காத்திரமான அதே நேரம் கவித்துவமான படைப்பாக வந்திருக்கும் "வாய்தாவிலிருக்கும் பதினைந்து லட்சம்" கோபி சேகுவேராவின் இரண்டாவது நூல். முதல் நூல் "கார்முகி" க்கு பிறகு காரம் சாரமாய்... காதல் ஈரமாய் வந்திருக்கிறது. ஒரு பக்கம் அரசியல்... ஒரு பக்கம் காதல் என்று எதிர் எதிர் நிற்க... இடையிடையே பகடிகளின் வழியே சமகால புழங்கு சொற்களின் வழியே கோபி படைத்திருக்கும் இந்த நூல் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை. சமகால சூழலுக்கு பொருந்தும் சூட்சுமத்துக்கும் பஞ்சமில்லை.

முதலில் பாராட்டுகள். படித்து முடித்தால் நூல் முழுதும் பாராட்டுங்கள்.

துணிச்சலில் வழியே கவிதைகளை சமூகத்துக்கு விட்டெறிந்திருக்கும் லாவகம் பாராட்டப்பட வேண்டியவை. நாட்டு நடப்புகளை தற்போதைய அரசியலை பேசும் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் இந்த தேசத்தின் நோய் போக்கும் வேதனை இருக்கிறது. எப்படியாவது இந்த சமூகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறை இருக்கிறது. மதங்களின் பெயராலும் சாதியின் சதியாலும் சீரழியும் இச்சமூகம் குறித்த பதற்றத்தை இந்நூல் பேசுகிறது.

gopi che guevera book"இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்கறா" என்ற விட்டேத்தித்தனத்தின் மீது வெடிகுண்டு வீசும் கவிதைகள். மதத்தின் பெயரில் நடக்கும் மானங்கெட்ட தத்துவத்தின் மீது மெய்ப்பொருள் வீசும் கவிதைகள். சுயலாப அரசியல் லாபிகள் மீது திராவகம் வீசும் கவிதைகள். சாதிய ஆணவ கொலைகள் பற்றி கொந்தளிக்கும் கவிதைகள்... மானுட சுய பரிசோதனை கவிதைகள்... தத்துவார்த்த விசாரணை கொள்ளும் கவிதைகள்... சமூக நீதிக்கு எதிரான சித்தாந்தங்களின் மீது கோபம் கொள்ளும் கவிதைகள் என்று அவன் மொழியில் சொன்னால் கவிதை பொடிமாஸ் போட்டு தாக்கி இருக்கிறான். அரசியல் சட்டையர்த்தனம் சாத்து சாத்தென சாத்துகிறது.

அதே நேரம்

"நீ நெருங்க நெருங்க
மாத கடைசியின் இயல்பாய்
தலை சுற்றி தடுமாறிப் போகிறேன்"

என்று கோபியால் காதலும் பேச முடிகிறது. காதல் கொண்ட மனதில் தான் கருணை பொங்கும். கருணை பொங்கும் மனமே சமூகத்தை தாங்கும்.

இளையராஜாவையும் ஆனியன் தோசைகளையும் கோபியிடம் இருந்து பிரிக்க முடியாது. அது விவரிக்கும் வரிகளில் ராகம் மணக்கும். சுவை இசைக்கும். ஞாபக கிடங்குகளை திறந்து விடும் "சென்யோரீட்டாவின் சரக்கொன்றை" காதல் உதிர்க்க்கிறது. சட்டென திறந்து கொண்ட வெளியில் சரசரக்கும் பூ மழை உணர்த்தும் காதலை வரி வரியாய் கொண்டாடி இருக்கும் கோபிக்கு காதல் மொழி கை வந்த வழி. சொற்களை அடுக்குவதில் அது கொண்ட பொருளில் சம கால நுட்பத்தை பொருத்துவதில் என்று வரி வரியாய் மொழி நிறைக்கும் சிற்பியாகவும் இவன்.

"ஒப்புக்கொடுத்தல்" எனும் கவிதையில் தனிமையின் இனிமையை எந்த புகாரும் இன்று ஒப்பிப்பதில் ஓர் உன்னதம் உணர முடிகிறது. "தனிமை என்று ஒன்று தனியே நிகழ்வதில்லை" என்ற வரியில் கவிஞனின் ஆழம் காண முடிகிறது. வயதுக்கும் வாழ்வுக்கும் சம்பந்தம் இல்லை. சிந்தனையின் வழியே கண்டடையும் ஞானம் கவிதைக்கு சிறகு.

"அது என் வயலட் கடல்" கவிதைக்கு தான் கடைசி வரியாக இருக்கிறது. அதனுள் இருக்கும் கடலுக்கு வரி வரியாய் இருக்கிறது.

"ம் கள்" கவிதையில் காதலின் தூரத்தை கிட்டத்தில் காட்டும் அனுபவம் ஆதலால் காதலால் வந்திருக்கிறது. ஆகையால் "என்னுடன் நீ மிஞ்சி இருக்க இந்த வாழ்வு போதாது" என்று குரல் நடுங்க முனங்குகிறது. "பிரமாண்ட பாராசிட்டமல்" கவிஞனின் குறும்பு. காதலின் அரும்பு.

கோபியின் தலைப்புகள் நறுக்கு தெறிப்பவை. நூலின் தலைப்பு கூட சமகால அரசியலைத் தான் மையம் கொண்டிருக்கிறது. "சுமாரான நல்லவர்களும் சுமாரான கெட்டவர்களும்" கூட இங்கு தான் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள். "ஆண்ட்ராயிட் குயில்" ஆன்ரியாவையும் சேர்த்துக் கொண்டு கூவுவது கோபியின் சிலிர்ப்பம்சம். பொடி வைத்து பேசும்... புது சொற்களை போகிற போக்கில் தெளித்து போகும் போக்கு... கவிஞனின் புத்திசாலித்தனம்.

நேரிடையாக பேசும் பொருள்களை கோபி மறைப்பதே இல்லை. பொதுவில் போட்டுடைத்தல் தேவையாகவும் இருக்கிறது. தேர்ந்த சொற்களில் நையாண்டி பகடியில் தற்கால அரசியலை குடுமி பிடித்து கேள்வி கேட்கும் பாங்கு அவசியாகவும் இருக்கிறது. அசால்ட் செய்திருக்கிறான்.

"நண்பா உன்னிடம் காலி கோப்பைகள் ஏதேனும் உள்ளதா" என்று முடியும் மகிழ்ச்சியின் ஞானக்கூடம்... ஹா ஹா வென சிரிக்க செய்யும் போதி. சிந்தனையின் சிவப்புக்கு மத்தியில் கொஞ்சம் சித்திரமும் கலந்து கொள்ளும் அவன் கோப்பை.

தலைப்பு தாங்கி வந்திருக்கும் கவிதை நிகழ் காலத்தை கண் முன் நிறுத்தும் நியாத்தராசு. ஞாபகம் வைக்க வேண்டிய தராசு.

சில கவிதைகளை படிக்கும் போதே இதழில் புன்னகை தவழ்வதை தடுக்கவே முடியாது. இன்ஜினியர் மொழியை கவிதைக்குள் புகுத்தும் போதெல்லாம் வியப்பு வராமல் இருக்காது. சில கவிதைகளை இப்படி எல்லாம் எழுத முடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கும் மொழி கை வர பெற்றிருக்கும் கோபிக்கு இந்த நூல் ஜாக்பாட். இயல்பான மனிதர்களிடையே தான் பெரும்பாலும் இரவுகளில் உலா வரும் கோபியின் கவிதைகள் எப்போதும் சில கேள்விகளையும் சில பதில்களையும் தாங்கியபடியே தான் இருக்கின்றன. வெகு நேர்த்தியான திட்டமிடல் எல்லாம் அதற்கு இல்லை. ஆனால் ஒரு தீர்க்கம் கொண்ட விடியலுக்கு யோசிக்கிறது.

"சாதிய மலம்" சவுக்கடி.

"நீ யார்" கத்திக்குத்து.

"சிறுதெய்வம்" பறையடி.

"ஊர் தெரு" உண்மையின் உச்சம்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். சொல்லிக்கொண்டே போக இன்னும்.... இன்னும்.

"பூ உதிரும் நிழல்கள்" என்ற ஆக சிறந்த கவிதையை உள்ளடக்கிய இந்த நூல் இன்னும் கொஞ்சம் கவிதைகள் சேர்த்து வந்திருக்க வேண்டும் என்ற சிறு ஆசையோடு இனி தன் பணியை செவ்வனே செய்யும் என்று வாழ்த்துகிறேன்.

நூல் : வாய்தாவிலிருக்கும் பதினைந்து லட்சம்
ஆசிரியர் : கோபி சேகுவேரா
விலை : Rs. 100/-
தொடர்புக்கு : 85082 54015

- கவிஜி

Pin It