கடிதம் எழுதி முடிக்கும் வரை யாரும் பார்க்காதது மனதிற்கு நிம்மதியாக இருந்தது. அதை எப்படியும் அஞ்சல் பெட்டியில் சேர்த்துவிட வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தேன். சன் ஜெராக்ஸில் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்தேன். அங்கு ஜெராக்ஸ் எடுப்பவர்கள் மட்டும் கும்பலாக நின்று கொண்டு இருந்தார்கள். கடைக்குளிருந்து பார்த்தால் தெரிகிறதா என்று அஞ்சல் பெட்டிக்கு நேராக நின்று பார்த்தேன். கலை மற்றும் வெற்றி பார்ப்பார்களோ என்ற கவலையில் இதை நான் உறுதிப்படுத்த வேண்டியதாக இருந்தது.
சட்டைப் பையில் இருந்த இன் லேண்ட் லெட்டரை எடுக்க கை வைத்தபோது அருள் செல்வன் போன் செய்தார். 'மல்லிப்பட்டினம் போஸ்ட் ஆபீஸில் வேலை பார்ப்பதாகத்தானே சொன்னார். அந்த ஆபீஸ் இண்டீரியர் ஒர்க் செய்து ஐடி அலுவலகம் மாதிரி மாற்றிய புகைப்படங்களை குழுவில் பதிவிட்டிருந்தார்'. ஒருவேளை இங்கு மாறுதலாகி வந்திருப்பாரோ என்று தயங்கியபடியே கைபேசியை எடுத்தேன்.
"என்ன... தலைவரே இங்க நின்னுகிட்டு இருக்கீங்க." "நீங்கள் எங்க இருக்கீங்க சார்." "ஒரு வேலையாக இங்க வந்தேன். உங்களைப் பார்த்ததும் போனடிச்சேன். இன்னுமா லெட்டரெல்லாம் எழுதிகிட்டிருக்கீங்க." "உங்களுக்கெல்லாம் வேலை கொடுக்கணுமா இல்லையா." "அது சரி. டீ சாப்பிடுவோமா." "கொஞ்சம் வேலை இருக்கு சார்."
அவரே போனை வைக்கிறேன் என்று சொல்லி வைத்துவிட்டார். போஸ்ட் ஆபீஸ் உள்ளே இருந்து பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். இப்போது கடிதத்தை போஸ்ட் பண்ண வேண்டாம் என்று வீட்டிற்கு கிளம்பிவிட்டேன்.
சென்னையிலிருந்த பத்து நாட்களில் அவைகள் வந்திருக்கும் என்று நினைத்தேன். நல்லிரவு ஒரு மணிக்கு இரயிலை விட்டு இறங்கி வீட்டிற்கு வந்ததும் முதலில் அவைகள் இருப்பதற்கான அடையாளம் இருக்கிறதா என்று பார்த்தேன். மகள் என் படுக்கையில் சத்தம் வருமாறு படுத்தார். நான் பதறியவனாக உள்ளே இருந்து பக்கத்தில் ஓடி வந்தேன்.
"நீ உள்ளே போயி படும்மா. குருவிகள் முழிச்சிரும்னு ஓடி வர்றார்." - மனைவி. "தந்தையாரே என்ன இது."
அவர் மின்விசிறி போடுவதற்கான பாவனைகள் செய்தார். நான் அவரை அடிக்க கையை ஓங்கினேன். பொய்யாக சத்தம் எழுப்பி உள்ளே ஓடினார்.
"ஆரம்பிச்சிட்டீங்களா. வீட்டைக் கூட்டி தொடைக்கிற வரைக்குமாவது ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியே இருக்கீங்களா."
ரிசப்ஷனில் என் பெட் ஒரு சுவருக்கு பக்கத்தில் இருக்க, என் தலைக்கு பக்கவாட்டில் உள்ள சுவர் ஓரமாகக் கிடக்கும் பெஞ்சில் படுத்தார். நான் எனது படுக்கையில் கிடந்த பாயை உதறிவிட்டு படுத்தேன்.
மேல் கூரையில் ஓடும் மின்விசிறியின் காற்று சுவர் ஓரமாக படுத்திருக்கும் எனக்கு வராததால் கொசுக்கடி அதிகமாக இருந்தது. அதுவும் வெளியே நகராட்சி டிரைனேஜ் போட்ட பிறகு கொசுக்கடி அதிகமாகிவிட்டது. அதனால் நான் சுவரில் மாட்டும் மின்விசிறியை சம்பூர்ணா எலக்ட்ரிகலில் வாங்கி மாட்டி இருந்தேன். மின்விசிறி மாட்டிய ஒரு மாதத்திற்குள் சிட்டுக்குருவி வந்து கூடு கட்டியது. அவைகள் முட்டைகள் பொறித்து குஞ்சுகள் சிறகுகள் முளைத்ததும் பறந்து சென்றுவிட்டது. சிட்டுக்குருவிகள் சென்றது எனக்குத் தெரியாது. அதனால் கூட்டை அப்புறப்படுத்தாமல் இருந்தோம். அப்போது போன் செய்த கபிலன் சார், 'கூட்டைப் பிரிச்சிராதீங்க. குருவிகள் மறுபடியும் வரும்' என்றார். அதன் பிறகான ஒரு நாளில் மனைவியும் நானும் தேநீர் குடித்துக்கொண்டு இருந்தபோது மனைவி சொன்னார்.
"கூடு கீழே தொங்குது. குருவிகள் கூட்டில் இருக்காது" என்றார்.
அதன் பிறகு என் மனைவி ஒரு வெள்ளிக்கிழமையில் வீடு ஒட்டடை அடிக்கும்போது அந்தக் கூட்டை எடுத்து வீசிவிட்டு மின்விசிறியைத் துடைத்து வைத்து இருந்தார்.
மனைவி, மகள் பெங்களூரில் இருந்தபோது நான் அவர்களைப் பார்க்க கிளம்பிய நாளின் மதியம் பச்சைப் புற்களைச் சுமந்து வந்து அவசரமாக கூடு கட்டியது குருவிகள். மாலையில் நான் கிளம்பும்போது அவைகள் குடியேறத் தயாராகி இருந்தது.
நாங்கள் பெங்களூரிலிருந்து வந்த கொஞ்ச நாட்களில் குஞ்சுகள் பொறித்துவிட்டது. கொஞ்ச நாட்களில் குஞ்சுகள் கத்த ஆரம்பித்துவிட்டது. கொஞ்ச நாட்களில் அவைகள் சிறகுகள் முளைத்து பறக்க ஆரம்பித்துவிட்டது. அவைகள் வரவேற்பறையில் பறந்து பழகுவது பார்க்க மனம் லேசாகும். ஒரு நாள் குஞ்சுகளோடு விளையாடிக்கொண்டிருந்த பெற்றோர் குருவிகளுள் ஒன்று வீட்டிற்குள் வழிமாறி ஹாலைக் கடந்து அறைக்குள் சென்றுவிட்டது எனக்குத் தெரியாது. அவைகளில் எது ஆண், பெண் என்ற வித்தியாசம் எனக்கு கண்டுபிடிக்கத் தெரியவில்லை. நான் அதைக் கண்டுபிடிக்கும் நோக்கில் இதுவரை அவைகளைப் பார்த்தது இல்லை. நான் சிறுநீர் கழிக்கச் சென்றபோது பீரோவின் பின்னால் ஜன்னல் ஸ்கிரீனில் ஏதோ சடசடக்கும் சத்தம் கேட்டது. நான் கவலைப்பட ஆரம்பித்தேன். இங்கு வந்து ஏதோ ஒரு குருவி கூடு கட்டிவிட்டதோ என்பதுதான் அந்தக் கவலை. ஏசி அவுட்டோருக்கு இருந்த ஓட்டையை சமீபமாகத்தான் அடைத்தேன். இங்கு கூடு கட்டினால் அவ்வளவுதான். மனைவி பிள்ளைகளை அழைத்து பஞ்சாயத்தைக் கூட்டி விடுவார். (நான் பேசி எல்லோரையும் சமாதானப்படுத்தி ஏற்றுக் கொள்ள வைத்து விடுவேன் அது வேறு விஷயம்.) ரிசப்ஷன் கூட்டுப் பிரச்சினையே கிண்டலும் கேலியுமாக எங்களுக்குள் ஏதாவது ஒரு நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இப்போது இது வேறையா என்று ஸ்கிரீனைத் தூக்கினால் அங்கு களைப்படைந்த நிலையில் ஒரு சிட்டுக்குருவி உட்கார்ந்து வெளியே செல்ல முயற்சித்துக் கொண்டு இருந்தது.
எதிர்ப்புகள் தெரிவிக்காத அதனை அப்படியேப் பிடித்து வெளியே கொண்டு வந்தேன். கடவுளே... இத்தனை மிருதுவாகவா அதன் சிறகுகள் இருக்கும். அதற்கு வலித்துவிடக்கூடாது என்று பாந்தமாக அதைப் பற்றி இருந்தேன். கைபேசியில் அதைப் படம் எடுக்க திறந்தபோது இடது கையிலிருந்து விடுவித்து வெளியே ஓடிவிட்டது.
குஞ்சுகள் மூன்று, பெற்றோர் குருவிகள் இரண்டு என்று அவைகள் மாலையில் ரிசப்ஷனில் பறந்து பறந்து கூடடைவது வேடிக்கை பார்க்கத் தூண்டும்.
இதுவரை வந்த குருவிகள் குஞ்சுகள் பொறித்துக் கொஞ்ச நாட்களில் சொல்லாமலேயே பறந்து போய்விடும். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் இவைகள் குஞ்சுகள் குருவிகளாக மாறியும் போவதாக இல்லை. மனைவி கூட்டைப் பிரித்து விடலாம் என்றார். காரணம் எனக்கு கொசுக்களின் தொந்தரவு அதிகமாக இருந்தது. உலகிலேயே கொசுக்கடியால் இறப்பவர்கள் அதிகம் என்று படித்ததும் எனக்கும் சரி, கூட்டைப் பிரிக்கச் சொல்லலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அப்போது தான் ஒரு எண்ணம் தோன்றியது. நாம் ஏன் ஏற்கனவே சுவரில் உள்ள மின்விசிறி போல் ஒன்றை வாங்கி பழைய மின்விசிறிக்கு கீழே மாட்டக்கூடாது?
"அடேய்... ரிஞ்சாய்ப் பயலே உங்க அப்பா பேனுக்கு கீழே இன்னொரு பேன் மாட்டுறாரான்டா. ஊர்லேர்ந்து பத்திரிகை கொடுக்க வர்றவங்க, வேற விருந்தாளிகள் வந்தா நான் என்னடா பதில் சொல்றது?"
"அவரைச் சொல்லச் சொல்லுங்க அம்மா. அதெல்லாம் அவருப் பார்த்துக்குவாரு. நீங்கள் நினைக்கிறதை அவர் யோசிச்சிருக்க மாட்டாரா?"
"உன் கிட்ட நான் சொன்னேன் பாரு" என்று போனைத் துண்டித்து விட்டார்.
இதைக் கேட்டுக் கொண்டு வந்த மகள், "என்ன தந்தையாரே அடுத்த சம்பவமா? நீங்க கலக்குங்க."
"நீ சும்மா இருக்கியா. நானே பணம் இல்லாம முழிச்சிக்கிட்டிருக்கேன். நீ வேற." "அம்மாகிட்டக் கேளுங்கப்பா." "விளக்கமாற்றால் அடிப்பாங்க. ஏற்கனவே கொலைக் காண்டுல இருக்காங்க." "அப்போ.... துரை அம்மாகிட்ட பணம் கேட்கணும்னு யோசிச்சு இருக்கீங்க." "நினைச்சது உண்மைதான். நான் வேற ஐடியா பண்ணிட்டேன்." "எனக்கு ஒரு டிரஸ் எடுத்து தரமாட்டேங்கிறார். உங்களுக்கு வாழ்வுதான்" என்று குருவிகள் இருக்கும் கூட்டை நோக்கி சொன்னார். "ஏம்பா நீங்க பதறுறீங்க. குருவிகள் கூட்டில இல்லைப்பா."
நான் சிரித்துக் கொண்டே மகளிடம் கேட்டேன், "பிரெண்ட்... நேத்து டிரஸ் எடுத்துக் கொடுத்தேனே பிரெண்ட்."
"அது நேத்து பிரெண்ட். அம்மா.. அப்பா திட்டுறார்ம்மா" என்று வீட்டிற்குள் ஓடினார்.
"என்னைய சமைக்க விடுறீங்களா, உங்களுக்கு பஞ்சாயத்துப் பண்ணக் கூப்பிடுறீங்களா? கரெக்டா மணியடிச்சது மாதிரி பசிக்குதுன்னு வந்து உட்கார்ந்துருவீங்க" என்று சமையலறையிலிருந்து அவர் சத்தமாகச் சொல்லிக்கொண்டு இருந்தார்.
நான் எனது திட்டப்படி மின்விசிறி வாங்கிவிடலாம்தான். கரண்ட் பில் கட்டும் மாசம் என்பதால் வீடு, ஆபீஸ் எல்லாம் பெரியத் தொகை வரும். அதைக் கட்டிவிட்டு பிறகு வாங்கலாம் என முடிவு எடுத்தேன். இதில் இரண்டு மூன்று நாட்கள் ஓடிவிட்டது.
சம்பூர்ணா எலக்ட்ரிகல்ஸில் சதீஷிடம் விவரங்களை சொன்னதும் சிரித்தார். "சிட்டுக்குருவிகள் அழிந்தே போயிடுச்சு சார்" என்றார். கடையில் உள்ளவரை குடோனில் தேடச்சொன்னார்.
"இப்போதே வேணுமா சார்? நான் ஆர்டர் பண்ணி வரவழைக்கவா சார்?" "இருந்தால் கொடுங்க. இல்லை என்றால் ஆர்டர் போட்டுக் கொடுங்கள்."
அவருக்கு போன் வந்து பேசி முடித்தபோது குடோனில் தேடச் சென்றவர் ஒரு பாக்ஸைத் தூக்கி வந்தார். நான் ஜிபேயில் பணத்தை அனுப்பிவிட்டு பேலன்ஸை பிறகு தருகிறேன் என்றேன். சதீஷ் சரி என்றார்.
"எலக்ட்ரீஷியன் இன்பன் வருவான் கொடுத்துவிடுங்கள்" என்று சொல்லிவிட்டு நான் கிளம்பிவிட்டேன். மாலை வரை இன்பன் வரவில்லை. போன் செய்தபோதும் எடுக்கவில்லை. இன்பனுக்கும் எனக்கும் சின்ன மன வருத்தத்தில் இரண்டு வருடமாக தொடர்பைத் துண்டித்துக் கொண்டார்.
அவரின் அண்ணன் ராபின்சன் தான் எனக்குப் பழக்கம். அவரிடம் பத்து பேருக்கு மேல் வேலை பார்ப்பார்கள். அவர்களில் ஒருவர் இன்பன். இன்பனும் அவர்களுடன் வேலை பார்க்கும் சக்தியும் நண்பர்கள். இவர்கள் இருவரையும் எனக்கு வேலைக்கு அனுப்ப வேண்டாம் என்று ராபின்சனிடம் நான் சொல்வது வழக்கம். இருவரும் பேசிக்கொண்டே வேலை பார்க்கின்றவர்களை வேலை பார்க்கவிடாமல் தொந்தரவு செய்வார்கள். பத்து வருடங்கள் கடந்து ஒரு நாள் வழியில் இன்பனைச் சந்திக்கும் போது எல்லோரையும் விசாரித்தேன். அப்போது ராபின்சன் மனநிலை பாதித்து மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார் என்றது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சக்தி சிங்கப்பூர் சென்று வந்து தஞ்சாவூர் செல்லும் போது விபத்தில் இறந்து போனதாக சொன்னார். ஜெயசீலன் மதுக்கூர் ஏரியாவில் வேலை பார்ப்பதாக சொன்னார். சிவமணி மருங்காப்பள்ளத்திலிருந்து ஈபி ஆபீஸ் வேலைக்குப் போவதாகவும் சொன்னார்.
அதிலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இன்பன் தான் எலக்ட்ரிக்கல் வேலைகள் செய்து கொண்டு இருந்தார். எனக்கு என் கிராமத்தில் உள்ள மோட்டார் ரிப்பேர், வீடுகளில் உள்ளப் பிரச்சினைகள், நண்பர்கள் வீட்டிற்கு அனுப்புவது என்று என்னிடம் இருபதுக்கும் மேற்பட்ட எலக்ட்ரீசியன் எண்கள் சேமித்து வைத்திருந்தவைகளைக் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு அவரே எல்லா வேலைகளையும் செய்தார். 'நான் வேலைக்கு வராம வேற யாராவது வந்தால் அவர்களிடம் சண்டை போடுவேன் சார். நீங்கள் கோவிச்சுக்கக் கூடாது' என்பார். அந்தளவிற்கு என் நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கும் பழக்கமாகின்ற அளவிற்கு நெருக்கமானார்.
பாலாயிக் குடிக்காடு நண்பன் ஜெயக்குமார் கட்டிய வீட்டிற்கு முழு வேலையும் இன்பன் தான் பார்த்தார். அவன் சென்னையில் இருப்பதால் அவன் போன் செய்தால் அவனுக்கான எல்லா வேலைகளையும் செய்து கொடுத்தார். இன்பன் இரண்டு மூன்று நாட்களாக போன் எடுக்காமல் இருந்தால் ஜெயக்குமாரிடமிருந்து எனக்கு போன் வரும். அப்போதுதான் இன்பன் அவனுக்கு வேலைக்குப் போனதே எனக்குத் தெரியவரும். நான் போன் செய்தால் 'நாளைக்கு முடிச்சுட்டுறேன் சார்' என்பார். என் மேல் அதிக மரியாதை வைத்து இருந்தார். நான் வேலைக்காரர் என்பதைவிட கிண்டலடித்து நண்பரைப்போலவே பழகினேன். பேதம் பார்க்காமல் பழகுவது எனது இயல்பான குணம்.
நான் மாடியின் மேல் பகுதியில் வசிக்கிறேன். கீழே உள்ள வீடு காலியாக உள்ளது. 'வீடு காலியாக உள்ளது' என்று உள்ள கேட்டின் விளம்பரத்தைப் பார்த்து எனக்கு பலர் போன் செய்தார்கள். ஹவுஸ் ஓனர் 'நீங்கள் யாரையாவதுப் பார்த்து முடிவு எடுத்து சொல்லுங்கள்' என்றார். கீழ் வீட்டு பாத்ரூமிலும் ரூம் சீலிங்கிலும் தண்ணீர் ஒழுகுவதால் பெயிண்ட் எல்லாம் அடித்துப் பார்த்தும் நிற்காததால், நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் சொன்ன 'மேல் வீட்டு பாத்ரூமை உடைத்துப் பார்க்கும் வேலையை' கீழ் வீட்டிற்கு ஆட்கள் வருவதற்குள் தற்போது ஹவுஸ் ஓனர் செய்து கொண்டு இருந்தார். நாங்கள் கீழ் வீட்டின் பாத்ரூமைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தோம். நான் வெளியே பின்புறம் இருந்த டாய்லெட் மற்றும் பாத்ரூமைப் பயன்படுத்திக் கொள்வதாக சொன்னபோது ஹவுஸ் ஓனர் என்னைத் திட்டினார். 'உள்ளே உள்ளதை யூஸ் பண்ணுங்க சார்' என்றார்.
சிறுவயதிலிருந்தே நாங்கள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிக்கும் பழக்கம் உடையவர்கள். பசங்க பள்ளி வயதில் படிக்கும் போது 'காலை மாலை குளிக்கிறவங்க கையைத் தூக்குங்க' என்று மிஸ் கேட்டபோது எங்க பசங்க தான் கையைத் தூக்கி இருக்கிறார்கள்.
'எவனுமே குளிக்க மாட்டேங்குறான். நீங்க எங்கள குளிரிலும் சாவடிப்பீங்க' என்று பையன் மனைவியிடம் சொல்லிக்கொண்டு இருப்பான். பெற்றவர்களைப் பார்த்துதான் பிள்ளைகள் வளர்கிறார்கள். பிள்ளைகளைக் குறை சொல்வதை விட்டு விட்டு பெற்றவர்கள் ஒழுங்கியலில் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற ஆள் நான்.
நான் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தபோது வீட்டிற்கு கீழே புதிதாக வாடகைக்கு வருவதாக ஒரு குடும்பம் வந்து கேட்டார்கள். 'நாங்கள் தான் போனில் பேசினோம். காலையில் வந்து பார்த்துவிட்டு போனோம்' என்றார்கள்.
"ஆமாங்க. ஹவுஸ் ஓனர் சொந்தக்காரர் அழைத்து வந்தார்" என்றார் மனைவி. நான் மனைவியிடம் 'சாவியை எடுத்துக்கொடு' என்றேன். "ஹவுஸ் ஓனர் கிட்டே போன் பண்ணி சொல்லிட்டு கொடுங்கள்" - மனைவி. படியில் நின்றபடி அந்தப் பெண், "நாங்கள் போனில் எல்லாம் பேசி முடித்து விட்டோம். சும்மா பார்க்க தான் வந்தோம்" என்றார்.
நான் சாவியைக் கொடுக்கச் சொல்லி மனைவியிடம் சொன்னேன். சாவியை வாங்கியதோடு அவர்கள் கீழே குடியேறி விட்டார்கள். நான் அதிர்ச்சியடைந்து ஹவுஸ் ஓனருக்கு போன் செய்தால் அவர், 'நீங்கள் ஏன் சாவி கொடுத்தீர்கள்? லேடீஸ் எப்படி சார் டாய்லெட் போவாங்க? அவர்களைப் போய்விட்டு இரண்டு மூன்று நாட்கள் கழித்து வரச் சொல்லுங்கள்' என்றார்.
இதை அவர்களிடம் சொல்ல எங்களுக்கு விருப்பமில்லை. ஒரே இடத்தில் இருப்பவர்கள் சண்டை செய்து கொண்டால் அமைதி குலையும் என்று சிந்திக்க கூடிய ஆள். அடிதடி வெட்டுக் குத்துக்குப் பழகிய உறவுகளை விட்டு தனித்து வந்து இருப்பதால் ஹவுஸ் ஓனரே சொல்லட்டும் என விட்டுவிட்டேன். நான் சாவி கொடுத்தது தவறு எனத் தோன்றியது. நான் இன்னார் என்று சொல்லி வீட்டைப் பூட்டிவிட்டு வந்தால் மறுபடியும் இங்கு வரவே அவர்கள் பயப்படுவார்கள். என் பின்புலத்தைப் பார்ப்பதை விட என் குணத்தைப் பார்த்துப் பழக வேண்டும் என்று நினைப்பேன். குடும்பத்தில் மனைவி பிள்ளைகளை அப்படித்தத்தான் பழக்கி இருக்கிறேன்.
ஒரு மணி நேரத்தில் அவர்கள் கீழ் வீட்டிற்கு குடி வந்துவிட்டார்கள். என் மனைவிக்கு மதியம் தான் பெண்களின் மாதப் பிரச்சினை வந்தது. அதில் அவர் அவதிப்படுவார். அதை நினைத்து அழுதார். ஹவுஸ் ஓனர் மீது மிகுந்த வருத்தமடைந்தார். நாங்கள் எல்லோரும் நண்பர்களாகப் பழகியவர்கள். இந்த அசௌகரியமான சூழல் மனைவியை நிலைகுலைய வைத்தது. ஹவுஸ் ஓனர் அவர்களை அனுப்பி விடுவார் என்று நம்பினார். இனி அதற்கு வாய்ப்பில்லை என்றதும் அழுது கொண்டே கீழ் வீட்டின் பின்புறம் பல வருடங்கள் பயன்படுத்தாமல் கிடந்த பாத்ரூம் மற்றும் டாய்லெட்டில் குளித்துவிட்டு வந்தார். இதற்குள் ஹவுஸ் ஓனர் அவரின் மாமனார் இவர்களைப் பார்க்கச் சொன்னதாக என்னிடம் வருத்தப்பட்டார். அதன் பிறகு அவரின் மாமனார் பேசினார். 'அவர்களைத் தொரத்தி விடுங்க சார். நீங்க வெளியே சுத்துற ஆள். உங்க வைஃப் எப்படி சார் டாய்லெட் போவாங்க?' என்றார். அவரது உறவுக்காரர் கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு வெகுளியான ஹவுஸ் ஓனரின் குடும்பத்தை பலியாக்கிவிட்டார் என்பது எனக்கு தெளிவாக புரிந்தது.
மனைவி குளித்துவிட்டு மேலே வரும்போது அழுது கொண்டே வந்தார். 'அவர்கள் பின்பக்கம் உள்ள லைட்டை ஆஃப் பண்ணி விட்டார்கள்' என்றார். எனக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. ஆனாலும் ஹவுஸ் ஓனர்களை நினைத்து பொறுமை காத்தேன்.
அடுத்த நாள் இன்பனுக்கு காலையிலேயே போன் செய்து, நான் ஏற்கனவே மொட்டை மாடிக்கு ஏறுவதற்காக எங்கள் ரூமிலிருந்து ஏசி அவுட்டோர் ஓட்டை வழியாக வயர் இழுத்து பல்ப் போட்டு இருந்தேன். அது பீஸ் போனதிலிருந்து மாற்றவில்லை. அதிலிருந்து லைன் எடுத்து கீழே உள்ள பாத்ரூம் வாசலில் பல்பை போடச் சொல்லிவிட்டு நானும் மனைவியும் தஞ்சாவூர் வந்துவிட்டோம். வீட்டில் டாய்லெட் வேலை நடப்பதால் மாமாவை ஊரிலிருந்து வரவழைத்து வீட்டில் வைத்து விட்டு கிளம்பி விட்டோம்.
நாங்கள் மாலை வீட்டிற்கு வந்தால் லைட் போடப்படாமல் இருந்தது. டாய்லெட் வேலை முடித்திருந்தார்கள். இன்று இரவு கீழே உள்ள பாத்ரூமைத்தான் பயன்படுத்த வேண்டும்.
"நான் காலையிலேயே உங்கிட்டையும் சொல்லிவிட்டு தானே சென்றேன்" என்றேன் மாமாவிடம். "இன்பன் வரலைப்பா. வேற ஒரு ஆள் வந்து ஏதேதோ பார்த்தான். என்கிட்ட கேட்டான். இன்பன் கிட்ட கேட்கச் சொன்னேன்" - மாமா. "இன்பன்கிட்டக் கேட்கச் சொன்னேன், மயிர்கிட்ட கேட்கச் சொன்னேன்னு... வந்தவன் கிட்ட ஒரு பல்ப் போட சொல்ல முடியல."
கடுப்பானதோடு இன்பனுக்கு போன் செய்தேன். "சார்... மாமாகிட்டே அவன் கேட்டு இருக்கான். அவர் ஒன்னும் தெரியலைன்னு சொன்னாராம். அவன் வந்துட்டான் சார்." "காலையிலேயே நான் உங்களைத் தானே வரச்சொன்னேன். இங்க ஒருப் பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு. இன்னைக்கு கண்டிப்பாக மாத்தணும்னு சொன்னேனே."
இன்பன் சிரித்தார். "நாளைக்கு கண்டிப்பாக மாத்திவிடுகிறேன் சார்" என்று சொல்லி மீண்டும் சிரித்தார். சிரிப்பது அவரது மேனரிசம். நான் கோபப்படுவதை அவர் கவனிக்க மறந்தார்.
"சிரிக்காதீங்க கடுப்பாவுது. மயிரப் பிடிச்சுக்கிட்டு" என்று கடுப்பாக சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விட்டேன்.
கோபம் குறையாததால் இன்பன் இருக்கும் சேட்டுக் கடைக்கு சென்றேன். அங்கு இன்பனைக் காணவில்லை. இன்பனுக்கு ஆயிரம் ரூபாய் ஜிபே செய்துவிட்டு, ஆட்டோ ஓட்டும் சுதாகருக்கு போன் செய்து கார்த்தி என்ற எலக்ட்ரீசியனை வைத்து லைனை இழுத்துப் பல்பை மாட்டியபோது இரவு மணி எட்டாகி இருந்தது. கீழ் வீட்டில் உள்ளவர்களிடம் பின்புறம் லைட்டை இனி போட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு தான் நான் நார்மலுக்கு வந்தேன்.
நான் குளித்து முடித்த போது இன்பனுக்கு நான் அனுப்பிய பணம் திருப்பி அனுப்பப்பட்டிருந்தது. 'பணம்தானே உனக்கு முக்கியம், இந்தா அந்தப் பணம்' என்று நினைத்து நான் போட்ட பணத்தின் நோக்கம் புரிந்து இன்பன் பணத்தை திருப்பி அனுப்பிவிட்டார்.
காலையில் ஹவுஸ் ஓனர் சங்கடப்பட்டுக்கொண்டு மேலே வீட்டிற்கு வரவில்லை என்று மனைவி சொன்னார். எனக்கு வேலைகள் முடிந்துவிட்டதாக ஹவுஸ் ஓனர் போன் செய்தபோது லைட் மேட்டரை சொன்னதோடு விடாமல் "நீங்கள் வாங்கி வைக்கச் சொன்ன சாமான்களை வாங்கி வண்டியில் வைத்து விட்டு மேலே வந்துவிட்டு கீழே போனால் காணும் சார். உங்கள் சாமான்கள் என்பதால் சும்மா இருந்துவிட்டேன். என்னோட சாமான்கள் எதையாவது தூக்கினா, பூட்டைப் போட்டு வெளியே துரத்தி விட்டுடுவேன் சார்" என்று சொன்னபோது அவர் மௌனமாக இருந்தார்.
அந்த வீட்டில் உள்ள பிள்ளைக்கு கல்யாணம் என்றதும் சேலை, சட்டை எடுத்துக் கொடுத்தது என்று அது ஒரு பெரிய கதை நீண்டு கொண்டே போகும்.
இப்போது இன்பனுக்கு வருகிறேன். அதன் பிறகு நான் எத்தனை முறை போன் செய்தாலும் அவர் எடுக்கவே இல்லை. எனக்கு கோபம் அதிகமானது, இவரை நம்பி நம்மிடமிருந்து எலக்ட்ரீசியன் காண்டாக்ட்டை விட்டுவிட்டோமே என வருந்தினேன். போன் பல முறை செய்தும் எடுக்காததால் ஒரு கடிதம் எழுதி வாட்ஸ்ஆப்பிற்கு அனுப்பினேன். அதற்கும் எந்தப் பதிலும் இல்லை. இப்படியே ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. கீழே உள்ளவர்கள் ஒரே மாதத்தில் காலி செய்துவிட்டார்கள். மகளின் திருமணத்திற்காக தந்திரமாக எடுத்து இருக்கிறார்கள். கமிஷன் பணத்திற்காக ஹவுஸ் ஓனர் உறவினரோடு சண்டைகள் நடந்ததாகவும், பணம் வாங்கினார்களா இல்லையா என்று தெரியாது என்றார் மனைவி.
இரண்டு வருடங்கள் கழிந்த ஒரு நாளில் ஜெயக்குமார் போன் செய்து 'இன்பன் வரலை, போன் செய்து வரச்சொல்' என்றான். "அவன் என் போனை எடுக்க மாட்டான்" என்றேன்.
இதைக் கேட்டதும் ஜெயக்குமார் கோபம் அடைந்தான். நான் விவரங்கள் சொன்னதும் அவன் கோபம் அதிகமானது.
"பரதேசிப்பய... நீ பேசமாட்டியான்னு ஒரு கூட்டமே தவமா தவம் கிடக்குது. நீ யாருன்னு அவனுக்குத் தெரியுமா? இதுல லெட்டர் மயிரு வேற. நீ தான் எல்லோரையும் கெடுத்து வைப்பே. அந்த லெட்டரை அனுப்பி விடு, நான் கூப்பிட்டு கேட்கிறேன்." "இல்லை நீ கேட்க வேண்டாம். நான் அவனுக்கு பேசுறேன்." "உன் கௌரவத்தை விட்டுட்டு நீ பேச வேணாம். அப்படி ஒன்றும் இந்த வேலையை செய்ய வேண்டாம். வேற ஆளை வைத்து செஞ்சுக்குவோம்." "கோபப்படாதே. எனக்கு பேசுவதில் எந்த சிக்கலும் இல்லை. வாழ்க்கையில் நமக்கு சிக்கலான சங்கடங்கள் வரும்போது கௌரவம் அது இதுன்னு தலையில தூக்கி வச்சுக்கக் கூடாது. 'நான்' எனும் அகங்காரத்தை அழிக்கச்சொல்ற நானே அதைப் பிடித்து தொங்கலாமா?" "என்னால முடியாது சாமி. நீ அந்த லெட்டரை அனுப்பு."
அவனுக்கு இன்பனின் வாட்ஸ்ஆப் பகுதியில் உள்ள கடிதத்தை அனுப்பினேன். நானும் ஒரு முறை மீண்டும் படித்தேன்.
வணக்கம் இன்பன். இதை எழுத மிகவும் அசௌகரியப்பட்டே எழுதுகிறேன். ஒருவன் மன வேதனையோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுது நீங்கள் தான் சிரித்தீர்கள். இந்த விஷயத்திற்கு பிறகு வருகிறேன்.
முதலில் நீங்கள் என்னுடன் வேலைக்காரனாக பழகவில்லை. உங்களிடம் நான் மற்றும் என் குடும்பத்தினர்கள் அனைவரும் வேலைக்காரர் என்பதைத் தாண்டித்தான் பழகினோம்.
நீங்கள் வேலை பார்த்த, இனி பார்க்கப்போகின்ற எவரும் என்னைப்போல கிண்டலும் கேலியுமாக பழகி இருக்கிறார்களா என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்கவே இல்லை.
இங்கு பணத்தைப் போராடித்தான் சம்பாதிக்க வேண்டியதாக உள்ளது. நல்லவர்கள் உங்கள் வாழ்வில் வரும்பொழுது அவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் இன்பன்.
நான் உங்களை நண்பனைப் போல பழகியதால்தான் உரிமையோடு எல்லா வேலைகளையும் சொல்லி இருக்கிறேன்.
தினம் நான் உங்களைப் பற்றி வீட்டில் மேடத்திடம் கிண்டலடித்து விட்டுத்தான் தொடர்ந்து போன் அடிப்பேன். அதை கிண்டலாகத்தான் நகர்த்தினேன்.
முதலில் மனிதர்களை இனம் பிரித்து அடையாளம் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பணம் கொடுப்பதற்காக வேலைகள் பார்க்கிறோம் என்று நினைத்திருந்தால் தவறு உங்களுடையது. உங்களை நான் தவறாக புரிந்து கொண்ட நானும் தவறுடையவன். நம்ம இன்பன் என்று நினைத்தேன்.
உங்களோடு சிரித்து சகஜமாக பேசுகிற என்னைத்தான் உங்களுக்கு தெரியும். பழகிவிட்டால் செருப்பாகவும், கௌரவம் என்று வந்தால் அதை உச்சத்தில் வைத்து பார்க்கிற ஆள்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். உங்களை நான் எந்த தரக்குறைவான வார்த்தைகளையும் சொல்லவில்லை. நான் வேதனையோடு வெறுப்பாக பேசும்போது நீங்கள் தான் சிரித்தீர்கள். "சிரிக்காதீங்க கடுப்பாவுது மயிறப்புடுங்கிக்கிட்டு" என்றேன். வேறு எந்த கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை.
நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? உடனே மேடத்திற்கோ மாமாவுக்கோ போன் செய்து 'என்னாச்சு சார் கோபப்படுகிறாரே' என்று கேட்டு இருக்கவேண்டும். அப்போது அவர்கள் சொல்லி இருப்பார்கள். நான் உங்களிடம் பேசிவிட்டு நேராக சேட்டுக் கடைக்குத்தான் வந்தேன். அங்கு ஒரு ஆள் மட்டும் உட்கார்ந்திருந்தார். சேட்டைக் காணவில்லை. அதன் பிறகு தான் உங்களை கிண்டலடிக்க பணத்தை அனுப்பினேன்.
அன்றைய நாளைக்கு அடுத்த நாள் எனக்கு டாய்லெட் ரெடியாகிவிடும். அதற்கு முதல் நாள் இரவு பின்பக்க லைட்டை ஆஃப் செய்துவிட்டார்கள் கீழ் வீட்டிற்கு புதிதாக வந்தவர்கள். என்னால் அவர்களை எதுவும் செய்ய முடியும், ஆனால் நான் அதுபோன்ற ஆள் இல்லை என்பது உங்களுக்கு தெரியும். ரோசப்பட்டால் நான் எந்த லெவலுக்கு போவேன் என்பது நீங்கள் அறியாதது. உங்களிடம் பேசிய இரவு எட்டு மணிக்கு எலக்ட்ரீசியனை அழைத்து வந்து பல்பை மாட்டி, 'உங்கள் லைட்டை ஆஃப் பண்ணுங்க'ன்னு அன்று இரவே சொல்லிட்டேன். இதை அடுத்த நாள் செய்ய முடியாது இன்பன்.
மாமா இரவில் பைக் ஓட்ட மாட்டார். அவரிடம் நான் 'வேலைக்காரர் போகும்போது எனக்கு போன் செய்யக்கூடாதா' என்று கேட்டதால், கடுப்பாகி பட்டுக்கோட்டையிலிருந்து இரவு பைக்கிலேயே ஊருக்கு போயிட்டதாக மேடத்திடம் சொன்னாராம்.
நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? 'சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க யாராவது இருக்காங்களான்னு பார்க்கிறேன்' என்று ஒரு பொய் நாடகத்தையாவது அரங்கேற்றி இருக்கவேண்டும். அன்று வேறொரு மிகப்பெரும் பிரச்சினை. தஞ்சாவூருக்கு மேடத்தை அழைத்து சென்று விட்டு என்னிடம் கேட்காமல் கீழே ஆள் வைத்ததற்கு சண்டை போட்டு, ஓனர் வீட்டில் பெரும் சண்டையாகி அதை நான் சமாதானப்படுத்தி... இது போல பல நிகழ்வுகளால் இருந்ததால்தான் உங்களை நான் மதியமே போய் 'அதை ஏதாவது செய்து விடுங்கள் இன்பன்' என்றேன்.
எனக்கு அசிங்கம், சிக்கல் என்றால் அதில் தலையிட உங்களுக்கு உரிமை இருக்கிறது. நீங்கள் என்னிடம் பேசுங்கள், பேசாமல் போங்கள் அது உங்கள் விருப்பம். உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எப்பொழுதும் வந்து நிற்பேன். அதுதான் நான்.
இதை என் எதிரியாக நினைக்கும் என் ஊர்க்காரர்களும் உங்களுக்கு பழக்கம்தான், அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.
ஊர்ல இடத்துக்கு பதினைந்து லட்சம் அட்வான்ஸ் கொடுத்து பணத்தை என்னிடம் கொடுத்த பிறகு அக்ரிமெண்ட்டை தரமுடியாது என்று சொன்னேன். அவர்கள் எதுவும் சொல்லாமல் போய்விட்டார்கள். அது ஒரு பெரிய கதை. இப்போது கூட ஆனந்தன் சொல்வான், 'அண்ணன் செலுவுக்கு பணம் தேவைப்படுது அதை கொடுத்து விடுங்கண்ணே' என்பான்.
ஆனால் அவர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள். நான் அந்த வேலையை ஒரு பொழுதும் செய்யமாட்டேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. ஏதோ கோபத்துல வச்சிருக்கார் என்று போயிட்டாங்க. கோர்ட்ல போட்டா டபுளாக இப்போதும் பணத்தை வசூலிக்க முடியும். எதிரி கூட என்னை புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை புரிய வேண்டும் நீங்கள். இதெல்லாம் சமீபமாக நடந்துதான்.
ஒருவர் எதை பெரிதாக எடுப்பார் என்பது அவரவரைப்பொறுத்தது. மகளுக்கு சப்பாத்தி வேலைக்காரி கூடுதலாக கொடுக்கவில்லை என்று சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்த உடனே ரிட்டர்ன் போனவர்களை உங்களுக்குத் தெரியாது. அம்பானி வீடுகளில் எது பிரச்சினையாக இருக்கும் என்பது இங்கு எவருக்கும் தெரியாது. அவர்களை நெருங்கி பார்க்கும்போது தான் நாமே அதிர்ச்சியடைவோம், இதற்கு ஏன் இத்தனை பிரச்சினை செய்து கொள்கிறார்கள் என்று.
நீங்கள் உங்கள் போனை உங்கள் வேலைக்காரனை விட்டு அடுத்த நாள் எடுக்காமல் இருந்தால், நேராக உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் மனைவி முன்பு திட்டி விட்டு வந்திருப்பேன். உங்களுக்கு நான் யார் என்பது அப்பொழுது புரிந்திருக்கும்.
அன்று இரவே லைட்டை ஆஃப் பண்ணுங்கன்னு சொன்ன நான் தான், இரண்டு ஆளை விட்டு வீட்டிற்கு முன்பு உள்ள எல்லாத்தையும் கிளீன் செய்து விட்டிருக்கிறேன் இன்று. இப்பதான் அவர்கள் இரண்டு பேரும் கூலி வாங்கிட்டு போகிறார்கள். அவர்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கல்யாணம். பாவம் ஏழைகள் பல பேர் வருவார்கள். நாம் சுத்தம் செய்து விடலாம் என்று செய்யச் சொல்லிவிட்டேன்.
ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? அவர்களிடம் நான் எந்த சண்டையும் போடவில்லை. ஆனால் தெருவை கல்யாணத்திற்கு அழைத்தவர்கள் என்னை அழைக்கவில்லை. அதை விடுங்கள்.
நீங்கள் தவறு செய்து விட்டு நான் தொடர்ந்து கால் அடித்ததால், ஏதோ நான் குற்றவாளி என்பது போல போன் எடுக்காமல் இருப்பது, நம்பரை பிளாக் பண்ணுவது... இதெல்லாம் உங்கள் குணம் என்றால், எல்லோரையும் அரவணைத்து செல்வது என் குணம். உங்களுக்காக என் குணத்தை நான் ஏன் மாற்ற வேண்டும்? நீங்கள் காசுக்காக, வேலைக்காக என்னிடம் பழகி இருந்தால் அது உங்கள் தவறு. நானா சம்பூர்ணா ராஜாமாணிக்கத்திடம் சொல்லி வைத்தேன், 'எங்க சார் உங்க எலக்ட்ரீசியனை காணும்' என்று கேட்கும் அளவிற்கு.
கடந்த ஏழெட்டு வருடங்களில் ஒரு ஸ்குருகூட நான் வாங்கி இருப்பேனா? அதற்கு முன்பு நீங்கள் யாராவது ஏதாவது ஒரு ஸ்குரு வாங்கி இருப்பீர்களா? நான் வாங்கி வைத்ததைத்தான் நீங்கள் வந்து வேலை செய்துவிட்டு போவீர்கள்.
மேலும் வேறு எலக்ட்ரீசியன் எனக்கு, என்னை சார்ந்தவர்களுக்கு வேலை பார்த்திருக்கிறார்களா என்பதையாவது நீங்கள் சொல்லுங்கள்.
பலமுறை உங்களிடம் சொல்லி இருக்கிறேன், 'என்கிட்ட வேற எலக்ட்ரீசியன் நம்பர் இல்லைங்க' என்று. பட்டுக்கோட்டையில் இருக்கும் பெரும்பாலான எலக்ட்ரீசியன்களை எனக்கு தெரியும் என்பது உங்களுக்கு நன்கு தெரியும்.
என்னிடம் 'என்னையத் தாண்டி எவனாவது இங்க வேலை பார்த்திருவானா' என்று ஒரு முறை சொல்லிச் சிரித்தீர்கள், அதை உண்மை என்று நம்பினேன்.
நீங்கள் என்னை இவ்வளவு கேவலமாக நினைத்திருக்க கூடாது. நான் உங்களை வேலைக்காரனை விட நண்பனாக நினைத்ததால்தான் அடுத்த நாள் கிண்டலாக மெசேஜ் போட்டேன். அதன் உள் அர்த்தத்தை நீங்கள் புரியாதது உங்களின் துரதிர்ஷ்டம்.
மற்றபடி நீங்கள் ரோசக்காரராகவே இருங்கள். சாருக்கு என்ன சிக்கல் என்று மேடத்திடம் கேட்காத உங்களை நான் எப்படி என்னவென்று நினைப்பது நீங்களே சொல்லுங்கள் இன்பன்.
மேலும் இதை உங்கள் மனைவி மற்றும் மகளிடம் அவசியம் அனுப்பி படிக்கச் சொல்லுங்கள். அவர்கள் நீங்கள் செய்தது சரி என்றால் அப்படியே இருந்து கொள்ளுங்கள். விளக்கமாற்றால் அடித்தால் என்னிடம் அதை சொல்லாமல் எனக்கு போன் செய்யுங்கள்.
வேலை பளு காரணமாக இதை அப்பொழுதே எழுத முடியவில்லை. இன்று போன் அடிப்போம், எடுக்கவில்லை என்றால் எழுதிப் போட்டு விடலாம் என்று நினைத்தேன். எழுத்து வேலை கொடுத்ததற்கு நன்றி.
கடைசியாக இன்பன், உங்களுக்காக எல்லாம் யாவரையும் அரவணைத்து செல்லும் என் இயல்பான குணத்தை எப்பொழுதும் மாற்ற முடியாது இன்பன்.
நான் போன் செய்தது இந்த வகையில்தான், அதை நீங்கள் புரிய வேண்டும் என்று தான் இதை விரிவாக எழுதினேன். என்ன செய்யிறது பழகித் தொலைச்சுட்டேனே..... நன்றி பேரன்புடன் ......
நான் படித்து முடிக்கும் போது ஜெயக்குமார் போன் செய்தான். "எப்படி உன்னால இப்படி இருக்க முடியுது? இதைப் படிச்சிட்டு அவன் உனக்கு போன் பண்ணலையா? இனிமே நீ அவனுக்கு போன் பண்ணினே, நான் கடுப்பாயிருவேன்." "நீ போனை வைடா முதல்ல."
இன்பனுக்கு போன் செய்தேன். அவர் எடுத்துப் பேசினார். "சொல்லுங்க சார்." "ஜெயக்குமாருக்கு வேலைக்கு போறேன்னு சாமான்கள் வாங்கி வீட்ல கிடக்காம்ல." "ஆமாம் சார். நாளைக்கு வேலையை முடிச்சிட்டு, உங்களுக்கு போன் பண்றேன் சார்." "நான் படுத்து இருக்கிறதுக்கு மேல ஒரு பேன் மாட்டணும். நீங்க தான் வரணும்." "போன் பண்ணுங்க சார் வர்றேன்." "போனை நீங்க எடுத்தாதானே நான் பேச முடியும்."
வழக்கமான சிரிப்பைச் சிரித்து விட்டு வைத்து விட்டார்.
ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு நான் இன்பனைப்பற்றி கண்ட ஒரு மோசமான கனவினால் அவரைத் தேடி அவர் இருக்கும் கடைக்கு சென்றேன். அவரைக் காணவில்லை. அந்த நினைவில் இருக்கும்போது ஜெயக்குமார் போன் செய்தான். "இன்பன் நாளைக்கு வர்றேன்னுட்டாப்ளே." "மனுஷனா நீ. போன் பண்ண வேண்டாம்னு சொல்லத்தான் கால் செய்தேன்." "போன் பண்ணாம இருந்தாத்தான் நான் ஓஞ்சாதிக்காரனா ஆயிருவேனே." "ம்... ஆரம்பிச்சிட்டியா. நான் வைக்கிறேன்."
அன்று மாலை ஆட்டோ சுதாகர் பேனை எடுத்து வந்து வீட்டில் போட்டுவிட்டு சென்றுவிட்டான். இதை இன்பனிடம் சொல்லிவிட்டேன். இன்று இன்பன் வரவில்லை. சிட்டுக்குருவிகள் ரிசப்ஷனில் அங்கும் இங்கும் பறந்து திரிந்தது. மனைவி மற்றும் மகள் வந்தால் ஓடி விடுகிறது.
அடுத்த நாள் மாலை ஆறு மணிக்கு இன்பனிடம் வேலை பார்க்கும் பெரியவர் வந்தார். அவரைப் பார்த்ததுமே எனக்கு கோபம் வந்தது. பழைய நிலைமை என்றால் திருப்பி அனுப்பி இருப்பேன். ஏற்கனவே கிச்சன் சிங்கில் கீழே தண்ணீர் லீக்காவதை சரி செய்வதாக ஏதோவொன்றை தலைகீழாக மாட்டி, பிறகு வேறு ஒருவரை இன்பன் அனுப்பி சரி செய்ததாக மனைவி சொல்லி இருந்தார்.
நான் தயங்காமல் 'இருட்டப்போகுது நாளைக்கு பார்க்கலாம்' என்று சொல்லி இருக்க வேண்டும். அவர் பேனைப் பிரித்து வைத்து வேலையை செய்ய ஆரம்பித்த போது ஒரு சிட்டுக்குருவி வெளியே சென்றது.
பேனின் றெக்கைகள் மறைக்கும் தட்டை மாட்டும் போது மிகவும் சிரமப்பட்டார். அவருக்கு இது போன்ற பேனை மாட்டிய அனுபவம் இல்லை என்பது புரிந்தது. ஒரு வழியாக எல்லாவற்றையும் மாட்டிய பிறகு அதை தூக்கி சுவரில் வைத்து ஓட்டைகள் போட அளவுகள் எடுத்தபோது ஒவ்வொரு சிட்டுக்குருவிகளாக வெளியே பறந்தது. காலையில் மாட்டி இருக்கலாமோ, அது ஓய்வு எடுப்பதை தொந்தரவு செய்து விட்டோமோ என்றும் நினைத்தேன். பல முறை இரவு நேரங்களில் ரிசப்ஷனில் பறந்து விளையாடும்போது சீலிங்கில் ஓடும் பேனில் அடிபட்டு விடுமோ என்று அதை ஆஃப் செய்து இருக்கிறேன். எலக்ட்ரீசியன் போனதும் வரும் என்று விட்டு விட்டேன்.
"இன்பன் ஏன் வரலை?" "அண்ணே.... முன்னே மாதிரி இப்பல்லாம் எங்கும் போறதில்லை சார்." "ஏன்.. என்னாச்சு?" "அண்ணன் பைக்கில் ஒருத்தருக்கு பின்னால உட்கார்ந்து போகும்போது வண்டி மோதி ஆக்ஸிடன்ட் ஆகி இப்பதான் உயிர் பிழைத்து வந்து இருக்கிறார்."
எனக்கு கனவு நினைவுக்கு வந்தது. அவர் சொல்வதும் கனவு வந்ததும் ஏக காலத்தில் இருந்தது. அவர் மேல் இருந்த கோபம் குறைந்து இரக்கம் வந்தது.
"நீங்கள் முன்னாடி பார்த்த மாதிரி இப்ப இல்ல சார். ஆள் ரொம்ப மெலிஞ்சிட்டார்."
அவர் என்னோடு தொடர்பில் இருந்திருக்கலாம்.
எலக்ட்ரீசியன் டிரில்லிங் மெஷினில் ஓட்டை போட்டு பேனை மாட்டி ஓட விட்டார். மெஷின் சத்தத்தின் தொந்தரவிலிருந்து நல்ல வேளையாக குருவிகள் தப்பித்து வெளியே சென்று விட்டது என்று நிம்மதிப்பட்டேன். அவருக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு வெளியே சென்று இரவு பத்து மணிக்கு வீட்டிற்குள் நுழைந்ததும், முதலில் சிட்டுக்குருவிகள் வந்துவிட்டதா என்று பார்க்கத் தோன்றியது.
ஜன்னல் கம்பியைப் பிடித்து மேலே எக்கிப் பார்த்தேன். கூட்டில் இருப்பது தெரியவில்லை. அடுத்தக் கம்பியில் கால் வைத்து ஏறினால் கூட்டிற்கு மேலிருந்து பார்க்க முடியும். ஏற நினைத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டு விட்டேன்.
இரவு டீ குடிக்கும் போது மனைவியிடம் கேட்டேன். கவலையோடு 'நானும் பார்க்கலைங்க' என்றார்.
ஒரு மாதத்திற்கு மேலாகியும் அவைகள் வரவே இல்லை. இப்போது பேன் காற்றில் கொசுக்கள் வருவதில்லை. மனம் சிட்டுக்குருவிகளைத் தேடுவதை நிறுத்துவதாக இல்லை. பிறகு தான் அந்தக் கடிதத்தை எழுதி முடித்தேன். அழுது அழுது எழுதி முடித்த பிறகு மனம் லேசானது.
அந்தக் கடிதத்தை அஞ்சல் பெட்டியில் போட்டு விட்டால் நான் நிம்மதிப்படுவேன் என்று தோன்றியது. எனக்கு இப்படி தோன்றுகிறது என்று சொன்னால் எனக்கு மனநிலை சரியில்லையென மருத்துவர் சொல்லி விடுவார். அதற்கு ஏதாவது ஒரு பெயர் சொல்லப்பட்டிருக்கும். அன்பின் அதீதத் தன்மையில் விழிப்புணர்வு இல்லாவிட்டால் நிச்சயமாக அது மனநிலைக் கோளாறு தான். கருணையின் இரக்கத்தை எவ்வகையில் சொன்னாலும் மருத்துவத்தில் அது மனம் பிசகானதுதான்.
ஒருவேளை கடிதத்தை அஞ்சல் பெட்டியில் போட்டால் தபால் அலுவலர் சீல் அடித்து கடிதங்களைப் பிரிக்கும்போது: 'சிட்டுக்குருவி,
பெ/பெ சிட்டுக்குருவிகள், குச்சிக் கூடு, நகர வனம்,
வன ஜில்லா.'
என்று படித்ததும் அவர் உடனே பின்பக்கம் திருப்பி அனுப்பியவர் பெயரைப் பார்ப்பார்: 'உங்கள் நண்பன், உங்கள் கூடு, உங்கள் வீடு, உங்கள் ஊர்.'
என்று பின்கோடு எண்ணைத் தெளிவாக எழுதி இருப்பதைப் பார்த்து அலுவலகமே அதகளப்படும். எங்கள் ஏரியா போஸ்ட் மேன் என்னை சந்தேகப்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதைவிட சோசியல் மீடியாவில் அந்தக் கடிதம் வைரலாகும். அதில் எழுதி இருப்பதைப் படித்தால் நிச்சயமாக யாருக்கு அழுகை வரும்? பென்குயினுக்கு உலகம் வருந்தியதைப்போல என் குருவிகளுக்காகவும் இந்த உலகம் வருந்தலாம். இந்த உலகமே என் சிட்டுக்குருவிகள் என் வீட்டிற்கு வருவதற்குப் பிரார்த்தனைகள் செய்யலாம்.
எலக்ட்ரீசியனை திருப்பி அனுப்பி இருக்க வேண்டும், சிட்டுக்குருவிகள் வெளியே செல்லும் பகல் நேரத்தில் பேனை மாட்டி இருக்கவேண்டும் என்ற சிந்தனை அவ்வப்போது வந்து போனது.
பல நாட்கள் சட்டைப் பையில் வைத்து போஸ்ட் செய்ய தாமதப்படுத்திய கடிதத்தை, மகளின் கல்லூரியின் பழைய நோட்டு, புத்தகங்கள் இருந்த சாக்கு மூட்டையை லாஃப்டிலிருந்து கீழே இறக்கி, மூட்டையை அவிழ்த்து அதில் ஒரு நோட்டில் வைத்து மீண்டும் மூட்டையை இருந்த இடத்தில் வைத்து விட்டேன்.
ஒரு நாள் இரவு வெளியில் வேலைகள் முடித்து நானும் மனைவியும் வீட்டிற்கு வெளியே பைக்கை நிறுத்திய போது சொன்னார்: "உங்க சிட்டுக்குருவிகள் அப்ஸ் வீட்ல கூடு கட்டி இருக்கு பாருங்க. நான் சொல்ல மறந்துவிட்டேன்" என்றார்.
"எங்கே இருக்கு?" என்றேன். "அதோ... அந்த ஏசி அவுட்டோர் பாக்ஸைப் பாருங்கள்."
எனக்கு இரவில் சரியாகத் தெரியவில்லை. அவைகள் இருக்கிறது என்ற செய்தியே எனக்குப் போதுமானதாக இருந்தது.
காலையில் முதல் வேலையாக அவைகளைத் தான் தேடினேன். அவைகளைக் காணவில்லை. ஏசி அவுட்டோருக்கும் சுவரிற்கும் இடையில் அவைகள் கூடு கட்டி இருந்தது. அவர்கள் மேல் வீட்டின் ஏசி அவுட்டோர் சத்தம் வரக்கூடியது. அங்கு ஏன் கூடு கட்டியது என்று சிந்தித்தவாறே திரும்பி வந்து கட்டிலில் படுத்தேன். என்ன ஆச்சரியம், என் படுக்கைக்கு நேராக நூல் பிடித்தார் போல் அவைகள் அந்தக் கூட்டைக் கட்டி இருந்தது. நான் எழுந்து உட்கார்ந்தால் அந்தக் கூடு சப்போட்டா மரக்கிளைகளுக்கு இடையில் தெரியும். அவைகளுக்கு நான் தெளிவாகத் தெரிவேன். அவர்கள் வீட்டில் இன்னும் இரண்டு ஏசி அவுட்டோர்கள் இருக்கிறது. அதை விட்டு இதில் கூடு கட்டியது எனக்கு மனதை நெகிழ்வடைய செய்துவிட்டது. அதன் மதிநுட்பத்தை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டுக்காரரின் மகள் திருமணத்தின் போது கிரில் கதவு, அதற்கு இருபக்கத்திலும் இருந்த கம்பி பிரேம் எல்லாவற்றிற்கும் ஸ்கிரீன் போட்டேன். இரண்டு பக்கம் ஜன்னலுக்கான ஸ்கிரீனும் நடுவில் கதவுக்கான ஸ்கிரீனும் போட்டிருந்தேன். இவைகள் காற்றில் பறக்காமல் இருப்பதற்கு வரிசையாக கிளிப் மாட்டும்போது எனது படுக்கை சைடில் உள்ள பிரேமில் கடைசி பட்டையான ஸ்கொயர் பைப் கம்பி துணியில் மறையாமல் தனியாக கால் அடி ஒதுங்கும். நான் அவர்கள் வீட்டின் மேல் ஆட்கள் இருந்தால் ஸ்கிரீனை இழுத்து சுத்தி கிளிப்பை மாட்டி அந்தக் கேப்பை மறைப்பேன். அவர்கள் மேல் வீடு கெஸ்டுகளுக்காக வைத்து இருப்பதால் எப்போதாவதுதான் அதை இழுத்து மறைத்து கிளிப் போடுவோம். மற்ற நாட்களில் அந்தப் பகுதி ஓபனாகத்தான் இருக்கும்.
நானும் தினம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். இதுவரை நான் பார்க்கவில்லை. ஒருவேளை முட்டைகள் இட்டு அடைகாத்துக் கொண்டு இருக்குமா என்றும் தெரியவில்லை. நான் பக்கத்து வீட்டுக்காரரிடம் அனுமதி கேட்டு அவைகள் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் அவர்கள் ஏதாவது புரிந்து கூட்டைக் கலைத்து விட்டால் என்ன செய்வது என்றத் தயக்கம் இருப்பதால் நேரில் சென்று பார்ப்பதைத் தவிர்த்துவிட்டேன்.
அவைகளின் பிணக்கை சரி செய்து என் வீட்டிற்கு எப்படி அழைப்பது என்ற நுட்பம் எனக்குத் தெரியவில்லை.
பத்து வருடங்களுக்கு முன்பு இந்த வீட்டிற்கு வந்த அடுத்த நாள் சிட்டுக்குருவிகள் இரண்டு வந்தது. அதன் பிறகு கொஞ்சம் வருடங்கள் கழித்து இரண்டு வந்தது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. இப்பொழுது வந்தவைகள்தான் நிரந்தரமாக தங்கியது.
எங்களுக்குள் மௌனமான அந்நியோன்னியம் இயல்பாக அமைந்து இருந்தது. என்னால்தான் எங்கள் உறவைப் பேணிப் பாதுகாக்க முடியவில்லை. எவர் எது சொன்னாலும் ஒன்றின் மேல் ஒன்றாக சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் அந்த இரண்டு மின்விசிறிகளையும் இனி நான் கழட்டுவதாக இல்லை.
ஒன்று செய்யலாம். என் மனைவி நன்கு சமைக்கக் கூடியவர். உணவு சமைத்து உபசரிப்பதை பெரிதும் விரும்பக் கூடியவர். 'இந்த மாதம் யாருக்கும் சாப்பாடு கொடுக்கலைங்க. யாரையாவது அழைத்து வாருங்கள்' என்று சொன்னார். நீங்கள் வேண்டுமானால் ஒரு எட்டு வந்து விட்டுப் போங்கள். சாப்பிட்டு முடித்து என் படுக்கையில் படுங்கள். அந்த சிட்டுக்குருவிகள் உங்களை அட்டாக் பண்ண பறந்து வரலாம், எங்களுக்குள்ளான பிணக்குகள் ஒரு முடிவுக்கு வரலாம்.
குருவிகள் கொத்தி, அதுவும் சிட்டுக்குருவிகள் கொத்தி யாரும் சேதாரமடைந்ததாக எந்த முன் வரலாறும் இல்லாததால் நீங்கள் ஒரு முறை வருவது பற்றி யோசிக்கலாம். வருவீர்கள் தானே.
- ரவி அல்லது