நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கு செல்வேன்? பிறப்பிற்கு முன்பு என்ன? இறப்பிற்குப் பின்னர் என்ன? என்ற வினாக்கள் மாந்தனின் உள்ளத்தில் தோன்றிய காலத்தில் மெய்யியலின் தோற்றம் உருவாயிற்று என்று கூறலாம். இப்படி அரும்பிய சிந்தனைகள் வளர்ந்து பல கிளைகளாகப் பரவி வந்துள்ளன.(1)
சிந்தனை என்ற ஒன்று மாந்த குலத்தின் சிறப்புத் தன்மையான ஒரு புலனாக அமைந்ததன் பயனாக நிகழ்வுகளையும், துய்ப்புகளையும் (அனுபவங்களையும்) எண்ணங்களாக ஆக்கிக் கோர்வைப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் திறனாக வளர்ந்தது. இப்படியாக மனத்தின் செய்பாடுகளின் வழியாக அறிவைப் பெறும் திறன் மாந்த குலத்திற்கு ஏறத்தாழ 18000000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது.(2)
தமிழ் உலகில் இந்தச் சிந்தனையைத் தொல்காப்பியர்
'ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே'
மனத்தின் வழியாகப் பெறப்படும் அறிவு ஆறாவது அறிவாகும் என்று கூறும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணார் 'மனத்தினாலறியப்படுவது இதுபோல்வன வேண்டுமெனவும். இது செயல் வேண்டுமெனவும், இஃது எத்தன்மையெனவும் அனுமானித்தல். அனுமானமாவது புகை கண்டவழி நெருப்புண்மை கட்புலன் அன்றாயினும் அதன்கண் நெருப்பு உண்டென்று அனுமானித்தல்' என்று குறிப்பிடுகிறார்.
அத்துடன்
'மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்து கொண்டு,
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்' (தொல்:பொரு:656)
என்ற தொல்காப்பிய நூற்பாவின்படி படைப்பின் வெளிப்பாட்டு உத்திகளில் ஒன்றாக மனத்தில் எண்ணுவதும், குறைவின்றித் தெரிந்து கொள்வதும் கையாளப்பட்டுள்ளதை அறியலாம்.
ஆகவே சிந்தனை முறை என்ற ஒன்றை நமக்கு தொல்காப்பியம் தோன்றியதற்கு முன்பே நேரிதின் உணர்ந்த பெருமக்கள் விளக்கிச் சென்றுள்ளார்கள் என்ற அறியமுடிகிறது.
கிரேக்க மொழியில் 'ஃபிலாசபி' என்று அழைக்கப்படும் இச்சொல்லின் பொருள் 'ஞானத்தை விரும்புதல்' அல்லது 'ஒட்பத்தின் காதல்' என்று கூறலாம். ஆனால் காலப்போக்கில் இதன் பொருள் விரிவாகி வந்துள்ளது. நமது வாழ்வின் பொருள் என்ன அதன் உள்ளார்ந்த கூறுகள் என்ன என்று மனத்திற்குள் சென்று தேடும் தேரல் முறையாக மெய்மையைக் கண்டறியும் மெய்யியலாக விரிவாகியது. மெய்யியலை விரிவாக ஆராயும்போது அதில் இரண்டு வகையான கூறுகளைக் காண முடியும். ஒன்று பகுப்பாய்வு செய்தல், மற்றது பண்பாட்டு விழுமியங்களைக் கண்டறிதல் என்ன கூறலாம்.
அதாவது மெய்யியல் இலக்குகளை எப்படி அடையலாம் என்றும், அதன் இலக்குகள் யாவை என்றும் இரண்டு தன்மைகளைக் கொண்டு விளங்கிக் கொள்ள முடியும். நடைபெறும் ஒரு நிகழ்வு எப்படி நடந்துள்ளது? என்று ஆராய்வது ஒன்று, அந்த நிகழ்வின் நோக்கம் என்ற என்று கண்டறிவது இரண்டு.
மனித சமூகத்தின் அளப்பறிய பண்பாக பகுத்தாயும் ஆற்றல் மெய்யியலுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. இந்த மெய்யியலின் வரலாற்றை ஆராய்ந்தோமானால் மனித குல வரலாற்றையும் கண்டறிய முடியும்.
இது மேற்கத்திய சமூகங்களுக்கு மட்டுமல்ல, ஆப்பிரிக்க, ஆசிய கிழக்குலக சமூகங்களுக்கும் பொருத்தமானதே. அனைத்துச் சமூகங்களும் தங்களுக்கான மெய்யியல் முறைகளைக் கொண்டுதான் உருவாகி வந்துள்ளன. ஒவ்வொன்றும் அதற்கே உரிய தனித்தன்மைகளையும், மற்றவற்றுடனான பொதுத் தன்மைகளையும் கொண்டிருக்கும்.
சமயம் சார்ந்த சிந்தனைகள், வழிபாடுகள் போன்றவை சமயஞ்சாராச் சிந்தனைகளுக்கு இட்டுச் சென்றன. வழிபாட்டு முறைகளில் நிறைவு பெறாத மனிதன் வேறு சிந்தனை முறைகளில் தீர்வுகளை நோக்கி நகரத்தொடங்கினான். பல சமூகங்களில் இறைவழிபாடு என்பது இறுக்கமான கட்டுகளாக மாறிய பின்னர் அதிலிருந்து சமூகங்களை விடுவிக்க புதிய சிந்தனை முறைகளைக் கையாண்டனர். அதுவே மெய் என்ற உண்மையைத் தேடும் பணியாக மாறியது. அவ்வாறு மெய் பற்றிய உரையாடல்கள் இலக்கணங்களாகவும் நீதி நூற்களாவும் இயற்றப்பட்டன. தமிழகச் சூழலில் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றின் வழியாக பல மெய் காணும் நெறிமுறைகளைக் காணலாம்.
மேற்கத்திய மெய்யியல் பள்ளிகள் எகிப்து, கிரேக்கம், ரோம் ஆகிய பகுதிகளில் இருந்து விரிவு பெற்றது. குறிப்பாக தேல்சு, சாக்ரடிசு போன்ற அறிஞர்கள் மேற்கத்திய மெய்யியலை வளர்த்தெடுத்தார்கள். அறிஞர்கள் உலகின் தோற்றம் பற்றி மட்டுமல்லாது, உயிர்களின் வாழ்வு பற்றியும், இறப்பு பற்றியும் வாழ்வின் நோக்கங்கள் பற்றியும் பல்வேறு வினாக்களை எழுப்பினர். அவற்றுக்கான விடையாக எழுந்த சிந்தனைகளின் தொகுப்பே மெய்யியல் என்ற துறையாக உருப்பெற்றது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பரந்துபட்ட உலகலாவிய உண்மைகள் மற்றும் நிகழ்வுகளைத் திறம்பட விளக்குவதே மெய்யியல் ஆகும்.
மெய்யில் வரலாற்றை எடுத்துக்கொண்டால் கீழை நாட்டுச் சிந்தனை மரபிலும், மேலை நாட்டுச் சிந்தனை மரபிலும் இரண்டு தன்மைகளோடு வளர்ந்துள்ளதைக் காண முடிகிறது. மேலைச் சமூகங்கள் பல நாடுகளைக் கவர்ந்து அவர்களை அடிமையாக்கிய பின்னர் அவர்களுக்குக் கிடைத்த செல்வ வளங்கள் மூலம் தங்களது அறிவுத் துறைகளைப் பெருக்கிக் கொண்டனர். ஆராயச்சிகளை விரிவாக்கிக் கொண்டனர். அதன் விளைவாக பல ஆராய்ச்சிப் பிரிவுகள் தோன்றி வளர்ந்துள்ளன.
இருபதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பல நாடுகள் விடுதலை பெற்ற பின்னர் தங்கள் வேர்களைத் தேடத் தொடங்கின. மாக்சுமுல்லர் போன்ற சமற்கிருத ஆர்வலர்கள் இந்தியச் சிந்தனையின் ஊற்றாக, வேதத்தை எடுத்துக் கொண்டனர். ஆரிய இன மேன்மைவாதத்தை முன்னிறுத்த அது வழிவகுத்தது.(3)
உலகத்தை எப்படிக் காண வேண்டும்?, எவை எல்லாம் எப்படி மாற்றமடைகின்றன? மாற்றத்தின் விளைவுகள் என்ன? போன்ற வினாக்களுக்கான விடை காணும் முறையாக சிந்தனைப் பள்ளிகள் இருந்துள்ளன.
பழங்குடி மனத்தின் எளிய சமய நம்பிக்கைகள் வளர்ந்து தருக்கவியல் சிந்தனைக்குள் மனித சமூகம் நுழைந்ததை வரலாற்று வகையில் காண முடிகிறது.
எத்தியோப்பியா, எரித்திரியா, கானா போன்ற பண்டைய ஆப்பிரிக்க நாகரிக சமூகங்கள் தங்களுக்கான கட்டுமானங்களையும், வாழ்வியல் முறைகளையும் மிக மேம்பட்டதாகவே வைத்திருந்தன.(4)
அவை தங்களுக்கான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருந்தன. அப்படியானால் அவர்கள் பகுத்தாயும் அறிவைப் பெறாமல் இருந்திருந்தால் அப்படியான கட்டுமானங்களையும், இலக்கியங்களையும் உருவாக்கியிருக்க முடியுமா?
பண்பாடு என்பது மனித சமூகத்தின் அக. புற வாழ்க்கையின் முழுமையான நெறிகளை வெளிப்படுத்துகின்றது.(5)
தெய்வம் பற்றிய சிந்தனையே முதன் முதலாக மெய்யியல் தோற்றத்திற்கான அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். இயற்கையின் இடையற்ற இயக்கம், அதற்கான காரணங்கள் பற்றி விரிவாகத் தெரியாத சூழலில் அதை இயக்கும் ஓர் ஆற்றல் இருக்க வேண்டும் என்று கருத்து உருவாகி இருக்கும்.
'அற்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்,
இரப்பச் சிந்தியேன்' - (புறம்: 376)
என்ற பாடல் வரிகளில் உள்ள நினைத்தல் என்பதற்கு சிந்தனை என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
'அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும்' (தொல்: கள: 109) என்ற வரிகள் தலைவி தலைவன் வரும் காலத்தையும் இடத்தையும் ஆய்வு செய்யும் செய்தியைக் கூறுகிறது. நினைந்து நினைந்து ஆராயும் தன்மைக்கு சிந்தை என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
புறத்தில் காணும் பொருட்களை அகத்தில் கொண்டு வந்து காணும் சிந்திப்பு முறை தோன்றிய பின்னர், தெய்வம் பற்றியும், நம்பிக்கைகள் பற்றியும் எண்ணங்கள் உருவாகி வந்துள்ளன. மெய்ப்பாடு வழியாக அதாவது பட்டறிதல் வழியாக ஒரு கருத்து மூளைக்குள் சேமிக்கப்படுகிறது. அது தொகுக்கப்பட்டு ஒரு சிந்தனைக் கொத்தாக மலர்கிறது.
மேற்கத்திய மெய்யியல் சிந்தனைகளுக்கு எகிப்திய மதக் கருத்துகள் உதவி செய்துள்ளன. கிரேக்கர்கள் எகிப்தில் வந்திருந்து கல்வி பெற்றுச் சென்றுள்ளனர்.(6)
எகிப்தியர்கள் தங்கள் சிந்தனை முறையை தெய்வ நம்பிக்கை வழியாகவே பெற்றுள்ளனர். அவர்களுக்கு மனமும் உடலும் இருவேறானதாக இல்லை என்ற கருத்து இருந்துள்ளது. எனவே அவர்கள் சடலமாக்கும் முறையைப் பின்பற்றி மன்னர்களின் உடலைப் பாதுகாத்து வந்தனர். 'அக்' என்ற ஆன்மா அல்லது உயிர் 'துவத்' என்னும் பல்வேறு துன்ப நிலைகளைக் கடந்து நித்திய அமைதியை அடைகிறது என்று நம்பினர். வைதிகத் தத்துவ மரபில் வரும் ஆன்மாவின் முடிவற்ற பயணம் பற்றிய கருத்துடன் இது ஒத்துப்போவதைக் காண முடியும். ஆன்மாவின் மேல்நோக்கிய பயணம் அதாவது நன்மை செய்தால் மனிதத் தன்மையில் இருந்து தெய்வத்தன்மைக்கும், தீமை செய்தால் புழுக்களாக பூச்சிகளாக மாறி கீழான நிலை நோக்கிய பயணமும் அமையும் என்று விளக்குகின்றன.(7)
மதங்களுக்கும் மக்களுக்குமான உறவு தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கிறது. பல நேரங்களில் மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஒன்றாக மாறிவிடுகிறது. காடுகளுக்குள் மக்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து இனக்குழுக்களாகவும் நாகரிக சமூகமாகவும் மக்கள் மாறிய வரலாறுதோறும் மதமானது தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் வந்து கொண்டே இருக்கிறது. பகுத்தறிவின் வளர்ச்சி இறை நம்பிக்கையைக் கேள்வி கேட்கத் தொடங்கியது. மதங்களைப் பொருத்த அளவில் அவை மெய்யியல் என்ற ஒன்று இல்லாமல் கூட இருக்க முடியும். மேலும் மதமானது கடவுள் என்ற கருத்தை மெய்யிலுக்கு வழங்கி- யிருக்கிறது. ஆனால் மெய்யியல் சிந்தனைகள் மதங்களுக்கு ஒரு கடவுளைக் கொடுப்பதில்லை. மதங்களின் உள்ளடக்கம் பெரும்பாலும் இயற்கைமீறிய ஆற்றல்களுக்கும் மக்களுக்கும் உள்ள உறவுமுறைகளைப் பற்றி கவனங்கொள்வதாக இருக்கின்றது.(8)
ஒரு தெய்வக் கோட்பாட்டைக் கொண்ட மதங்களும் பல்தெய்வக் கோட்பாட்டைக் கொண்ட மதங்களும் தெய்வத்தைப் பார்க்கும் பார்வைகள் மாறுபடுகின்றன. ஒரு தெய்வ மதங்கள் உலகைப் படைத்த கடவுள், உண்மையின் வடிவமாக இருப்பவராக கருதப்படுகிறார். ஆனால் பல தெய்வங்களை நம்பும் மதங்கள் கடவுள் ஆன்ம வடிவமாக அல்லது உயிர்ப்பின் வடிவாக இருப்பதாக நம்புகின்றன. தமிழ் மரபில் தெய்வம் என்ற நம்பிக்கை தேய்வு என்ற பொருளில் உருவாகியது. தேய்வு, தீய்வு என்ற சொற்கள் தமிழில் உள்ளன.
'தீய்தல் = எரிதல், விளங்குதல்.
தீய் - தீய்வு - தீவு - தீவம் = விளக்கு'
என்று பாவாணர் விளக்குவார்.(9)
தீ என்பது எரிக்கும் தன்மை கொண்டது, அது வழிகாட்டவும் செய்கிறது, அழிக்கவும் செய்கிறது. ஆக தெய்வம் என்பது வழிகாட்டும் என்றும், அழிக்கவுத் செய்யும் என்ற இரண்டு பொருள்படவும் அச்சொல்லை உருவாக்கிய பெற்றியைக் காண முடியும். இது தமிழுக்கே உரிய சிறப்பு.
தெய்வம் (deity) என்ற ஆங்கிலச் சொல்லின் வேர்ச் சொல்லானது deus என்ற இலத்தீன் சொல்லாகும். இதற்குப் பொருள் ஒளிபொருந்தியது என்பது மட்டுமே.(10)
சமற்கிருத மொழி அடிப்படையில் பார்த்தால் 'தேவா' என்ற சொல்லின் பொருள் ஒளிபொருந்தியது என்று மட்டுமே உள்ளது. தேய்த்தல் அல்லது தண்டித்தல் என்ற அச்சப்பொருள் இல்லை. இச்சொல்லை புரோட்டோ இந்தோ ஐரோப்பியச் சொல் என்று குறிப்பிடுகின்றனர். பெர்ட்ராண்ட் ரஃசல் மத நம்பிக்கை என்பது அச்சத்தின் காரணமாகவே உருவானது என்கிறார்.(11)
அச்சம் என்பது தெய்வ நம்பிக்கையில் ஒரு கூறாக தமிழ் மரபில் காணப்படுகிறது.
'அணங்கே, விலங்கே, கள்வர், தம் இறை, எனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே' (தொல்:பொரு: 252)
என்று கூறுகிறது. அதாவது அச்சம் ஏற்படுத்தும் நான்கு வகையாக உள்ளவை, அணங்கு எனப்படும் அழகிய மகளிர் போன்ற தெய்வங்கள், காட்டு விலங்குகள், வழிப்பறித் திருடர்கள், தம் இறை என்ற அரசன் என்று நான்கும் அச்சம் தருவனவாகும் என்று தொல்காப்பியம் விளக்குகின்றது.
'சூருடைச் சிலம்பில் சுடர்ப்பூ வேய்ந்து
தாம்வேண்டு உருவின் அணங்குமார் வருமே' (அகம்:158)
என்ற பாடல் வரிகள் 'தெய்வங்களையுடைய மலையை யடுத்த தோட்டத்தின் கண் ஒருதெய்வம் ஒளி தங்கிய பூவைச்சூடி தாம் அவ்வப்போது விரும்பிய உருவங்கொண்டு வரும்' என்று விவரிக்கின்றது.
தெய்வம் என்ற சொல் தமிழுக்கே உரியது என்று உறுதி செய்வதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். அச்சம் தருதல் என்ற பொருள் சற்றும் இல்லாத இந்தோ- ஐரோப்பிய மொழிகளில் இதற்கான மூலத்தைத் தேடுவது பொருத்தமற்றதாகவே உள்ளது.
'தெய்வம் அஞ்சல், புரை அறம் தெளிதல்,
இல்லது காய்தல், உள்ளது உவர்த்தல்' (தொல்:பொரு:268)
என்று தொல்காப்பியம் தெய்வம் அஞ்சுதலை ஒரு மெய்ப்பாடாகவே சுட்டுகிறது. அதாவது ஒழுக்கங்களில் ஒன்றாக வைக்கிறது. இனக்குழு வாழ்வில் வாழிடங்கள் பெரும்பாலும், காடும் மலையுமாக இருக்கும்போது அங்கு வாழும் மக்கள் தங்களது வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்கவுகள் தமக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களால் வருகின்றன என்று எண்ணி அதை வழிபடும்போது துன்பம் நேராது என்ற எண்ணத்தில் வாழ்வதுண்டு.
குறுந்தொகையில் கபிலர் இதை விரிவாகவே கூறுகிறார்.
'மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதும்
கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே' (குறு:87)
பொது மன்றத்தில் நிற்கும் கடம்ப மரத்தில் உறையும் அச்சம் தரும் பெரிய கடவுள் கொடியவர்களைத் தண்டிக்கும் தன்மை கொண்டது, என்னுடைய குன்றத்து நாடன் ஆகிய தலைவன் கொடியவன் அல்லன் (என்னிடம் வருவேன் என்று உறுதியளித்துச் சென்றான் ஆயினும் இன்னும் வரவில்லை), அவரைத் தண்டிக்க வேண்டாம், அவரை நான் மிக்க விரும்பியதால் என் நெற்றி பசலை கொண்டது, என் தோளும் நெகிழ்ந்து மெலிந்தது.
இதன் மூலம் மக்களிடம் இருந்த தெய்வ நம்பிக்கையும், அந்த நம்பிக்கைக்கான கூறாக அச்சமும் இருந்ததைக் காண முடிகிறது.
தொடக்கக்கால குரங்கில் இருந்து மாந்தனாக உருப்பெற்ற நிலையில் அதாவது காட்டுவிலங்காண்டி நிலையில், கடவுள் பற்றிய நம்பிக்கையற்றவர்களாகவே மக்கள் இருந்திருப்பர். அவர்களுக்கு தெய்வம் பற்றிய சிந்தனைகள் இருந்திருக்க முடியாது. மாந்த உருவங்கள் கொண்ட விலங்குகள் பற்றிய பேரச்சம் தரும் கனவுகள் வழியாக மதம் பற்றிய எண்ணங்கள் உருவாகியிருக்கும் என்ற கருத்தும் உள்ளது. முதலில் உருவார வழிபாடுகளும், பின்னர் பலதெய்வ வழிபாடு அதன் பின்னர் ஒற்றைத் தெய்வ வழிபாடு முறைகளும் மதங்களில் உருவாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.(12)
எப்படியாகினும், தெய்வ நம்பிக்கைகளுக்கு அடிப்படையாக இருப்பது அச்சம் என்றால் அது மிகையாகாது. இந்த அச்சத்தின் வெளிப்பாடாக கொடுமை செய்வோரைத் தெய்வம் தண்டிக்கும் என்ற நம்பிக்கையும் உருவானது.
இதன் பின்னர் பல பட்டறிவுக் கதைகளுடன் மதத்தின் வளர்ச்சி உருவானது. பண்டைய கிரேக்கத்தின் பல தெய்வ வழிபாட்டு முறை ஒரு குறிப்பிட்ட மதத்தலைவரால் நிறுவப்படவில்லை, அதற்கான அதிகாரப்பூர்வமான எழுதப்பட்ட மறை நூல் ஏதும் இல்லை. ஐந்தாம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியரான ஃகெரோடோடசின் கூற்றுப்படி, கவிஞர்கள் இசியோடும் ஃகோமரும் கிரேக்கர்களுக்கு கடவுள்களின் வழித்தோன்றல்களைக் கற்பித்தனர், பெயர்களைக் கொடுத்தனர், மதம் என்பது பல தலைமுறைகளாகச் சொல்லப்பட்ட மற்றும் மீண்டும் சொல்லப்பட்ட கட்டுக்கதைகளின் ஒட்டுவேலை. கிரேக்கர்கள் தங்கள் கட்டுக்கதைகளை சமூக நோக்கத்திற்குப் பயனுள்ளதாகத் தோன்றியவாறு சொன்னார்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.(13)
போர், இயற்கைப் பேரழிவுகள் போன்ற தவறு இழைக்கும் மக்களுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை என்று பண்டைய மெசடோமிய மக்கள் நம்பினர். அதேபோல மேய்ச்சல் சமூகங்கள் வேளாண்மைச் சமூகங்களாக மாற்றமடைந்த காலத்தில் தெய்வங்கள் பற்றிய பார்வைகள் மாற்றமடைந்தன. சமூக ஒழுங்குகள் கட்டடைக்கப்பட்டன.
பண்டைச் சமூகங்களில் முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கான விதிகள், நெறிகள் வகுக்கப்பட்டதை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,
ஐயர் யாத்தனர் கரணம் என்ப'(தொல்:பொரு:143)
சமூகத்தில் பொய்மையும், தவறுகளும் தோன்றிய பின்னர் சமூகத்தின் பெரியவர்கள் நெறிகளை வகுத்தனர் என்பது இதன் பொருள். அதாவது பொய் எது, தவறு எது என்று கண்டறியப்படாத காலத்தில் இருந்த வாழ்வு முறை பற்றியும் இந்த நூற்பா வழி அறிய முடியும்.
மாந்தகுலம் பல காலங்களைக் கடந்து பண்பாட்டுச் சமூக நிலையில் இருந்து நாகரிகச் சமூகச் சூழலுக்கு மாறியபோது, அவை உலகத்தின் தோற்றம் பற்றியும், அதன் தேவை பற்றியும் அறியத் தொடங்கின. அவை தொன்மங்களாக உருவாக்கம் பெற்றன. தொன்மங்கள் என்பவை பெரும்கதைகளில் இருந்து தோற்றம் பெற்றவை. பழங்குடிச் சமூகங்கள் தங்கள் மரபு வழியாக சொல்லப்பட்டு, கட்டமைக்கப்பட்ட கதைகளைத் தொகுத்துத் தொன்மங்களாக ஆக்குகின்றன. தெய்வங்கள் பற்றிய கருத்துகளும், அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளும் தெய்வங்களுடன் மாந்தர்கள் உறவாடுதலும் என்று பெரும் கனவாக உருவாவதே தொன்மங்கள். இவற்றில் குறிமை- யியக் கூறுகள் இருக்கும். அதாவது நடந்த நிகழ்வகளை சாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக தேவ-அசுரப் போர் என்பதை ஆரிய-திராவிடப் போர் என்று அடையாளப்படுத்து போன்ற குறியீட்டுத் தன்மைகள் இருக்கும். இந்தத் தொன்மங்களில் இருந்து தருக்கமுறையும் அதன் தொடர்ச்சியாக மெய்யியல் சிந்தனைகளும் உருவாகி வளர்ந்துள்ளன.
பூகோள வகையில் பார்த்தால் தமிழகம் ஒரு வெப்பமண்டலப் பகுதியாகும். இதை அமைவிடம் குறுக்கைக்கோடு (அட்சரேகை) 11.127123, நெடுக்கைக்கோடு (தீர்க்கரேகை) 78.656891. என்ற புவிக்கோள அமைவிடத்தில் உள்ளது.
வெப்ப மண்டலப் பகுதி என்பது புவிக்கோளத்தில் நிலநடுக்கோட்டில் இருந்து வடக்காக 23.4 பாகை மகரக்கோட்டுக்கும், தெற்கே 23.4 பாகை கடகக்கோட்டுக்கும் இடைப்பட்டதாகும். இதன் ஊடாக 122 நாடுகள் அதாவது 95 நாடுகள் முழுமையானதாகவும், 27 நாடுகள் பகுதியளவிலும் அமைந்துள்ளன. இந்திய நாடு வெப்பமண்டலப் பகுதியில் பகுதியளவே இடம் பெற்றுள்ளது. கடகக்கோடு தொடும் இந்திய மாநிலங்கள் குஜராத், இராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகியவையாகும். இதற்கு வடக்கே அமைந்துள்ள மாநிலப் பகுதிகளில் வெப்பமண்டலத் தன்மைகள் மெல்ல மெல்லக் குறைந்துகொண்டே வரும்.
மகரக்கோடு (சுறவக்கோடு) தமிழகத்தை உள்ளடக்கிச் செல்கிறது.
'tropicus' என்ற இலத்தின் சொல், 'tropikos' என்ற கிரேக்கச் சொல் ஆகிய இரண்டின் வழியாக ஆங்கிலத்தில் 'trope' என்ற சொல் ஆக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல்லுக்கு திரும்புதல் என்று பொருள்.(14)
அதாவது கதிரவன் வடக்கும் தெற்குமாகத் திரும்பித் திரும்பி வந்து செல்வதுபோலத் தோற்றம் தரும் அந்த வெப்ப மண்டலப் பகுதி (tropical region) என்று சூழலியல் முறையில் முகாமையானதாகிறது. பல சூழல் மண்டிலங்கள் இருப்பினும் இது மிக வளமானது.
பூவுலவின் சூழல் மண்டிலங்களை உற்று நோக்கினால் வெப்ப மண்டிலத்தில் அமைந்த தமிழகத்தின் இருப்பிடச் சிறப்பு நமக்குப் புரிய வரும்.
பூமியானது நீள் வட்டப்பாதையில் கதிரவனைச் சுற்றி வருகிறது. கதிரவனைச் சுற்றுவதோடு தன்னைத் தானும் புவி சுற்றிக் கொண்டு வரும். தன்னைத் தானே சுற்றும்போது இரவும் பகலும் தோன்றும், கதிரவனைச் சுற்றி வரும்போது பருவகாலங்கள் தோன்றும். அப்படிச் சுற்றிவரும் நிலைமையில், நீள்வட்டப்பாதை அமைப்பாக இருப்பதால் புவிப் பரப்பில் குறிப்பிட்ட தொலைவில் விழும் வெயிலானது மற்றப் பகுதியில் விழாது. இது பார்ப்பதற்கு கதிரவன் வடக்கில் இருந்து தெற்காகவும், தெற்கில் இருந்து வடக்காகவும் சென்றுவருவதுபோல் தோற்றம் தரும். இதை 'ஞாயிற்றுச் செலவு' என்று குறிப்பிடுவர். வடக்கு நோக்குச் செல்வது வடஞாயிற்றுச் செலவு, தெற்கு நோக்கிச் செல்வது, தென் ஞாயிற்றுச் செலவு என்றும் அழைக்கப்படும்.
கதிரவன் பயணம் பற்றிய செய்தியை புறநானூறு விளக்குகிறது.
"செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்" (புறம்:30)
கதிரவனின் வடசெலவு (சமற்கிருதத்தில் இதை உத்ரயாணம்) தை மாதத்தில் தொடங்கும். இதையே நாம் தைப்பொங்கல் என்று கொண்டாடுகிறோம். அதற்கு ஆறு மாதங்கள் கழித்து ஆடி மாதத்தில் தென்செலவு தொடங்கும். தைக்கு சுறவம் மாதம் என்றும் ஆடிக்கு கடக மாதம் என்றும் தூய தமிழ் மாதப் பெயர்கள் உள்ளன. சுறா மீனும் நண்டும் இதற்கு அடையாளங்களாகச் சுட்டப்படுகின்றன.
உத்ரயாண தட்சிணயாண என்ற பெயர்கள் தமிழில் இருந்து சமற்கிருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
உத்திர பிரதேசம், பஞ்சாப் ஆகிய பகுதிகள் வெப்பமண்டில வரையரைக்குள் வராத பகுதிகள் ஆகும். இந்த ஞாயிற்றுச் செலவு நமக்கே உரியது. வேதங்கள் உருவான பகுதிகளில் ஆறு பருவங்கள் இல்லை. நான்கு பருவங்களே உண்டு. ஐரோப்பியர்களும் நான்கு பருவங்களையே கொண்டுள்ளார்கள். (15)
உத்ரயாணம், தட்சிணயாணம் போன்ற ஆய்வுகள் வேதப் பனுவல்களில் தோன்றுவதற்கான வாய்ப்புகளே இல்லை என்று இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். ரிக்வேத சம்ஹிதையின் மிகப் பழமையான பகுதி வடமேற்கு இந்தியாவில் (பஞ்சாப்) வாய்வழிப் பாடல்களாகத் தோன்றியவை. ரிக் வேதத்தின் 10ஆம் புத்தகம் மற்றும் பிற சம்கிதைகள் யமுனை மற்றும் கங்கை ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியான ஆரியவர்த்தம் என்ற இடத்தில் இயற்றப்பட்டவை என்று ஆய்வுகள் கூறுகின்றன.(16)
பண்டைத் தமிழ் நூல்கள் வடமொழியில் மாற்றப்பட்டன என்ற கருத்தை மொழி ஞாயிறு பாவாணர் குறிப்பிடுகின்றார். (17)
வெப்பமண்டல வானியல் செயல்பாடுகள் தென்னிந்தியாவிற்கே உரியது என்பதில் ஐயமில்லை. எனவே இந்த வெப்ப மண்டலப் பகுதிகளின் சிறப்பும் தனித்தன்மையும் உற்று நோக்கத் தக்கவையாக உள்ளன.
எனவே தமிழகத்தில் தோன்றிய வானியல் அறிவுச் செல்வம் பிற மொழிகளில் சென்று வந்துள்ளமை தெரிய வருகிறது.
இப்படியான வெப்ப மண்டிலப் பகுதியில் உள்ளது தமிழ்நாடு. உலகில் உள்ள 40 விழுக்காடு நிலப்பரப்பைக் கொண்டவெப்பமண்டலப் பகுதியானது 80 விழுக்காடு உயிரினப் பன்மயம் கொண்டுள்ளது. (18)
அதிகளவு மொழிப்பன்மயமும், பண்பாட்டுப் பன்மயமும் உள்ள பகுதியும் வெப்ப மண்டலப் பகுதியேயாகும். உலகம் முழுவதும் பேசப்படுகிற ஏறத்தாழ 7000 மொழிகளில் முழுவதும் வெப்பமண்டலப் பகுதிக்குள் வரும் 96 நாடுகளில் பேசும் மொழிகள் 5267 ஆகும். இவை தவிர பகுதியாக வரும் நாடுகளில் பேசும் மொழிகளை எடுத்துக் கொண்டால் 70 விழுக்காட்டிற்கும் மேலாக வெப்பமண்டலப் பகுதியில் பேசும் மொழிகளே அதிகம். (19)
இப்படியான உயிரியல் பன்மயம் தொடங்கி மொழி, பண்பாட்டுப் பன்மயங்கள் அதிகமாகக் காணப்படுவதற்கான காரணம், இப்பகுதிகளில் நிலவி வரும் பருவநிலை, தட்ப வெப்ப நிலை போன்ற திணையியல் தன்மைகள் ஆகும். இங்கு இரவும் பகலும் சமமான அளவில் ஆண்டுதோறும் காணப்படும். 20
வெப்பமண்டலப் பகுதியானது புவியின் மையத்தில் அமைந்துள்ளது. எனவே இங்கு மழை, வெயில் போன்றவை அதிகம் கிடைக்கின்றன. இதனால் செழிப்பும், வளமையும் அதிகம் உள்ளன. இயற்கை இங்குள்ள உயிர்களுக்கு மிகுந்து அள்ளித்தந்து போற்றித் தாங்கும் நிலையைக் காண முடியும்.
இதனால் இங்கு வாழும் மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வியலை உருவாக்கிக் கொண்டனர். அவர்களது வாழ்வின் மையப் புள்ளியாக இயற்கையே அமைந்தது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்தாலே யாவும், எப்போதும் கிடைத்து வந்தன. இயற்கையோடு போராடிக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. எனவே சிந்தனைகளும் இயற்கை நேயத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாயின.
இதற்கு மாறாக இயற்கையை வெல்லலாம் என்ற சிந்தனையைக் கொண்டு மரபுகள் யாவும், இதற்கு வெளியில் இருந்து வந்தவையாக இருக்கின்றன. உலகில் பெரும்பான்மை மதங்களாக இருக்கின்ற எந்த மதமும் வெப்ப மண்டலப் பகுதிக்குள் தோன்றவில்லை, மாறாக பழங்குடிச் சிந்தனைகள் அதிகம் உருவாகிய பகுதியாக வெப்பமண்டலப் பகுதி உள்ளது. அதிமான வெயிலும் அதிகமான மழையும் உள்ள செழிப்பான பகுதியில் இயற்கைக்கு நேயமான சிந்தனைகள் தோன்றுவதில் வியப்பொன்றுமில்லை.
தென்னமரிக்கப் பழங்குடிகள், ‘அன்னை பூமி’ (Mother earth) என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அனைத்து உயிர்களுடனும் அவர்கள் உயிர் இணைந்திருப்பதாகக் கருதுகின்றனர். (21)
பழங்குடிகள் இயற்கையையும் கலையையும் நேசிப்பவகைளாக இருக்கின்றனர். மாயன் மக்களின் நம்பிக்கையின்படி தங்களது பெரிய மலை ஒன்றை (சைட் ஓரேஜாஸ்) ஆற்றலின் ஊற்றாகக் காண்கிறார்கள். அந்த ஆற்றலைத் தங்களது வாழ்க்கையின் எல்லாக் கூறுகளுடன் இணைக்க முயல்கிறார்கள். மாயா மக்களின் மரபார்ந்த அறிவு வாய்மொழி இலக்கியங்களின் வழியாகவே தொடர்கின்றன. எழுத்திலக்கியங்கள் அங்கு இல்லை. (22)
தமிழ் அறிவுலகம் மிக நீண்ட மரபைக் கொண்டிருக்கிறது. தொல்காப்பியக் காலத்திற்கு முன்பிருந்தே இதன் கண்ணிகள் தொடர்கின்றன. உலகின் பல்வேறு பண்டைய நாகரிகங்கள் பூசாரியத்தோடு (priesthood) தோன்றி வளர்ந்து பின்னர் பல்வேறு திரிவுகளை எட்டியபோது, தமிழ் 'மன்பதை' தனக்கென தனியானதொரு பூசாரியம் அல்லாத வாழ்வியலைக் கைக்கொண்டிருந்தது. அதற்கென ஓர் அறிவு நெறிமையை (principle) வகுத்துக் கொண்டு வளர்ந்து வந்துள்ளது. இதனுடன் பல்வேறு புறப்போக்குகள் பிணைந்தும் பிணக்கியும் வந்தேறின. தமிழறிவியத்தின் தனித்தன்மை யாதெனில் அது தன்னைச் சுற்றியுள்ள உலகச் சூழலை அச்சத்துடன் நோக்காது, தோழமையுடன் நோக்கியது (பார்க்க: சங்கப் பாடல்கள்). அதன்படியே தனது பார்வையை (perception) உருவாக்கிக் கொண்டுள்ளது. உலகம் என்பதை 'யாரோ ஒருவர் படைத்தார்' என்றல்லாது ஐம்பூதங்களின் சேர்க்கை என்று விளம்பியது (தொல்காப்பியம்). தமிழ் மொழி தன் சொற்களின் ஊடே தனது கருத்தையும் விளக்கிக் கொண்டு வருகிறது. முதற்பொருளாக நிலத்தையும் பொழுதையும்தான் தொல்காப்பியம் மொழிகின்றது. தெய்வத்தைக் கருப்பொருளில் கொண்டுபோய் விலங்குகள், மரங்களின் உடனாக வைக்கின்றது. மொழியைச் செம்மையாகக் கையாண்ட இனங்களில் ஒன்றான தமிழினம் பெரும்பாலும் தனது அறிவுலகத்தை மொழிவழியான இலக்கணத்திற்குள்ளேயே விளக்க முற்பட்டுள்ளது.
தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் உலகம் உருவாகிய முறையை பின்வருமாறு விளக்குகின்றன,
‘நிலம் தீ நீர் வளி விசும்போடைந்தும் கலந்த மயக்கம்
உலகம்’ (தொல்:பொரு:635)
என்று தொல்காப்பியம் பூதியலை (Physics) வகுத்துக் கொடுக்கின்றது.
இதை இன்னும் விளக்கமாகப் புறநானூறு வரைகின்றது,
“மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்தியற்கை” & புறநானூறு
தமிழர்கள் தங்களது வாழ்விடத்தை இயற்கையின் கூறுகளாகவே வகுத்துள்ளனர். இது வேறு எந்த பண்டை நாகரிகங்களிலும் காணக்கிடைக்காத ஒன்றாக உள்ளது.
‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயான்மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’
(தொல்:பொரு:4) என்று நிலங்களுக்கான பெயர்களைச் சுட்டுகிறார். தொல்காப்பியர் ‘சொல்லிய முறையால்’ என்று வழிமொழிவதன் வாயிலாக அவருக்கு முன்பே தமிழர்கள் தங்களது நிலப்பகுப்பை முறையாக ஆக்கிக் கொண்டுவிட்டனர் என்பது தெளிவாகிறது.
தொல்காப்பியர் நிலத்தை தெளிவாக வரையரை செய்கிறார். திணையியல் என்பது தமிழர்களின் மெய்யியலாக அதாவது உலகை எவ்வாறு நோக்குவது? எவ்வாறு அணுகுவது? என்கின்ற ஓர் அறிவுக் கோட்பாடாக இருந்துள்ளதை நாம் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றின் வழியாகக் கண்டாய முடியும். தமிழர்களின் மெய்- யியல் என்பது இறைமக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதன்று, அஃது இயற்கைக் கோட்பாடான திணையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இது இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்றதொரு விடுதலைக் கோட்பாடாக உள்ளது. மாந்த விடுதலையை மட்டுமன்றி ஒட்டு மொத்த உயிரின விடுதலைக்கும் அது வழிகாட்டுகிறது.
கிறித்தவ ஆண்டடியான பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு, மேலைச் சிந்தனை மரபில், தெகார்தேயின் (René Descartes 1596-1650) 'கார்டீசிய' மெய்யிலான எந்திரவியல் (mechanical) உலகம் ஆளுமை பெற்றது. இது எல்லாவற்றையும் பகுதி பகுதியாகப் பார்க்கச் செய்தது. (பல்லுக்கு ஒரு மருத்துவர், மூக்குக்கு ஒரு மருத்துவர் என்றபடி) இந்த வகையான பகுதிப் பார்வைக்கு நியூட்டன் போன்றவர்களின் கண்டுபிடிப்புகள், மறுமலர்ச்சிக் கால வேதியியல் அறிவுகள், கோபர்நிகஸ் கண்டுபிடிப்புகள் யாவும் மிகவும் உதவின. மாந்த குலத்தை மட்டுமே நடுவாகக் கொண்ட சிந்தனை மரபுகள் பெரிதும் மேலைச் சிந்தனை மரபுகளை ஆட்டிப் படைத்தன. 'பழங்குடிச் சிந்தனை மரபு' இதற்கு மாற்றாக இருந்தது. 'படைக்கப்பட்டவை அனைத்தும் மாந்தனுக்கு' என்ற கருத்தியலே வடக்குலக மதங்கள், மெய்யியல்களில் காணப்படுகின்றன.
திணையியல் நெறிமைகள் இந்த உலகத்தின் யாவற்றையும் முழுமையாகப் பார்க்கச் சொல்கின்றன. ஒரு பெருந்தலைவனுக்கு இந்த உலகில் வாழ்வதற்கு என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை ஒரு நுண்ணுயிரிக்கும் உண்டு என்பதே அதன் சாரம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று திருக்குறள் அதை விளக்குகிறது.
பகுத்துப் பார்ப்பதும் தொகுத்துப் பார்ப்பதும் அறிவியல் உலகம் கண்டறிந்த மிகப் பெரிய ஆய்வலசல் கருவிகள் ஆகும். இந்தப் பகுப்பும் தொகுப்பும் கொண்ட அறிவியல், அனைத்தையும் எந்திரத்தின் பகுதிகளாகப் பார்க்கச் சொல்கிறது. இதைப் பழங்குடி மனம் ஏற்பதில்லை, எதையும் அதன் முழுமையின் பயனாகப் காண்கின்றது. திணையியல் அடிப்படையும் இந்தக் கோணத்திலேயே கட்டமைக்கப்படுகிறது. தமிழ்த் திணையியல் சிந்தனை இதை ஒரு கோட்பாடாக விளக்கியுள்ளது.
ஒரு மரத்தை கட்டைத் துண்டாகவும், சில்லித் (cell) துணுக்குகளாகவும் பகுத்துக் கொண்டே சென்று ஒன்றும் இல்லை என்று பொருள் வடிவில் முடிக்கின்றது பகுக்கும் அறிவியல் மனம். மரத்தைத் தனது உடன்பிறப்பாக இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் தோழனாகப் பார்த்து அதைப் போற்றுகின்றது திணையியல் மனம், அதன் மீது அன்பைப் பொழிகின்றது.
இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே' (நற்:139)
'மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்'
என்று வாழ்த்துகின்றது சிலப்பதிகாரம்.
'நான் சிந்திக்கிறேன் எனவே நான் இருக்கிறேன்' என்று தெகார்தே கூறுகிறார். 'நான்' என்பதை நடுவப்படுத்தும் தன்மைக்கு மாற்றாக 'நீ இருக்கிறாய். எனவே நானும் இருக்கிறேன்' என்ற சிந்தனையே திணையியலாக உருவாகிறது. இன்று காணப்படும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இந்தச் சிந்தனை மரபு தேவையாக உள்ளது. இன்று 'மேம்பாடு' (Development) என்ற பெயரில் காடும், கடலும், வயல்வெளிகளும் வரைமுறையற்று அழிக்கப்படுகின்றன. ஒரு சிலரின் இன்ப வாழ்விற்காக எண்ணற்ற எளிய மக்களின் வாழ்விடங்கள் மூழ்கடிக்கப்படுகின்றன. எதையும் அழித்து இன்பம் துய்ப்பதே நெறி என்ற நிலை நிலவுகிறது.
இதற்கு மாற்றாக தமிழ்ச் சிந்தனை மரபில் காணப்படும் அறக்கூறுகள், அறிவுக் கூறுகள் திணையியல் கோட்பாடுகளாக விளங்குகின்றன.
தமிழ்த் திணையியல் அடிப்படைகளை பின்வருமாறு தொகுக்கலாம்,
1. இயற்கை உறவாண்மை
2. உயிரியல் பன்மயம்
3. உயிர்ம நேயம்
4. தற்சார்பியம்
(1) இயற்கை உறவாண்மை
இயற்கையை, அதன் கூறுகளை அடியொட்டி தமிழ்ச் சிந்தனை மரபு அமைவதற்கான காரணம், தமிழகம் அமைந்துள்ள புவியியல் அமைப்பும் அங்கு தோன்றி வளர்ந்துள்ள சூழல் அமைப்புமே. நிலநடுக்கோட்டுக்கு அருகே அமைந்துள்ள பகுதிகளின் வளமை அதன் பின்புலத்தில் தோன்றிய பண்பாடு, மொழி, அறிவு போன்றவை அவற்றுக்கே உரிய தனித்தன்மையைக் கொண்டிருக்கின்றன.
இயற்கையானது, முதல், கரு, உரி என்ற கூறுகளைக் கொண்டது. இவை ஒன்றொன்றும் ஒவ்வொன்றுடனும் கொள்ளும் உறவு திணை எனப்படும்.
அ. முதல்பொருள்:
‘நிலமும் பொழுதும்’ (Space & Time) முதற்பொருள் ஆகும்.
‘முதல் எனப்படுவது நிலம்பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே’ (தொல்:பொரு:14)
உலகம் என்பது ஒரு பெரிய திணைய மண்டிலம் (Ecosystem) ஆகும். இஃது இயல்பாக அமைந்த ஒன்றாகும். இதை யாரும் செய்து வைக்கவில்லை.
‘கல்பொருதிறங்கும் மல்லற்பேர்யாற்று
நீர்வழிப்படூஉம்புணைபோல ஆருயிர்
முறைவழிப்படூஉம்’ - புறம்: 192
அதாவது இயல்பாக அமைந்த ஒரு முறையில் இந்த உலகம் இயங்கி வருகிறது.
'முதலெனப்படுவது நிலம்பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே' - (தொல்: பொரு: 14)
இது தொல்காப்பியருக்கு முன்பே இடம் பெற்றுவிட்ட ஒரு கருத்து. இதை அவர் பதிவு செய்கிறார். அதை அவர் மனச்சான்றோடு 'மொழிப' என்றும் குறிக்கின்றார். ஒரு சமூகத்தின் முதற்பொருளாக கடவுள் அல்லவா இருக்க வேண்டும்? தமிழ் மரபு நிலத்தையும் பொழுதையும் அதாவது வெளியையும், காலத்தையும் முதன்மைப்படுத்துகிறதே. ஏன் இதை நமது தமிழ்ப் படிப்பாளிகள் உலகம் ஆய்வு செய்யவில்லை.
நிலத்தை அகம் புறம் என்ற தளத்தில் வைத்துப் பார்த்தால், நிலமானது தன்மை முன்னிலை படர்க்கை என்ற அகத்தளத்தில் அமைந்தது.
'செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
நிலைபெறத் தோன்றும் அந்நாற்சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம்மூவிடத்தும் உரிய என்ப' - (தொல்: சொல்:28)
புறத்தளத்தில் நிலத்தை முதற்பொருளாகக் கையாளும் தொல்காப்பியர் அவற்றின் இருப்பிற்கேற்ப நானிலங்களாகப் பிரித்தார்.
'முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’ - (தொல்:பொரு: 4)
அதன் பின்னர் அஃது ஐவகை நிலமாகப் பகுக்கப்பட்டது.
நிலமானது மிகவும் திட்டமானது, கண்ணால் வெளிப்படையாகக் காணக் கூடியது, தொட்டு உணரக் கூடியது. நிலம் எனப்படும் மண் அதனோடு உறவு கொள்ளும் பிற உயிருள்ள உயிரற்றனவற்றின் உறவால் தனக்கான தகவமைமை ஏற்படுத்துகிறது. 'மண்திணிந்த நிலனும்' என்று புறநானூறு கூறுவதை இங்கு கவனிக்க வேண்டும். மண்ணுக்கும் நீருக்கும் உள்ள உறவு, மண்ணுக்கும் காற்றுக்கும் உள்ள உறவு, மண்ணுக்கும் வெப்பத்திற்கும் உள்ள உறவு என்பதாடு அல்லாமல் மண்ணுக்கும் மரம், விலங்குகள் என்று பல உயிரினங்களுக்கும் உள்ள உறவுகள் வளர்ந்து வளர்ந்து ஒரு கெழுமைப்பாடு (complexity) ஏற்பட்டுவிடுகிறது. இதனால் அந்த அந்த நிலத்திற்கேற்ற தனித்தன்மை உருவாகிறது. அதன் பயனாக ஒழுகலாறுகளிலும் தனித்தன்மை வந்துவிடுகிறது. இந்த இயங்கியல் தன்மை பல்வேறு புதிய புதிய உயிரினங்கள் முதலாக சிந்தனைகள் வரை எத்தனையோ மாற்றங்களை நிகழ்த்திவிடுகிறது.
பொழுது எனப்படும் காலம் நிலத்தைவிடக் கூடுதலான நுட்பத் தன்மை கொண்டுள்ளது. காலத்தை இரண்டாக அதாவது பெரும்பொழுது, சிறுபொழுது என்று வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர். பெரும்பொழுது என்பது பருவங்களையும், சிறு பொழுது என்பது நேரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அதை வேறுமுறையில் சொல்வதானால் கதிரவனை பூவுலகம் சுற்றுவதால் பெரும்பொழுதும் (பருவங்கள்) தன்னைச் தானே சுற்றுவதால் சிறுபொழுதும் (இரவு-பகல் என்ற நேரம்) ஏற்படுகின்றன.
ஆ. கருப்பொருள்:
நிலத்தில் மிக இன்றியமையாத முறையில் இருக்கும் பொருள்களை கருப்பொருள் (Core element) என்று தொல்காப்பியம் கூறுகிறது.
தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப - (தொல்: பொரு: 18)
இங்கு உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் என்ற இரண்டும் கருப்பொருளின் கீழ் பட்டியல் இடப்படுகிறது. தெய்வம் என்ற கருத்தாக்கம் கருத்தியல் நிலையின்பாற்பட்டது. அதை நேரடியாகக் காண இயலாது. ஆனால் உணவு அதற்கு நேராக தொட்டு உணரக் கூடிய நாள்தோறும் தேவைப்படுகின்ற ஒன்று. இதற்கு அடுத்ததாக மா எனப்படும் விலங்குகளும், மரம் எனப்படும் பயிரினங்களும், புள் என்படும் பறவை- யினங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலைநாட்டு அறிவியல் பயிரினங்கள், விலங்கினங்கள் என்று மட்டும் பிரித்துக் கொள்கிறது. தொழில்கள், இசைக் கருவிகள் போன்ற அனைத்து வாழ்நிலைக் கூறுகளையும் கருப்பொருளின் கீழ் தொல்காப்பியம் கொண்டு வருகிறது. கருப்பொருள்கள் என்ற வகையில் மாந்தர் கூட்டத்தை தொல்காப்பியம் சுட்டவில்லை. கருப்பொருள்கள் நிலம் மாறினாலும் மாறலாம் ஆனால் தலைமக்கள் இடம் மாறக் கூடாது என்ற அடிப்படையில் அதைத் தனியாகப் பிரித்துள்ளனர் தமிழ் முன்னோர்கள்.
‘எந்நிலமருங்கும் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாராவாயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும்’ - (தொல்: பொரு: 21)
கருப்பொருள்கள் தங்களுக்குள் கொள்ளும் உறவு தமது சுற்றத்துடன் கொள்ளும் உறவு அதாவது உயிருள்ளவற்றோடு உயிரற்றவற்றோடு கொண்டிருக்கும் உறவுதான் திணையம் என்பதாகும்.
இ. உரிப்பொருள்
முதற்பொருளையும் கருப்பொருளையும் பற்றி விளக்க முற்படும்போது சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் உரிப்பொருள் என்று வரும்போது அகம், புறம் என்று விரிவுபடுகிறது. அதாவது அகத்திணைக்கு என்று தனியான உரிப்பொருளும் புறத்திணைக்கு என்று தனியான உரிப்பொருளும் வகுப்படுகிறது. நிலமும், பொழுதும், கருப்பொருள்களும் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் ஒன்றாகவே உள்ளன. எனவே உரிப்பொருளுக்குப் பண்டைத் தமிழர் சிறப்புத் தன்மை கொடுத்துள்ளனர் என்பது தெரிகிறது. 'பருப்பொருள்' என்ற நிலை தாண்டி, 'உணர்வு' என்ற நிலையில் இது கூடுதல் அழுத்தம் பெறுகிறது.
(2) உயிரியல் பன்மயம்
திணையியல் கோட்பாட்டின் அடுத்த கூறு உயிரியல் பன்மயம் (Biological diversity) ஆகும். இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்ற இக்கோட்பாடு தமிழர்களின் திணையியல் கோட்பாட்டின் ஓர் இன்றியமையாக் கூறாகும். ஒரு காடு காலங்காலமாக நீடித்து இருக்க வேண்டுமாயின் அது பல்வகைப்பட்ட மரங்கள், செடிகள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என்று எண்ணற்ற உயிரினங்களுடன் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையாயின் கடும் நோய்களோ பெரும் பூச்சித்தாக்குதலோ ஏற்பட்டு காடு அழிந்து போகும். இது காட்டிற்கு மட்டுமன்று அனைத்து வகையான அமைவுகளுக்கும் பொருந்தும். பல்வகைப்பட்ட மொழிகள், இனங்கள் என்பதுதான் இயற்கையின் நெறி. அதை மாற்றி ஒற்றை மொழி, ஒற்றை இனம் என்கின்ற போக்கு ஒட்டு மொத்த அழிவிற்கு வழிவகுக்கும். இந்தப் பன்மயத்தை வலியுறுத்தும் திருவள்ளுவர், தனது முன்னோர்களின் மிகச் சிறந்த சிந்தனை இஃது என்று இயம்புகின்றார்,
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ - குறள்: 322
(3) உயிர்மநேயம்
மாந்த நேயத்தையும் தாண்டிய விரிவான பொருளைக் கொண்டது உயிர்ம நேயம். ‘வாடிய பயிரைக் கண்டபோது வாடிய’ வடலூர் வள்ளல் பெருமகனாருக்கு முந்தைய சிந்தனை மரபு இதுவாகும். இன்றைய மாந்தனை நடுவப்படுத்தும் (Anthropocentric) சிந்தனைப்போக்கின் விளைவாக எழுந்துள்ள சிக்கல்கள் உலகத்தையே முடிவிற்குக் கொண்டுபோகும் நிலைவந்துள்ளது. அனைத்து உயிர்களுக்கும் வாழ்வதற்கான உரிமை உள்ளது என்பதை தமிழ் அறம் உறுதி செய்கிறது. திணையியல் கோட்பாட்டின் அடுத்த கூறு இதுவாகும்.
(4) தற்சார்பியம்
உயிரியல் பன்மயமும் உயிர்மநேயமும் தற்சார்புக்கு இட்டுச் செல்லும் காரணிகள். ஒரு நாடு உயிர்மநேயத்துடன் இருக்கும்போதுதான் அதன் தற்சார்பு உறுதிப்படுகின்றது. பாரி முல்லைக் கொடிக்கு தனது தேரைக் கொடுத்து பறம்பு மலையின் எல்லா உயிர்களையும் நேசித்தான். அதனால் முடியுடை மூவேந்தர்கள் சேர்ந்தும் அவனை வெல்ல முடியவில்லை. மூவேந்தர்களின் முற்றுகையின்போது தினைக் கதிர்களையும், நெற்கதிர்களையும் கிளிகள் அவனது நாட்டு மக்களுக்கு கொண்டு வந்து சேர்த்தன. அவனது நாடு எல்லா வளமும் கொண்டு திகழ்ந்தது என்கிறார் கபிலர்.
தற்சார்பு என்பது இந்த பெரிய பூவுலகில் தொடங்கி நாடு, ஊர், குடும்பம், தனியாள் என்று விரிவடையும். இந்த மண்ணுலகம் தற்சார்புடன் இருக்க வேண்டுமாயின் அங்கு வாழும் முன்னோடிக் காரணிகள் (மாந்தன், தொழில்நுட்பம்) உயிர் நேயத்துடன் இயங்கியாக வேண்டும். இன்றைய சூழலில் பருவநிலை மாற்றம், மாசுபாடு போன்ற அச்சுறுத்தல்கள் இதன் பின்னணியிலேயே உருவாகின்றன.
உயிர்ப்புடன் கூடிய ஒரு திணை மண்டிலம் தற்சார்புடன் இருக்கும். அதற்கான தேவைகள் அங்கேயே நிறைவு செய்து கொள்ளப்படும்.
எதிர்காலத்திற்கான அறம்
அனைத்து உயிர்களைவிடவும் கூடுதல் அறிவைப் பெற்றுள்ள இனம் மக்கள் இனம் என்று நாம் அறியப்படுகிறோம். ஓரறிவு உடைய மரங்களில் இருந்து ஆறறிவு படைத்த மாந்தகுலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாக அறியப்படுகிறது. எனவே மனிதன் பேராற்றல் மிக்கவனாகவும் பிற உயிரினங்களைக் கட்டுப்படுத்தி ஆட்சி செய்பவனாகவும் இருக்கிறான். இந்த பூவுலகம் மட்டுமல்லாது அனைத்து உலகமும் மனிதனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும் என்று எதிர்பார்க்கவும் செய்கிறான். மண், கடல், மலை, வானம் என்று யாவும் இவனது ஆட்சிப் பரப்பெல்லைக்குள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். இந்த வரம்பற்ற பேராசை அனைத்து உயிரினங்களை மட்டுமல்லாது காடு, மலை, கடல், மணல் என்று யாவற்றையும் நுகர்ந்துவிட வேண்டும் என்று துடிக்கின்றான்.
அனைத்துயும் வென்றுவிட முடியும் என்று மார்தட்டும் மனிதன், எத்தனையோ உயிரினங்ளை இந்த உலகத்தைவிட்டு வெளியில் அனுப்பியுள்ளான். ஆனால் அவனால் மிகச் சிறிய உயிரான கொசுவை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை.
நமது பூவுலகில் மிகப் பெரும் ஆற்றல் உடையவன் மனிதன் என்றாலும் கண்ணுக்குக் தெரியாத நச்சுயிரி (virus) கூட மிக எளிதாக மனிதனைக் கொன்றுவிடுகிறது. இதுதான் இயற்கையின் பேராற்றல். இயற்கை தனது இருப்பை உறுதி செய்து கொண்டே வருகிறது. பன்னெடுங்காலமாக இயற்கையின் சுழற்சியில் ஒத்துவராவற்றை இயற்கை வெளியே அனுப்பிவிடுகிறது. எடுத்துக்காட்டாக பூதப்பல்லிகள் எனப்படும் டைனோசார்கள் ஒரு காலத்தில் உலகத்தில் கோலோச்சின. ஆனால் இன்று அவை இல்லை. இயற்கையின் சுழற்சிக்கும் இயக்கத்திற்கும் தடையாக இருந்ததால் அவை பூவுலகத்தைவிட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பூவுலகில் வந்து வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வற்கான உரிமை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு உயிரினமும் தனக்கான பணியைச் செய்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு குச்சில நுண்ணுயிரி (பாக்டீரியா) தனக்கு வேண்டிய உணவை எடுத்துக் கொள்வதோடு தான் சார்ந்து வாழும் ஒரு செடிக்குத் தேவைப்படும் உணவைக் கொடுக்கிறது. ஒட்டுண்ணியாக வாழும் ஓர் உயிரனம்கூட இறந்த பின்பு மட்காக மாறுகின்றது.
இந்த தொடர்ச்சியான இயங்குறவில்தான் மனிதன் தலையிட்டு தடைச் செய்கிறான். எதையும் எப்படியும் அழிக்கலாம் என்று முடிவு செய்கிறான். காடுகள் அழிக்கப்படுவதும், ஆறுகள் மாசுபடுத்தப்படுவதும், பூச்சிக்கொல்லி நஞ்சுகள் தெளிக்கப்படுவதும் இதன் அடிப்படையில்தான்.
நம்முடைய வாழ்க்கை மட்டுமல்லாது நமது எதிர்காலத் தலைமுறைகளின் நீடித்த வாழ்விற்காக நாம் செய்யும் செயல்களுக்கு பொறுப்பு எடுத்தாக வேண்டும். அதாவது நாம் ஒரு காரியம் செய்கிறோம் என்றால் அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் அதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும். அதை நம்மால் எப்படித் தீர்க்க முடியும் என்ற பொறுப்பு மனப்பான்மை வேண்டும்.
(1) Philosophy - Joshua J. Mark - World History of Encyclopaedia
(2) Science Daily - May 8, 2017 - 1 Research Court, Suite 450, Rockville, USA
(3) Aryans, Jews, Brahmins: Theorizing Authority through Myths: Dorothy M. Figueira
(4) Periplus of the Erythraean Sea: Schoff, Wilfred H. - Central Archaeological Library, New Delhi
(5) The African Origins of Greek Philosophy: - https://philarchive.org/archive/ANATAO-2
(6) Stolen Legacy: George G. M. James - Start Publishing LLC
(7) The Philosophy of the Upanishads and Ancient Indian Meta-physics: Gough & Archibald Edward - Taylor & Francis
(8) Tribal Religion: Religious Beliefs and Practices Among the Santals: J. Troisi - Manohar Publications)
(9) வடமொழி வரலாறு: ஞா.தேவநேயன், நேசமணி பதிப்பகம்
(10) The Concise Oxford Dictionary of English Etymology. Paw Prints.
(11) Why I Am Not A Christian: Bertrand Russell - Simon And Schuster
(12) STUDIES IN THE PHILOSOPHY OF RELIGION AND HISTORY: A. M. FAIRBAIRN -R. Worthington & Co., New York
(13) Religion without doctrine or clergy: the case of Ancient Greece: George Tridimas - Journal of Institutional Economics, Cambridge University Press
(14) https://www.etymonline.com
(15) Seasonal Sociology Tonya K. Davidson, Ondine Park, University of Toronto Press
(16) Witzel, Michael - "Early Sanskritization: Origin and Development of the Kuru state" - Meghnad Saha, His Life in Science and Politics: Pramod V.Naik - Springer International Publishing
(17) ஒப்பியன் மொழிநூல் பக்:44: தேவநேயப் பாவாணர், ஞா. திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்
(18) Textbook of Biodiversity: K V Krishnamurthy - CRC Press
(19) Linguistic Diversity:Daniel Nettle - Oxford University Press
(20) A Bibliography, Guide, and Index to Climate: Alexander Ramsay • 1884 - W. Swan Sonnenschein and Company (Original from:the University of Michigan
(21) A Basic Call to Consciousness: John Mohawk - Other India Bookstore, Goa
(22) Ancient spirituality guides a Maya town’s conservation efforts - Jorge Rodríguez - Mongabay Magazine
- பாமயன்