பேனாவைப் பெருமைப்படுத்திய தமிழ்ச் சாதனை யாளர் வரிசையில் முன்வைத்துக் கொண்டாடத் தக்கவர் தனுஷ்கோடி ராமசாமி.
அவர் வாழ்க்கையிலும் பணியிலும் எழுத்திலும் சமரசம் செய்துகொள்ளாத மாமனிதர். இன்றும் மனக்கண் முழுவதையும் அடைத்து நிற்பது அந்த இனிய உருவம் மட்டுமா? அவர் படைப்புகளுந்தான்.
நம்மில் பலர் தம்மைப் பற்றி வெளியுலகம் அறிந்துகொள்ளாமலே வாழ்ந்து முடிந்து விடுவர். நண்பரும் அப்படியே மூடிவைத்த சந்தனப் பேழைபோல் வாழ்ந்தார்; அரியவை படைத்து மறைந்தார்.
சிலஆயிரம் எழுத்துக்களை கொண்டவர்களுக்கு அப்பால், “த.ரா.வா? என்ன சொல்கிறீர்கள்?” என்று அறியாமைதான் மிச்சமாகிறது. நமக்கு அளவுகடந்த தன்னடக்கம்.
சில ஆய்வாளர்கள் அவருடைய படைப்புகளை ஆராய்ந்து கட்டுரை படைத்தார்கள். அதற்கு அப்பால் அந்த 2005 நவம்பர் 25 (ஆண்டு எண்ணில் இருக்கிற “சுழி”களை மறைத்தால் அந்த மறைந்த நாள் தென்படுகிறது ஒரு வேடிக்கை)க்குப் பின் பெரிய அளவில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பொதுச்செயலாளர் பேராசிரியர் இரா.காமராசு சாகித்திய அகாதெமி வெளியீடான “தனுஷ்கோடி ராமசாமி” என்ற நூல் வாயிலாக நிலையான எழுத்து நினைவுச் சின்னம் நிறுவியிருக்கிறார்.
நூலை ஒருமுறை புரட்டினாலே, உள்ளே தனுஷ்கோடி ராமசாமியின் பன்முக ஆற்றலும் அதை எழுத்தில் வரைந்த பேராசிரியர் பேனா வன்மையும் போட்டி போடுகின்றன.
அறுபத்தோரு ஆண்டு மட்டுமே வாழ்ந்தவரும் சக்கன் வாத்தியார் தலைமகனுமாகிய இவர் கல்வியில் முன்னேறி ஆசிரியரானதும், 1972-ல் சரஸ்வதியை இல்லக்கிழத்தியாராக ஏற்றுக்கொண்டதும், அவர் களுக்கு டாக்டர் அறம் என்ற ஆளுமைச் செல்வன் மகனாகப் பிறந்ததும் அவருடைய குடும்ப வாழ்க்கையின் தந்திச் சுருக்கமாகும்.
அவர் 1964-ல் ஆசிரியர் பயிற்சியை முடித்தார்; அவரைக் கைதூக்கிவிட்ட பீட்டர் இராயப்பனை என்றும் நினைவில் வைத்துப் போற்றினார்; தென்னார்க்காடு மாவட்டம் கள்ளக் கொளத்தூரிலுள்ள தனியார் பள்ளிக்குத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். இங்கே அவரது மனச்சான்றுக்கு ஒரு சோதனை முன்வந்தது. பள்ளியில் தலித் மாணவர்கள் தனித்து உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.
“இங்கு இப்படித்தான் வழக்கம்!” அவருக்குக் கிடைத்த விளக்கம் மனித அறத்திற்கு நேர்மாறானது; சிரச்சேதம் செய்யும் அளவுக்கு மூர்க்கமானது.
அனைத்து மாணவர்களையும் ஒன்றாக அமர வைக்கிறார்! எதிர்ப்பு வந்தது இடியும், புயலுமாக. இமயம் அசையவில்லை. சாதிச் சீற்றம் அந்தப் பாரதி அன்பர் எதிரில் வெயில்முன் பனிபோல் கலைந் தோடியது. இது முதற் சோதனை. இங்கே ஒரு மனிதர் மாமனிதராகிறார். அந்த மாற்றம் அவர் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது. அந்த உயர்ந்த மனிதரின் பேனா பிரசவித்த குழந்தைகள் எல்லாம் நவதமிழ் அணிவதற் கென்றே படைக்கப்பட்ட இரத்தினங்களாக ஒளி வீசின. இதில் வியப்பளிப்பது எதுவும் இல்லை. “வாழ்க்கையில் சமரசமில்லாத படைப்பாளி பாரதிக்கு அருகில் அமரத் தக்க பேறு பெற்றவர்”.
இந்தச் சூழலில்தான் பேராசிரியர்கள் கோ.கேசவன், இராம.சுந்தரம் ஆகிய மார்க்ஸியப் பேரறிவாளர்கள் பழக்கமும் தெளிவுரையும் காந்தீயவாதியான தனுஷ் கோடி இராமசாமியை மார்க்ஸியத் தடத்தில் நடைபோடச் செய்தவை.
இடையில் இவர் முதுகலை (தமிழ், கல்வியியல்) தேர்வு பெற்றார். காலம் அவரைப் பயின்ற பள்ளியிலேயே ஆசிரியராக்கியது. காலப்போக்கில் தனுஷ் கோடி ராமசாமி அந்தப் பள்ளியின் தலைமை யாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். அப்பொறுப்பு அவரது எழுத்துக்கும் இயக்கப் பணிக்கும் குறுக்கீடா கலாம் என்று கருதினார். பலருக்கு தலைமை நாற்காலி இலட்சிய வெறியாக இருக்கிற நிலையில், கிடைத்த பதவியைக் காரணங்கருதித் துறந்தார் இந்தப் பேனா உழவர். இது இவருக்கு மட்டுமே இயலக்கூடியது. பின் ஓய்வு நாள்வரை அப்பள்ளியின் துணைத் தலைமை யாசிரியராகவே பணிபுரிந்தார். மாணவரிடம் மேலதி காரம் செலுத்தும் ஆசிரியத்தனம் அவரிடம் இல்லை. மாணவர்கள் அவரை “அண்ணா” என்றே அழைத் தார்கள். அவரது “பரவசம்” என்ற சிறுகதை பதினோராம் வகுப்புத் தமிழ்த் துணைப்பாடத்தில் இடம் பெற்றது ஒரு குறிப்பிடத்தக்க செய்தி.
இவருடைய மேடைப்பேச்சு மினுக்கித்தனமற்றது; செவிமடுப்போர் இதயத்தைத் தன் ஆளுமைக்குட்படுத்தும் ஆளுமை கொண்டது. கேட்பவர் இதயத் திற்கும் பேசுபவர் மூளைக்குமிடையில் இடையீடற்ற உணர்வாற்றலை மின்சாரம் போல் பாய்ச்சும் வல்லமை இவர் வாக்கிற்கு உண்டு. இவர் பேச்சில் காந்தி வருவார்; லிங்கன் வருவார். வீறு கொண்ட இலக்கிய உரையாய் அது விளங்கும். பல சமயங்களில் இவர் படைத்த கதையே அப்பேச்சில் உயிர்பெற்று உலவும்.
இவர் தொடக்கத்தில் இளைஞர் இலக்கிய மன்றம் என்றும், பின் அதுவே தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமாகப் பரிணமித்தும் ஆற்றிய இலக்கிய இயக்கப் பணிகள் காலப்போக்கில் கரைந்துவிடக் கூடியவை அல்ல. இறுதிநாட்களில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். ஓராண்டு எல்லைக்குள் அவர் எம் போன்றார் இதயங்களுடன் ஒன்றினார்.
அவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாட்டுப்புற வடிவம் சார் கதை, குறுநவீனம், தோழர் என்ற நவீனம் எனப் படைப்பாற்றின் பல துறைகளிலும் இறங்கி நீச்சலடித்தவர். அனைத்தும் உச்சிமேல் வைத்துக் கொண்டாடத் தக்கவை.
நூலில் “சாம்பல் கிண்ணத்திலா, கவிதை வரிகளிலா” என்ற பகுதி அவரது கவிதைகளின் பெருமையைத் துல்லியமாக எடைபோடுகிறது. “கனவு காணுகிறேன்” (1947) என்பது அவரது முதற்கவிதை. “முல்லைச்சரம்” இவர் கவிதைகளை அதிகமாக வெளியிட்ட பெருமைக்குரிய இதழ். சாத்தூர் ஆற்றங்கரைக் கவியரங்குகள் அவர் கவிதைகளை மாந்திக் கைதட்டின. கவிதைக்கும் இதயச் சாம்பலுக்கும் போட்டி நடத்திய கவிதைதொட்டு “விழுவதும் எழுவதும் மலைகளுக்கு இல்லை; மனிதனுக்கு உண்டே! என்பது வரையில் காட்டப்பட்ட கவிதைகளில் அவர் கவித்துவக் கற்பனைச் செறிவைக் காட்டும் திறத்தை அழுத்தமாகவே வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.
“மாணிக்கப் படலம்” என்ற பகுதி எழுத்தாளரின் கட்டுரைப் பாங்கினை விளக்குகிறது. “தனுஷ்கோடி ராமசாமி கட்டுரைகள்” என்ற நூலில் நாற்பத்தொன்பது கட்டுரைகள் உள்ளன. 1) மனித வளமேம்பாடு,
2) நோன்புகள், 3) பலவீனங்கள், 4) எண்ணங்கள்,
5) உயர் மானுடம், 6) நம்பிக்கைகள், 7) பிராணாயாமம், 8) ஆசனங்கள், 9) உடலோம்பல், 10) பிரமசரியம்,
11) தமிழுணர்வு, 12) சான்றோர் ஆளுமை, 13) திறனாய்வு முதலான கட்டுரைகள் அவரது உள்வாங்கு திறனையும் வெளியீட்டுப் பாங்கையும் வெளிப்படுத்துவன. “எந்த நிலைமையிலும் எழுத்து மேன்மையானது” என்று வரும் குறிப்பு அவருக்கு முழுமையாய் ஏற்கும்.
நாட்டார் மரபுவழிப்பட்ட கதைகள், குறிப்பாகச் செந்தட்டிக்காளையை வைத்து எழுதப்பட்டவை; ஊர்ப் புற வெள்ளந்தியான மனிதர்களை மையப்படுத்தியவை. அவை கரிசல் மண்ணைப் பழமை மாறாமல் மணம் வீச வைப்பவை. அத்துறையில் த.ரா.வின் படைப்பு எடுத்துக்காட்டாகக் காட்டத்தக்க நயமும் நளினமும் செறிவும் கொண்டது.
கரிசல் பூமியைக் களமாகக் கொண்டு அவர் படைத்த சிறுகதைகள் தமிழன்னை புனையும் நவரத்தின மாலையில் சீர்படச் சேர்க்கப்பட்ட நவமணிக்கற்கள்.
நாரணம்மாவில் காட்டப்படும் அரசு மருத்துவ மனையின் அரக்கத்தனம் ஏழை வாழ்க்கையைப் பலி வாங்கும் கொடுமை, பாரத விலாஸில் இடம்பெறும் துப்புரவுப் பணிப்பெண், கொண்டுசாமியின் மனித நேயம், இளம்பெண்களை எரிபொருளாக்கும் பலிபீட மாகிய தீம்தரிகட, ஆண் பெண் வாழ்க்கையுறவு பற்றிய வாழ்க்கை நெருப்பூ... என அடுக்கிக் கொண்டே போகிறது நூல். கஸ்ப்பா - அது வெளிவந்த காலத்தில் பாராட்டையும் ஏசலையும் சேரப்பெற்ற கதை. சாதி மேலாதிக்கத்தைக் கூண்டிலேற்றும் “ஆயிரம் ஆண்டுத் தணல்”, அகமனப் பதிவை அழுத்தமாகப் பதிவதில் சங்கப் பாடல்களுக்கு நிகரான “அன்புள்ள...” எனத் தனுஷ்கோடி ராமசாமியின் சிறுகதைகள் ஒன்றை ஒன்று மிஞ்சுகிற சுவையும் கட்டுக்கோப்பும் செறிந்த படைப்புகள்.
எழுத்தாளரின் குறுநாவல்கள் இரண்டு. 1) நிழல், 2) ஒரு கவிதை. இவ்விரண்டும் எழுத்து வட்டத்தில் அடிக்கடி அலசப்பட்டவை. இவை இயல்பான காதலின் நேர்க்கோட்டை விட்டு விலகி, வளைந்த வளை கோட்டிற்கு நேர் எனலாம். இரட்டை நாதசுரம் என்று இவற்றை மதிப்பிடுவார் பாரதி கிருஷ்ணகுமார்.
மனைவியுடன் இல்லறம் நடத்தும் தமிழாசிரியர் கணவனைப் பிரிந்த ஒரு பெண்ணிடம் ஈர்ப்புக் காட்டுவதே நிழல் என்ற குறு நவீனத்தின் சுருக்கம். மாறாகக் கவிஞரும் கல்வித்துறை அடிப்படைப் பணியாளருமாகிய ஓர் இளைஞர் தம் தகுதிக்கு எட்டாத சுமதி என்ற இளம் மருத்துவரிடம் ஆசையைச் செலுத்துவது ஒரு கவிதை என்ற குறுநாவல் தன் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
இரண்டிலும் ஆண்தான் எல்லை தாண்ட ஆசைப்பட்டு விரக்தியுடன் திரும்புபவன். இரு குறு நாவலும் வெவ்வேறு வளைகோட்டில் பயணம் செய்தாலும், நவீனத்தின் நளினத்தைப் பாதுகாப்பதில் எழுத்தாளர் கருத்துடன் இருந்திருக்கிறார். காரணம் மனித மதிப்பீடுகளை ஓம்பும் பண்பில் ஆசிரியர் முன்னுரிமை காட்டுவதே.
முருகசாமி என்ற தமிழாசிரியர் “நிழல்” தேடித் தவித்தால், “பழனி முருகன்” என்ற பொதுவுடைமை அனுதாபியான தமிழாசிரியர் “தோழர்” நவீனத்தின் முதன்மைப் பங்காளி.
கோடையில் சாத்தூருக்கு சமூக சேவை செய்ய வருகின்றனர் பிரான்ஸ் நாட்டுக் குழுவினர். அவர்களில் மேரி ஷாபின்னாவில்லான் என்ற முன்னோடிப் பெண்ணை அவர் சந்திக்கிறார். அவளுடன் பழகிப் பழனிமுருகன் பெறும் அனுபவங்களே நவீனத்தின் உள்ளடக்கம். அவர் அவளுக்கு வழித்துணையாவதுடன் கிராம மக்களின் வாழ்க்கை முறைகளை அவள் அறியவும் உதவுகிறார். இவர் அவளுக்கு மொழி பெயர்ப்பாளராகிறார். பல தடவைச் சந்திப்பு பொதுவுடைமையை விவாதப் பொருளாக்குகிறது. இந்திய சமூகம் பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றத்தை அவளுக்கு அவர் அறிமுகப்படுத்துகிறார். தொலை தூரக் கிராம வாழ்வின் எல்லா முகங்களையும் அவள் அவர் வழியாக அறிகிறாள். இருவரது பண்பும் செயலும் ஒருவர்பால் இன்னொருவர் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. ஒருவர்க்கொருவரின் அணுக்கம் நட்பிற்கும் காதலுக்கும் இடைப்பட்ட ஒன்றாயிருந்தது. அவ்விருவரின் பண்பிலும் நடப்பிலும் இப்புரிதல் நிறைய மாற்றத்தைப் பரிசளிக்கிறது.
தொடக்க அறிமுகம் எதிர் எதிர் கருத்துக்களின் சந்திப்பு. இறதியில் அவர்கள் ஒத்திசைவான சிந்தனைக்குப் பக்குவப்படுகின்றனர். கதையின் முந்திய பகுதியில் “தோழர்” என்ற சொல்லையே கேட்க மருண்ட ஷாபின்னா பிரிவு நேரும் கடைசி நொடிகளில் “காம்ரேட்” என்ற அழைப்புடன் விடை பெறுகிறார். இது அவளிடம் நேர்ந்த மாற்றம். முரட்டுத்தனமான இலட்சிய வெறியரான பழனிமுருகன் மனத்தில் அந்த அறிமுகம் மனிதம் தோய்ந்த மென்மையானவராக மாற்றுகிறது. இதுவே நாவலின் வெற்றி என நூலாசிரியர் மதிப்பீடு செய்வது பொருத்தமானதே.
கதை மாந்தர்களின் செயல்களைக் கொண்டு ஆசிரியர் கருத்து வெளிப்பட வேண்டும் என்ற மரபு கடந்து, உரையாடல் வழி கருத்துணர்த்தும் பாங்கு எழுத்தாளரிடம் பெற்றிருக்கிறது. தமிழ் நாவல் வரலாற்றில் இது ஒரு புதுமையான படைப்பு என்ற காமராசுவின் கருத்து பொருத்தமானதே.
வெற்றி பெற்ற தமிழ் நவீனங்களில் “தோழர்” முதல் வரிசையில் இடம் பிடிக்கிறது. மிடுக்கான தோற்ற முடைய எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி மனத்தில் மனித நேயம் ததும்பும் அவர் உச்சரிக்கும் ‘சந்தோஷமும்’ ‘மனுஷாவும்’ அவருக்கே உரிய ஆன்ம அடையாளங்கள்.
கலை அழகியலும் கருத்தியலும் ஈடாகக் கலந்ததே இலக்கியம் என்று இலக்கணம் வகுத்த எழுத்தாளர் தம் எழுத்தால் மட்டுமின்றி வாழ்வாலும் மேம்பட்ட எல்லா முனைகளையும் சீராகவும் திறமாகவும் வகைப்படுத்து வதிலும் முறைப்படுத்துவதிலும் எழுத்தாளர், பேராசிரியர் இரா.காமராசு நிறைவான வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்திய இலக்கியச் சிற்பிகள்
தனுஷ்கோடி ராமசாமி
இரா.காமராசு
வெளியீடு: சாகித்திய அகாதெமி
விலை: ரூ.50/-