வா.மணிகண்டனின் 'என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி' கவிதைத்தொகுப்பை முன்வைத்து:-

மிகுந்த எத்தனமும் பாவனைகளும் வழிகின்றன வா.மணிகண்டனின் கவிதைகளில். எதையெல்லாம் கவிதைப்படுத்தலாம் என்று மீண்டும் மீண்டும் சரிபார்க்கப் பட்ட வாக்கியங்களைக் கவிதைகளாக முன்வைக்கிறார். வா மணிகண்டனின் கவிதாவுலகம் மிகுந்த பூடகங்கள் நிரம்பியது. கள்ளமௌனம் மிக்கதொரு மேதமையை தன் மொழியின் ஊடாக விரிக்கிற எத்தனம் அவருடையது. வாசக பர்வத்தில் திருப்தியுறாத ஒரு குறைசொல்லியின் நீட்சியாக முன்னுரையில் துவங்கி முற்றுப்புள்ளி வரை தீர்மானமும் திட்டமும் வாசிப்பவனை அயற்சியுறச் செய்கின்றன.

வா மணிகண்டனுக்குக் கவிதையியல் கைவந்த அளவிற்குக் கவிதைகள் வசப்படவில்லை என்றே தோன்றுகிறது. அல்லது எது கவிதை என்பது குறித்த அவரது உள்ளுணர்வே பயமாக மாறி கவிதையாக்கும் முயல்வுகளில் அவரை நடுக்கமுறச் செய்திருக்கக் கூடும். கவிதை என்பது எனத் துவங்கி இலக்கணங்களும் இசங்களும் அவரவர் மன அவிழ்ப்பு வாசகங்களுமாக நெடியதொரு பயணத்தின் இடைவனத்தில் அமர்ந்துகொண்டு கவிதைத் தொகுதி ஒன்றை தொகுக்கையில் அத்தகைய மன நடுக்கத்திற்கு ஆளாவது இயல்பே.

மணிகண்டன் பெயர்களை கவிதாபாத்திரங்களாக உள் உலாவ விடுவதை இத்தொகுதியெங்கும் விரும்பிச் செய்திருக்கிறார். அப்படிக் கவிதை எழுதுவது என்பது இன்று நேற்றல்ல ராமச்சந்திரனா என்று கேட்டேன் காலத்திலிருந்தே ஆகி வந்திருக்கக் கூடிய பழைய ஆகமங்களில் ஒன்று தான் என்றாலும் கூட சமகாலத்தில் இசை மற்றும் லிபி ஆரண்யா, சாம்ராஜ், நக்கீரன், நிலாரசிகன், கதிர்பாரதி, என நெடியதொரு கவிஞர் பட்டியலே இது போன்ற கவிதைகளைத் தத்தமது முயல்வுகளின் ஊடாக முயன்று கொண்டிருக்கின்றனர் என்ற போதும் வா.மணிகண்டனின் இத்தகைய கவிதைகளில் பெயர்கள் துருத்திக் கொண்டு நிற்கின்றன. அல்லது அவரது இம்மாதிரியான திரும்புதல் அவ்வளவு தூரம் பயனளிக்கவில்லை எனக்கொள்ள முடியும். பல கவிதைகளில் வா மணிகண்டன் திடீரென்று ஒரு கவிதாபாத்திரத்தை முன் நிறுத்துகிறார். அல்லது திடீரென்று அவர்களது வருகை அக்கவிதைகளில் நிகழ்கிறது. ஆனால் பெரும்பாலான கவிதைகளில் அப்படிப் பெயர்கள் நுழைந்திராவிட்டாலும் அக்கவிதைகளில் பெருத்த மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருக்கப் போவதில்லை என்ற அளவில் தான் அவைகளின் நிகழ்தல் உள்ளது. தொட்டுத் தொடர்கையில் அப்படிப் பெயர்சொல்லல் ஒருவித சலிப்பை வாசகனுக்குள் ஏற்படுத்திவிடுகிற அபாயமும் உள்ளது.

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி என்னும் இக்கவிதைத் தொகுப்பில் பல நல்ல கவிதைகள் வந்திருக்க வேண்டியவை முடிந்த பின்னரும் நீள்வதன் மூலமாக ஒருவித வெறுமையை நிகழ்த்துகின்றன. அல்லாது போனால் ஒரு கவிதையை எங்கே எப்படி முடிகிறது என்பதில் கவிஞருக்குச் சில பிரச்சினைகள் இருப்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. சில கவிதைகளில் கவிதையை நீட்டிப்பதன் மூலமாக கவிதை சுழன்று வெவ்வேறாகித் திரும்புகிறது. அல்லாது போனால் இன்னுஞ்சிலவற்றில் கவிதை முடிந்த பிறகும் அது முடிந்ததை உணராமல் அதைத் தாண்டி வெளியே பேசவைக்க முயல்வது சிரமமாகிறது. என்னைப் பொறுத்த அளவில் இத்தொகுப்பின் பல கவிதைகள் இந்த இரண்டாவது ரக சிக்கலைத் தான் கொண்டிருக்கின்றன எனச் சொல்வேன்.

குட்டிச்சூரியன்கள் உள்ளிறங்கும் அறைகள் என்னும் கவிதை முதலில் சிறுவர்களின் புத்தகப் பைகளில் குண்டு கிடைக்கவில்லை என்று சொல்லும் இடத்தில் ஒருமுறை முடிந்துவிடுகிறது. இது ஒரு ABRUPT அல்லது FINITE ரகக் கவிதை. ஆனால் அதைத் தாண்டி இரண்டு பத்திகள், சத்யன் என்னும் ஒரு சிறுவனின் பெயர் என தேவையின்றி நீள்கிறது. அதிலும் வெறும் வதந்தி என்று நம்புகிறார்கள் என்னும் வரி அனாமதேயமானதொரு தொலைபேசிக் குரல் தருகிற உணர்ந்வை சிதறடிக்கிறது என்றாலும் அங்கேயாவது அந்தக் கவிதையை முடித்திருக்கலாம். அப்படி முடித்திருந்தால் கூட நலம். அந்தக் கவிதையின் இறுதிப் பத்தி முழுவதுமாக அர்த்தமற்ற வெறுமையை ஏற்படுத்துகிறது. அது தேவையற்றது. அக்கவிதையின் மையத்தை சிதறடிக்கிறது.

ப்ரனீதா என்பவள் முதல் கவிதையான பறவைகள் நகர்ந்துவிட்ட வானம் என்னும் கவிதையில் வேறு ஊருக்குச் செல்வதாகச் சொன்னாள். காரணம் ஏதும் சொல்லவில்லை. இந்தக் கவிதையிலும் பெயர் நுழைக்கப்படுகிறது. சரி இருக்கட்டும். அதற்கடுத்த வரிகள் இங்கே:-

புன்னகை
கண்ணீர்
துக்கம்
எதுவுமில்லாமல் மௌனமாயிருந்தேன்.

இந்த இடைவரிகள் வெகு தீவிரமாக நுழைக்கப்பட்டுத் துருத்திக்கொண்டிருப்பது இக்கவிதையின் பலவீனம். "எதுவுமில்லாமல் மௌனமாயிருந்தேன்" என்ற நேர்பதம் சொல்லாத எதையும் மேற்செருகப்பட்ட எத்தனை வார்த்தைக் கூட்டங்களும் சொல்லிவிடப் போவதில்லை. இம்முயல்வு இக்கவிதையை மிகப் பலவீனமாக்குகிறது. இக்கவிதை இவ்வரிகளைத் தவிர்த்து மிக அழகான கவிபொருளை கவிதாநுட்பத்தைப் பேசுகிறது என்பது சோகமான ஒன்று.

என்னளவில் இதேகவிதை

மழை பெய்து
தெளிந்திருந்த வானத்தில்
மூன்றுபறவைகள்
பறந்துகொண்டிருந்தன.

ப்ரனீதா
வேறு ஊருக்குச் செல்வதாகச் சொன்னாள்.
காரணம் சொல்லவில்லை.

எதுவுமில்லாமல் மௌனமாயிருந்தேன்

மூன்றுபறவைகள்
இருந்த இடத்தில்
இப்பொழுது

மேகத்திட்டு வந்திருந்தது.

அருமையான கவிதை இதனுள் தான் இருக்கிறது. ஆனால் எடுத்துக் கொடுப்பதற்குப் பதிலாக சிக்கலாக்குவது கவிஞரின் மகாகவனத்தின் விளைதல் பிழைதான்.

இக்கவிதைத் தொகுதியின் பல கவிதைகள் தன்மையைப் போற்றுகிற கவிதைகளாகவும் மற்றமைகளைக் காரணமின்றி நிராகரிக்கிற கவிதைகளாகவும் அமைந்துவிட்டிருக்கின்றன, கவிசொல்லியின் அகம் சிக்கலுறுவதின் வெளிப்பாடுகள் தாம் அவரது கவிதைகள் எனக் கொண்டோமேயானால் ஒருவேளை அப்படியும் இருந்துவிடக் கூடும். சதா கேவிக்கொண்டே இருக்கிற அதே நேரத்தில் தன் மேதமையை விவரித்துச் சொல்வதில் விருப்பமிருக்கிற இரண்டிற்குமிடையில் வந்து வந்து செல்லும் மனம் அவிழ்க்கிற வார்த்தைகள் இதுபோன்று நடுக்கமுறுவது இயல்பு. இந்தத் தொனி வா.மணிகண்டனின் முன்னுரையில் ஆரம்பிக்கிறது. பின் அட்டையில் பிளர்ப் எனச்சொல்லக்கூடிய அட்டைவாசகம் வரை நீள்கிறது. இவரது கவிதைகளெங்கும் யார் எது என்ன எப்படி என்ற முன் தீர்மானத்துடனும் வாசகனுக்கான நேரடியான அனுபவங்களைக் கொடுக்கிற விழைதலில் சிக்கலான வாக்கியங்கள் நீட்டிக்கப்பட்ட செருகல்கள் என திக்கித்திணறுகிறார்.

இடது வலது மற்றும் நிறுத்தம் ஆகிய எல்லாவற்றையும் முன்னாலேயே முடிவுசெய்துவிடுகிற பதற்றம் இவரது மொழியெங்கும் தெறிக்கிறது. தலைப்புக் கவிதையான என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி என்னும் கவிதை மிக அபத்தமாய் விரிகின்றது. எல்லாவற்றையும் முன் தீர்மானிக்கிற கவிசொல்லி மௌனசீடர்களை மட்டுமே தன் கவிதையைப் பெற்றுக்கொள்ளும் வாசகர்களாக நியமித்துவிட எத்தனிக்கிறார் என்பது இக்கவிதையின் ஊடாக எளிதில் விளங்குகிறது. நியமிக்கப் பட்ட பேரதிர்ச்சி வாக்கியங்களை இக்கவிதை தன் இடையில் கொண்டிருக்கிறது. அது தேவையற்றது. ஒரு சார்பாக பலவீனங்களின் குறியீடாக அழகற்ற தவிட்டுக்குருவியை உருவாக்க விழைகிற ஒருவன் அதன் முன்வாக்கியத்தில் மிக மூர்க்கமாக அக்குருவியை உருவாக்க விழைவது செயற்கையாக்குகிறது. நகரத்தின் இல்லாத வனங்களைப் பொசுக்கி எடுத்த சாம்பல் நிறத்திற்காகவும் சோடியம் விளக்கின் செம்மஞ்சள் நிற ஒளி அதன் அலகுகளின் நிறத்திற்காகவும் சேகரிக்கப் படுகின்றன. அதே சின்னஞ்சிறு மஞ்சள் அலகில் அதே குருவி வயல்வெளியைத் தூக்கிச்செல்லக் கூடியதென விரிக்கும் கவிசொல்லி அதே குருவி தன் தலையை சிலுப்பி நதியை இடமாற்றும் என்கிறார். இவ்வளவுக்கும் பின்னால் கடவுள் போட்டியாளனை விரும்பவில்லை அவனை செருப்பால் அடித்து விரட்டிய கணத்தில் குழைத்த சேற்றுக்குள் விழுகிறது முதல் மழைத்துளி என மிகுந்த போலி வாக்கியங்களின் தோரணமாகச் சுழன்று சுழன்று முடிந்து மடிகிறது இக்கவிதை, . இதனை வாசித்து முடிக்கையில் பேசாமல் என்னையும் தவிட்டுக்குருவியாகவே செய்து தொலைத்திருக்கலாம் என்று யாரைச்சபிப்பதென்று தெரியாமல் அல்லாடுகிறது வாசகமனம்.

வா.மணிகண்டனின் இத்தொகுப்பெங்கும் சுய இரக்கமும் அதீதமான மன அழுத்தமும் வெளிப்படுகிறவழியிலேயே கருக்கலைந்து கொள்கிற பாதிவாக்கியங்களாக நேர்வது பெருஞ்சோகமே. மௌனத்தின் நீட்சியில் தன்னை அவிழ்க்கிற மனம் என்பது கவிஞனுக்கே உண்டான சிறப்புத்தான். என்றபோதும் தன்னை நிராகரித்துக் கொள்கிற நிர்வாணப்படுத்துகிற தன் மனதை அறுத்தெறிகிற கவிதைகள் சாஸ்வதங்களாகிற அதே நேரத்தில் எல்லாக் கவிதைகளும் கவிதைகளல்ல என்னும் கூற்றும் தொடர்ந்துகொண்டே தன்னைத் தக்கவைத்துக் கொள்வதை நினைவிலிறுத்த வேண்டியிருக்கிறது. இத்தொகுப்பின் கவிதைகளுக்குத் தனக்கு 5 வருடங்கள் ஆயின என்று காலத்தை முன்னால் நிறுத்திப் பயமுறுத்துகிற மணிகண்டன் கவிதை எனத் தான் நினைத்த பலதும் சிறிதுகாலம் கழித்துக் கவிதை மாதிரி ஆனதாகவும் அதன் பிறகு அவையே வெற்றுச்சொற்களாக மாறிப்போனதாகவும் தெரிவித்து மிரட்டுகிறார். ஆக என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி என்னும் இக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிற எல்லாக் கவிதைகளுமே கவிதைகள் தான் என்றும். அதைத் தானே சான்றளிப்பதாகவும் தன் முன்னுரையில் முன்வைக்கிற வா.மணிகண்டன் பல கவிதை மாதிரிகளை மற்றும் வெற்றுச்சொற்களை நிராகரித்து எஞ்சிய சிறந்தவைகளின் தொகுப்பு தான் அவரால் அளிக்கப் படுவது என்றும் SHIFT + DELETE செய்தது போல எஞ்சிய வெள்ளைப் பக்கங்கள் வேறு தன்னிடம் கெஞ்சியதாக எல்லாம் குறிப்பிடுகிறார். "என் அழிப்பில் தப்பிப் பிழைத்தனவற்றை மட்டும் கவிதைகள் என அறிவித்துவிட்டேன்" என்கிறார்.

அவரிடம் சொல்வதற்குச் சில வாசகங்கள் இருக்கின்றன. வா.மணிகண்டன், தயவு செய்து தாங்கள் வெற்றுச் சொற்கள் என அழித்தவற்றை மறுபரிசீலனை செய்யுங்கள். ஒருவேளை அவை அல்லது அவற்றுள் ஆகச்சிறந்த கவிதைகளாக இருந்துவிடக் கூடும். இன்னுமொரு வாசகம், இந்தத் தொகுப்பில் எனக்கு ஒரு கவிதை கூடவா பிடிக்கவில்லை எனக் கேட்டால், ஒருகவிதை பிடித்திருக்கிறது. ”பெருமழை” என்னும் கவிதையில் "காதல்கடவுளின்" என்ற வரியைத் தவிர்த்தால் அது ஒரு சிறந்த கவிதை.

வாழ்த்துக்கள் வா.மணிகண்டன்

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி
வா.மணிகண்டன்
காலச்சுவடு பதிப்பகம்
ரூ. 70

Pin It