"நூறு ரூபாய்க்கு செவ்வாழைப் பழம் கொடுங்க."

கடைக்காரர் கத்தியைத் தேடி எடுத்து தொங்கிக் கொண்டிருந்த வாழைத் தார்களின் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஒரு சீப்பை லாவகமாக வெட்டி அன்பழகனிடம் கொடுத்தார்.

"வாப்பா... போன டைம் வாங்கும்போது கருப்பு அடித்தப் பழங்களாக கொடுத்துட்டார்.அன்னைக்கூட ஒரேக் கூட்டமாக ஆட்கள் இருந்து வாங்கிக்கிட்டிருந்தாங்க.சில சமயம் தோலை உறிச்சா நல்லா இருக்கும். இந்த டைம் எல்லாமே உள்ளுக்குள்ள நொந்து இருந்துச்சு."

"ஆமா சார். சடங்கோ,காதுகுத்துக்கோ வாங்கினாங்க. விசேஷத்துக்கு போற அத்தனை பேரும் கடைக்கு வந்துட்டாங்க.அதனால வாப்பா கவனிச்சிருக்க மாட்டார்."

"ஆமாம். நானே ரோட்ல நின்னுதான் பணத்தைக் கொடுத்துவிட்டேன்."

பழங்கள் விற்பவர்கள் எப்பொழுது பழங்களை எடுத்து எடுத்துப் பார்த்து வாங்குகிறவர்களிடம் ஒழுங்கான பழங்களாக கொடுப்பார்கள். வண்டியிலிருந்து பேரம் பேசாமல் வாங்கிறவர்களிடம் அழுகியவைகளைத் தலையில் கட்டி விடுவார்கள். இது எல்லா ஊர்களிலும் இருப்பதால் அன்பழகன் தெரிந்த இடங்களில் மட்டும் தான் வாங்குவார்.

ஒரு முறை ஆர்ச்சுக்குப் பக்கத்தில் உள்ள கடையில் திராட்சையும் ஆரஞ்சுப் பழங்களும் வாங்கி வந்து வீட்டில் பார்த்தால் பெரும்பாலானவைகள் அழுகி இருந்தது. அவர் அப்படியே எடுத்துக் கொண்டு கடைக்கு கிளப்பிப் போனார்.

"அப்பா எங்க வந்த உடனே கிளம்பிப் போறார்." மகள்.

"வந்து கதை சொல்வாரு கேட்டுக்க. அவன் பாவம். ஆனா பாரு அவன் இவருக்கு ப்ரெண்ட் ஆயிருவான்." மனைவி.

அன்பழகன் கடைக்குச் சென்று பையை வைத்தார்.

"எனக்குப் பழம் பார்த்து எடுக்கத் தெரியாது நினச்சீங்களா. திராட்சை எப்போது வாங்கினால் புளிக்கும். என்ன நிறத்தில் இருந்தால் புளிக்கும். அதே மாதிரிதான் ஆரஞ்சுப் பழமும். நீங்கள் என்னை தெரிந்தவர் மாதிரி பேசினதால.நான் சரிப் போடட்டுமேன்னு விட்டுட்டேன். மத்தவங்க மாதிரி பழங்கொடுங்கன்னு கேட்கிற ஆள் நான் இல்லை. தோட்டத்திலேர்ந்து என்ன விலைக்கு வருது. உங்களுக்கு என்ன விலை வருதுன்னு எனக்குத் தெளிவாக தெரியும். அது உங்கள் உழைப்புக்கானது. இந்தா நீங்கள் கொடுத்த பழங்கள் இருக்கு. முன்னூற்றி அறுபது ரூபாய். அது அப்படியே உங்களுக்கு லாபம்."

"சார்.. மன்னிருங்க சார். நான் வேற போட்றேன் வாங்கிட்டுப் போயிருங்க சார்."

கடையின் முதலாளி கடையை விட்டு வெளியே வருவதற்குள் அன்பழகன் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

அதன் பிறகு ஏதோ ஒரு விசேஷத்திற்கு அந்தக் கடைக்கு தான் வாங்க போனார். கடைக்காரர் மொத்தத் தொகையை சொல்லி முன்னூற்றி அறுபதை கழித்து சொன்னார். அன்பழகன் பணம் கொடுக்க வேண்டும் என நினைத்துப் போனவர். ஆனால் கடைக்காரர் முன்பு பழம் வாங்கியப் பணத்தைக் கழிக்கிறார் என்று தெரிந்ததும், கைபேசியை எடுத்து ஸ்கேன் செய்து முழுத் தொகையையும் ஜிபே-யில் அனுப்பிவிட்டார்.

"சாருக்கு என் மேல் இன்னும் கோவம் தீரலப் போல." என்று சிரித்தார் கடைக்காரர்.

"கோவமாக இருந்தா நான் ஏன் இங்க வந்து வாங்குறேன். என்கிட்ட நீங்கள் அப்படி நடந்து இருக்கக்கூடாது. இல்லைன்னா என்னையத் தெரிந்தவராக நீங்கள் காட்டி இருக்கக்கூடாது."

அதன்பிறகு கடைக்காரருக்கு அன்பழகன் மேல் அலாதியான ப்ரியம் வந்துவிட்டது.

ஒரு நாள் அந்தப் பழக்கடையில் போலீஸூடன் இரண்டு மூன்று போர் நின்றிருக்க மக்கள் வேடிக்கைப் பார்த்துக் கடந்து சென்று கொண்டு இருந்தார்கள். அன்பழகன் தான் அங்கு சென்று 'ஏதாவது பிரச்சனையா.உதவி ஏதாவது தேவைப்படுகிறா' என்று கேட்டார்.

கடைக்காரர் 'பில்டிங் ஓனருக்கும் எங்களுக்கும் சின்ன மனவருத்தம் சார். தேவைப்பட்டால் கேட்கிறேன் சார்.' அன்பழகன் அவருடைய விசிட்டிங்க் கார்டைக் கொடுக்க தூரமாக நின்று கொண்டு இருந்த போலீஸ் அவர்களுடன் வந்தவர்கள் எல்லோரும் இதைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.அவரது பைக்கில் அமர்ந்திருந்த வெள்ளைப் புறாவை யாரோ விரட்டிவிட்டார்கள்.

அன்பழகன் மனிதர்களை வெறுக்கக் கூடிய ஆள் இல்லை. அவர் மனிதர்களை நேசிக்கக் கூடியவர்.

வாங்கிய செவ்வாழைப் பழங்களை ஸ்கூட்டியில் மாட்டிவிட்டு கிளம்பினார். வீட்டில் சாப்பிட ஸ்நாக்ஸ் இல்லை என்று மகள் சொன்னது நினைவுக்கு வர ஆர்யாஸ் பேக்கரியில் வண்டியை நிறுத்தியபோது குறவர் சமூகப் பெண், குழந்தையை கையில் வைத்து நின்று கொண்டு இருந்தார். அவரது ஐந்து வயது மகன் பக்கத்தில் நின்றிருந்தான். குளிக்காமல், தலையில் எண்ணெய் இல்லாமல் அழுக்கேறி இருந்தனர். கையேந்துவதே வாழ்க்கையானதால் இதே கோலம் இவர்களுக்கு இயல்பாக மாறி இருக்கலாம். அந்தப் பையன் அன்பழகனிடம்

"சார் பழம் கொடுங்கள்" என்றான்.

அவர் சிரித்துக் கொண்டே கடைக்குள் சென்றுவிட்டார். கடையில் நூற்றி ஐம்பது கிராம் மணிக் காரப்பூந்தி, ஒரு சிறிய சுருள் முருக்குப் பாக்கெட்,சிறிய எள் உருண்டை வாங்கியதற்கு எழுபத்தி ஐந்து என்றார்கள். நூறு ரூபாயில் மீதம் உள்ள தொகையில் ஐந்து ரூபாயை பையில் வைத்துவிட்டு இருபது ரூபாயை குறவர் சமூக சிறுவனுக்கு கொடுக்க வெளியே வந்தார்.

அவன் வெளியே அவர் வரும்போது கேட்க தயாராக நின்று கொண்டு இருந்தான்.

அவன் கையில் இருபது ரூபாயை அன்பழகன் கொடுத்தார். அவன் பழப்பையைப் பார்த்து,

"சார் பழம் கொடுங்க சார்."

"தம்பி பணம் கொடுத்துட்டேன். சரி பணத்தை எடுத்துக்கிறேன். பழம் வாங்கிக்க" என்று அவர் அவன் இடது கையில் வைத்திருந்த இருபது ரூபாய் பணத்தை தொட்டார். அவன் இடது கையை விரித்தேக் காட்டினான். அவனின் அம்மா கொஞ்சம் தள்ளிப் பார்த்துக்கொண்டு இருந்தார்.அவர் பையை எடுத்து ஒரு பழத்தை பிய்த்து அவனிடம் கொடுத்து விட்டு பணத்தையும் வாங்காமல் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

மகள் போன் செய்து சாப்பிட அழைத்தார். அதனிடம் பேசியதை நினைத்தபடி வண்டி ஓட்டியவர் இரயில்வேக் கேட்டை கடந்தபோது தான் அவருக்கு நினைவுக்கு வந்தது. அந்தப் பையனுக்கு எல்லாப் பழங்களையும் கொடுத்துவிட்டு வந்திருக்கலாமே என்று நினைத்தார். அவர் கடையின் கதவைத் திறந்தபோது அவன் வாழைப்பழங்களைத்தான் பார்த்துக்கொண்டு நின்று இருந்தான். இவை எல்லாவற்றையும் விட அவனிடம் பணம் வேணுமா. பழம் வேணுமா என்று கேட்டதுதான் அவருக்கு மனசாட்சியை உறுத்தியது. அந்தப் பணத்தை தொட்டபோது அவன் உள்ளேப் பதறி இருப்பான் என்ற நினைவு தான் ‘ஏன் இவ்வளவு கேவலமாக நடந்தோம்’ என்று தன்னையே நொந்து கொள்ளும்படியாக அவரை வாட வைத்தது.

பைபாஸிலிருந்து பைக்கைத் திருப்பி மீண்டும் வந்த வழியே சென்றபோது இரயில்வேக் கேட்டை மூடி இருந்தார்கள்.அவர் காத்திருந்தார்.பக்கத்திலிருந்த கோர்னோகார்பஸ் மரத்தில் கருப்பு மற்றும் புள்ளிக் குயில்கள் அமர்ந்திருந்தது. அந்த வெளிநாட்டு மரத்தால் சுற்றுச் சூழல் பாதிப்பு வருவதாக சொல்கிறார்கள். இதை ஏன் தடை செய்யவில்லை என தெரியவில்லை என்று நினைத்தார்.அவர் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள வீட்டிலும் அந்த மரம் உள்ளது. அங்கும் இதேப் போலக் குயில்கள் வந்து செல்லும்.

திரும்பி வீட்டிற்கு போகலாமா என பலமுறை யோசித்தார். ஏனோ அவரால் செல்ல முடியவில்லை. மதியம் சாப்பிட எல்லோரும் காத்திருப்பார்கள் என்ற கவலையும் அவரை தடுமாற வைத்தது. அவருக்கும் பசிக்க ஆரம்பித்தது. போன் வைக்கும் இடத்தில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தபோது பசி அடங்கியது.

இரயில் இஞ்சின் மாதிரி இருந்த ஒன்றில் ஆட்கள் மேலே நின்று கொண்டு மின் கம்பிகளில் ஏதோ சரி செய்தபடி சென்று கொண்டு இருந்தார்கள். மின்சாரத்தில் ஓடும் இரயிலுக்கு எலக்ட்ரிக்கல் வேலைகள் நடப்பதால் இதுபோல் அவ்வப்போது கேட் மூடுவது சமீபமாக அதிகமாக உள்ளது.

அன்பழகன் ஆர்யா ஸ்வீட்ஸ் கடையில் பார்த்தார். அவர்களைக் காணவில்லை. ஆஸாத் நகர்வரைச் சென்று பஸ் ஸ்டாண்டில் பார்த்தாலும் காணவில்லை.

அவரால் அந்த குற்ற உணர்விலிருந்து வெளிவர முடியவில்லை. அந்தப் பணத்தை தொட்டபோது அவன் உள்ளே எவ்வளவுப் பதறி இருப்பான். ஒரு வேலை ஐநூறு ரூபாய் கொடுத்திருந்தாலும் அவன் ‘பழம் வேண்டும்’ என்று தான் கேட்டிருப்பான் என்பதை அவர் இப்பொழுதான் புரிந்தார். குறவர் சமூகத்தின் மீது அவருக்கு எப்போதும் இறக்க உண்டு. தன் மகளிடம் அவர் அடிக்கடி சொல்லுவார்.

'நாம சொர்க்கம் வேணும்ன்னு ஆசைப்படறோம். அவர்களுக்கு நாம் வாழ்ந்துகிட்டிருக்கிற வாழ்க்கைதான் சொர்க்கம்மா.' என்று சொல்வார். 'எத்தனை மாற்றங்கள் வந்தாலும் ஏன் இவர்களின் கைகளில் செல் போன் வந்தாலும் எல்லா இடங்களிலும் இவர்கள் வீதிகளில் தான் கிடக்கிறார்கள்' என்பது இவரது நெடு நாளைய ஆற்றாமை.

ஆனந்தம் சில்க்ஸ் எதிராக செல்லும் மன்னார்குடி ரோட்டில் இரயில்வேக் கேட் வரை சென்றாலும் அவர்களைக் காணவில்லை. காவல் நிலைத்திற்குப் பக்கத்தில் உள்ள ரோட்டில் சென்று மறுபடியும் ஆர்யா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரிக்கே வந்துவிட்டார். பங்களா வாசலுக்கு சென்று பேட்டை சைடு பார்க்கலாம் என்று யோசித்தபோது மகள் போன் செய்தார்.

"தந்தையாரே...உங்க ஒய்ஃப் செம கடுப்பில் இருக்காங்க. சீக்கிரம் வாருங்கள் தந்தையாரே" என்றார்.

வேறு வழியில்லாமல் அவர் வீடு திரும்ப வேண்டியதாகிவிட்டது. அந்த முடிவிற்கு அவர் வந்தபொழுது ஏனோ அவரைச் சோகம் சூழ்ந்து கொண்டது. பங்களா வாசலைக் கடந்து அரைக் காசு அம்மா தர்காவிடம் வரும்போது அவருக்கு கொஞ்சம் நேரம் உட்கார்ந்தால் தேவலாம் எனத் தோன்றியது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் யாரும் இல்லை. அவர் பைக்கை நிறுத்திவிட்டு அந்தப் புங்க மர நிழலில் உட்கார பெஞ்ச் மாதிரி கடப்பாக்கல்லில் மேடை மாதிரி அமைத்து இருந்தார்கள். அதில் அமர்ந்து தலையை முட்டியில் வைத்து கண்களை மூடிய போது தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். கொஞ்ச நேரம் அழுததும் மனம் அமைதியாக மாறி இருந்தது. தண்ணீரில் முகத்தைக் கழுவிவிட்டு சுற்றி எங்கும் பார்த்தார்.

இரயில்வேக் கேட்டிற்குப் பக்கத்துக் கடையில் இருவர் பேசிக் கொண்டு இருந்தார்கள். பெனாசிர் அதிரசக் கடையும் பூட்டி இருந்தது. அரைக் காசு அம்மா தர்காவிற்குப் பக்கத்தில் இரவு டிபன் போடும் கடையில் யாரோ ஒரு பெண் படுத்திருந்தார். 'இந்தக் கடையை எப்போது மூடினார்கள்' என யோசித்தபடி அந்த வாழைப்பழங்களை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிடலாம் என பக்கத்தில் பைக்கை எடுத்துக் கொண்டு சென்றார்.

அந்தப் பழங்களை சாப்பிடும் பொழுதெல்லாம் அந்தப் பையன் நினைவு வரும் அவைகளை யாருக்காவது கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தார்.அதற்குத் தகுந்தாற்போல் அவைகளைக் கெடுக்க ஒருவர் கிடைத்ததில் அவருக்கு நிம்மதி. அவர் மனம் பழையபடி உற்சாக நிலைக்கு மாறி இருந்தது.

அங்கு வயதானப் பாட்டி படுத்து இருந்தார். சத்தமில்லாமல் பக்கத்தில் வாழைப்பழப் பையை வைத்துவிட்டு திரும்பி பைக்குப் பக்கத்தில் வந்துவிட்டார். பைக்கிற்கும் அந்தப் பாட்டிக்கும் நான்கு ஐந்தடி தூரம் அல்லது அதிகபட்சம் பத்தடி தூரம் இருக்கலாம்.

"தம்பி..." பாட்டி அழைத்ததில் அவருக்கு பற்கள் இல்லை என்பது குரலில் தெளிவாக தெரிந்தது.

அப்போது பேருந்து கடந்து சென்றதால் காதில் வாங்காததுபோல சென்றுவிடலாமா எனவும் அன்பழகன் நினைத்தார்.

இப்போது பாட்டி எழுந்து அன்பழகனை நோக்கி காலை நீட்டி உட்கார்ந்து இருந்தார். அன்பழகன் பக்கத்தில் சென்றார். பாட்டி பையிலிருந்து ஒருப் பழத்தைப் பிய்த்து 'சாப்பிட்டு போப்பா' என்றது.

அதை வாங்க அன்பழகன் யோசித்தபோது அவருக்குள் தோன்றியது.'அப்போது அந்தப் பையன் கிட்டே இந்த மனம் பண்ணினக் கூத்தில்தானே இப்படி அலைந்து கொண்டிருக்கிறோம்' என நினைத்து செவ்வாழைப் பழம் ஒன்றை வாங்கிக் கொண்டார்.

பழத்தைக் கொடுத்ததும் பாட்டி படுத்து விட்டார். பர்ஸில் இருந்த ஐந்து ரூபாயைப் பாட்டியை எழுப்பாமல் அது படுத்திருந்த வெள்ளைச்சாக்கில் வைத்துவிட்டு பழத்தை உறித்துச் சாப்பிட்டார். தோலை ஓரமாகப் போட்டார்.அவர் பைக்கின் மேல் அமர்ந்திருந்தக் காகம் ஒன்று அவர் வந்ததும் பறந்து போனது.

'அம்மாக்களுக்கு மட்டும் எப்படிப் பிள்ளைகள் பசித்திருப்பது தெரிந்து விடுகிறது' என்று சிந்தித்தவராக வீட்டை நோக்கி பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றார். நேரம் மதியத்தைக் கடந்து விட்டதாலும் மேகங்கள் நகர்வதாலும் வெயில் தணிந்து இருந்தது. அவரால் காற்றில் கலந்திருந்த குளிர்மையை உணர முடிந்தது.அது அவருக்கு உற்சாகத்தை மேலும் அதிகப்படுத்தி பயணத்தை இனிதாக்கியது.

ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.