‘எலீட் எமரால்டு’ சலூன் குழுமம் பெங்களூரில் பிரசித்தி பெற்றது. முதலில் அவுட்டர் ரிங் ரோடு, வொயிட்ஃபீல்டு, எலெக்ட்ரானிக் சிட்டி போன்ற தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் நிறைந்த இடங்களில் மட்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், சமீபத்தில் கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் பரவலாக உள்ள பகுதிகளிலும் விஸ்தரித்துவிட்டனர்.
நசீர் தற்சமயம் யஷ்வந்த்பூரிலுள்ள 'யூஃபோரிக் பயோ சிஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் நுண்ணுயிரியல் பிரிவு ஆய்வக மேலாளராகப் பணிபுரிந்து வருகிறான். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அருகிலிருந்த குறிப்பிட்ட சலூனுக்குச் செல்லத் தீர்மானித்தவனாய் மணியைப் பார்த்தான். ஒன்பதே முக்கால்!
எலீட் எமரால்டின் ஜிலுஜிலு வரவேற்பில் செயின்ட் செபாஸ்டியன் சர்ச்சின் பாதிரியார் போல வெள்ளைச் சட்டையும் பேன்ட்டும் அணிந்திருந்த ஒரு புதிய ஆள் தென்பட்டான். அவன் நசீருக்குப் பரிச்சயமில்லாதவன் என்பதால் வேறு யாராவது இருக்கிறார்களா எனச் சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தினான். பெரும்பாலும் அவன் முடிவெட்டிக்கொள்ளும் நம்மூர் ஷியாமும் தீனாவும் பிஸியாக இருந்தார்கள். இவர்களைத் தவிர்த்து மூன்றாவது ஆளாகப் பணிபுரிந்துவந்த உத்தரகாண்டைச் சேர்ந்த ஆமீரையும் அந்நேரம் காணவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாகவே நின்றான்.
"க்யா ஆப்கோ பால் கட்வானா ஹே?" (உங்களுக்கு முடி வெட்ட வேண்டுமா?)
புதியவனின் திடகாத்திரமான குரலும், பருக்கள் கொட்டிக் கரடுமுரடான முகமும் சற்று அந்நியமாக அவனை யோசிக்க வைத்தாலும், "இல்லை, அப்புறம் வருகிறேன்" என்று சொல்ல மனம் வரவில்லை. ஏனெனில், அவன் தனது நண்பர்களைச் சந்திக்க மதிய உணவிற்குச் சிவாஜி நகர் செல்ல வேண்டும். ஷ்யாம் அல்லது தீனாவிற்காகக் காத்திருந்தால் நேரம் விரயமாகிவிடும்; அவனுக்கு மிகவும் பிடித்த சூடான ஆம்பூர் பிரியாணியைத் தவறவிடவும் வாய்ப்புள்ளது; அல்லது பேருந்துக்குப் பதிலாக வியர்வை சொட்டச் சொட்ட ரேபிடோவை நாட வேண்டியிருக்கும்.
மேலும், ஷியாமிடமும் தீனாவிடமும் உள்ளூர் இளைஞர்கள் இருவர் டீடாக்ஸிலிருந்து கம்ப்ளீட் ஃபேஷியல் வரை முன்பதிவு செய்திருந்தார்கள். மேலும் இரண்டு முன்பதிவுகள் (Appointments) அடுத்தடுத்து வேறு உள்ளனவாம். அவர்கள் சைகையில் சொல்ல இவனுக்கு வேறு வழி தெரியவில்லை. கல்வி நிலையங்களும் பக்கத்தில் உள்ளதால் மாணவர்கள் கூட்டமும் அங்கே அலைமோதுவது வழக்கமானதுதான்.
"இவங்கள முடிக்குறதுக்கே ஒன் ஹவர் ஆகும்ணா!" என்று சொல்லிவைத்தார் போல ஒப்பிக்க, புதியவன் கேட்டதற்கு "ஜி" என்று ஆமோதித்தான்.
வழக்கமாக ஆமீர் நின்று முடிதிருத்தும் கேபினுக்கு அழைத்துச் சென்றான். ஆமீர் விடுமுறைக்காக அவனது ஊரான பகவான்பூருக்குச் சென்றிருக்கக்கூடுமென நசீராகவே நினைத்துக்கொண்டான்.
இருக்கையில் அமர்ந்த நேரத்தில் அவன் சந்திக்கச் செல்லவிருந்த நண்பர்களில் ஒருவனான நதீமிடமிருந்து அழைப்பு வந்தது. நதீம் உருது பேசுபவன். நசீருக்கு ஹிந்தி ஓரளவு பேச வரும் என்றாலும் வேலூர் தமிழில்தான் உரையாடுவான். மேலும், அழைப்புகள் பொதுவாகவே 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்பதிலிருந்துதான் ஆரம்பிக்கும். அன்றும் அப்படியே தொடங்கியது. அவசர அவசரமாகப் பத்து பதினைந்து நொடிகள் மட்டும் பேசிவிட்டு, நேரத்திற்கு அங்கே வந்துவிடுவதாக உரையாடலை முடித்துக்கொண்டான்.
'ஆரம்பிக்கலாமா?' என்ற பார்வையோடு புதியவன் டிஸ்போசபிள் பாலித்தீன் மேல்விரிப்பைக் கட்டிவிட்டான். அப்போதுதான் கவனித்தான், அந்தப் புதிய ஆளின் மணிக்கட்டில் சூலாயுதம் பச்சைகுத்தப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் அவனையும் அறியாமல் மெலிதாகக் கலவரம் கொள்ள ஆரம்பித்தான்.
"என்ன செய்துகொள்ள விரும்புகிறீர்கள்?" எனக் கேட்க, "ஹேர், பியர்ட் செட்டிங்" என்று பதிலளித்தான். புதியவன், மெல்லிய புன்னகையுமல்லாது, இறுக்கமான முகத்துடனும் இல்லாது, ஒரு தீர்க்கமான பார்வையோடு பணியைத் தொடங்கலானான்.
"ஆப் கேரளா கா?" என்ற அவனது கேள்விக்கு, "இல்லை, தமிழ்நாடு" என்று நசீர் பதிலளித்தான்.
"ஆப் கிதர் கா?" தன் பங்கிற்கு நசீர் விசாரிக்க, "உ.பி." என்ற பதில் அவனை அவ்வளவு சந்தோஷப்பட வைக்கவில்லை. மேலும் அப்போதே தன்னிச்சையாக நசீர், இருக்கைக்கு எதிரே கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த முடித்திருத்துபவர் பற்றிய விவரங்களைக் கவனிக்கலானான்.
பெயர் 'ஸ்ரீராம்' என்றும், ஸ்டாஃப் ஐ.டி. '834' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவன் உ.பி.க்காரன் என்பதே நசீருக்கு ஒருவித ஏமாற்றத்தைத் தந்திருக்க, ஸ்ரீராம் என்ற பெயர் அவனுக்குக் கூடுதல் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. கல்லூரிக் காலங்களில் ஸ்ரீராம் அவனுக்குப் பிடித்த பெயர்களில் ஒன்றுதான். ஏன், ஆரம்ப காலத்தில்—அதாவது ஒரு பத்து வருடங்களுக்கு முன்—ஸ்ரீராம் வெங்கட் எனும் பெயரில் நண்பனொருவன் கூட அவனோடு சென்னையில் சில மாதங்கள் பணிபுரிந்திருக்கிறான்.
ஆனால், இந்த ஸ்ரீராமின் ஊர் உ.பி. என்றதும்தான் அவனையுமறியாமல் சிறு கலவரம் தொற்றிக்கொள்ளத் தொடங்கியது. அதுவும் சூலாயுதமெல்லாம் பச்சைகுத்திக்கொண்டுள்ளானே என்பதும் அவனது கலக்கத்திற்கு முதன்மையான காரணமாக அமைந்தது.
"ஆப்கோ கோன்ஸா ஸ்டைல் சாஹியே?" நசீர், தனது விருப்பத்தை அலைபேசியின் ஒளித்திரையில் சுட்டிக்காண்பித்தான்.
"அச்சா!" என்றபடி தேவையான உபகரணங்களை எடுக்க இங்குமங்கும் தனது உடலை முடித்திருத்த இருக்கைக்கு நிகராகத் திருப்பிக்கொண்டிருந்தான். அவனது பேச்சு மற்றும் செயல்பாடுகளில் ஒரு இறுக்கம் மேலிட்டிருந்தது. அது இன்னமும் நசீரின் அக அமைதியைச் சீர்குலைக்கத் தொடங்கியது. வட மாநிலங்களில் 'ஜெய் ஸ்ரீராம்!' என்ற கோஷத்தோடு இஸ்லாமியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அனைத்து வன்முறை வெறியாட்டங்களும் ஒடுக்குமுறைகளும் அவனது மனத்திரையிலும் விழித்திரையிலும் தன்னியல்பாக ஓட ஆரம்பித்தன.
இந்த நாட்டில், குறிப்பாக வட மாநிலங்களில் ஒரு முஸ்லிமாக வாழும் மக்களின் அன்றாடங்கள்தான் எத்தனை அவலமானவை எனத் துயருற்று அவன் வேதனைப்பட்ட நாட்கள்தான் எத்தனை! அஃலாக் போலவும் ஆசிஃபா போலவும் இங்கே கொலை செய்யப்பட்டவர்களின் நினைவுகள் வந்தாலே மனம் பதறும்! அறுபது, எழுபது வயதுள்ள முதியவரின் தாடியைப் ஒரு பதின்மக்காரன் பிடித்திழுத்து, 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லச் சொல்லித் துன்புறுத்திய ரயில் நிகழ்வுகள், கொலைகள்தான் எத்தனை எத்தனை!
பெருநாள் ஆடை எடுக்கத் தன் சகோதரனோடு சென்ற மதரஸா சிறுவனைப் பையில் மாட்டிறைச்சி வைத்திருக்கிறான் என்று பிணமாக்கிக் கையிலிருந்து வீசியெறிந்த கொடூரங்களையெல்லாம் நசீரால் அவ்வளவு எளிதாக மறந்துவிட இயலவில்லை. சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகத் திட்டமிட்டு அழைக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிம் சிறுவன், சக மாணவனின் தந்தையால் துப்பாக்கி முனையில் கொல்லப்பட்ட சம்பவத்தையெல்லாம் அவன் கடந்து வர முனைந்தாலும், நாளுக்கு நாள் ஏதோ ஒரு இணையான சம்பவம் எங்கோ ஒரு மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
ஏன், கர்நாடகத்தில்கூட மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக நிகழ்ந்தும் கடந்தும்தானே செல்கின்றன இந்நாட்களில்! பீஃப் முதல் புர்கா வரை ஏதோ ஒன்று இங்கேயும் சலசலத்து அடங்கவே செய்திருக்கிறது.
அவன் கத்தி வைக்கும் ஒவ்வொரு முறையும் மெல்லிய பதற்றத்துடனே அவனது கண்களை அணுகினான் நசீர். அவன் கண்கள் குணா கமலை ஒத்திருந்தன. உடல்வாகும் அப்படியே, நிறம் மட்டும் வேறு. மீசை அளவாக, நேர்த்தியாக வார்க்கப்பட்டு, டக்கெனப் பார்க்க ஒட்டப்பட்டது போன்றிருந்தது. மோனோக்ரோமிக் வெள்ளை உடைக்கு அவன் அணிந்திருந்த கருப்பு பெல்ட், தொப்பையைத் தலையணை ஓரங்கள் போல நேர்த்தியாக அணைகட்டிக்காட்டின.
உ.பி.யிலிருந்து, பீகாரிலிருந்து இமாம் வேலைக்கு இங்கே வந்திருக்கும் முஸ்லிம் யாரையேனும் நசீர் சந்திக்க நேர்ந்தால், அவன் கேட்கும் முதல் கேள்வி, "நிலைமை இப்போது அங்கே எப்படி இருக்கிறது?" என்பதாகவே இருக்கும். இதே சலூனிலுள்ள உத்தரகாண்ட் ஆமீரும் பல கதைகளைச் சொல்லியிருக்கிறான். அனைத்தையும் பழகிப்போன அடக்குமுறைகளாகவும், தினசரி பொதி சுமக்கும் கழுதைப் போராட்டங்களாகவும் சலித்தும் விரக்தியாகவும் பகிர்ந்துகொள்வான். தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைமையும்கூட அவ்வாறுதானே இன்றுவரை மாநில பேதமின்றி எல்லா இடங்களிலும் தொடர்கிறது!
ஆமீரிடம் கேட்பது போன்று இவனிடம் ஏதும் விசாரிக்க இயலாதுதான். அப்படிக் கேட்டாலும் நசீரின் மீது பகைமை கூடக் கொள்ளலாம். அது இவனுடைய சங்கைப் பதம் பார்க்கும் சவரக்கத்தியாகக் கூடச் சூழல் மாறிவிடும் வாய்ப்பும் உள்ளது. என்றோ பார்த்த ஒரு குறும்படமும் நசீருக்கு அப்போது நினைவில் வந்துபோனது.
அந்தக் குறும்படத்தில் முஸ்லிம் இளைஞன் ஒருவன் முடித்திருத்தம் செய்யும் தனது நண்பனின் கடைக்கு வருகிறான். ஒருவரையொருவர் கேலி, கிண்டல் செய்தபடி வேலை தொடங்குகிறது. தலைமுடியை ஒழுங்கு செய்தபின், பல வாரங்களாக வளர்ந்த தாடியை மழிக்க நுரைக்கக் கிரீம் இட்டு, அவன் சவரக்கத்தியைக் கழுத்திற்குக் கொண்டு செல்லும்போது, வெளியே ருத்ராட்ச மாலை அணிந்த ஒருவனை, தொப்பி அணிந்தவன் தனது கும்பலுடன் வாளைச் சுழற்றியபடி துரத்திக்கொண்டு செல்லும் காட்சியைக் கண்டு இருவரும் முதலில் திகைக்கிறார்கள். பின்னர் சலூன் நண்பனின் முகம் மாறுகிறது... அதை உள்வாங்கிக்கொண்ட முஸ்லிம் நண்பன் பதற்றத்துடன் 'வேண்டாம்' எனக் கண்களால் கெஞ்சுகிறான். அதற்குள் அவனது கழுத்தில் சவரக்கத்தி பாய்ந்துவிடுகிறது. ஆனால் வெளியே நிகழ்ந்தது ஒரு சினிமா படப்பிடிப்பு என்று பின்னரே சலூன் நண்பன் உணர்ந்து வெடித்து அழுகிறான். அத்தோடு அந்தக் குறும்படம் நிறைவடைகிறது.
அத்துமீறிய உணர்வுகள் எல்லாம் ஒரு பூகம்பம் போல சில நொடிகளில் பல அழகிய வாழ்க்கையையும், காலத்திற்கும் கட்டிக் காத்திருந்த ஸ்திரமான உயரக் கோபுரங்களையும் இருந்த கோலம் தெரியாமல் வீழ்த்தி அங்ஙனம் புதையச் செய்பவைதான்.
என்னதான் அக்ககாட்சிகள் நசீருக்குள் ஒரு பதைபதைப்பை ஏற்படுத்தியிருந்தாலும், சற்று அதீதமாக யோசித்திருந்தாலும், 'சேச்சே! அப்படியெல்லாம் இவன் நடந்துகொள்ள வாய்ப்பே இல்லை' என அவன் முகம் பார்த்துச் சந்தேகத்துடனான நம்பிக்கையைக் கொண்டான். தன் கடைப்பக்கம் மண்டிக்கிடக்கும் புற்களையும் செடிகளையும் தின்ன வரும் ஆடுகளையெல்லாம் கசாப்புக்காரன் வெட்டத் துணிவதில்லை என்பது நடைமுறையும்கூட.
"கிதர் காம் கர்த்தே ஹோ பாய்?" என்று நசீர் வேலை செய்யும் இடத்தைப் பற்றிச் சற்று சிநேகமாக விசாரிக்கத் தொடங்கினான். அந்த இலகு நசீரின் யூகங்களைச் சற்று மட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அவனுடைய முகத்தை நேருக்கு நேர் பார்த்தபோது காவிக்கொடியில் கதிர் கீச்சிடும் வெள்ளொளியாய் வேறொரு பிரகாசம் நிரம்பியிருந்தது.
அவனது கேள்விக்கு "யூஃபோரிக்" என்று சுருக்கமாகப் பதிலளித்தான்.
அடுத்ததாக எதுவும் கேட்காமல், பேசாமல் சிறு மௌனம் நிலவியது. முடிவெட்டுபவனின் மூச்சுக்காற்று மட்டும் இவனது காதையும், கழுத்தின் பக்கங்களையும் அவன் சற்று குனிந்து வேலை செய்யும் நொடிகளில் முட்டிக்கொண்டிருந்தது.
மீண்டும் நசீர் மனதிற்குள் உ.பி.யின் தற்கால அரசியல் சூழல் ஓடத் தொடங்கியது. அதைப்பற்றி ஏதும் பேசலாமா என்றும் திடீர் தைரியம் பிறந்தது. அங்கிருந்து வந்த ஒரு முஸ்லிமிடம் கேட்டால் கூட நசீரின் கவலைக்கு ஆறுதலாகவோ அல்லது ஏமாற்றமாகவோ ஒரு பதில் கிடைக்கும். இவனிடம் கேட்பதில் தவறாக எதுவும் எடுத்துக்கொள்ளப்படலாமே தவிர, ஒரு நியாயமான பார்வையும் இவன் வாயிலிருந்து வரப்போவதில்லை என மீண்டும் தவிர்த்தான். ஏவலைப் பொறுத்து இயங்குவதே புல்டோசர்களின் செவிகளாகும்.
நள்ளிரவில் பாடிச் செல்வது போல் வேலை முடியும் வரை அவனுடன் ஏதாவது சகஜமாகப் பேசிக்கொண்டே இருக்க வேண்டுமெனக் கிளைச் சிந்தனைக்குள் நசீர் மூழ்கி, "இங்கே நீ வந்து எவ்ளோ நாளாச்சு?" என வேறொரு தலைப்பை எடுத்தான்.
தான் வந்து ஒரு வாரமே ஆகிறது என்றும், சென்ற வருடம் வந்து பிடிக்காமல் மூன்று நாட்களிலேயே ஊருக்குத் திரும்பிவிட்டதாகவும் சொன்னான். இங்குள்ள வாழ்க்கை முறை தனக்கு அதிகம் ஒட்டவில்லை; குடும்ப ஞாபகமும் அழுத்துகிறது; இம்முறை எத்தனை நாட்கள் இருக்கப்போகிறேனோ என்று அவனது தோற்றத்திற்கு மீறி கவலைப்பட்டுப் பேசினான். அவனது பேச்சில் அநேகர் போலப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவே இங்கே ஒரு அழுத்தத்தில் மீண்டும் வந்திருக்கிறான் என நசீருக்கு விளங்கியது.
மேலும், தான் கேரளத்திலும் சில மாதங்கள் சலூன்களில் இருந்ததாகச் சொன்னது நசீருக்கு அவனையுமறியாமல் சற்று ஆறுதலைத் தந்தது. இடையில் தன்னை "ஆப் கேரளா கா ஹே?" என்று ஒரு எதிர்பார்ப்போடு விசாரித்ததன் யதார்த்தப் பின்னணியும் அச்சமயம் முழுதாக நசீரால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.
மீண்டும் நசீரின் பார்வை முன் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த 'ஸ்ரீராம்' எனும் பெயர் குறிப்பின் மீது படிந்தது. அங்கே வெறும் ஸ்ரீராம் என்றே அச்சிடப்பட்டிருந்தாலும் 'ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்!!' என்றே பல குரல் கோஷங்களாக அவனுக்கு மட்டும் ஒலித்தது. அது நசீருக்கு ஒரு கட்டத்தில் சற்று தேவையில்லாத பிறழ்வு போலவும் பட்டது. தான் ஏன் இதை இவ்வளவு தீவிரமாக ஆலோசித்துச் சிந்தனைகளைக் கடினமாக்குகிறோம் என அவனுக்கு அவனே கேள்விகேட்டு, கண்ட, கேட்ட செய்திகளால் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை 'ஆம்' என்று ஒப்புக்கொள்ளவும் மறுக்கவில்லை. ஆனால் தனக்கு முடித்திருத்துபவன் குறிப்பிட்ட மனிதர்கள் போல இல்லையே!
'உருவம் கொஞ்சம் கரடுமுரடாக இருந்தாலும் நேரம் செல்லச் செல்ல சற்று இயல்பாகத்தானே பேசுகிறான்? நான் ஒரு முஸ்லிம் என்று பெயரளவில் தெரியாவிட்டாலும் கூட, தொழுகையால் விளைந்திருந்த என்னுடைய நெற்றித் தழும்பை வைத்து ஊகிக்காமலா இருந்திருப்பான்? அதுவும் நதீமுடன் பேசும்போது ஸலாம் வேறு சொன்னேனே!' என்று நசீர் தனக்குத்தானே மௌனமாக உள்ளுக்குள் பேசி உழன்றுகொண்டிருந்தான். தமிழ்நாடு ஸ்ரீராம் என்ற பெயர் அவனை என்றுமே அச்சுறுத்தியதில்லை; அங்கே சூலாயுதத்தையும் யாரும் அதிகம் பச்சைகுத்தி அவன் கண்டதில்லை. எப்போதாவது யாராவது எங்கேயாவது செந்தூரம் பூசிப் பார்த்திருக்கிறான். அதுவே சூலம் போல்தானே நேற்றிலிருந்து குத்துவது போலிருக்கிறது. சமீபத்திய முருகன் ஜி, செந்தில் ஜி என அழைப்புப் பெயர்களெல்லாம் கூட வடக்கின் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்திற்கு இணையாகத்தானே இருக்கிறது.
ஆனால் கடலில் மீன்களோடு முதலைகள் போல, காடுகளில் சிங்கத்தோடு கழுதைப்புலி போல எல்லா இடங்களிலும் எல்லோருமே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த வெளிச்சமும் நசீரின் கல்பில் ஒரு நினைவலை வாயிலாகவே நிகழத் தொடங்கியது.
இது குறுந்திரை (Reels) காலமல்லவா? சில நாட்களுக்கு முன் அவன் கண்டுகளித்திருந்த ஒரு 'ரீல்ஸ்' மனக்கண்ணில் சொர்க்கம் போல விரிய ஆரம்பித்திருந்தது. அது எங்கோ இருக்கும் வட இந்திய நகரொன்றில் நடைபாதை உணவுக்கடை. சூரியப்பொழுது சாயச் செல்லும் நேரம். ஒரு பதின்மூன்று வயது மதிக்கத்தக்க சிறுமி ஒற்றை ஆளாக அந்த உணவுக் கடையை நடத்திக்கொண்டிருக்கிறாள். அங்கே அவளை அணுகும் ஒரு நபர் தன்னிடம் வெறும் இருபது ரூபாய் மட்டுமே உள்ளது, சாப்பிட ஏதும் கிடைக்குமா எனச் சோதிக்கிறார். "சாப்பாடு எண்பது ரூபாய் ஆச்சே? ஏன் தங்களிடம் பணம் இல்லையா?" என அவள் கேட்க, வந்தவர் 'ஆம்' என்கிறார். கூடவே தான் ரோஜா (நோன்பு) வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.
உடனே அந்தச் சிறுமி, "உங்களுக்கு நோன்பு திறக்கச் சாப்பாடுதானே வேண்டும்? தருகிறேன்" என அங்கே இருந்த உணவு வகை எல்லாவற்றிலும் சிறிது சிறிது வைத்து ஒரு தட்டை முழுவதுமாகச் சோறு, ரொட்டியோடு நிரப்பி அவரிடம் நீட்டுகிறாள். "இது ரொம்ப அதிகம், மேலும் தன்னிடம் வெறும் இருபது மட்டுமே இருக்கிறது" என நினைவூட்டிக்காட்ட, "ஆப் ரோஜா மே ஹே னா? முஷ்கில் நஹி ஹே, சலேகா!" (நீங்கள் நோன்பில் இருக்கிறீர்கள் அல்லவா? பரவாயில்லை, பரவாயில்லை!) என ரூபாய் இருபதைப் பெற்றுக்கொண்டு அவரைச் சாப்பிடும்படி கூறியபடி ஒரு குவளையில் குளுமையான லஸ்ஸியையும் ஊற்றிக் கொடுக்கிறாள்.
வந்தவர் அவளின் இரக்கத்தையும் தயாள குணத்தையும் கண்டு வியந்து நிற்க, மறுபடியும் "நீங்கள் நோன்பு வைத்திருக்கிறீர்கள் அல்லவா? குடியுங்கள்!" என்று சொன்னது மட்டுமல்லாது, அந்த இருபது ரூபாயையும் அவரிடமே திருப்பிக்கொடுக்கிறாள். அந்த நபர் அவளுடைய பரந்த மனதைப் போற்றியவராக, நெகிழ்ந்து நன்றி சொல்லி "அஸ்ஸலாமு அலைக்கும்" என விடைபெற, அவளும் "வ அலைக்கும் ஸலாம், ஜெய் ஸ்ரீராம்!" எனத் தன் பதிலைத் தன் நெறிப்படி தெரிவிக்கிறாள். அவள் உச்சரித்த அந்த 'ஜெய் ஸ்ரீராம்' என்பதில் துவேஷம் ஏதுமில்லை! மனிதாபிமானமும், பக்தியும், வாழ்த்தும் மட்டுமே நிறைந்து நின்றது.
அந்தக் காட்சியை நினைத்துப் பார்க்கையில் நசீரின் மனம் புத்துயிர் பெற்று, அக்கணம் அவனைத் தேவையில்லாத சிந்தனைகளிலிருந்தும் விடுவித்தது. நினைவுகளே வரம்; நினைவுகளே சாபமும்!
ஆரம்பத்தில் அவசரமாகச் செல்ல வேண்டும் என்றவனை, வெறும் அரை மணி நேரம்தான் ஆகுமென அமரவைத்து, தன்னுடைய வேலையை முடிக்கக் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வரை எடுத்துக்கொண்டான். ஒரு புன்முறுவலுடன் இறுதியாகக் கண்ணாடியைப் பார்த்தபோது, நசீர் எதிர்பார்த்த இத்தாலியன் ஸ்டைல் தத்ரூபமாக வந்திருந்தது. மைக்கேலாஞ்சலோவைப் போல அவ்வளவு சிறப்பாக அந்த ஸ்ரீராம் தன் திறமைக்கு பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருந்தான். 'என்னவொரு கலைஞன் நீ!' என திருப்தி பீறிட்ட உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் "ஜெய் ஸ்ரீராம்!" என அவனது கைவண்ணத்தை வியந்து வாய்விட்டுப் பாராட்டினான். வெளியே வந்தபோதுதான் அவனுக்குக் கூடுதலாக எதுவும் கொடுத்திருக்க வேண்டும் என நசீருக்குத் தோன்றியது.
- இத்ரீஸ் யாக்கூப்