விடியாத வெளிச்சமும் இரவின் இருட்டும் ஒன்றுக்கொன்று முகம் பார்த்து முறைத்துக் கொண்டிருந்த அதிகாலை. சின்னக்கண்ணு மாட்டின் மடியைத் தொட்டு வணங்கினார். அது வெறுமனே வேலைக்கான தொடக்கம் அல்ல; தனக்கும் தனது குடும்பத்திற்கும் வாழ்க்கையை பசியை போக்குவதற்கான நன்றி வணக்கம்.
அவரது கை, பாலைக் கறக்கும் பழக்கத்தில் இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் எந்த தயக்கம் இல்லாமல் இயல்பாக இயங்கியது. அறுபதைக் கடந்திருந்தாலும் வயது அவர் தோல் சுருக்கங்களில் மட்டும் இருந்தது. குத்துக்கால் போட்டு இரண்டு கால்களுக்கு இடையில் பாத்திரம் வைக்கப்பட்டு கைகள் பால் மடியும் தொட்டவுடன் உணரும் அந்த இளம் சூடு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சாதாரண தொடுதல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆன்ம பந்தம்! அந்த பால் மடியில் இருந்து பீறிட்ட வெண்மை, இருளுக்குள் ஒளியை பாய்ச்சி பளபளத்தது.
சின்னக்கண்ணுவின் கிராமம் ஒரு விசித்திரமான இடத்தில் இருந்தது. நகரம் அதைக் குடிக்க முயற்சித்தது; பேரூராட்சி அதைக் கவ்வ முயற்சித்தது; ஆனால் அந்த கிராமம் இன்னும் மண் வாசனையைத் தழுவிக் கொண்டு, “நான் இன்னும் முழுதாக யாருடையதுமில்லை” என்று பிடிவாதமாக நின்றது. அங்கே வீடுகள் சாணி வாசனையோடும், அடுப்புப் புகையோடும், கடன் வசூல்காரர்களின் நினைவோடும் உயிர் வாழ்ந்தன.
பால் கறந்ததும் சின்னக்கண்ணு பதினைந்து லிட்டர் பாலை இரண்டு கேன்களில் எடுத்து நடைபயணமாகப் பேரூராட்சியை நோக்கிப் புறப்பட்டார். தேநீர் கடைகள் கதவைத் திறப்பதற்கு முன்பே பால் அங்கே போய் சேர்ந்தாக வேண்டும். இல்லையெனில் காலையின் முதல் டம்ளரில் தேநீர் கருப்பாக பிளாக் டீ தான் தேநீர் பிரியர்களுக்கு கிடைக்கும்.!
அவருக்குப் பின்னால், அவரது இரண்டு மகன்கள் மற்ற மாடுகளின் பாலைக் கறந்து, இருசக்கர வாகனங்களில் நகரை நோக்கிச் செல்லத் தயாரானார்கள். வீட்டில் மனைவியும் மருமகள்களும் சாணியை அள்ளி தொழுவத்தைச் சுத்தம் செய்தார்கள்.
மீதிப் பாலை எடுத்துச் சின்னக்கண்ணு மனைவி அதே கிராமத்தில் மாடு இல்லாதவர்கள் வீடுகளில் தினம்தோறும் அரை லிட்டர் ஒரு லிட்டர் பால் என்று வாடிக்கையாக கொடுத்துவிட்டு திரும்புவார்.
ஒருத்தி சமையல், இன்னொருத்தி குழந்தைகள், அனைவரும் வீட்டில் ஆளுக்கு ஒரு வேலை செய்வார்கள்;
அவர்கள் அனைவரின் உழைப்பைத் தொகுத்து பார்த்தாலும், வகுத்து பார்த்தாலும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தது. சிறு நடுத்தர வாழ்க்கைக்கு அது போதுமாக இருந்தது. மாட்டிற்கோ மனிதனுக்கோ ஏதாவது பெரிய நோய் வந்தால் அவ்வளவுதான். நடுத்தர வாழ்க்கையும் பறி போய்விடும்.
இது அந்தக் குடும்பத்திற்கே மட்டும் உரியதல்ல. அந்தப் பகுதியின் அனைத்து பால் உற்பத்தியாளர்கள் மாடு வளர்ப்பவர்கள் நாளும் வாழ்வும் இப்படித்தான் சுழன்றது. இதுதான் அவர் நாட்டின் கதையும்…
ஆனால் இன்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தது. மாதக்கணக்காக அவர்கள் அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்:
“பால் விலையை உயர்த்துங்கள்.”
தீவனம், புண்ணாக்கு வைக்கோல் அனைத்து விலைகளும் உயர்ந்து விட்டன. மருந்து, பெட்ரோல், உணவுப் பொருள்கள், அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்து கொண்டே இருந்தன. பெட்ரோல், தங்கம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்கிற நாட்டின் நிலை இதுதான்! அவற்றின் விலை உயர்வு பட்டியலை எழுதினால் ஒரு சுவரே போதாது .பாலின் விலை மட்டும் பழைய எண்களில் அடைபட்டபடியே கிடந்தது.
சின்னக்கண்ணுவுக்கு கணக்கு தெரியும். பள்ளியில் படித்த கணக்கு இல்லை; வாழ்க்கையில் கற்றுக் கொண்ட கணக்கு. ஒரு மாடு எவ்வளவு சாப்பிடும், எவ்வளவு பால் தரும், எவ்வளவு வரவு, எவ்வளவு கடன்—இதையெல்லாம் அவர் மனக்கணக்கில் வைத்திருப்பார். அந்தக் கணக்கின் முடிவு எப்போதும் ஒன்றுதான்.
“சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது”
எல்லா சம்சாரிகளின் வாழ்வு இப்படித்தான்!
அந்த நாளில் வழக்கத்திற்கு மாறாகப் பால் வெறும் பால் இல்லை. அது கோபமாக கொதித்துக் கொண்டு இருந்தது.
பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தது. பல மாதங்களாகத் தமிழ்நாடு அரசிடம் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்: பாலின் விலையை உயர்த்தித் தாருங்கள். புண்ணாக்கு விலை ஏறிக்கொண்டே இருந்தது. தவிடு விலை ஏறிக்கொண்டே இருந்தது. வைக்கோல், மருந்து, மாட்டுத் தீவனம், டீசல், பெட்ரோல்—இந்த உலகில் எதற்கெல்லாம் விலை உண்டு, அவையெல்லாம் தங்கள் மனப்போக்குக்கு ஏறின. ஆனால் பாலை மட்டும் உயர்த்த யாரோ ஒருவன் வெட்கப்படுகிறான் வேதனைபடுகிறான் என்பது போல இருந்தது. தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களுக்கு விலையை உற்பத்தியாளர்களே சொல்கிறார்கள்; பூமிக்குள் உறங்கிக் கிடந்த தண்ணீரை கண்ணாடிப் பாட்டிலில் நிரப்பி விற்கும் கம்பெனிகள் தங்கள் விருப்பப்படி விலை எண்களை எழுதுகின்றன; தங்கமும் வெள்ளியும் தங்கள் தனி மொழியில் நாள்தோறும் உயர்கின்றன. ஆனால் ஒரு ஏழை விவசாயியின் மாட்டின் உடம்பில் ஒரு இரவெங்கும் உருவான அந்த வெண்மைக்கு அமிர்தத்திற்கு மட்டும், அதன் விலையைச் சொல்ல உரிமம் சொல்ல உற்பத்தியாளனுக்கு உரிமை இல்லை.
சின்னக்கண்ணுவின் வீட்டில் பத்து மாடுகள் இருந்தாலும், அந்த வருமானம் பத்து உயிர்களைக் கொண்ட குடும்பத்தின் பசியோடு போட்டி போட்டு ஓடிக் கொண்டிருந்தது.
வெகு சில நேரங்களில் பசியே வென்றுவிடும். மாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு நோய் வந்தாலே வீட்டில் உள்ள பாத்திரங்கள் கூட சத்தமில்லாமல் நடுங்கும். யாராவது உடம்பு சரியில்லாமல் போனால் கடன் வாங்கும் கை, வீட்டின் கதவுக்கு முன்பே காத்திருக்கும். அவர்கள் வாழ்வு தொடர் லாபம் என்ற வார்த்தையை அறியாது; நட்டம் வராமல் பிழைத்தால் அதையே திருவிழாவாகக் கொண்டாடும் வகை.
அன்று எல்லா கிராமங்களிலிருந்தும் பால் உற்பத்தியாளர்கள் தங்கள் கேன்களுடன் நகரின் மத்தியப் பகுதியான நால்ரோடு சந்திப்பில் வந்து கூடியிருந்தார்கள். நூற்றுக்கணக்கான பித்தளை தவளைகளும், அலுமினியக் கேன்களும் அங்கே வரிசை கட்டி நின்று கொண்டிருந்தன. தொலைவிலிருந்து பார்த்தால் அது பசுக்கள் தங்கள் தோல்களை எடுத்து விட்டு நகரமெங்கும் வந்து காத்திருக்கிறதுபோல இருந்தது.
“பால் விலையை உயர்த்து!” என்ற முழக்கங்கள் காற்றில் மோதின. அந்த குரலில் பசியின் கரகரப்பு, கடனின் அவமானம், உழைப்பின் வெட்கம், முற்றுகையிடப்பட்ட மரியாதையின் கடைசி உயிர் சத்தம் ஆக்ரோஷமாய் வெளிப்பட்டது.
யாரோ ஒருவர் திடீரென்று ஒரு கேனைத் தூக்கினார். இன்னொருவர் சாலையின் நடுவில் நின்றார். சில விநாடிகள் உலகம் மூச்சை நிறுத்தியது. பிறகு கேன்கள் கவிழ்ந்தன.
பால் தரையில் கொட்டியது.
அது சும்மா கொட்டவில்லை; தார்ச் சாலையின் கருப்பு முதுகில் வெள்ளை நதியாய் பாய்ந்தது. சாலை தன் நீண்ட கால தாகத்தை அப்போது தான் தீர்த்தது போல சுவையான பாலைக் குடித்துக் கொண்டது. சில பெண்கள் அழுதனர். பல ஆண்கள், மாடு மேய்ப்பவர்கள் ஓங்கி கத்தினர். சிலர் ஓசை நயத்துடன் ஓங்கி முழக்கமிட்டனர்.
காவல்துறையினர் வந்தனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சின்னக்கண்ணுவின் பக்கத்தில் நின்ற நண்பன், கண்களில் இரத்த நிறத்துடன், “கொட்டுங்க!” என்று கத்தினான்.
சின்னக்கண்ணு தன் கேனைப் பார்த்தார். அந்தப் பாலில் மாட்டின் உடல் வெப்பம் இன்னமும் இருந்தது; தன் மனைவியின் முதுகுவலியும் இருந்தது; மகன்களின் கடனும் இருந்தது; மருமகள்களின் உறக்கமின்மையும் இருந்தது. ஒரு நொடிக்கு அவர் தயங்கினார்.
அந்த நொடி அவருடைய வாழ்நாளையே விட நீண்டது. பிறகு, அவர் கேனை மெதுவாகத் தலைகீழாக்கினார்.
அவருடைய உழைப்பின் வெள்ளைத் தன்மை சாலையில் கலந்தது.
அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, மற்ற விவசாயிகளோடு சேர்த்து ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டார்.
மனிதர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்ட மண்டபங்கள், இந்த நாட்டில் பல சமயங்களில் துயரத்தை அடைக்கவே பயன்படுத்தப் படுகின்றன.
மண்டபத்தில் தலைவர்கள் உரையாற்றினர். கோபம், ஒற்றுமை, போராட்டம், உரிமை — அந்த வார்த்தைகள் மேலே திருமண மண்டபத்தில் தொங்கிக் கொண்டிருந்த அலங்கார மலர்களைப் போல கோர்க்கப்பட்டு இருந்தன: வாசனை இருந்தது, ஆனால் வாடி இருந்தது.
மதிய உணவாக காவல்துறையினர் கொடுத்த தயிர் சாதத்தில் தயிரைவிடத் தண்ணீரே அதிகம். பாலின் மணத்தில் உலகத்தை அளக்கும் மனிதர்களுக்கு, அது வெறும் மோசமான உணவல்ல; பால் உற்பத்தியாளர்களை மாடு மேய்ப்பவர்கள் என்று கிண்டலடித்து மாட்டுக்காரர்கள் என்று அவமான படுத்துவதற்காக செய்யப்பட்ட காக்கிச்சட்டைகளின் வன்மம்!
மாலை ஏழு மணிக்கு விடுதலை செய்யப்பட்டபோது, சின்னக்கண்ணுவின் தொண்டை பாலைவனமாகி இருந்தது. அருகிலிருந்த கடையில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் கேட்டார். “இருபது ரூபா,” என்றான் கடைக்காரன் கண் சிமிட்டாமல்…
சின்னக்கண்ணு அந்த நிமிடத்தில் ஒரு உலகச் சட்டத்தைப் புரிந்துகொண்டார்: மனித உழைப்பை, மாட்டின் உடம்பை ஊடறுத்து வரும் பாலை ஒரு சில ரூபாய்கள் உயர்த்தி வாங்க இந்த உலகம் தயங்கும்; ஆனால் பூமியிலிருந்து அப்படியே எடுத்துத் பிளாஸ்டிக்கில் அடைத்த தண்ணீருக்கு இருபது ரூபாயைச் சத்தமில்லாமல் தரும். அவர் அந்தத் தண்ணீரை வாங்கிக் குடித்தார். அதன் சுவை தாகத்தைத் தீர்க்கவில்லை; சிந்தனையை சித்திரவதை செய்தது.
வீடு திரும்பியபின், தொலைக்காட்சியில் விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. சிலர் அரசாங்கத்துக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும், சிலர் எதற்காக பேசுகிறார்கள் என்பதையே அறியாதவாறும் பேசினார்கள். ஆனால் பாலைக் கொட்டிய விவசாயிகளைச் சாடுவதில் மட்டும் அவர்கள் அனைவருக்கும் ஒரு கூட்டுக் குரல் இருந்தது.
“தெருவில பால் கொட்டுறவங்க மனிதரா?” என்று ஒருவர் கத்தினார்.
அந்த வாக்கியம் சின்னக்கண்ணுவின் நெஞ்சில் முள் போல நின்றது. அவர் உண்மையிலேயே அந்தக் கேள்வியைத் தானும் கேட்டுக் கொண்டிருந்தார். “பாலைச் சாலையில கொட்டலாமா?” என்று. ஏனெனில் பால் அவருக்கு பொருள் மட்டுமல்ல, அவரைப் பொறுத்தவரையில் அது ஒரு பாவமும் கூட! வீணாக்கக் கூடாத ஒன்றைத் தானே தன் கையால் வீணாக்கியிருந்தார். ஆனால் அடுத்த நொடி மற்றொரு கேள்வி வந்தது: “மாதக்கணக்கா கேட்டுட்டும், இரண்டு ரூபா ஐந்து ரூபாய் கூட லிட்டருக்கு உயர்த்தக் கூடாதா?” இந்தக் கேள்வி, முதல் கேள்வியை படிப்படியாக பிடுங்கி செரித்து விட்டது
அந்த இரவில் அவர் சாப்பிட்டு படுத்தார். உறக்கம் வரவில்லை. தண்ணீர் பாட்டிலின் விலையும், பாலின் விலையும் தன் தலையணையின் இருபுறமும் அமர்ந்து சண்டையிட்டதை கவனித்துக் கொண்டே இருந்தார்
தொலைக்காட்சியில் யாரோ ஒருவர் சொன்னது ஞாபகம் வந்தது: பூமியிலிருந்து எடுத்து, பாட்டிலில் நிரப்பி, சில பெயர்களை ஒட்டி, அதே தண்ணீரை பதினைந்து, இருபது, ஐம்பது, நூறு ரூபாய்க்கு விற்கிறார்கள்; யாரும் கேட்கவில்லை. ஆனால் மாட்டுக்காரர்களின் உழைப்பிலிருந்து மாட்டின் ரத்தத்தில் இருந்து உருவாகும் பாலை விற்கும் விவசாயி மட்டும், தன் விலையைச் சொல்லக் கூடாதா?
இந்தக் கேள்விகள் இரவு முழுவதும் அவருடைய படுக்கையில் அவரோடு புரண்டு கொண்டிருந்தன.
மறுநாள் காலையில் வேலையெல்லாம் முடிந்து, மகன்கள் எருமைகளை ஓட்டிச் சென்றனர். சின்னக்கண்ணு மூன்று பசுமாடுகளை மட்டும் தனியாக மேய்க்க எடுத்துச் சென்றார். மதியம் சூரியன் வானத்தில் இருந்து கீழே இறங்கி, நிலத்தின் மேல் செவியை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தது போல வெப்பம் நிலத்தில் படர்ந்திருந்தது. மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறிய ஏரிக்கருகே ஒரு குட்டி ஆலமரம் இருந்தது. அடந்து பரந்து விரிந்து கிடந்தது. சின்னக்கண்ணு அதன் கீழ் அமர்ந்தார்.
கொண்டு வந்த சாப்பாடு, சிறிது தண்ணீர் மூட்டையை வைத்துவிட்டு அமர்ந்தார். மாடுகள் புல் மேய்ந்தன. காற்று நின்றிருந்தது. உலகம் தன் மூச்சை அடக்கியது. சின்னக் கண்ணுவுக்கு ஏரியின் குளிர்ச்சியால் மெதுவாகத் தூக்கம் வந்தது.
அந்தத் தூக்கத்தில் இருந்து அவர் வழக்கம்போல காலையில் எழுந்தார்.
தவிடு புண்ணாக்கு கலக்குவதற்கு நீரை எடுக்க கிணற்றின் கயிறை இழுத்தார். கிணற்றிலிருந்து தண்ணீர் வரவில்லை ஆனால் பால் சுரந்து வந்தது. மாட்டின் மடியைத் தொட்டார். இழுத்தார். பால் வரவில்லை.
தண்ணீர் கொட்டியது.
சர் சர் சர் என்று, வெள்ளை வரவேண்டிய இடத்தில் வெளிச்சமான தண்ணீர் பீறிட்டது.
“அடடா!” என்று சின்னக்கண்ணு அச்சத்தோடும் மகிழ்ச்சியோடும் பார்த்தார். மாட்டின் மடியிலிருந்து தண்ணீர், கிணற்றிலிருந்து பால் — இந்த உலகம் தன் இடங்களை மாற்றிக் கொண்டது. அவர் மீண்டும் கிணற்றடிக்குப் போய் வாளியை இறக்கினார். மேலே வந்த வாளியில் தண்ணீர் இல்லை; நுரை கொண்ட புனித பசுகளீன் பால் இருந்தது. இன்னொரு முறை இறக்கினார். மீண்டும் பால். இன்னொரு முறை. மீண்டும் பால். கிணறு முழுவதும் பால் நிரம்பியிருந்தது.
மகிழ்ச்சி கொண்டு பால் கேன்களை எடுத்தார். வாளிகளை எடுத்தார். வாரி வாரி எடுத்தார். கிணறு பால் கொடுத்துக் கொண்டே இருந்தது. அவர் குடும்பம் ஓடி வந்தது. மகன்கள் வாய்பிளந்து நின்றனர். மனைவி நெற்றியில் கை வைத்துக் கொண்டார். மருமகள்கள் சிரித்தார்கள்; குழந்தைகள் கிணற்றுக்குள் சந்திரன் விழுந்து விட்டது போலப் பார்த்தனர்.
அடுத்த சில நாட்களில் சின்னக்கண்ணுவின் வீட்டில் பால் கேன்கள் மலைபோல அடுக்கப்பட்டன. கிராமம் முழுக்க செய்தி பரவியது. சுற்றுப் புற ஊர்களிலிருந்து வேன்கள் வந்தன. “சின்னக்கண்ணுவின் கிணற்றில பால் ஊறுது,” என்று மக்கள் பக்தி கதையைப் போலச் பரப்பினார்கள். யாரோ அது கடவுளின் அருள் என்றார். யாரோ குலதெய்வம் விழித்துள்ளது என்றார். யாரோ அந்தக் கிணற்றில் ஒருகாலத்தில் மூழ்கிய பசுவின் ஆவி இப்போது வரம் தருகிறது என்றார். அந்தப் பகுதியில் ஒரு விஷயத்துக்குத் தெளிவான காரணம் இல்லாவிட்டால் மக்கள் உடனே அதை அற்புதம் என்று ஏற்றுக் கொள்வார்கள்; அற்புதங்களோ, தங்கள் விளக்கத்திற்காக ஒருபோதும் அவசரப்படுவதில்லை.
சின்னக்கண்ணு அந்தப் பாலை வணிகம் செய்தார். முதலில் அருகிலுள்ள கடைகளுக்கு. பிறகு ஊருக்கு. அதன் பிறகு மாவட்டத்துக்கு. அவர் ஒரு பம்ப் செட் வாங்கினார். கிணற்றில் இறக்கினார். பால் குழாய்களில் பாய்ந்து தொட்டிகளில் நிரம்பியது. கம்பெனிகள் வந்தன. ஒப்பந்தங்கள் வந்தன. வேன்கள், லாரிகள், கணக்குப் பதிவாளர்கள், புதிய சட்டைகள், வங்கி மேலாளர்கள், சிரித்துக் கொண்டே கடிக்கும் முகவர்கள் — அனைவரும் வந்தனர்.
சில மாதங்களில் சின்னக் கண்ணுவின் வீட்டில் பணம் குவிந்தது. அவரது மனைவியின் கழுத்தில் புதிய நகைகள் ஒலித்தன. மகன்களுக்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் வந்தன. மருமகள்கள் திடீரென்று மெதுவாகப் பேசத் தொடங்கினர். குழந்தைகளுக்குப் புதிய பணக்கார பள்ளிகள் பேசப்பட்டன. மாடுகளுக்கு கூட வசதியான கொட்டகை கட்டப்பட்டது. ஆனால் கிணற்றில் இருந்து பால் வரும் நாள்முதல், மாடுகளின் கண்களில் ஒரு வகை நிராகரிக்கப்பட்ட அமைதி தோன்றியது. “எங்களைத் தாண்டியும் உங்களுக்குப் பால் கிடைக்கிறதே,” என்று அவை சொல்லாமல் பார்த்தன.
சின்னக்கண்ணு இனி மேய்ச்சலுக்குச் செல்ல வேண்டி இருக்கவில்லை. அவருக்குப் புதிய கார் வாங்கப்பட்டது. ஓட்டுநரும் நியமிக்கப்பட்டார்.
பால் சின்னக்கண்ணுவின் கிணற்றில் மட்டும்தான் சுரந்தது. மற்றவர்களுடைய கிணறுகளில் சுரக்கவில்லை. பல கார்ப்பரேட் கம்பெனிகள் அவரிடம் ஒப்பந்தம் போட முயன்றன.
அவர் அதில் ஒரு கம்பெனிக்கு டிஜிட்டல் நகரத்தில் பேச்சுவார்த்தை நடத்த வந்தார். ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் அவர் தங்குவதற்கு ஏற்பாடு அந்த பெருமுதலாளீய நிறுவனம் செய்து இருந்தது. அவருக்காக போட்ட அறையின் ஒரு இரவுக் கட்டணம் அவர் வாழ்நாளில் ஒரே சமயத்தில் கையில் வைத்ததைக் காட்டிலும் அதிகம். அறையின் குளிர், கிராமத்து அதிகாலையைவிட கடுமையாக இருந்தது. மென்மையான படுக்கை, கண்ணாடிகள், ஆங்கிலத்தில் சிரிக்கும் ரிசப்ஷன், மெதுவான மேல்நாட்டு இசை… அவை அனைத்தும் அவருக்கு மனிதர்கள் வசிப்பதற்காக அல்ல, பணம் தூங்குவதற்காகப் படைக்கப்பட்ட இடம் போலத் தோன்றின.
அந்தக் கம்பெனியின் மனிதர்கள் அவரை மகிழ்விக்க இளம் பெண்களை அனுப்பினார்கள். அவர்கள் மெதுவாகச் சிரித்து, நாற்காலியை அணுகி, மரியாதையோடு தலையை தாழ்த்தி, பழக்கப்பட்ட தொழில்காரிகளாய் அவரைச் சுற்றிக் கொண்டார்கள். சின்னக்கண்ணுவுக்கு உடம்பு முழுக்க வெட்கக்காய்ச்சல் ஏறியது. அவர் திடீரென்று எழுந்து, “போங்க! எனக்கிதெல்லாம் வேண்டாம்!” என்று கத்தினார். திமிரினார். காலால் எட்டினார். கைகளால் தள்ளினார்.
அப்பொழுது சட்டென்று பாத்திரங்கள் உருளும் சத்தம் பலமாய் கேட்டது.
அவர் கண் திறந்தார். அய்யகோ>..
அவர் இன்னும் அந்த குட்டி ஆலமரத்தின் கீழேதான் படுத்திருந்தார்.
அவரது மதியச் சாப்பாட்டு பாத்திரம் ஒரு பக்கம் கவிழ்ந்து உணவு கிடந்தது. தண்ணீர் கொண்டுச் சென்ற பாட்டில் உருண்டு மண்ணில் சிந்தியிருந்தது. மாடுகள் அங்கேயே புல் மேய்ந்துகொண்டிருந்தன.
கிணற்றிலிருந்து பால் வரவில்லை. மாட்டின் மடியிலிருந்து தண்ணீர் வரவில்லை. புதிய கார் இல்லை. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் இல்லை. பணக்குவியல் இல்லை. அவர் எட்டி உதைத்தது கார்ப்பரேட் உலகத்தை அல்ல; தன் பசியையும் தன் குடிநீரையும் தான்!
சின்னக்கண்ணு எழுந்து அமர்ந்தார். தலையில் கையை வைத்து துயரத்துடன் பார்த்தார் . உலகம் மீண்டும் பழைய வடிவத்தில் தான் இருந்தது. ஆலமரம் காற்றில் அசைந்தது. தொலைவில் ஒரு பசு மாட்டின் மணி ஒலித்தது. அவர் நீண்ட நேரம் எதுவும் பேசாமல் இருந்தார்.
பிறகு மெதுவாக சிந்திய தண்ணீரைப் பார்த்தார்.
அவருக்கு புரிந்தது. இந்த நாட்டில் சிலருக்கு கிணற்றில் பால் ஊறும் கனவு வருவது தவறல்ல; ஆனால் விழித்தபோது கூட பால் விலையைத் தீர்மானிக்க முடியாத வாழ்க்கையே பெரிய கொடுமை!
அந்த மாலை கிராமம் அவரை அதே பழைய வறுமையோடு வரவேற்றது. .
கிணற்றை எட்டிப் பார்த்தார். அதில் பால் இல்லை. தண்ணீர் கண்ணாடியாய் அவர் முகத்தை பிரதிபலித்தது. ஏனோ தன்னிச்சையாய் ராட்டினம் சுழன்று வாளி கிணற்றில் விழுந்தது. அவர் முகம் அலை அலையாகி நசிந்தது.
இரவு படுக்கைக்கு போகும் முன் அவர் வானத்தை நோக்கிப் பார்த்தார். அங்கிருந்த விண்மீன்கள் எல்லாம் வெறும் வெள்ளை வெளிச்ச புள்ளிகள் அல்ல ; இன்னும் விலை நிர்ணயிக்கப்படாத ஆயிரம் லிட்டர் பால் துளிகளாக அவருக்கு தெரிந்தது!
வழக்கம்போல் காலையில் மடியில் கை வைத்து அவர் கறந்த முதல் பாலை மண்ணில் அனிச்சையாக பீச்சி அடித்தார். பூமித்தாய் அதைக் குடித்து அவர் உழைப்பிற்கு நன்றி சொன்னது!
மனிதர்கள் …?
- கி.நடராசன்