உரோமா புரியின் ஆண்டை அரசை
மிரளச் செய்த அடிமை ஸ்பார்டகஸ்
மனிதரில் முதலாம் விடுதலை வீரன்
சிலுவையில் அறைந்து மாண்டிட் டாலும்
வல்லுந ராக வாழ்ந்தவர் தானே
அடிமை பண்ணை சமூகங்கள் தம்மைப்
பிடிமண் ணாக ஆக்கிய உழைப்போர்
வாழ்வாங்கு வாழ்ந்த வல்லுநர் அன்றோ
மாற்றம் கண்ட சமூகம் தன்னில்
ஏற்றம் பெற்ற முதலிடு மனிதர்
சீற்றம் கொண்ட அரவம் போலப்
போற்றி வளர்க்கிறார் சுரண்டல் நஞ்சை
விடுதலைப் போரில் திடமாய் நின்று
வடுவேற்றாலும் வல்லுநர் ஆவர்
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல்லிசை
மலர்தலை உலகத்துத் தோன்றிப்
பலர்செலச் செல்லாது நின்று விளிந் தோரே
 
(உரோமாபுரியின் ஆண்டைகள் அரசை (தன் திறன் மிகு போராட்டத்தினால்) மிரளச் செய்த ஸ்பார்டகஸ் மனித இனத்தில் முதன் முதலாகத் தோன்றிய விடுதலை வீரர் ஆவார். அவர் சிலுவையில் அறையப்பட்டு மாண்டு விட்டார் என்றாலும் வல்லவராக வாழந்தவரே ஆவார். அடிமைச் சமூகத்தையும் பண்ணைச் சமூகத்தையும் (அழித்துப்) பிடி மண்ணாக்கிய உழைக்கும் வர்க்கத்தினர் சிறப்புடன் வாழ்ந்த வல்லவர்களே. (அதன் பின்) ஏற்பட்ட சமூகத்தில் உயர்நிலைகளில் அமர்ந்து கொண்ட முதலாளிகள் சீற்றம் கொண்ட பாம்பைப் போல,  சுரண்டல் நஞ்சைப் போற்றி வளர்க்கின்றனர். (இந்த சுரண்டலுக்கு எதிரான) விடுதலைப் போரில் காயம் அடைபவர்களும் வல்லவர்களே ஆவர்; வீர ஒழுக்கம் வல்லவரே வாழ்ந்தோர் என்பர் அறிவுடையோர். பழமையான புகழும் அதுவே! பரந்த இவ்வுலகிற் பிறந்தும் அவ்வாறே வீரமுடன் ஒழுகாது இருப்பவர் பலர். அவர் எல்லாம் வாழ்ந்தவர் அன்று; தாழ்ந்தவரே யாவர்.)
 
- இராமியா

Pin It