு தமிழக அரசக்குடிகள் பின்பற்றிய மரபுவழி சிறப்பு அரசுரிமைமுறைதான் காரணமாகும் என்ற உண்மையை ஆசிரியர் நன்கு பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் நகர்மைய அரசுகள் நிலவின. ஒரே அரச குலத்தைச் சேர்ந்த பலர் பல்வேறு நகரஅரசர்களாக விளங்கினார்கள். ஆனால், அனைவருக்கும் மேலாக வேந்தர் ஒருவர் மட்டுமே திகழ்ந்தார். அரசனுக்குப்பின் அவனுடைய மூத்தமகன் என்கிற அரசியல் தாயமுறை தமிழ்நாட்டில் இருக்கவில்லை. ஓர் அரசனுக்கு இரண்டு, மூன்று புதல்வர்கள் இருந்தாலும் அவனுக்குத் தம்பிகள் இருந்தாலும் உரியவயது வந்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு நகர்மையஅரசை ஆள அனுமதிக்கப்பட்டனர். வேந்தன் இறந்தபின் இருக்கும் அரசர்களில் மூத்தவன் எவனோ அவன் வேந்தனாவான். பெரும்பாலும் தம்பிவேந்தன் ஆவான். அவனுக்குப்பின் இருப்பவர்களில் மூத்தவன் எவனோ அவன் வேந்தனாவான். இம்முறை பின்பற்றப்பட்ட காரணத்தினால் ஒரு குடி அரசர்களுக்குள் பகைமை நிலவவில்லை.

தமிழக அரசர்கள் மக்களின் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்களாக இருந்தனர். ஐம்பெரும்குழு, எண்பேராயம் போன்றவை இருந்தன. நகரம் ஊர்சபைகளின் பிரதிநிதிகளையும், பல்வேறு துறைகளுக்கான வாரியப் பொறுப்பாளர்களையும், குடவோலை முறைப்படி மக்கள் தேர்ந்தெடுத்தனர் என்பதை மருதன் இளநாகனாரின் பாடல் (அகம்-77) மூலம் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் இருந்த அளவிற்கு எழுத்தறிவும், கல்வியறிவும், வடஇந்தியாவில் இருக்கவில்லை. தொழில்நுட்பம், உற்பத்தித் திறன், வணிகம் ஆகியவற்றில் பழந்தமிழகம் முன்னேறி இருந்த அளவுக்கு வடஇந்தியா முன்னேறவில்லை. உலகம் முழுவதிலும் வணிகம் நடத்திய சிறப்பு தமிழர்களுக்கு மட்டுமே உண்டு. இத்தகைய வளர்ச்சிதான் கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகஅரசுகளின் கூட்டணி மெளரியப் பேரரசை தோற்கடித்தது என்பதையும் சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்கள் மகதப் பேரரசு காலத்தில்கூட அங்கு உருவாகவில்லை என்பதையும் ஆசிரியர் தனது ஆய்வின் மூலம் நிறுவுகிறார்.

பழந்தமிழ்ச்சிந்தனைமரபு பொருள்முதல்வாகமெய்யியல் சிந்தனை என்னும் உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருந்தது. சாங்கியம், எண்ணியம், உலகாய்தம், பூதவாதம், வைசேடிகம், ஆசிவகம், நியாயவாதம் என பல்வேறு மெய்யியல் சிந்தனைகள் நிலவின. கி.மு.1000-கி.பி.200 வரை 1200 ஆண்டு காலமாக பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள்தான் தமிழ்ச் சமூகத்தின் அடித்தளக் கருத்தியலாகத் திகழ்ந்தன எனவும் இதன் அடிப்படையில் மிகப் பெரிய தொழில்நுட்ப பண்பாட்டுப்புரட்சி உருவாகியது என்பதையும் ஆசிரியர் தக்க சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.

தமிழ்மொழி திரிந்து, பெயர்ந்து கொடுந்தமிழாக மாறியிருந்தது., அக்கொடுந்தமிழைப் பேசும்பகுதியை மொழிபெயர்தேயம் என பண்டையதமிழர் வழங்கினர். கி.மு.4ஆம், 3ஆம் நூற்றாண்டு வாக்கிலும் அல்லது அதற்கு முன்பும் தக்காணம் முழுவதும் கொடுந்தமிழே பேசப்பட்டுவந்தது. இந்த மொழிபெயர்தேயம் தமிழ் மூவேந்தர்களால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக விளங்கியது என்பதை ஆசிரியர் மாமூலனாரின் பாடல் (அகம் -31) மூலம் நிறுவியுள்ளார். தமிழகத்திற்கு வடக்கேயும், வடநாட்டு அரசுகளுக்குத் தெற்கேயும் தக்காணத்தில் சாதவாகனர் அரசு தமிழக அரசின் துணையுடன் உருவானது சாதவாகனர்களை தமிழில் நூற்றுவர்கன்னர் என அழைத்தனர். தமிழ் பிராகிருதம் ஆகிய இருமொழிகளிலும் இவர்கள் ஆட்சி செலுத்தினர். சங்ககாலத்தின் தொடக்கம்முதல் இறுதிவரை தமிழகத்தோடு இவர்கள் நட்புறவோடு விளங்கினர். சாதகவாகனர் ஆண்டபகுதியை பகை அரசுக்கும், தமிழகத்திற்கும் இடையேயுள்ள அரசாக (Buffer-State) தமிழகஅரசர்கள் உருவாக்கிவைத்தனர். இதன்மூலம் வடநாட்டு அரசுகளின் படையெடுப்பைத் தடுத்து வைத்திருந்தனர்.

மெளரியர்களின் தமிழகப் படையெடுப்புகள் குறித்து மாமூலனார் மற்றும் சில சங்கப் புலவர்கள் பாடிய பாடல்களில் உள்ள வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் புகளூர் கல்வெட்டு, அசோகர் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு, சங்க கால மன்னர்களின் நாணயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த படையெடுப்புகள் நிகழ்ந்த காலத்தையும், பாடிய புலவர்களின் காலத்தையும், அக்காலகட்டத்தில் தமிழகத்தில் ஆட்சி நடத்திய வேந்தர்களின் காலத்தையும், நடைபெற்ற போர்களின் காலத்தையும் ஆசிரியர் கணித்துள்ள முறை சிறந்ததாகும். வரலாற்று ஆதாரங்களையும், சங்க இலக்கிய ஆய்வுகளையும் இணைத்து தமிழக வரலாற்றுக்கான 21 காலவரையறைகளை ஆசிரியர் கணித்துள்ள முறை பாராட்டத் தக்கதாகும்.

பழந்தமிழ்ச் சமூகத்தில் வகுப்புகள் இருந்தனவா? என்பது குறித்த ஆசிரியரின் ஆய்வு மிக ஆழமானது. அந்தணர் என்பவர் சான்றோர்கள் ஆவர். அவர்களும் பார்ப்பனர்களும் வேறுவேறானவர்கள். தொல்காப்பியர் காலத்தில் வேள்வி செய்தல் என்பது இருக்கவில்லை. அது மீம்மாம்ச கருத்தியலாகும். கி.மு.4 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழக வேந்தர்கள் சிலரால் வேள்வி செய்யப்பட்டது. ஆனால் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. காவல்தெய்வங்களுக்கு வழிபாடு செய்தபிறகு அந்தணர்களுக்கும், புலவர்களுக்கும், பாணர்களுக்கும், ஏழைகளுக்கும் ஆநிரைகளை பரிசாக வழங்கும் பண்டைய தமிழக மரபியலே வேள்வி செய்தலாகும்.

சங்ககாலத்தில் அந்தணர், அறிவர், தாபதர் போன்ற சான்றோர்கள் முதல்வகுப்பையும், அரசர்கள், வேளிர்கள் போன்ற ஆளும் வர்க்கங்கள் இரண்டாம்வகுப்பையும், வணிகர்கள், வேளாளர்கள் மூன்றாம் வகுப்பையும் சேர்ந்த மேலோர் ஆவர். போர்வீரர், பார்ப்பனர், பாணர், கூத்தனர், பொருநர் சிறு குறு விவசாயிகள், தொழிலாளர்கள் போன்றவர்கள் கீழோர் எனப்படும் நான்காம் வகுப்புக்குரியவர்கள். இறுதியாக எத்தகைய உரிமையுமற்ற இழிசனர் இருந்துள்ளனர். இந்த நான்கு வகுப்பினருக்கும் கல்வி உரியதாக இருந்தது. இந்த நான்கு வகுப்பினருக்கிடையே திருமணங்கள் நடைபெறுவதற்கு தடையிருக்கவில்லை. மேலோர் கீழோராவதும், கீழோர் மேலோராவதும் நடைமுறையில் இருந்தன. எனவே சங்க காலத்தில் இருந்த வகுப்புகள் வேறு. பிற்காலத்தில் இருந்த சாதிகள் வேறு என்பதை இந்நூல் ஐயந்திரிபற எடுத்துக் காட்டுகிறது.

அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலும், எளிய நடையிலும், பண்டைய தமிழகத்தின் வரலாறு குறித்த சிறந்ததொரு ஆய்வுநூலினை ஆசிரியர் கணியன்பாலன் அவர்கள் அளித்துள்ளார். தமிழ்கூறும் நல்லுலகம் இந்நூலினை வரவேற்றுப் பாராட்டும் என்பதில் ஐயமில்லை.

- பழ.நெடுமாறன்

Pin It