பெரும் சோகத்தை தின்று செரித்த வீதியில் சமீப நாட்களாகவே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.
யார் என்ன சொல்லி என்ன செய்ய முடியும். நடந்தது நடந்து விட்டது. ஆனாலும் அதிலிருந்து மீள்வது அத்தனை சுலபம் இல்லை. உள்ளும் புறமும் கொண்ட கோபத்துக்கு மருந்து இல்லை.
தீர்வென்றால்... அரசாங்கம்.. நாய் வண்டி கொண்டு வந்து பிடித்து போக வேண்டும். எல்லா நாயையும் கொன்று கூறு போட யாரும் சொல்லவில்லை. அதே நேரம் அவைகளை கட்டுக்குள் வைக்க வேண்டியதும் நம் கடமைதானே. பிள்ளைங்க கடைக்கு போனா தொரத்துது. பெரியவங்க வயசானவங்க வித்தியாசம்லாம் இல்ல. தோன்றிய போது துரத்தும் நாய்களின் போக்கு பயம் தரவே செய்கிறது. வீட்டு நாய் வீதி நாய் எல்லாம் தாண்டி எங்கும் எப்போதும் ஒரு தெரு முக்கில் நாலைந்து நாய்கள் கூடி அமர்ந்து... படுத்து... உறங்கி... எழுந்து நடந்து... அதன் வேலையே அதுதானே. சமீப காலமாக ஒரு மிரட்டல் தொனி அதன் உடல் மொழியில் தெரிகிறதா அல்லது அப்படி தெரிகிறதா.
ஒரு நாய்... ஒருவனைப் பார்த்து மெல்ல எழுந்து விட்டால் அடுத்தடுத்து நாய்களும் அப்படியே கூட்டு சேர்வது... கதி கலங்க செய்கிறது. எத்தனை தைரியமாக எதிர்த்து நின்று மிரட்டி விரட்டினாலும்.. ரெண்டு மூன்று சேர்ந்து விட்டால்.. ஒரு வழியும் இல்லை. கத்த தான் வேண்டும். அல்லது ஓட்டமும் நடையுமாக பின்னோக்கிய பதுங்கல் தான்.
வண்டிகளை துரத்தி போவது... பழி வாங்குவது போல. தனி ஒருவனை முறைத்து பார்ப்பது... தீனி தின்பது போல. சிறு பிள்ளைகளை கண்டு விட்டால்.. கற்கண்டு கண்ட எறும்பு கூட்டம் சடசடவென நாயாக உருவெடுப்பது போல.
எத்தனை முறை தான் கார்ப்பரேஷன்க்கு போன் பண்றது. போன வாரம் வந்தாங்க. பேருக்கு ரெண்டு நாய புடிச்சிட்டு போயி ஆப்ரேசன் பண்ணி கொண்டு வந்து மறுபடியும் விட்டுட்டு போய்ட்டாங்க.
அதுக்கு... அடிச்சு கொல்ல சொல்றீங்களா...
ஐயோ அப்படி யாருங்க சொன்னா...
ஒரு ஊருக்குள்ள எட்டு வீதி இருந்தா எட்டு வீதிலயும் வீதிக்கு தலா ஆறு நாய்ங்க இருக்கு. அப்பிடி இப்பிடினு சோறு... ஊர்மக்கள்தான் போடறாங்க. ஆனா அதே நேரம்... நாய்ங்களோட திடீர் தாக்குதல் அதோட சொந்தக்காரங்க ஓநாய ஞாபகப் படுத்துதே. மனுஷனோட பழகி நன்றியுள்ள ஜீவனா மாறிட்டாலும்... ஆதி சகவாசம் ஓநாய் புத்தி முழுசும் இல்லாமலா போச்சு.
வீதிக்குள் விவாதங்கள் குறையவில்லை. தீர்வு தான் இன்னும் கிடைத்தபாடில்லை.
கையில் தடியோடு பால் வாங்க போகும் மிலிட்டரி தாத்தா எதற்கும் ரெடியாகத்தான் போவார். தடி இருக்கும்போது கொஞ்சம் தள்ளி நின்று குரைப்பது அதன் சூட்சுமம். நாய்முன்னாடி ஓடினா அதுக்கு புடிக்காது. சரி. அட நடந்தாவே ஒரு மாதிரி பாக்குதே. அதுவும்... ஒத்தை ஆளா நடந்துட்டா... முன்னெல்லாம் மால மசங்கன நேரத்துலதான்.. இப்போ பகல்லகூட பாய ரெடியா பாக்குதுங்க.
காதில் கேட்க அற்புத சொற்கள் அங்கே இல்லை. கண்ணில் பார்க்க ஆசை முகம் அங்கே இல்லை. அன்பு செய்ய தோன்றவில்லை. அழுத கண்களில் ஆயுள் சோகம். கையில் கிரிக்கெட் பேட்டோடு செல்லும் சுகுமார்க்கு ஆத்திரம் கூடிக்கொண்டேதான் இருக்கிறது. அவனைக் காணும் வீதி கண்களில் பரிதாபமும்... கிசுகிசுக்கும் காதுகளில் பச்சாதாபமும் தீரவில்லை. இப்போதெல்லாம் சுகுமாரைக் கண்டதும் வீதி நாய்கள் ஓடி ஒளிந்து கொள்கின்றன.
கருப்பு நாயைப் பார்த்து நீ தான என்று முனங்கிக்கொண்டே அடிக்க ஓங்கும் போதே அது ஓடி கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வீட்டுக்கு பின்னால் மறைந்தது. வெள்ளை நாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிக்கடியே மறைந்து காணாமல் போனது. செவலை நாய் எகிறிக்கொண்டு வருவது போல வந்தாலும்.. மாயாஜாலம் போட்டது போல ஓடி ஒளிந்து கொண்டது. முறைத்தபடியே தூரத்தில் நின்ற கருவெள்ளை நாயை நாக்கை கடித்து மிரட்டினான். அது பார்த்துக்கொண்டே பார்க்காமல் குனிய கற்றிருக்கிறது.
சொறி நாய் ஒன்று நடக்க முடியாமல் ஒரு மூலையில் கிடந்தது. உடம்பெல்லாம் திட்டு திட்டாய் காயத்தின் கிறுக்கல்கள். பசி கொண்ட நாய் ஒன்று சுகுமாரை சட்டை செய்யாமல் சாக்கடையோரம் கிடந்த குப்பைகளை கிளறிக் கொண்டிருந்தது.
கையில் பேட்டோடு வெறிகொண்டு மூச்சிரைக்க முகம் நெளித்து நின்ற சுகுமாரைப் பார்த்து... என்ன சுகு இது... கொஞ்சம் அமைதியா உக்காரு என்று சொன்ன பெரியவரை கண்கள் கலங்க ஆழமாய் பார்த்தான். அவருக்கு என்ன சொல்வதென்றே மறந்து போனது. அவன் பார்வை அப்படியே சுழன்று சூனியத்தில் விழுந்து எழுகையில் முன்னே கிடந்த சொறி நாய் மீது தீரா பகையாய் குவிந்தது.
ஆங்காங்கே நின்ற வீதி மனிதர்கள் அப்படி அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மதிய வெயில் முதுகில் வியர்வை கிறுக்கிக் கொண்டிருந்தது. சில கண்களில் ஐயோ பாவம். சில கண்களில் மிரட்சி. சில கண்களில் ஸ்தம்பித்தல்.
சுணங்கிக் கிடந்த சொறி நாய் அருகே திடும்மென வேகமாய் சென்றவன் அடித்து துவம்சம் செய்ய பேட்டை தூக்கினான். பார்த்துக்கொண்டிருந்த வீதியர்கள் ஐயோ என சத்தம் வராமல் கத்தின. அவன் உடல் கொந்தளித்தது. அந்த நாய் ஈனக்குரலில் சுவரோரம் ஒடுங்கி கதறியது. வெறி கொண்ட நாய் போலவே அவன் வாய் விரிந்திருந்தது. ஆ ஆ ஆவ் என சத்தமிட்டபடியே அடிக்க அடிக்க ஓங்கி ஓங்கி லாவகம் பார்த்தபடியே அங்கும் இங்கும் அசைந்த அதே நேரம் அவன் பின்னால் வந்து விட்ட செவலை நாயை... பார்த்து.... பேட்டை வேகமாய் திருப்பினான். சுத்தி சுத்தி அங்கும் இங்கும் பார்க்கும் அவன் அனிச்சை பயங்கரமாக இருந்தது.
உன்ன... உன்ன.. அடிச்சே கொன்னு நசுக்கி போடல... பாரு...ஹ்ம்ம்.... என்று பெரு மூச்சுக்கும் பெரும் பேச்சுக்கும் இடையே அவன் வாய்மொழி எச்சில் ஒழுக்கியது.
கோபம் முழுக்க வெற்றுக் கத்தலாய் வடிய வடிய அப்படியே ஓங்கிய பேட்டை கீழே ஊன்றுகோலாய் நிறுத்தி விட்டு தரையைப் பார்த்துக்கொண்டே நின்றான். ஆங்காங்கே ஒளிந்திருந்த நாய்கள் மெல்ல எட்டிப் பார்த்தன. காலுக்கடியே ஒடுங்கி கிடந்த சொறி நாய் மெல்ல நகர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டே அந்தப் பக்கம் போனது. அதன் கண்களில் பசியை தாண்டிய பயம். சடுதியில் பூமியில் இருந்து பொத்துக்கொண்டு வந்த களேபரம் அப்படியே சடசடவென ஒடுங்கியது. கசகசவென கத்திய நாய்கள் அப்படி அப்படியே சத்தம் குறைத்து முனங்கின. ஒன்றிரண்டு குரைப்பு வந்து வந்து அடங்கிக் கொண்டிருந்தது.
தெரு முக்கு அப்படியே உறைந்தது. பின்மதிய வெயிலின் விஷம் முறிந்தது போல... ஒரு நிதானம். முக்கு கடையையே வெறிக்கப் பார்த்தான்.
இந்த எட்டு பத்து நாளாவே இப்பிடி வர்றதும் கத்தறதும் போறதுமா தான் இருக்கான். இன்னைக்கு தான் கடையை இப்பிடி பாக்கறான் என்று யோசனை கடைக்காரனுக்கு. அவன் மேல் பரிதாபம் இருந்தது. சுகுமார் மேல் யாருக்கு தான் பரிதாபம் இல்லை.
கடை முன்னால் நின்று ஆழமாய் பார்த்தவன்... ஒரு பாக்கெட் வறுக்கி வாங்கி திரும்பினான். பிரித்தும் பிரிக்காமல் அருகே இருந்த காலி கட்டட சுவற்றில் வீசி அடித்தான். கடைக்காரனுக்கு திக்கென்றிருந்தது. சுகுமாரின் உடல் மொழியில் ஆற்றாமை. கோப குமுறல். பேட்டை தரையில் போட்டு அடித்தான். ஆஆவென கத்திகொண்டே குமுறினான். எலும்பும் தோலுமாய் மடி தொங்கும் செவலை வெள்ளை நாய் அவன் செய்கையில் சுவரோரம் நசுங்கி ஒடுங்கியது. அதன் கண்களில் ஒளி மறைக்கும் பழுப்பு. பலமற்ற கால்களில் அனிச்சை மடங்குதல்.
சற்று தள்ளி சுவர் சந்தில் ஒரு சாக்குப்பை மேலே ஊர்ந்து கொண்டிருந்த ரெண்டு குட்டி நாய்கள் கீச் கீச் என கத்துவதை உற்றுப் பார்த்தான். பொங்கிய கண்ணீர் கண்களை மறைத்தது.
ஆழ்ந்த மூச்சிழுத்தபடியே பேட்டை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தவனுக்கு போன மாசம் ஆட்டோ கவிழ்ந்த காட்சி கண்முன்னே நிழலாடியது. சொந்த ஆட்டோவில் சொந்த புள்ளையை வைத்துக்கொண்டு போகையில் குறுக்கே வந்த வீதி நாய்.. ஆட்டோ கவிழ்ந்து புள்ள நசுங்கி செத்தது... கண் முன்னே நொறுங்கி விழுந்தது. பிள்ளையின் கடைசிக் கதறல்கூட நாய் குட்டியின் ஈனக்குரலாக தானே கேட்டது.
அஞ்சு வயசு புள்ள மேல அவ்ளோ பெரிய ஆட்டோ விழுந்தா எது மிஞ்சும் உயிர் மிஞ்ச.
மூச்சிழுத்துக் கொண்டான். இந்த நாய்ங்களல்லாம் அடிச்சே கொல்ல போறேன் - வாய் குழறிய அவன் புலம்பலில் அவனுக்கான சமாதானம்.
அதே நேரம் ஒளிந்திருந்த நாய்கள் அவன் நகர்ந்து விட்டதை உணர்ந்தபடியே ஓடோடி வந்து நொறுங்கிக் கிடந்த வறுக்கியை தேடித் தேடி தின்ன தொடங்கியிருந்தன. நடை கம்மிய சொறி நாயும் தனக்கான வறுக்கியை கூட்டத்தோடு கூட்டமாய் தேடிக் கடித்துக் கொண்டிருந்தது.
தெருவில்... வெறுமை சூழ்ந்து வெறுங்கூடாய் நடந்து கொண்டிருந்தவன் மீது ரத்தம் தோய்ந்த வறுக்கி மழை.
- கவிஜி