'தமிழ் டைட்டன்ஸ்' கிரிக்கெட் டீமிற்காக விளையாடச் சென்று ஜெர்சி சில்லிட்ட வண்ணம் அயர்ந்து வந்தான். உடல்நிலை சற்று சோதிப்பது போலிருந்தாலும் பிடித்தமான செயலென எதுவும் ஆகிவிட்டால் யாருக்கும் அத்தனை உத்வேகம் எங்கிருந்துதான் பிறந்துவிடுறதோ..! கூட்டிலிருந்து வெளியேறிய பட்டாம்பூச்சியின் இறக்கையின் ஈரம் காயும் நேரம் வரையெல்லாம் மனம் காத்திருப்பதில்லை. விருப்பமும், எழுச்சியும் ஓர் முகமானால், மைக்ரோ நொடியில் மாமலையையேப் புரட்டிவிடும் வல்லமையை உடலும் வரிந்து கொள்கிறது. இல்லையென்றாலோ வலிமை கொண்ட கும்பகர்ணன்தான்.

மேலும் இறுதிச் சுற்று தன்னுடைய அணிக்கும் 'க்ரீக் ஸ்மாஷர்ஸ்'க்கும் நடைபெறவிருந்தது அவனது முனைப்பை மேலும் தீவிரப்படுத்தியிருந்தது. துபாயில் பணிபுரிந்த ஆரம்ப நாட்களில், 'க்ரீக் ஸ்மாஷர்ஸ்' (Creek Smashers) அணியில் சேர பல முறை முயற்சித்து தோற்றுப் போயிருந்தான். மலையாளிகள் மட்டும் மல்லுக்கட்டிக் கொள்ளும் மதிலது.

அல் அய்ன் வந்த பிறகு 'தமிழ் டைட்டன்ஸ்'தான் ஆனந்த் ராஜை, டைட்டன் ராஜாக்கி அழகுப் பார்த்தது. அப்பேர் மகுடமே களமிறங்கினால் ஆயிரம் மில்லிகிராம் காஃபீன் ஊக்கத்தை அவனுக்கு நினைத்த மாத்திரத்தில் அளித்துவிடும் என்றாலும் இம்முறை க்ரீக் ஸ்மாஷர்களுடனான பழையக் கணக்கே போதாதா? அல்லது எத்தனை முறை மோதினாலும் தீர்த்துப் போகக் கூடியதா? லட்சம் மடங்கு உட்கொண்ட ராட்சசனை போல உருமாறி வெற்றிக் கோப்பை தனது அணிக்கு கைப்பற்றிக் கொடுத்தான்.

இரவு உறங்கச் செல்லும் வேளையில் நாசித் துவாரங்களில் ஒன்றில் அடைப்பிருப்பது போல் உணர ஆரம்பித்தான். நன்றாக தடுமன் பிடித்துவிட்டது என சலித்துக் கொண்டான். தூக்கம் வருமா என்ற சந்தேகத்தோடேயேப் படுக்கச் சென்றான். தரைப் பெயர்ந்தத் தூணை போல மெத்தையில் சரிந்தான். சற்று நேரம் வழமை மாறாமல் சமூக ஊடகங்களில் சொடுக்கச் சொடுக்க அடுத்து என்னவென்பது போல் வரும் சிறு சிறு காணொளிகளைக் கண்டு இரசிக்கலானான். பெரும்பாலும் சினிமா பாடல்களுக்கு பலரும் அபிநயித்துக் கொண்டிருந்தனர். செயற்கை நுண்ணறிவு செயலிகளின் உதவியால் சிறு குழந்தைகள் கூட பெரியவர்களையொத்த பாவனைகளோடும், முதிர்ச்சியோடும் நடன நுட்பங்களோடு ஆடி கண்களைக் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தன. சிலர் நண்பர்களோடோ அல்லது குடும்பத்தினரோடோ சேர்ந்து சிரிக்க வைக்க முயன்றுக் கொண்டிருந்தனர். கடந்த சில நாட்களாய் அவன் முதற்கொண்டு பலரின் உருக்கத்தையும், அனுதாபத்தைப் பெற்றிருந்த ஜப்பான் நாட்டு 'பன்ச்' குரங்குக் குட்டிக்கு தோழி கிடைத்திருப்பதாக பகிரப்பட்டிருந்த ஒரு காணொளி அவனை பெரிதும் ஆசுவாசப்படுத்தியிருந்தது. சீக்கிரமே தனக்கும் கூட துணைக் கிடைத்துவிடுமென மெலிதாய் சிரித்துக் கொண்டான். அவன் ஆர்வங்கள் ஹாரிஸ் ஜெயராஜின் காதல் பாடல்களுக்கும், சமகால இசை நடனங்களுக்கும் அடுத்தடுத்துத் திரும்பின. கயாடு லோஹர், சாய் அபயங்கருக்கும் பொருத்தமாகவேத் தெரிந்தாள். அவர்கள் கூட்டணியில் ட்ரெண்டிலிருக்கும் 'பவளமல்லி' பாடலுக்குதான் நிறைய பேர் விதவிதமாய் ஆடிக் கொண்டிருந்தனர். சுவாரசியமாகவும் பரவசமாகவும் சென்றது நிமிடங்கள் செல்லச் செல்ல தவிர்க்க முடியாத சிறு சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது.

அந்நேரம் dopamine detox பற்றி யாரோ ஒரு இளைஞன் தனது யூ ட்யூப் சேனலில் பாடம் எடுத்தது நினைவிற்கு வந்துச் சென்றது. அதனைத் தொடர்ந்து சில சுய முன்னேற்றம் மற்றும் இதர இன்ஸ்பிரேஷனல் காணொளிகள் பக்கம் தாவினான். அதில் எவற்றிலும் சில நொடிகள் அல்லது ஒரு நிமிடத்திற்கு மேல் இருப்பு கொள்ள முடியவில்லை. சென்ற வார ஐ.பி.எல் நிகழ்வுகளைத் தேடிச் சென்றான். வைபவ் சூரியவன்ஷியின் படங்களையும், கிரிக்கெட் சம்பந்தப்பட்ட குறுந்திரைகளையும் இன்ஸ்டா கிராமில் சொடுக்கிக் கொண்டிருந்தான். அதில் அடுத்த முப்பது சொச்ச நிமிடங்கள் கரைந்தோடின. மறுநாள் பணிக்குச் செல்ல வேண்டுமே... நேரத்தைப் பார்த்தான்... பன்னிரெண்டிற்கு இன்னும் பத்து நிமிடங்களே மிச்சமிருந்தன. அலைப்பேசித் திரையை அணைத்துவிட்டு, அதை மின்விசை சேர்வியில் அதான் சார்ஜரில் இணைத்த வண்ணம் கம்பளிப் போர்வைக்குள் புதைந்துப் போனான். மருந்து உட்கொண்டிருக்க வேண்டுமோ என்ற எண்ணம் கண்முன் மெல்லியப் புகையாய் எழுந்து அடங்கியது.

காலையில் எழுந்தபோது தடுமன் கூடியிருந்தது. தேனீருக்குப் பின் கைவசமிருந்த மாத்திரை அட்டையை எடுத்து நோக்கினான். முன்பொரு நாள் அலுவலக நண்பனொருவன் கொடுத்தது. எதற்கானது என்று இணையத்தில் தேடியறிந்திருக்கலாம். அதற்கெல்லாம் நேரமில்லை. சளி, காய்ச்சலுக்காகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்து விழுங்கினான்.

பணி புரியும் நிறுவன வளாகத்தை அடைந்தபோது மணி எட்டு ஐம்பது. பிங்க் முழுக்கை சட்டை, க்ரே கலர் கோட், பேன்ட் சகிதம் எதிர்ப்பட்ட ஐம்பது வயதை நெருங்கும் உயர் அதிகாரி காலை வாழ்த்து சொன்னார். வழமையில் கைகுலுக்கச் சென்றவன், "I am sick!" என்று தானே சுதாரித்து பின்வாங்கிக் கொண்டான். இருந்தபோதிலும் நுனிவிரல்களில் இரண்டு அவர் மீது பட்டுவிட்டன.

"Wear mask ஆனந்த் ராஜ் !" என அறிவுறுத்தியபடி புன்னகையோடு தனது கோட்டை சரிசெய்துக் கொண்டார். முடியுதிர்ந்த அவர் முன் நெற்றியில் பனி போல் வியர்வை துளித்திருந்தது. நோயுற்றவனின் கைப்பட்டதின் பதற்றமாகவும் இருக்கலாம்.

"ஷ்யூர் சார்!" காகிதங்கள் மேல் வைக்கும் பளிங்கு படிகக்கல்லில் பாய்ந்த ஒளியாய் நேசப் புன்னகை வீசியபடி, PPE (Personal Protective Equipment) அதாவது சுய பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கும் அலமாரி இருக்கும் அறையை நோக்கி நடந்தான். அதிகம் பரிச்சயமான வெளிர் நீல முகக்கவசத்தின் கையிருப்பு தீர்ந்துவிட்டிருந்தது. வெள்ளையில் ஒன்றை அணிந்து கொண்டான். பணிவளாகத்தில் என்று கடைசியாக மற்ற மற்ற பிரிவுகளுக்கு காலாறச் சென்று சக ஊழியர்களை எப்போது சந்தித்துப் பேசினேன் என நினைத்துப் பார்த்தபோது 'ரொம்ப நாளாச்சு!' என அவனது மூளை மினுங்கியது.

'மாஸ்க்'கோடு அவனைப் பார்த்தவர்களில் பலர் 'என்னாச்சு' என்று அக்கறையோடும், தத்தம் பணியின் அவசரத்தோடும் விசாரித்தனர். யாருடைய அருகிலும் செல்லாமல் தானே 'காய்ச்சல்' எனக் கூறிய வண்ணம் வரிந்து புகுத்திக் கொண்ட ஒரு இடைவெளியை கடைப்பிடித்தான். 'ரெஸ்ட் எடுத்திருக்கலாம்ல!' சிலர் கேட்க, "நோ மன்த் க்ளோஸிங்! எங்க லீவு எடுக்கிறது!" என சுருக்கமாய் முடித்துக் கொள்ளாமல், ஒரு வித ஈடுபாட்டோடு நீண்ட நேரம் அங்குமிங்கும் நின்றுப் பேசிக் கொண்டிருந்தான். ஒவ்வொருவருடனும் பேசும்போதும் வழக்கத்திற்கு மீறிய உற்சாகம்!

அது அவனுக்கே வினோதமாகப் புலப்பட, "மைல்ட் ஃபீவர் போலதான் இருக்கு. பட் ஐம் நாட் ஷ்யூர், வர்றேன் ப்ரகாஷ்!" என்று கடைசியாய் பார்த்தவனிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு வேலையைத் தொடங்கும் பொருட்டு தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தான்.

முதல் காரியமாக தனக்கு வந்திருந்த மின்னஞ்சல்களில் ரொம்ப முக்கியம் என சிவப்பு ஆச்சர்யக்குறியிட்டதை சலிப்புடன் சொடுக்கினான். தலைப்பே எல்லாவற்றையும் சொல்லிவிட்டாலும் இரண்டு மூன்று வாரங்களாக சமர்பிக்கப்படாமல் தள்ளிப்போட்டு வந்த, நடப்பு நிதி ஆண்டின் பட்ஜெட் பற்றிய ஆய்வறிக்கைக்கு இன்றுதான் கடைசி நாள் என நினைவூட்டப்பட்டிருந்து. என்ன செய்வது இதைதான் கடந்த இரண்டு வாரங்களாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் எப்படியும் இந்த வார விடுமுறைகளில் முடித்து விடலாம் என எண்ணுவான். ஆனாலும் கிரிக்கெட்டோ, மேலதிகாரியின் இவன் மீதான மிதமானப் போக்கோ, நண்பர்களின் சந்திப்போ, சமூக வலைத்தளமோ, இவற்றில் ஏதாவது ஒன்றோ, அல்லது எல்லாமே சேர்ந்தோ திங்கள் கிழமை, ஆஃபீஸ் போனதும் முதல் வேலையாக அதை முடித்துவிடலாம் வேதம் ஓதத் தொடங்கி விடும். அக்கணம் ஒரு மனச்சோர்வும், அசதியும் கூட பரவ ஆரம்பிக்கும். இப்போதும் அப்படிதான் தனக்கு ஏதோ உடல்நிலை சரியில்லாதது போல் திரும்பவும் உணரத் தொடங்கினான்.

அலைப்பேசியில் குறுஞ்செய்திகள் வரிசையாய் சிணுங்க, திறந்துப் பார்த்தான். தமிழ் டைட்டன்ஸ் அணியின் சகஆட்டக்காரன் இர்ஃபான், நேற்று இவன் ஆடிய சிறப்பானத் தருணங்களை சில படங்களாகவும், ஒரு நிமிட கண்கவர் காணொளியாகவும் இசையோடுத் தொகுத்து அனுப்பியிருந்தான். முன்பெழுந்திருந்த சோர்வு யாவும் வெளுத்த வானம் போல் நீங்கி அலைப்பேசியிலேயே சில நிமிடங்கள் மூழ்கித் திளைத்தான். இர்ஃபான் அனுப்பியிருந்ததை தனது முகநூல் மற்றும் இன்ஸ்ட்டா பக்கங்களில் பகிரவும் செய்தான். அந்த மகிழ்ச்சியை துளித்துளியாய் அனுபவிக்க உடனே அவனுக்கு ஒரு டீ சாப்பிடணும் போல தோன்றியது. பாலித்தீன் பையில் அடைத்த பளபளப்பான வண்ண மீன்களாய் உள்ளுக்குள் உற்சாகம் கரைப் புரண்டுக் கொண்டிருந்தது. பேன்ட்ரி செல்லும் வரை அலைப்பேசியின் திரையைத் திறந்து திறந்துப் பார்த்தான் ஏதாவது நோட்டிபிகேஷன் வந்திருக்கிறதா? வருகிறதா? என்று.

- இத்ரீஸ் யாக்கூப்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.