எழுதித் தீர்வதற்கில்லை எந்த இருளும்,
எந்தச் சொற்களையும்
அவிழ்த்துவைப்பதில் பலனேதுமில்லாத் தனிமை.

கையறு நிலை

வெள்ளம் சூறையாடிச்சென்ற வசிப்பிடமாய் நாறுகிறது மனம்.
பெயர்த்துக்கொணர்ந்த
மலத்துணுக்குகளும்
கழிவெச்சங்களும்
கால்களைச்சுற்றிக்கிடக்கிற
சிலிண்டர் ட்யூப்களும்
மிதந்துவருகிற சடலங்களின்
நினைவுக்கு வராத பேர்களுக்குப் பின்னால்
ஒளிந்துகொண்டு
கண்மூடி ஆட்டமாடுகின்றன
முடித்துவைக்கப்பட்ட வாழ்க்கை.

இனி
பெய்தும்
பொய்த்தும்
என்னவாகப்போகிறதென்று
அறியாமையில்
தூறிக்கொண்டிருக்கிறது
மேகமொத்தம்.
அறுந்து கிடக்கிற
மின்சாரக்கம்பிகளில் சேகரமாகி
மேல் அதிகம்
நகர்ந்துமிதக்க வழியின்றிக் கிடக்கின்றன
சிறுபிள்ளைகளின் பாடப்புத்தகங்கள்.


நீந்தத் தெரியாதவர்களின்
பெயர் சொல்லிக்
கூவிக்கதறும் மனிததுக்கம்
வியாபிக்கிறது வெளியெங்கிலும்.

அப்பட்ட முலை
குறித்துக் கிஞ்சித்தும்
அக்கறையின்றி
குத்தவைத்தமர்ந்திருக்கிற
தாய்மலடியின்
சீழெனப் பரவி
வீச்சமெடுத்து
மிதக்கின்ற பிராணியுடல்கள்
தேங்கிடாதவாறு லாவகமாய்
இன்னமும் இங்கேயே
எஞ்சியிருப்போமெனக்
கரங்கொண்டு
தண்ணீர் தள்ளிவிட்டபடியிருக்கிற
கிழவனொருவன்.

டோரா பொம்மையின்
அம்மணத்தினைச்
சாடியபடியே
பசிக்கழுகின்றன
பிழைத்த பிள்ளையினங்கள்.
நேரெதிர் திசையில்
சிறிதுநேரத்தில் விடியப்போகிறது
இன்னொரு தினம்.

இவ்வாறாக
இருக்கிறது
பிரிவு.

Pin It