குறுங்கதைகள்

தளிர்:

கதீஜாம்மாள், தான் பிறந்த வீட்டு வகையறாவிலிருந்து எத்தனையோ அதிரி புதிரியான மாப்பிளைகளைக் கொண்டு வந்தாள். தலைச்சம் பிள்ளைக்கும் தலைச்சம் பிள்ளைக்கும் ஆகாது. அப்புறம் நமக்கும் ஒரே ஒரு பிள்ளை, அவ்வொளுக்கும் ஒரே பிள்ளை, ஒரு உதவி ஒத்தாசைக்கின்னாக் கூட ஒண்ணுவிட்ட சொந்தத்துக்கிட்டாதான் போயி நிக்கணும்! இந்த முடிவை கொஞ்சம் யோசிச்சி செய்ங்க! நான் சொல்றதை கேளுங்க! நம்ம பிள்ளை வாழ்க்கையும் நல்லாருக்கும் உன் அக்கா மகன் வாழ்க்கையும் நல்லாருக்குமென முடிந்தவரை தனது கணவனிடம் மன்றாடிப் பார்த்தாள்.

எதற்கும் அசைந்துக் கொடுக்காத மம்மதப்பா (முகமதப்பா) தன்னுடைய விருப்பத்தின்படி அவருடைய அக்காளின் மகனான யஹ்யாவிற்கே உறவுகள் சூழ ஒரு மனதாய் திருமணம் செய்து வைத்தார். தனது அக்காவிற்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ ஆசையாசையாய் அப்படி ஒரு முடிவை எடுத்திருந்தாலும் மருமகன் என்றால் ஏனோ அவருக்கு ஆகாமலேயே வெகு நாட்கள் சென்றன.

இருவரும் மளிகைக் கடை தொழில் செய்பவர்களாக இருந்தாலும் தனித்தனி ஊர்களிலேயே சிறு சிறு ராஜ்ஜியம் செய்து வந்தார்கள்.

ஆனாலும் தனது அக்காளின் பிள்ளையை மகளுக்கு கட்டி வைக்கும் பட்சத்தில் தனக்கு ஒரு மகன் போல் நடந்துக்க கொள்வான் என நினைத்த அவருடைய மனக்கணக்கையும் குறை சொல்ல முடியாதுதான்... இருப்பினும் யாரையும் குறைப்பாட்டுக் கொள்ள வழியில்லை. அப்போது அவருக்கு ஓரளவு உடலளவில், மனதளவில் அதிகத் தெம்பிருந்தது. ஆகையால் மனுஷன் தனியாளாகவே வேறு வேறு ஆட்களை வைத்து அரைகுறை நம்பிக்கையோடு வேலை வாங்கி வந்தார். ஆனாலும் தனக்கு ஒரு ஆண் பிள்ளை இருந்தால் இப்படியெல்லாம் தனியாகப் போராட வேண்டியிருக்குமா என்ற ஆதங்கம் ஒரு நாளும் அவரை வதைக்காமலிருக்கவில்லை!

மருமகன் தன்னோடு இருந்து சம்பாதித்தால், வேண்டிய ஓய்வுடன் வியாபாத்திலும் அவனுக்கு துணை நிற்கலாம். அவனிடமிருந்து தனக்கு வேண்டிய ஆதரவையும் பெறலாம் என்ற நிலையிலிருந்து அவர் பின் வாங்கவேயில்லை! ஆனால் யஹ்யா அவருடைய கடைக்கு வரவேயில்லை! அது அவர்மீதான வெறுப்பல்ல! அங்கேச் சென்றால் தன்னுடைய சுதந்திரம் பறிப்போய்விடுமே என்ற எச்சரிக்கை! மேலும் தாய்மாமனாச்சே கோபத்தில் வாய்தவறி வார்த்தைகள் விழுந்துவிட்டாலும் காலத்திற்கும் நிற்கும் நடுவாகிப் போய்விடுமே என்று இரகசியமாக அஞ்சினான். நியாயமான எண்ணமே என்றாலும் அது அவர்களின் இடைவெளியை நாளுக்கு நாள் அதிகரிக்கவேச் செய்தது.

தன் புறநியாயங்கள், வாதங்கள் இருந்தும் தன்னுடைய மாமா தனியாளாகப் போராடுவதையும் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் அவனுடைய மூத்த மகனான ரியாஸை தன்னுடைய பராமரிப்பிலேயே வைத்து படித்துக் கொள்கிறேன் என்று மம்மதப்பா சொன்னதும் பட்டென யஹ்யாவும் சரியென்றான். தன்னால் வெளிப்படுத்த முடியாத பிணைப்பையும் பாசத்தையும் மகன் ஏற்படுத்தி நிரப்புவான் என்ற தீர்க்கத்தைக் கொண்டான்.

அவனுடைய தாயும் தனது தம்பியின் மனமறிந்து பேரனை விட்டுக் கொடுக்க சம்மதித்தாள். ஆனால் பேரனோ, பாட்டனிடம் பேசவே மாட்டான். அதனாலேயே கோபமும் வருத்தமுமுற்ற பாட்டன், அப்பனைப் போலவே வந்துவிட்டான் என்பார். ஆனால் அப்பன்காரன் மகனைக் கண்டால் இப்படிச் சொல்வான் 'பெற்ற பிள்ளையாக இருந்தாலும் பாட்டனைப் போலவே தன்னிடம் எப்போதும் தள்ளி நின்றேப் பேசுகிறான் அல்லது பேசவே மாட்டான் என்று.

***

பூவும் பிஞ்சும்:

நோன்பு பெருநாளற்று எல்லோரும் மணலுக்குச் சென்றார்கள். மணல் என்றால் பெருநாள் கொல்லை.. சிறிய சந்தைப் போல் அல்லது கந்தூரி, திருவிழா மாதிரி கடைகள் நல்ல மணற்பாங்கான அந்த குறிப்பிட்ட இடத்தில் நெடுக நிறைந்திருக்கும். சிறுபிள்ளைகள் முதல் குமரிகள் வரை அத்தனை பெருக்குமான தின்பண்டங்கள் முதல் விளையாட்டு, வேடிக்கைகள் மற்றும் ஜோடிப்புப் பொருட்கள் என எல்லாமே கடைகள் விரிக்கப்பட்டிருக்கும்.

அங்கே தனது மகனான ரியாஸையும் அனுப்பி வைக்க ஆசைப்பட்டாள் மெஹர். அதற்கு அவனுடைய தலையை, தேங்காய் எண்ணெய் விட்டு படிய வாரி, பான்ட்ஸ் பவுடர் பூசி, காலையில் போட்டிருந்த சட்டை, கைலிலாம் தெருவில்... குளம் குட்டைகளில் ஆடி, ஓடி, திரிந்ததில் அழுக்கடைந்து பாழாகிவிட்டிருந்ததால் தன் வீட்டில் எடுத்துத் தந்த உபரி புது உடுப்புகளை மாட்டிவிட்டு ஆறு வயது மகனை இரவு நேரத்து கல்யாண மாப்பிள்ளை போல ஜிகுஜிகுவென ஜோடித்துவிட்டிருந்தாள்.

'இந்த வாப்பா காசு' என்று ஐந்து ரூபாயை புடவை மதிப்பது போல் மடித்து அவனுடைய ஜோப்பில் திணித்தாள். 'கர்சீப்பு கட்டலை?' என்று தலையில் அதையும் கட்டிவிட்டாள். 'வர்றேன்ம்மா!' என்று செவலை நிற கன்றுக் குட்டி போல தாவிக் குதித்து ஓடியவன்தான். பொழுதடைந்து வர வேண்டியவன் மக்ரிபிற்கு நகரா அடிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னமே 'ம்மா...!' என்றழைத்தபடி வாழையிலையில் கட்டித் தரப்பட்ட மூன்று முழப் பூவோடு வீடு வந்து சேர்ந்தான். பிஞ்சுக் கரங்களில் இருந்தது என்னவென்று தெரிந்தாலும் 'என்ன வாப்பா இது...?' என்று உள்ளம் பூரித்துக் கேட்க, 'மல்லியப்பூவும்மா உனக்குத்தான்!' என்றான் அந்த சர்க்கரைக்கட்டி.

'எவ்வளவுக்கு வாங்குனா?'

'அஞ்சு ரூவாய்க்கி!'

'என் ஈரக்குலையே..!' அவனை மாரோடு நெகிழ்ந்து, இறுக அணைத்துக் கொண்டாள். அடுத்த நாள் இந்தச் செய்தியை தனது தோழியோடு மகன் முன்னாடியே பெருமைப் பொங்க பகிர்ந்துக்க கொண்டாள்.

'அப்புடியா..? சாயங்காலம் நீ பூவு ஏதும் வச்சுக்கவே இல்லையே..?' என்றாள் தோழி சிரித்தபடி. அதை பத்திரமாக ரெங்குப்பெட்டியில் பத்திரமாக போட்டு வைத்திருப்பதை சொன்னதும், 'அட பைத்தியக்காரி..!' என்று மூக்கில் விரலை வைத்தபடி மற்றவள் வியந்து நகர்ந்தாள். மெஹரும் தனது தகப்பனுக்குப் பிறகு வீட்டிற்கு பூ வாங்கி வந்த அப்படியொரு கரத்தை அன்றுதானே கண்டிருக்கிறாள்!

 

***

 

காயும் கசப்பும்:

ரியாஸ் பி.ஈ. பட்டப் படிப்பை முடித்தவுடனே வேலையும் கிடைத்தது. அதே நேரம் மாதம் மாதம் யஹ்யாவிடமிருந்து வீட்டு செலவிற்கு வந்துக் கொண்டிருந்த இரண்டாயிரம் ரூபாயும் நின்றுவிட்டிருந்தது. ஏற்கனவே தாய் தந்தை பிரிந்திருப்பதில் மிகுந்த மன இறுக்கத்திற்கு ஆளாகியிருந்தவன், இப்போது தந்தையின் மீது தனிப்பட்ட கசப்பிற்கும் உள்ளானான். அவன் வாங்கிக் கொண்டிருந்த சொற்ப சம்பளத்தில் கடனும் உடனுமாக மேற்கொண்டு இரண்டு வருடங்கள் போராட்டமாகவேச் சென்றுக் கொண்டிருந்தன.

 ஒரு நாள் தனது தந்தையிடமிருந்து அழைப்பு வர, எடுத்தான். என்னதான் சொல்ல முடியாத துக்கங்கள் இரு தரப்பிலுமிருந்தாலும் முடிந்தவரை சந்திக்கும்போதும், தொலைபேசியில் பேசிக் கொள்ளும்போதும் தகப்பனும் மகனும் ஒரு வித முதிர்ச்சியோடுதான் ஒருவரையொருவர் அணுகிக் கொண்டிருந்தார்கள். அதனாலேயே இயல்பாகவும் உரையாடிக் கொள்ள முடிந்தது.

சம்பளம் போதாத மாதங்களில் உரிமையோடும் உள்ளார்ந்தக் கோபத்துடனும் தனது செலவுக்கு பணம் அனுப்பச் சொல்லி கேட்பான். யஹ்யாவும் மறுப்பேச்சில்லாமல் அவனுக்கு தேவையானதை செய்துவிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் அன்று வந்த அழைப்பு வழமையானதாக இருந்திருக்கவில்லை. யஹ்யா, தனது நெருங்கிய நண்பன் ஒருவர் மூலமாக ரியாஸிற்கு வெளிநாடு செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

 அதற்காக யஹ்யா ஒரு பெருந்தொகையும் செலவழித்திருந்தது அவருடைய நண்பரான முஜிபு மாமாவை சந்திக்கும்போதே அவனுக்குத் தெரிய வந்தது. மேலும் ரியாஸை தனது இடத்திற்கு வரவைத்து, தான் மகளுக்காக அதாவது அவனுடைய தங்கைக்காக செய்து வைத்திருந்த இரண்டு பவுன் தங்க வளையல்களை வீட்டில் கொடுத்துவிடுமாறு சொன்னபோதுதான் அந்நாள் வரை அவன் கழுத்து இறுக்க சுமந்திருந்த கசப்பு எல்லாம் கண்ணீர்துளிகளாக வெளியேறிப் பீறிட்டது.

வாப்பா வீட்டு செலவுக்கென எதுவும் அனுப்பாமல் நம்மையெல்லாம் மறந்துவிட்டாரோ? இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறாரே என்று வருத்தி வந்த கோபமும் வேதனையும் ஒரு நொடியில் வீழ்ந்தது. அவன் மனம் கரைந்து இலகுவானது. இருப்பினும் அவரை தவறாக எடைப் போட்டிருந்த அவனதுள்ளம் குற்றவுணர்வில் பிடித்திருந்தது. தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள தனிமரமான தனது தந்தையை காற்றைப் போல் நெடுநேரம் அந்நாள் உலுக்கிக் கொண்டிருந்தான்.

***

கனியால் விளைந்த கண்ணீர்:

ரியாஸ் துபாய்க்கு வந்தவுடனே சொல்லிவிட்டான் இனி மம்மதப்பா கடைக்கெல்லாம் செல்லக் கூடாது என. போதும்! அவரை மரியாதைக்குரிய முதலாளியாய் பார்த்து, பயந்து, பதுங்கிய காலங்கள் போய், எல்லாம் பொய்த்து, சரிந்த ஆலமரமாய்... அடுப்பெரிக்க துண்டான விறகாய் சாரமிழந்து, சற்றும் எதிர்பாராமல் அந்த வயதிலும் இன்னொரு கடையில் ஒரு தொழிலாளியாய் வேலைக்கு நின்று அந்த குடும்பத்தின் வயிறை வளர்த்த வரை.

மெஹரின் நகைகளை அடகு வைத்து யஹ்யா சவுதி சென்றதிலிருந்து துவங்கியது அந்தச் சரிவு. மருமகன்தான் இனி ரியாலில் கொட்டப் போகிறானே என்று கடையை விற்றுவிட்டு ஊரோடு வந்தார் மம்மதப்பா. ஆனால் யஹ்யா ஏஜெண்டிடம் சோரம் போன கதை இன்னும் துயரமானது. அதனாலேயே மகளின் பிள்ளைகளுக்காக மீண்டும் ஆறு வயது பாலகனாகி மீண்டுமொரு முறை தனது பொதிகளை சுமக்கலானார்.

முதலில் சுமந்தது பெற்றவளுக்கும், உடன் பிறந்தவளுக்கும் என்றால் தள்ளாத வயதில் அரிசி மூட்டைகளையும், சீனி மூட்டைகளையும் நகர்த்தியது மகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும்! ஏனென்றால் யஹ்யா அனுப்பிக் கொண்டிருந்த சொற்பக் காசை வைத்து தேத்தண்ணிதான் குடிக்க முடிந்தது. யஹ்யா சவுதிக்குச் சென்றபோது ரியாஸ் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். மற்ற நால்வரில் மூவர் பெண் மக்கள், எல்லாம் சிறு சிறுப் பிள்ளைகள்... குடும்பம் ஓட வேண்டுமே...! இரத்தக் கண்ணீர் வடிப்பது போல் அந்த அறுபது வயதிலும் ஓடிக் கொண்டிருந்தார் மம்மதப்பா.

ஊரில் வயதிற்கு வந்த ஆண்கள் வேலைக்குச் செல்லாமலிருப்பதே பெரும் குற்றச் செயலாகக் கருதப்பட ரியாஸ் தனது பாட்டனாரின் அல்லல்களைக் கண்டும் காணாமலும், எல்லாவற்றையும் மென்று விழுங்கிதான் கல்லூரிப் படிப்பை முடித்தான்.

சிறு சமபலத்திற்கு சென்னையில் வேலைப் பார்த்தவரை மம்மதப்பாவை கடையிலிருந்து விடுவிக்க அவனிடம் ஒரு முதுகெலும்பும் இல்லை. துபாய்க்கு பயணம் சொல்லும்போது கூட அவரிடம் 'இனி கடைக்குச் செல்ல வேண்டாம்!' என்றுதான் கிளம்பினான். ஆனாலும் அவர் வீட்டில் அடையவில்லை! அடையவும் முடியவில்லை! அவரை ஒரு இனம் புரியாத தாளாமைத் துரத்திக் கொண்டேயிருந்தது. ஆறு வயதில் ஓட துவங்கிய அவரது கால்களுக்கு என்றுதான் ஓய்வு கிடைக்குமென்ற ஒரு தவிப்பு அவர் ஆழ்மனதில் இருந்துக் கொண்டேயிருந்தது. அதை ரியாஸ் அறிந்தே வைத்திருந்தான்.

துபாய் வந்தபின்னர்தான் அவனுடைய நாவிற்கு நரம்பு முளைத்தது, இனி கடைக்குச் செல்ல வேண்டாமென உறுதியாகச் சொன்னான்.

முதல் மாத சம்பளத்தை வாங்கியவுடன், பெற்றவளுக்கு அவதி அவதியாய் அனுப்பினான். பணத்தைப் பார்த்தவுடன் இனி நம் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையும் வலுக்கத் தொடங்கியது.

அனுப்பிய தொகை கிடைத்ததா என்று விசாரிக்கவும் தனது தாயின் சந்தோசத்தைக் கேட்டுணரவும் வீட்டிற்கு ஃபோன் செய்தான்.

 தாய்தான் எடுத்தாள். அவள் குரலில் இதுநாள் காணாத மகிழ்ச்சி! நினைத்த நாளில் தோன்றும் பவுர்ணமியைப் போல் பேச்சிலேயே அத்தனை ஒளி வீசினாள். அவன் காது சந்தோசத்தில் கூசியது. வாயெல்லாம் சிரிப்பு.

 'நீ அனுப்புன காசியிலிருந்து மம்மத்தப்பாவுக்கு ஐநூறுவா கொடுத்தேன்.. ஏந்தி ரெண்டு கையிலேயும் வாங்கிகிட்டு, கண்ணுல ஒத்திக்கிட்டு அழுவ ஆரம்பிச்சிட்டாங்க!' தாய் பூரிப்புடன் சொல்ல, ரியாஸ் செல்ஃபோன் மேல் கண்களை அழுத்திக் கொண்டு தேம ஆரம்பித்தான்.

- இத்ரீஸ் யாக்கூப்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.