துபாய்க்கு செல்ல வேண்டி அப்துர் ரஹ்மான், தான் எடுத்து வந்த வாடகைக் காரில் நெடுசாலையிலிருந்துப் பிரிந்து மெதுமெதுவாக விமான நிலையத்தினுள் நுழைந்துக் கொண்டிருந்தான். தன் பூந்தோரணங்களைத் தொங்கவிட்டபடி காண்போரை களிப்படையச் செய்யும் கொன்றை மரங்களின் கொஞ்சும் அழகோடு இளங்காலை வெய்யில் வழியெங்கும் இன்முகத்தோடுத் தகதகத்தது.
மறுசீரமைப்பு செய்யப்பட்ட விமான நிலையத்தின் முகப்பின் மையபகுதியை திருச்சிராப்பள்ளி எனும் ஊர்ப்பெயருக்கேற்றவாறு, கோவில் கோபுரத்தோடு மிகுந்த கலைநயத்தோடு வடிவமைத்திருந்தனர்.
விதானத்தின் முன்பக்க மேற்கூரை, மஞ்சள், காவி, சிவப்பு, கருஞ்சிவப்பு, அரக்கு என்று ஒருங்கிணைந்த வர்ணங்களோடு உறவுக் கதைப் பேசிக்கொண்டிருக்க, தன் வெளிச்சப் புன்னகையோடு, வானில் உயர்ந்துக் கொண்டிருந்தது சூரியன்.
அவனைக் கூட்டி வந்த செல்வம் அண்ணன், வழமைத் தவறாமல் தனக்கே உரிய சிநேக பாவனையோடு சொந்த அண்ணன் போல வழியனுப்பினார்.
வாயிலில் நின்ற வட இந்திய காவலாளி, கடவு மற்றும் பயணச் சீட்டுகளின் விபரங்களை சரிபார்த்ததும், மீண்டும் ஒருமுறைக் கூர்ந்து நோக்கிவிட்டு, திருப்தியடைந்தவராய் அவனை உள்ளே செல்ல அனுமதித்தார்.
பாதையின் ஒரு புறத்தில் நுண் வேலைப்பாடுகளோடு உருவாக்கப்பட்ட கடவுளர் சிலைகளின் அமைதி அணிவகுப்பு என்றால், இன்னொரு புறம் அப்போதுதான் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது போன்று காட்சியளித்த வண்ணமையமான சின்னஞ்சிறியக் கோயிலொன்று நீண்டதொரு கொலுக் கூடம் போல் காட்சியளித்தது. எல்லாவற்றையும் அவதானித்தபடி பயணிகளுக்கான அத்தனை சோதனைகளும் முடிந்து போர்டிங் பக்கம் சென்றான்.
திருச்சியிலிருந்து துபாய் செல்ல இரண்டு விமான சேவைகள் உண்டு. ஒன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மற்றொன்று ஸ்ரீலங்கன் ஏர்வேஸ்! அப்துர் ரஹ்மான் இம்முறை லங்காவில்தான் செல்கிறான். அது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸைப் போல் நேரடி சேவையல்ல! திருச்சியிலிருந்து கொழும்பு சென்று, அங்கிருந்து வேறொரு விமானத்தில் துபாய்க்கு பயணம் மேற்கொள்ள வேண்டும்!
இப்போது மணி ஏழு ஐம்பதுதான் ஆகிறது. புறப்பாட்டு நேரம் பத்து பதினைந்து என்பதால் அவனுக்கு அங்கே நிறைவே நேரம் கிடைத்தது. குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தான் நல்லபடியாக விமான நிலையத்தையடைந்த தகவலை அலைப்பேசி வழியாக ஒவ்வருவருக்கும் தெரிவிக்க ஆரம்பித்தான்.
இயல்பிலேயே அளவாய் பேசும் அவனுக்கு ஒன்றிரெண்டு பேரிடம் இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு மேலாக அன்றுப் பேச்சு நீண்டது. காத்திருப்புக் கூடத்தில் அவ்வப்போது பார்வையை சுழல விட்டான். எப்போதாவது தெரிந்த முகங்கள் தென்படுவதுண்டு. பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு போலில்லை. இப்போதெல்லாம் நிறைய பேரை கணவன் / மனைவி, குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் பயணிப்பதை நிறையவேப் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் வெளிநாட்டு வேலையென்றாலே அடித்தட்டு பணியாளர்களே அதிகம் செல்வார்கள். ஐந்தாண்டிற்கு ஒருமுறை ஊருக்கு பெருத்த கனத்துடன் வந்து போவார்கள்.
கல்வி நிலையும் பொருளாதாரச் சுதந்திரமும் அந்த பாரத்தையெல்லாம் கணிசமாக குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். பிழைக்கச் செல்லும் இடத்தில் குடும்பத்துடன் வசிக்க முடியாவிட்டாலும், இந்த பணியிலிருப்பவர் என்றில்லை, கட்டுமானப்பணியாளர்களும் கூட வருடத்திற்கு ஒரு முறையாவது இப்போதெல்லாம் தாயகத்திற்கு வந்து செல்ல முடிகிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போலில்லாமல் ஸ்ரீ லங்கன் விமானத்தில் உணவுக் கிடைக்குமென்றாலும் திருச்சி விமான நிலையத்தில் கிடைக்கும் பொங்கல் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதன் நினைவு வரவே அவனுக்கு பசிக்கவும் ஆரம்பித்தது. இத்தனைக்கும் வரும் வழியில் செல்வம் அண்ணனுடன் ஒரு டீயும் சுடச்சுட ஆட்டுக்கால் கேக்கும் அவன் வயிற்றுக்குள் போயிருந்தன.
தன்னியல்பாக ஏதோ உந்தவே, சிறுநீர் கழித்துவிட்டு வரலாமா? என ஒப்பனை அறையை நோக்கிச் செல்லலானான். வழியில் எதேச்சையாக நீல போர்டில் வெள்ளை எழுத்துகளில் 'தொழுகைக் கூடம்' Prayer Hall என்று குறிப்பிடப்பட்டிருந்த ஒரு அறையின் கதவு அவன் கண்களை மகிழ்வித்தது. இந்த இந்திய திருநாட்டில் சமூக நல்லுறவு சார்ந்த அக்கறையோடு பொதுவெளியில் தனக்காகவும் ஒரு இடம் ஒதுக்கப்படுவதைக் கண்டு விளையும் இயல்பானப் பூரிப்பது. அரசாங்கத்தையும், விமான நிலைய நிர்வாகத்தின் அறத்தையும் எண்ணிப் பெருமைப்பட்டான்.
ஒப்பனை அறையில் முகம், கைகளைக் கழுவினான். அங்கு நின்றுக் கொண்டிருந்த துப்புரவு சேவை செய்பவர், "இந்தாங்க சார்!" என்றபடி டிஷ்யூ பேப்பரை கனிவோடு நீட்டினார். ஈரத்தை துடைத்து முடித்ததும் அவருக்குக் கொடுக்க பணப்பையில் இருபது அல்லது ஐம்பது ரூபாய் நோட்டைத் தேடினான். நூறு, ஐநூறு என மற்றவையேத் தென்பட்டது. அதிகம் யோசிக்காமல் நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்ததும், அவர் இதழ்கள் பிரகாசமாகி நன்றியை சொரிந்தது.
சிற்றுண்டிக் கடைக்கு வந்தான். ஒரு பொங்கல் முன்னூறு ரூபாய்கள்! ஒரு சிறிய தண்ணீர் போத்தல் நூறு ரூபாய்! இவை போதாதென்று மீண்டும் டீக் குடிக்க எண்ணமெழுந்தது. இந்த 'நஃப்ஸ்' - மனோஇச்சை இருக்கே..! என்று தன்னைத்தானேக் கடிந்தும் கொண்டான். காசை நீட்டியபோது, வாங்கிக்கொண்ட இந்த இளைஞனின் கையை கவனித்தான்... விரல்களில் வளையம், வளையமாய் மூன்று வெள்ளி மோதிரங்கள்! மணிக்கட்டிலும் வெள்ளி ப்ரேஸ்லெட்! பெரும் ஆர்வத்தோடு கழுத்தை நோக்கினான். கருப்புத் தாயத்தில் முருகர் அருள்பாலிக்கும் டாலர் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. இது என்ன மாதிரியானத் தேடல் என்று அவனை நினைத்து அவனுக்கே வியப்பாக இருந்தது.
தெர்மோகோல் உணவுத்தட்டையும், டீயையும், சில்லரையும் பெற்றுக் கொண்டுத் திரும்பியபோது ஒரு இளைஞன் அவனுக்கடுத்தவனாய் நின்றுக் கொண்டிருந்தான். இவனை விட உயரம், பருமன், நிறம் மட்டும் சற்று குறைவு. இவனுக்கு நாற்பது என்றால் அந்த இளைஞனின் வயது இருபத்தைந்து, இருபத்தாறு இருக்கலாம்.
பச்சையும் கறுப்புமாய் கட்டம் போட்ட சட்டைப் போட்டிருந்தான். கருநீலத்தில் ஜீன்ஸ் பேன்ட். ஒரு கையில் அணிந்திருந்த கடிகாரம் தங்க-வெள்ளிப் பூச்சோடு பாந்தமாய் பளபளத்தது. அந்த கடிகாரத்தின் பிராண்டையும் ஆராய்ந்துவிட ஆசைதான். ஆனால் அந்த மைக்ரோ வினாடிகள் அனுமதிக்கவில்லை.
"ஆயுபொவான்!" - ஸ்ரீலங்கன் விமானத்தில் மயில் உடையணிந்த பணிமங்கையர்கள் பயணிகளைகளை வரவேற்கும் நளினமே தனி அழகுதான்! 'ஆயுபொவான்' என்றால் தமிழில் 'வணக்கம்' என்றுதான் அவன் அந்நாள் வரை நினைத்திருந்தான். இருக்கையிலமர்ந்ததும் கூகுளை நாடியபோது 'May you live long!' அதாவது வாழ்க பல்லாண்டு! என்று பொருள்படுவதை அறிந்து கொண்டான்.
தனக்கு ஒதுக்கப்பட்ட 35C என்ற இருக்கையிலிருந்து எதார்த்தமாக, சற்று எதிர் இருக்கையான 34டியில் விமான நிலைய உணவுக் கூடத்தில் பார்த்த அந்த நெடுநெடு இளைஞனைக் கண்டான். பணிப்பெண்கள், பயணிகள் என்று இடைப்பட்ட பாதையில் அங்குமிங்கும் நகர்ந்த வண்ணமிருந்தார்கள். பயணிகளின் கவனத்திற்கு என்று அறிவிப்புகள் முதலில் சிங்களத்திலும் பிறகு நம் மொழியிலும் ஒலிக்கத் தொடங்கின. அப்துர் ரஹ்மான் இலங்கைத் தமிழில் கிறங்கினான்!
விமானம் எடுத்து, நிலைபெறத் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில், பசியாற பயணிகளுக்கு வெஜ் பப்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழரசங்களையும் வழங்கினார்கள். மீண்டும் எதேச்சையாக இவனது பார்வை அந்த இளைஞன் மீது படிந்தது. அவனது கை விரல்களில் மருதாணி வைக்கப்பட்டிருந்தது. மாநிறத்திற்கும் சற்று கூடுதலான அடர்நிறம் என்றாலும் சிவந்திருந்த அவனது விரல் நுனிகள் தெளிவாகவே காட்சியளித்தன. உள்ளங்கையில் சிறிய வட்டமும் அதனைச் சுற்றி சிங்கார் சாந்துப் பொட்டு வைத்து போன்று சற்று பெரியப் பெரிய புள்ளிகளும் கவித்துவம் பேசின. புவியியல் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சிறியதும் பெரியதுமான கோள்களின் பிம்பங்களும் கூட அவன் நினைவிற்கு வந்துச் சென்றன.
யார் அவனுக்கு மருதாணி வைத்திருப்பார்கள்? மனைவி? ஆமாம் புதிதாக மணமானவன் போன்றும் தோன்றினான். அப்துர் ரஹ்மானுக்கும் அந்த அனுபவங்கள் இருக்கின்றன. கல்யாணமாகாதவன் என்றால் பெற்றவள் அல்லது பாசமிக்க மூத்த சகோதரியும் கூட ஆசை ஆசையாய் வைத்துவிட்டிருக்கலாம்.
மருதாணியின் குளுமை பிடிக்கும் என்றாலும், வைத்துவிடும்போது கூசச் செய்யுமே..!
முதல் முறை அவனுடைய மனைவி ஆயிஷா ஆசையோடு மருதாணி வைக்க வர, இவன் கூச்சத்தோடு தவிர்க்கப் பார்த்த தருணத்தை நினைத்து முறுவலித்துக் கொண்டான். அப்படியான ஒரு புன்முறுவல் அந்த இளைஞன் முகத்திலும் எப்போதும் ஒட்டிக் கொண்டிருந்தது. ஒருவரைப் பார்த்து நாம் சிந்தும் புன்னகை கூட தர்மம்தான் என்ற நபிமொழியும் அப்துர் ரஹ்மானின் நினைவிற்கு வந்துச் சென்றது.
நபிமொழியெல்லாம் நினைவிற்கு வந்துச் சென்றதைத் தொட்டு தனது மார்க்க அறிவை மெச்சியபடி தனக்குத்தானே புளகாங்கிதம் அடைந்து கொண்டான். ஒரு வேளை எதிர் இருக்கையில் அமர்ந்திருப்பவன் நம்ம ஆளுதானோவென்ற வலுவான நம்பிக்கையும் அவன் புத்தியில் பளீரென உதிக்க ஆரம்பித்தது. அவனைப்பற்றிய ஆராய்வுகளில் அப்துர் ரஹ்மான், தன்னை மறந்து மூழ்கிக் கொண்டிருந்தான்.
அத்தனை பேர் இருக்கையில் ஒருத்தனை மட்டும் இவன் தன்னிச்சையாக கவனிக்க அந்த உயரத்தைத் தாண்டி, வெள்ளி அணிகலன்களோ அல்லது இப்போது அவதானித்த இந்த மருதாணியோ இப்படி ஏதோ ஒன்றுதான் காரணமாக இருக்கக் கூடும். அது உள்ளுணர்வின் ஒரு தேடுதலாகவும், குரலாகவும் கூட இருக்கலாம்.
விமானம் கொழும்பிலிறங்கியதும் அதே 'ஆயுபொவா(ன்)னோடு கைக்கூப்பி பயணிகளை வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தது அந்த சிங்களச் சிலை மயில்கள்!
அவர்களுக்கு அங்கிருந்து துபாய் செல்லும் விமானத்திற்காக இரண்டு, இரண்டரை மணி நேரங்கள் கொழும்பிலேயே கழிக்க வேண்டியிருந்தது. அப்துர் ரஹ்மான் உணவுசாலைகள், வணிகக் கூடங்கள் என அங்குமிங்கும் லாவினான். அவனுக்கு மிகவும் பரிச்சயமானப் பாடலொன்று வரிகள் இல்லாமல் மெல்லிசை மட்டும் ரம்மியமாய் விமான நிலையத்தில் அளவான ஒலியில் கேட்டுக் கொண்டிருந்தது.
சில நொடிகளிலேயே பாடலைப் பிடித்து விட்டான்! அது 'இறைவனிடம் கையேந்துங்கள்... அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!' என்ற நாகூர் ஈ.எம். ஹனீபா பாடல்! என்னதான் இலங்கையில் தமிழ் முஸ்லீம்கள் கணிசமாக இருந்தாலும் ஒரு இஸ்லாமியப்பாடல் ஒரு சர்வதேச விமான நிலையத்தில் அதுவும் காலைவேளையில் ஒலிப்பது அவனது பயண மகிழ்வை மேலும் கூட்டிச் சென்றது.
திருச்சி விமான நிலையத்தில் முஸ்லீம்களுக்கான தொழும் இடத்தைக் கண்டபோது மேலிட்டப் புன்சிரிப்பு மீண்டும் இன்னொரு முறை கொழும்பில் கேட்ட இசையால் அவன் உள்ளத்தில் துளிர்த்தது.
விமானம் சரியாக மதியம் ஒன்று நாற்பத்தைந்திற்கு எடுக்கப்பட்டது. என்ன ஆச்சர்யம் அந்த இளைஞன் இப்போது அடுத்த இருக்கைக்கே வந்திருந்தான். இவனுடையது 15C என்றால் அவனுடையது 15B. 15A ஜன்னல் இருக்கை. இவன் தோளையொட்டி அந்த மருதாணிக் கைதான் முட்டிக் கொண்டு நின்றது. நேருக்கு நேர் பார்க்க முடியாது என்பதால் அவ்வப்போது இரகசியம் இரகசியமாக அந்த கையை நோட்டமிட்ட வண்ணமிருந்தான்.
அந்த சுவாரசியமெல்லாம் ஜன்னல் சீட்காரன் விமான பணிப்பெண்ணிடம் ஆப்பிள் ஜூஸ் கேட்கும்வரையிலும், இவனுக்கு அடுத்திருந்த மருதாணி வைத்திருந்த நெடுமாறன் தனக்கு 'ரெண்டு பெக் விஸ்கி' என வாயெடுக்கும் வரையிலும்தான்! பெருத்த அதிர்ச்சியோடும், ஏமாற்றத்தோடும் தான் தேர்வுசெய்து கேட்ட ஆரஞ்சுப் பழரசத்தை கனத்த மனதோடுக் குடித்து முடித்தான் அப்துர் ரஹ்மான்.
இதெல்லாம் குடிக்கிறான் என்றால் நிச்சயமாக அவன் முஸ்லீமாக இருக்க வாய்ப்பே இல்லை! என்ற முடிவிற்கு வந்ததும் அவனுள் ஒரு தீர்க்கமும் தெளிவும் பிறந்தது. பார்வை அவ்வப்போது அவன் பக்கம்... மன்னிக்கவும் அவன் வைத்திருந்த மருதாணிப் பக்கம் செல்வதை தவிர்த்துக் கொண்டான்.
ஆனாலும் அந்த இளைஞன், வழங்கப்பட்ட இரண்டு 'பெக்' போதாமல் 'பீர்' டின் ஒன்றையும் கேட்டது இவனுக்கு மீண்டும் முகச்சுளிப்பை உண்டாக்கியது.
மயில் முகில்ப்பெண்ணால் அவனுக்கு பீர் மறுக்கப்பட்டது. அவன் கெஞ்சிக் கேட்கவே, இன்னொரு பெக் விஸ்கியேக் கொடுக்கப்பட்டது.
மேலும் ஜன்னல் சீட்காரன் மீன்கறி சாப்பாட்டை கேட்டு வாங்க, மருதாணிக் கைக்காரன் கோழிக்கறி சோற்றைக் குளறிக் கேட்க, இவர் மட்டும் 'பாய்' வயிற்றில் புரளும் அய்யர் நூலாட்டம் வெஜ்ஜை வெட்டினார். பயணத்தில் அசைவம் உண்பதில்லை என்பது வெளியே சொல்லிக் கொள்ளும் சம்பிரதாயப் பிரமாணம். உண்மை நிலவரமோ அது ஹலாலாக இருக்காது என்ற ஐயப்பாடே அன்றி வேறில்லை!
குடிகார 15B ஒண்ணுக்கு போக வேண்டுமென தனது இருக்கையிலிருந்து எழுந்தான். அதுவும் ஒரு அசட்டைச் சிரிப்புடன். எதையோ கண்டு வழிவிட்ட கதையாய் பரபரவென தானும் எழுந்து தன்னுடைய பவித்திரத்தை கட்டிக்காத்துக் கொண்டான் இந்த ஆரஞ்சுப் பழரசக் குவளைக்காரன்.
மது அருந்தியது 15B என்றாலும் இவன் முகம்தான் இருண்டுப் போயிருந்தது. ஏதோ தான் பல நாள் பின்தொடர்ந்த காதலி, அடுத்தவனின் மனைவி என்று அறிந்து கொண்ட தருணம் போல்.
இருக்கையின் எதிரிலிருந்த திரையில் எப்படியோ 'ப்ரேமலு' புண்ணியத்தில் இரண்டு, இரண்டரை மணி நேரம் போனது. விஸ்கியை விழுங்கியவனோ அஜய் தேவ்கனின் 'மைதான்' ஐ முறைத்துக் கொண்டிருந்தான். அடுத்ததாய் குடியைத் தொடாதவன் தானும் 'பரினீதா' எனும் இந்திப்படத்தை தொடங்க, சில நிமிடங்களிலேயே தரையிறங்குதலுக்கான அறிவிப்புகள் ஒலிக்க ஆரம்பித்தன. வித்யா பாலனை சைப் அலிகான் ஏன் வெறுத்தார் என்ற உண்மையை அறிந்து கொள்ள முடியாமலேயே ஒளித்திரை அமர்ந்த்தப்பட்டது.
பெரும்பாலானோர் அலைப்பேசியை உபயோகிக்க ஆரம்பித்தனர். நிறைய 'அஸ்ஸலாமு அலைக்கும்'கள் கேட்கத் தொடங்கின. அதில் அருகில் காலியாகியிருந்த விஸ்கிக்குவளையின் வாடையும் கலந்திருந்தது. அந்நேரம் இவனுக்கு வேதனைகள் கூடியது போல உணர்ந்தான். அவனுக்கு இரண்டு பக்கமும் 'தன்னுடைய' ஆட்கள் இருந்தும் எப்படித்தான் விஸ்கி, பீர் வேண்டும் என்று கொஞ்சமும் தயங்காமல், தைரியமாகக் கேட்டானோ என்ற ஆதங்கமும் அவனுடைய கோபத்தையும் வெறுப்பையும் அதிகப்படுத்தியது. 'ஹராமை குடிச்சிட்டு அஸ்ஸலாமு அலைக்குமாம் அஸ்ஸலாமு அலைக்கும்!' என்று உள்ளுக்குள் எரிமலையைப் போல் தணத்துக் கொண்டிருந்தான். இருப்பினும் இறுதியில் காதலுக்காக வீடு தாண்டிய மகளை தலைமுழுகும் தந்தை போல ஒரு இறுக்கத்தை முகத்தில் ஏந்திக் கொண்டான்.
மீண்டும் நீலச்சேலை மயில்களின் 'ஆயுபொவான்!' என்ற நன்றிமொழியுடன் விமானத்திலிருந்து அப்துர் ரஹ்மான் இறங்க ஆரம்பித்தான். அப்போதுதான் கவனித்தான் முன்சென்றுக்கொண்டிருந்த பக்கத்திலிருந்தவனின் இன்னொரு கையை. அந்த கையில், உள்ளங்கை முழுவதும் ஒற்றை பெரிய வட்டமாக மருதாணி மொழுகப்பட்டிருந்தது. ஏன் இந்த கையில் மட்டும் மொழுமொழுவென சிறு மெனக்கெடலும் இல்லாமல் ஒரே வட்டமாக அப்பப்பட்டுள்ளது? என மீண்டும் அவன் மீது கவனத்தைக் குவித்தான். பைக்கிலிருந்து ஏதும் விழுந்து காயப்பட்டிருக்கக் கூடும்; அந்த உள்ளங்கையில் தையலின் தழும்புகள் மருதாணியின் அடர் சிவப்பை மீறி இவன் கண்களுக்குத் தென்பட்டன. இவன் மீது இவனுக்கே வெறுப்பு வந்தது. அவனை கவனிப்பதா நம் வேலை? என்று விறுவிறுவென அவனைக் கடந்து நடக்க ஆரம்பித்தான்.
- இத்ரீஸ் யாக்கூப்