இரயில் தாம்பரத்தை விட்டு கிளம்பினாலும் சென்னையில் இருந்த பத்து நாட்களின் பாதிப்பு அகலுவதாக இல்லை. இந்தப் பத்து நாட்களில் சிட்டுக்குருவிகள் பற்றிய சிந்தனையே வராதது ஆச்சரியமாக இருந்தது. வெயில் நாளில் வேலைகளை முடித்து தங்கிய இடத்திற்கு வருவதற்கு சென்னையில் வசித்துப் பழகாதவர்களுக்கு கொஞ்சம் சிரமம் தான்.
இரயிலில் பக்கத்துக் கூப்பேயில் இராமேஸ்வரம் செல்லும் வட மாநிலத்தவர்கள் முழுவதுமாக இருந்தார்கள். நான் மனைவி மகளுடன் இருந்தேன், வேறு மூன்று இளைஞர்களும் எங்களுடன் இருந்தார்கள். அதற்கு அடுத்து இருந்தவர்கள் ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக அங்கு முழுவதும் இருந்தார்கள். அவர்களது உறவினர்கள் அடுத்தக் கோச்சிலும் பயணித்தார்கள். அவர்களில் ஒருவர் கதவு திறப்பதற்கு பக்கத்தில் இருந்த டிடிஆர்க்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் படுத்து இருந்தார்.
டிடிஆர் டிக்கெட்டுகளைப் பரிசோதிக்கும் போது ஐந்து வயதுக்கு மேல் உள்ள வட இந்தியக் குடும்பத்தில் ஒருவருக்கு டிக்கெட் எடுக்காததைக் கண்டுபிடித்துக் கண்டித்தார். அடுத்த முறை டிக்கெட் எடுக்காமல் இருந்தால் அபராதம் விதிப்பதாகச் சொன்னார். ஒவ்வொரு பயணியையும் அவர் பார்த்துவிட்டுத் தான் அவருடைய மெஷினில் ஓகே செய்தார். சத்தம் அதிகமாக வைத்து படம் பார்த்தவர்களை ஹெட்-செட் மாட்டச் சொன்னார். ஸ்ட்ரிக்ட் ஆபிஸராகவும் சிரிக்காதவராகவும் இருந்தார்.
அவரது இருக்கையில் படுத்து இருந்தவரிடம் இவர் என்ன சொன்னார், அதற்கு அவர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. படுத்திருந்தவர் எழுந்திரிக்காமல் டிடிஆரிடம் ஏதோ பதில் சொல்லிக் கொண்டு இருந்தார். நான் என் மகளிடம் சொன்னேன்.
"டிடிஆராக இருந்தால் டிக்கெட் எடுக்க மாட்டீங்களா? எங்காளு டப் குடுக்கிறாப்பாரு."
எனக்கு எதிராக இருந்த மகள் திரும்பிப் பார்த்து விட்டு சத்தமாகச் சிரித்து விட்டார்.
"பிரண்ட் அஸ் பர் லா (Friend as per law). நாங்க டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை பிரண்ட்."
"எங்க ரூல்ஸ்ஸைக் காண்பிங்க. எங்களால உங்களை எதுவும் செய்ய முடியாது. டிடிஆர் டிக்கெட் தான் செக் பண்ணனும். படுக்கிறதுக்கு எல்லாம் சட்டத்தில் இடம் கிடையாது பிரண்ட்."
நாங்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டு வந்த பக்கத்தில் இருந்த நடுத்தர வயதுக்காரர் மனதிற்குள் சிரிப்பது அவரது முகம் காட்டிக் கொடுத்தது. அவருக்குப் பக்கத்தில் இருந்தப் பையன் என் மகனைப் போல ஏதோ படத்தை பார்த்துக் கொண்டு அவருடைய உலகத்தில் பயணித்துக் கொண்டு இருந்தார்.
கால் மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு டிடிஆர் வெற்றி பெற்று இருக்கையில் அமர்ந்தார். நான் எழுந்து சென்று 'டிடிஆர் என்றால் டிக்கெட் எடுக்க மாட்டீங்களா சார்' என்றேன். அவர் அதுபோல வாழ்க்கையில் சிரித்திருக்கமாட்டோம் என்று அவரே நினைக்குமளவிற்குச் சிரித்தார். நான் வந்து அமர்ந்ததும் அவர் எழுந்து என் மகளிடம் வந்து, "நீ என்னைய பார்த்து உங்கப்பாகிட்டே கிண்டல் அடிக்கிறியே" என்றார்.
"ஸார், நான் சும்மா உட்கார்ந்து இருக்கேன் சார். நீங்கள் நினைக்கிற மாதிரி இவர் ஒண்ணு நல்லவர் இல்லை. இவரைப் போய் நம்புறீங்களே சார். என்ன தந்தையாரே அவரை செட் பண்ணிட்டீங்க போல."
"என்ன பிரண்ட்... உங்க முன்னாடி தானே நான் உட்கார்ந்து இருக்கேன்."
"சார், எழுந்துருச்சிறாதீங்க சார். அப்புறம் நீங்க டிக்கெட் காண்பிச்சாதான் இடம் குடுப்போம்."
அவரும் எங்களோடு வருகிறவர்களும் சிரித்துவிட்டார்கள். என் மகனை ஒத்தத் தம்பி படம் பார்ப்பதை விடுவதாக இல்லை.
"ஏங்க ரெண்டு பேரும் ஊர் வம்பை இழுக்கிறீங்க?" என்றார் மனைவி.
அப்போதுதான் எழுந்து சென்று டிடிஆரிடம் கிண்டலடிக்காதது தவறு எனப் புரிந்தது. நல்ல வேளை அவர்கள் என்னிடம் சண்டை செய்ய வரவில்லை. டிடிஆரின் மேல் இருக்கையில் இருந்த சிறுவர்கள் இரண்டு பேரும் பாடப் புத்தகத்தைப் பிரித்துத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் இன்னொருவனுக்குச் சந்தேகத்தை அவ்வப்போது சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
நானும் மனைவியும் தாம்பரத்தில் வாங்கிய டிபனைச் சாப்பிட ஆரம்பித்தோம். என் மகள் ஃப்ரைட் ரைஸ் விழுப்புரம் அன்னை ரெஸ்டாரெண்டில் ஆன்லைனில் ஆர்டர் செய்தாள்.
அப்போது ரின்ஜாய் என் மனைவிக்கு போன் செய்தான். என் மனைவி பேசியதிலிருந்து அவன் என்ன சொல்லி இருப்பான் என்று என்னால் யூகிக்க முடிந்தது.
"அவன்க இங்க எல்லோரையும் மண்டையப் பார்த்துக்கிட்டு வர்றாங்கடா. நீ சொல்றது கரெக்ட்டுதான்டா. அடுத்த டைம் அவங்களப் பிரிச்சு தனித்தனியா டிக்கெட் போடணும்டா."
என் மனைவியிடமிருந்து போன் என் மகளிடம் போனது.
'துரையம்மாக்கிட்ட போனைக் குடுங்க' என்று சொல்லி இருப்பான்.
"...."
"போடா உன் வேலைப் பாருடா."
"...."
"அத விடுடா. ஃபுட் ஆர்டர் பிக் ஆகலைடா. நான் செம டென்ஷனாயிட்டேன்."
"...."
"அப்புறம் போராடி ஆர்டர் பண்ணிட்டேன். அடிபட்ட கால் வலிக்குதுடா."
"...."
போன் என் மனைவியிடம் போகும் போது அவர் சாப்பிட்டு முடித்து இருந்தார்.
"அது காலை வைக்கத் தெரியாம வச்சு. கால் வீங்குதுடா. சாப்புட்டியா? பணம் போடவா?"
அவன் போனை வைத்து விட்டான். நானும் சாப்பிட்டு முடித்து பையில் வேஸ்ட்டுகளைப் போட்டு வெளியில் வீசலாமென எழுந்து சென்ற போது டிடிஆர் என்னோடு எழுந்து வந்தார்.
"சார் எதுக்கும் நீங்கள் விழுப்புரத்தில் ஒரு டிக்கெட் எடுத்துக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்."
"ஒவ்வொரு ட்ரிப்லையும் இதே மாதிரி நடக்கும் சார். அது பழகிருச்சு சார். சில நேரம் சிலர் ரொம்ப டென்ஷனாக்கிருவாங்க," என்றார்.
குப்பையை வீசிவிட்டு நான் வந்து அமர்ந்து போனில் வாட்ஸ் ஆப் குழுக்களில் நிறைந்து கிடந்தவைகளைக் கிளியர் சாட் கொடுத்தேன்.
சென்னைக்கு வரும்போது வந்த இரயிலில் கம்பன் எக்ஸ்பிரஸில் மீட்டர் கேஜில் வேலை பார்த்த டிடிஆர் வந்திருந்தார். அப்போது அன்றைய நாள் பயணத்தில் அவர் வேலைக்குச் சேர்ந்த சமீபமான காலம். இளம் வயது. என்னோடு வந்த என் நண்பருக்கு முதுகில் தேளோ வேறு எதுவோ கடித்து விட்டது. நண்பர் கடுப்பதைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டார். நான் டிடிஆரிடம் சென்று விவரத்தைச் சொன்னதும் என் நண்பரை விட அவர் பதறினார். முதல் வகுப்பு கோச்சில் எங்கள் ஊரில் கிளினிக் வைத்திருக்கும் ஐவன்பால் டாக்டரைக் கண்டுபிடித்துவிட்டார். டாக்டர் அங்கு அழைத்து வரச் சொன்னதால் நான் நண்பரை அங்கு அழைத்துச் சென்றேன். எங்கள் இருவருக்குமே ஐவன்பால் தான் டாக்டர் என்று தெரியாது. அங்கு அவர் நண்பரைப் பார்த்து விபரங்கள் கேட்டு விட்டு அவரிடம் இருந்த மாத்திரைகளில் அவர் மனைவி ஒவ்வொரு மாத்திரையாகக் கிழித்து நான்கு மாத்திரைகளைக் கொடுக்க அவர் அதை என் நண்பரிடம் கொடுத்தார்.
"இவருக்கிட்ட இருக்கிற இந்தப் பழக்கம் செம கடுப்பாவும் சார். என் ப்ரண்ட் இது என்ன மாத்திரைன்னு தெரியாம போட மாட்டார். இவரும் இருபது முப்பது வருஷத்துக்கு மேல எங்க ஊர்ல தான் இருக்கார். அவருக்கும் நெறைய பேஷண்ட் இருக்காங்க. காச நோய்க்கு வைத்தியம் பார்க்கிறவர்."
டி டி ஆர் ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார். எங்கள் கூப்பேயில் பத்துப் பதினைந்து பேருக்கு மேல் காத்திருந்தார்கள். அவர்களில் ஹஜ்ரத் ஒருவரும் வந்து காத்துக்கொண்டு இருந்தார். அவர் கடித்த இடத்தில் கை வைத்து ஓதி ஓதி ஊதினார். என் நண்பரும் முஸ்லிம். 'வலி குறையுதா... வலி குறையுதா...' என்று கேட்டுக் கொண்டே இருந்தார். என் நண்பர் 'இல்லை இல்லை' என்று சொன்னார். அவர் ஓதுவதை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்.
"ஏங்க நீங்கள் பொய்க்காகவாவது கொஞ்சம் வலி குறையுதுன்னு சொல்லி இருக்கலாம்."
எல்லோரும் 'ஆமாம்' என்றார்கள். என் நண்பர் 'வலி குறையாமல் எப்படி நான் குறையுதுன்னு சொல்ல முடியும்' என்றார்.
நான் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, "நீங்கள் கொஞ்சம் கருணை காட்டி இருக்கலாம்," என்றேன்.
கூடி இருந்த அத்தனை பேரும் சிரித்து விட்டார்கள். எனக்குப் பக்கத்தில் சன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்தவர் இங்கு நடப்பது எதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதது போல வெளியே பார்த்துக்கொண்டு வந்தார். அவர் மேல் கொஞ்சம் வெறுப்பு வந்தது. டி டி ஆர் வந்து வந்து எப்படி இருக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அவர் முகம் முற்றிலும் வாடி பாவமாக இருந்தது. அப்போது என்னிடம் 'நான் ஜெபம் பண்ணவா சார்' என்றார் ஒருவர்.
அவர் கண்களை மூடி பைபிள் வசனங்களைச் சத்தமாக ஜெபித்தார். ஏற்கனவே இருந்தக் கூட்டத்தைவிட கூடுதலாக வந்துவிட்டார்கள்.
"ஏங்க கூத்தடிக்கிறீங்க," என்று என் நண்பர் கடுப்பானார். ஆனாலும் எப்படியாவது வலி குறைந்தால் சரி என்று அவர் என் போக்குக்கே விட்டு விட்டார். அவர் ஜெபத்தை முடித்து கடித்த இடத்தில் சிலுவையைப் போட்டுவிட்டு எதுவும் கேட்காமல் கதவைத் திறந்து அடுத்தக் கோச்சுக்குப் போனார். நான் மீண்டும் அப்பாவியாக, "இப்பவாவது கொஞ்சம் எங்க மேலக் கருணை காட்ட மாட்டீங்களா?" என்றேன்.
அங்கிருந்த அத்தனை பேரும் சத்தமாகச் சிரித்து விட்டார்கள். என் நண்பரும் சிரித்தார். என் பக்கத்தில் இருந்தவர் எதற்கும் அசைந்து கொடுக்காமல் வெளியில் இருட்டை விடாப்பிடியாகப் பார்த்துக்கொண்டு வந்தார். அங்கிருந்த ஒருவர், "சார் வலி குறைஞ்சிருக்கா சார்?" என்றார்.
"சார் உங்க பங்குக்கு நீங்களுமா?" என்றேன் நான்.
"ஆறாம் நம்பர் கோச்சில் ஒரு மந்திரவாதி வருகிறாராம். டி டி ஆர் சொன்னார். நான் போய் அழைச்சுக்கிட்டு வரவா?"
"சார் உடனே அழைச்சுக்கிட்டு வாங்க சார்," என்றார் ஒருவர்.
"இரயிலைத் திருப்பிப் பக்கத்து ஊர் ஹாஸ்பிடலுக்கு ஓட்டச் சொல்லுங்கன்னு சொன்னா, 'சரி ட்ரைவ் பண்ணவா' என்று அவர் கேட்பார்," என்று என்னைக் காட்டி என் நண்பர் பக்கத்தில் உள்ளவரிடம் சொன்னார்.
"நான் டிரைவர்க்கிட்ட பேசவா?"
அத்தனை பேரும் சிரியோ சிரி என்று சிரித்தார்கள்.
இரயில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. விழுப்புரம் வந்துவிட்டதாகச் சொன்னார்கள். டி டி ஆர் வேகமாக வந்து டாக்டர் வந்திருக்கிறார் என்று எங்களை வெளியே அழைத்துப் போனார். அங்கே ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், இரண்டு உதவியாளர்கள் ஸ்ட்ரெச்சரை வைத்துக்கொண்டு வெள்ளை சீருடையில் நின்று கொண்டு இருந்தார்கள்.
இவர்கள் தன்னை விழுப்புரம் மருத்துவமனையில் அட்மிட் பண்ணி விடப் போகிறார்கள் என்று நண்பர் பயந்து விட்டார். நாங்கள் இருவரும் காலையில் சென்னையில் இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். டாக்டர் பரிசோதித்து விட்டு மாத்திரைகள் கொடுத்தார். நண்பர் இப்போது வலி கொஞ்சம் குறைந்து இருப்பதாகச் சொன்னார். அவர்கள் கொடுத்த மாத்திரையை அங்கேயே சாப்பிட்டார். ஒரு வழியாக இரயிலில் ஏறிவிட்டோம். மற்றவர்கள் எல்லோரும் நிம்மதியடைந்தவர்களாக அவரவர் படுக்கைக்குச் சென்றார்கள். நான் நண்பரிடம் கேட்டேன்.
"உண்மையிலேயே வலி குறைஞ்சுதாங்க."
"அது வலிச்சுக்கிட்டுதான் இருந்துச்சு. ஆனா மூர்க்கமா கடித்தது இல்லாமல் இருந்ததால வலி குறையுதுன்னு சொன்னேன். அவுங்க கிட்ட நான் மாட்டினா, நாளைக்கு நம் வேலை என்னாவது?"
தாம்பரத்தில் காலையில் இறங்கும்போது வலி முற்றிலும் குறைந்து இயல்பான நிலைக்கு நண்பர் மாறி இருந்தார். நான் பெட்டியை இழுத்துக் கொண்டு செல்லும்போது எனது இருக்கையின் பக்கத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தவர் என் கையைப் பிடித்து கொண்டு சொன்னார்.
"சார் எனக்கு ஹை பிபி இருக்கு. நான் என்ன ஏதுன்னு விசாரிக்கப் போயி பிரஷர் ஏறிட்டா என்னப் பண்ணுறதுன்னுதான் எதுவும் கேட்க முடியலை சார்."
"அதுனால ஒன்றுமில்லை சார்."
அப்போது அது எனக்குச் சாதாரணமாகத் தெரிந்தாலும் பத்து இருபது வருடங்கள் கழித்து என் நண்பர்களைப் பார்த்தபோது அவரது சூழல் எனக்குப் புரிந்தது. புரிதலை எப்பொழுதும் காலம் தன் வசம் வைத்திருக்கிறது. அது எப்பொழுதும் சூழ்நிலைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. புரிகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தற்சமயம் சென்னை வரும் போது டி டி ஆர் பன்னீர் செல்வம் வந்திருந்தார். அதே முகச்சாயல் வயது முதிர்ந்து காணப்பட்டார். இந்த நிகழ்ச்சி சொல்லிக் காட்டியதும் அவரால நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. இதுபோல பல சம்பவங்கள் நடந்திருப்பதாகச் சொன்னார்.
"சார் ஆள் கொஞ்சம் குள்ளமாக இருப்பாரே சார். கம்பன் எக்ஸ்பிரஸ் நின்றதும் சோழன் எக்ஸ்பிரஸில் வந்தாரே."
"ஓ... நம்ம சேகரா? அவர் இப்போது ஆபீஸ்ல வேலை பார்க்கிறார். நானும் ஒரு வருடம் முடிந்து ஆபீஸூக்குள்ளார போயிருவேன் சார். அங்கேயே வேலை பார்த்து ரிட்டையர் ஆகி விடுவேன்," என்றார். நான் எனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன். அவரது கைபேசி எண்ணைப் பதிவு செய்து கொண்டேன். சேகர் சார், பன்னீர்செல்வம் சார் என்று எத்தனையோ பேருடைய தொடர்பு எண்கள் அப்போது பயன்படுத்திய போனோடு போய்விட்டது. இது போல இறைவனுடைய நாட்டத்தில் மற்றவர்களைச் சந்தித்தால் தான் உண்டு.
எட்டு மணிக்கே இரயில் விழுப்புரம் ஸ்டேஷனுக்கு உள்ளே நுழைய ஆரம்பித்தது. மகள் உணவு எட்டு இருபது போல வரும் என்றார்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு போன் செய்தார்கள். ஃபுட் கேன்சலாகிவிட்டது. வேறு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்றார்கள்."
"உனக்கு என்ன வாங்கிட்டு வர?"
"ஸ்டேஷன் ஃபுட் எனக்கு வேண்டாம்," மகள்.
"பணம் என்னாச்சு?" மனைவி.
"ஃபுட்டுக்கு கேஷ் ஆன் டெலிவரிம்மா. அவர் பொய் சொல்றாரு. எட்டரைப் போல ஃபுட் வரும்."
பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவர் அதிர்ச்சியுடன் சொன்னார்.
"சார், நானும் அன்னை ரெஸ்டாரெண்டில்தான் ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் பண்ணி இருக்கேன்."
"சொன்னா ரெண்டு பேரும் கேளுங்கள் சார். இரண்டு பேரும் இங்கேயே ஏதாவது வாங்கிக்கங்க. அப்புறம் இரண்டு பேரும் பசியோடதான் டிராவல் பண்ணப்போறீங்க."
அவர் கவலைப்படுவது முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.
"அங்கிள் நீங்க பயப்படாமல் இருங்க. ஃபுட் வந்திரும். ரைஸ் சூப்பராக இருக்கும்."
"நல்லது சொன்னா யாரு கேட்டுக்கிறா?"
நான் வெளியே எழுந்து செல்ல அவரும் பின்னாடியே வந்தார். டி டி ஆர் மற்ற டிடிஆர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அவரை அங்கு கிண்டலடிக்கலாமா என நினைத்தேன். செவ்வாழைப் பழம் வாங்க வேண்டியதாக இருந்ததால் அவரிடம் போகாமல் அதை வாங்கிக்கொண்டு வந்து கோச்சுக்கு வெளியே நின்றேன்.
"எப்படி சார் குடும்பத்தோட இவ்வளவு ஜாலியா வர்றீங்க. நான் என் ஒய்புக்கிட்ட சிரிச்சு பேசுனதே இல்லை சார். ஆபீஸ்லேர்ந்து வருவேன். ஒரே டென்ஷன், டயர்டாக இருக்கும். தேவையானதை அவ பேசுவா. நான் ஏதாவது பேசுவேன். இந்த மாதிரி எல்லாம் நாங்க எங்க வாழ்க்கையில் இருந்ததே இல்லை சார்."
"நாங்க சிரிச்சு கிண்டலடிச்சு பேசிகிட்டு வர்றோம்ன்னா எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லைன்னு நினைக்காதீர்கள். எனக்கும் கடன் இருக்கு. நான் என் பிள்ளைகளுக்குப் பணம் சம்பாதிக்கனும். ஒரு மாசமா மூலத்தில் அவதிப்பட்டு அதோட தான் இந்தப் பிரயாணம் பண்றேன். துத்தி இலை பவுடரை விளக்கெண்ணையில - அதான் சார் ஆமணக்கு எண்ணெயில் குழப்பி தடவிக்கிட்டு வர்றேன். இரண்டு நாட்களாக போட்றேன் சார். சரியாகிவிட்டது. என் பிரச்சினைகளைச் சொன்னேன்னா, 'உனக்கு இத்தனை ஆட்டம் தேவையா'ன்னு நீங்களே செருப்பைக் கழட்டி அடிப்பீங்க. நான் இதுமாதிரி இருந்தேப் பழகிட்டேன் சார். என் குடும்பத்தையும் அதுக்கு பழக்கிட்டேன்."
"இதெல்லாம் இறைவனோட கிப்ட் சார்."
"இருக்கலாம் சார்."
"ஃபுட் வருமா சார்?"
"பாவம் நீங்க பொழச்சிப்போங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும்."
அவர் வாய்விட்டுச் சிரித்தார். அப்போது விஏஓ திருமேனி மாமா மகள் ஷர்மிளா போன் செய்தார்.
"சொல்லுங்கள் மேடம்."
"என்ன மாமா. மேடம்ன்னு கூப்பிட்டுக்கிட்டு."
"அதிகாரிகளை மேடம்ன்னு தானே கூப்பிடணும்."
"அய்யோ உங்ககிட்ட பேச முடியாது மாமா. அக்கா போன் கிடைக்கல."
"ஒரு நிமிஷம் இருப்பா."
அப்போதுதான் ஸ்விக்கி காரப் பையன் வந்தார். எனது சீட் நம்பரைச் சொல்லி ரைஸ்ஸூக்கான பணம், டிப்ஸ் பணம் கொடுத்த போது டிப்ஸ் கொஞ்சம் கூடுதலாகக் கேட்டார். அதனையும் கொடுத்துவிட்டு, "சொல்லுப்பா" என்றேன்.
"மாமா... மாமியாருக்கு கருமாதி முடிஞ்சு எண்ணெய் தேய்ச்சிக் குளிப்போமே, அது நாளைக்கு மாமா. அக்காவும் நீங்களும் வந்திருங்க."
"நான் வெளியூர்லேர்ந்து வந்துக்கிட்டிருக்கேன். என் ப்ரண்ட் ஹைதராபாத்திலேர்ந்து நாளைக்கு ஃபேமிலியோட வர்றார். உங்க அக்கா சமைக்கும். நாலு மணிக்கு ஃபேமிலியோட ஒரு ஃபங்ஷனுக்கு வெளியே போகிறோம். இதெல்லாம் நாங்க எதுக்கு? நல்லபடியாக முடிங்க."
"நேரம் கிடைச்சா நீங்க மட்டுமாவது தலையைக் காட்டிட்டுப் போங்க மாமா."
"வாய்ப்பு இல்லை. வர்றதாக இருந்தாத்தான். நான் நேரடியாகச் சொல்லிருவேனே. சாமிநாதனை நான் கேட்டதாகச் சொல்லுப்பா."
இரண்டு குடும்பங்களுக்கும் சில வருத்தங்கள் இருந்தாலும் ஷர்மிளா அவர்கள் வீட்டின் நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் அழைப்பார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஊரில் எங்கள் வீட்டிற்கு ஒட்டிச் செல்லும் பாதை வழியாகத்தான் பின்புறம் உள்ள அவர்களது வீட்டிற்கும் போகவேண்டும். அந்தப் பாதையைக் கொஞ்சம் அகலப்படுத்தக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
பல ஆண்டுக்கு முன்பு நான் எனது மனைவியின் வழியாக இந்தப் பாதையை திருமேனி மாமா(அவரது அப்பா) வீட்டிற்கும் நம் வீட்டிற்கும் இடையில் போடலாமெனக் கேட்கச்சொன்னேன். ஒரே ஸ்டிரைட்டாக அவர் வீட்டிற்கு போகலாம், நம் எல்லோருக்குமே நல்லது என்று சொல்லச் சொன்னேன். அடுத்த நாளே ஷர்மிளா அம்மா அந்த பாதை மாற்றப் போகும் வேலி ஓரத்தில் போர்வெல் போட ஆரம்பித்தார்.
இரண்டு மூன்று வருடங்கள் கழித்து எங்களது பூர்வீக இடம் தார் ரோடு வசதியோடு என் மாமாவின் பங்காளிகள் இருக்கின்ற இடத்தில் உள்ளது. அது அதிகமான விலைக்கு போகக் கூடிய இடம். அதை எடுத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு பின்னாடி உள்ள ஷர்மிளா இடத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று ஒரு ஆஃபரைக் கொடுத்தேன். நான் செய்தி சொல்லிவிட்ட அடுத்த நாளே ஷர்மிளா அவருடைய இடத்தில் போர்வெல் போட்டார். நான் மௌனமாக இருந்துவிட்டேன். இவர்கள் தற்போது எங்களிடம் பாதையை அகலப்படுத்த முயற்சிப்பதைக் கேள்விப்பட்ட தங்கவேல் மாமா(ஷர்மிளா சித்தியின் கணவர்), கலியபெருமாள் (என் மனைவின் அப்பா, ஷர்மிளாவிற்கு சித்தப்பா) மாமாவிடம் பாதைக்கு கொஞ்சம் இடம் கேட்டபோது நான் கொடுத்த ஆஃப்பர்களைச் சொல்லிக் காட்டி இருக்கிறார். 'மாப்பிள்ளை எவ்வளவு தெளிவாக முடிவு எடுத்து இருக்கிறார்' என்று சொன்னதோடு விடாமல் ஷர்மிளாவை அசிங்கமாகத் திட்டி இருக்கிறார் தங்கவேல் மாமா.
'உன் இடம் கால் காசு போகுமா. அதை விக்க பத்து பேருக்கு மேல கையெழுத்து போடணும். அதை அவுங்களால மட்டும்தான் வாங்க முடியும். நல்ல வாய்ப்பைக் கெடுத்துக்கிட்டியே.' என்று இப்போது எல்லோரும் சொல்லச் சொல்ல, தன் அம்மா தன்னை வழி கெடுத்து விட்டதாக தற்போது எல்லோரிடமும் ஷர்மிளா புலம்பிக் கொண்டு இருக்கிறார்.
எங்கள் வீட்டைச் சுற்றி வேலிகளில் மரம் செடிகள் காடு போல வளர்ந்து பல வருடங்களாகச் சுத்தம் செய்யப்படாமல் இருந்தது. மெயின் ரோட்டிலிருந்து ஷர்மிளா வீடு போகும் வரை உள்ள வேலியின் பாதை மரங்களால் சூழ்ந்து இருந்தது. மாலையானால் அந்தப் பாதையில் போகவே பயமாக இருக்கும். பல சமயங்களில் பாம்புகள் நடமாடும்.
நான் ஜே.சி.பி வைத்து நான்கு வேலியையும் சுத்தம் செய்து கற்களை நட்டு கம்பி வேலி போட்டு விட்டேன்.
ஷர்மிளாவின் மாமியார் என் மேல் பாசமாக இருப்பார். ‘யாரு எதுவேன்னா சொல்லிட்டுப் போகட்டும்டா. நீ நான் போறதுக்கு வழியைச் சுத்தமாக்கிட்டியேடா. அதுவே எனக்கு போதும்டா. நீ மகராசனா ரொம்ப நாள் நல்லா இருப்பேடா.’ என்று வானத்தை நோக்கி கும்பிட்டார்.
ஷர்மிளா மாமியார் இறந்த அன்று துக்க வீட்டில் எனது நண்பர் எழுத்தாளர் ரவி என்னிடம் இந்த பாதை சம்பந்தமாகக் கேட்டார். ‘ஐந்து கிராமத்தில் யாரும் இந்த பாதை அகலப்படுத்துவது சம்பந்தமாக கேட்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும். உங்களுக்கு விசயம் தெரியாததால் நீங்கள் கேட்கிறீர்கள்’ என்று நான் சொல்லிக் காட்டியதும். ‘எனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா' என்று மௌனமாகிவிட்டார்.
நாங்கள் பூர்வீக சொத்தை விற்று விட்டோம். சொத்து மாறுதலுக்கு வழி இல்லை. பாதையை எங்களுக்கும் திருமேனி மாமா வீட்டிற்கு நடுவில் போட முடியாதபடி வேலியை ஒட்டி போர்வெல் இருப்பதால் பாதையையும் மாற்றிப்போட முடியாது. ஒரே வழி பாதையை அகலப்படுத்துவதுதான். எல்லோரையும் சமாதானப் படுத்தி பாதையை அகலப்படுத்திக் கொடுக்கலாம் தான். என்னை அவமானப்படுத்துவதுபோல போர்வெல் போட்ட வலி இன்னும் என்னிடம் உள்ளது. எதிர்காலத்தில் ஏதாவது செய்ய வேண்டும். அதற்கு முன் இவர்கள் சண்டை கட்டி நாறாமல் இருக்க வேண்டும்.
இரயில் புறப்பட ஹாரன் அடித்து விட்டார்கள்.
மகளிடம் உணவைக் கொடுத்துவிட்டு செவ்வாழைப் பழம் ஒன்றை டி டி ஆரிடம் வற்புறுத்திக் கொடுத்துவிட்டேன். மகன் வயது ஒத்தப் பையன் இப்போதும் படம் பார்த்துக் கொண்டு இருந்தார். அவரிடம் பழம் கொடுத்ததற்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பக்கத்தில் பயணித்தவர் ஃப்ரைட் ரைஸை கையில் பிடித்தபடி மனைவியோடு காதலோடு மிகவும் குலைவாகப் பேசிக்கொண்டு இருந்தார். இரயிலை விட்டு இறங்கியதும் மகளிடம் வெளியே எனக்கும் அவருக்கும் நடந்த சம்பவத்தைச் சொல்லிக்காட்ட வேண்டும். 'மாஸ் தந்தையாரே... கணவனை காதலனா மாத்திட்டீங்க. நானே நினைச்சேன் என்ன திடீர்ன்னு போன்ல ஃபீல் கொடுக்கிறாரேன்னு. அந்த நல்லவர் நீங்கதானா' என்பார். நாங்கள் இருவரும் சிரித்துக் கொண்டு வருவோம். என் மனைவி மௌனமாக எதையாவது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்.
இரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது.
பேச்சுக் குரலில் விழித்துப் பார்த்தால் ஒரு பெண் குனிந்து சீட்டுகளுக்கு அடியில் எதையோத் தேடிக்கொண்டு இருந்தார். எனது கைபேசியில் லைட்டை ஆன் செய்து அவரிடம் கொடுத்தேன். அவர் தேடிக்கொண்டே அடுத்தடுத்த இருக்கைகளுக்குச் சென்றார். ஒரு வேலை போனை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவாரோ என்றப் பயம் வந்தது. அவர் திரும்பி வந்து கைபேசியைக் கொடுத்தபோது 'எதைக் காணவில்லை' என்று கேட்டேன். 'ஒரு சிறிய பேக்கைக் காணவில்லை. தாம்பரத்தில் ஏறும்போதே எடுத்தோமான்னு சந்தேகமாக இருக்கிறது' என்றார். அவர் மகனை டி டி ஆரிடம் புகார் அளிக்கச் சொன்னேன். வயதான அம்மா மருமகள் தான் காணாமல் போனதற்கு காரணம் என்று போனில் யாரிடமோ சொல்லிக்கொண்டு இருந்தார். 'இதற்கு மேல் இவளை வைத்து எங்களால் சமாளிக்க முடியாது. வந்து அழைத்துச் சென்றுவிடுங்கள்' என்று அழுதார். எனது மகள் எழுந்தவர் மகனிடம் 'டாய்லெட்டுக்கிட்ட கம்ப்ளெயிண்ட் நம்பர் ஒட்டி இருக்கும், அதுக்குக் கால் பண்ணுங்க' என்றார்.
அந்த அம்மாவிடம் 'டி டி ஆர் கிட்ட சொல்லுங்கம்மா. அவர் தாம்பரம் ஸ்டேஷனில் நீங்கள் நின்ற இடத்தில் சிசிடிவி கேமரா இருந்தால் அதில் பார்ப்பார்கள்' என்றேன். அவர்களின் முகத்தில் கொஞ்சம் நிம்மதி வந்தது. அவர்கள் இறங்கும் ஸ்டேஷன் வந்ததால் எல்லோரும் இறங்கிவிட்டார்கள்.
"நானே கம்ப்ளெயிண்ட் போனில் ரிஜிஸ்டர் செய்து கொடுத்து இருப்பேன் அப்பா. அந்த அம்மா என்னை சந்தேகமாவேப் பார்த்துச்சுப்பா. நான் கடுப்பாகி பேசாம இருந்துட்டேன். பாவம் அந்த அண்ணாவுக்கு என்ன செய்யுறதுன்னே புரியலைப்பா."
"அந்தம்மாக்குள்ள என்ன ஸ்கேல் வச்சுருக்கோ, அதை வச்சுதான் அது அளக்கும். மனுஷங்க மாத்தமா இருக்காங்கன்னு நாம மாறிடக் கூடாதும்மா. நீ அவர்களுக்கு உதவி இருக்கலாம்."
"ஆமப்பா எனக்கும் அதுதான் தோணுது."
"சரிப் படும்மா."
விழித்து இருந்தவர்கள் வேடிக்கைப் பார்த்தார்கள். விளக்குகள் அணைந்த இருளில் ஏசி குளிரில் பலர் போர்த்திய படி தூங்கி விட்டார்கள். மேலும் சிலர் கைபேசியைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
சென்னையிலிருந்து மனம் முற்றிலும் விடுபட்டு ஊர் நினைவுகள் தொற்றிக் கொண்டது. மேலே படுத்திருக்கும் நடுத்தர வயது நபருக்கு என் கைபேசி எண்ணைக் கொடுத்திருக்கலாம் தான். நாம் மறுபடியும் சந்திக்கும் போது தருகிறேன் என்றதும் கண் கலங்கி விட்டார்.
இதுபோன்ற பயணங்களில் நான் யார் மனதையாவது கவர்ந்து விடுகிறேன். ஆனால் அடுத்த சந்திப்பை இறைவன் ஏற்படுத்தட்டும் என்பதில் ஏனோ நான் பிடிவாதமாக இருக்கிறேன். நானும் பன்னீர்செல்வம் சாரும் முப்பது ஆண்டுகள் கழித்து சந்திப்போம் என்று இருவருமே வாழ்வில் ஒரு முறை கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். மன்னியுங்கள் நண்பரே... நீங்கள் தோள் சாய்ந்து கண்ணீர் சிந்தத் துடிக்கிறீர்கள் என்பது தெரியும். இறைவன் உங்களுக்குச் சிறந்த தீர்வை வைத்து இருப்பான்.
டி டி ஆர் டூட்டி மாறுவதால் அவர் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்ததால் என் பக்கத்தில் வந்து விழித்திருக்கிறேனா என்று பார்த்தார். நான் மௌனமாக இருந்தேன். பிச்சைக்காரர் இந்தக் கோச்சில் ஏறி வர அவரை 'இது ஏசி கோச். முன்னாடி போங்க' என்று சொல்லியபடி இறங்கிப் போனார். 'என்ன சார் வேணும்' எனக் கேட்டிருக்கலாமோ என்று நினைத்தேன். நாற்பது வயதுக்காரரைவிட டி.டி.ஆரைச் சந்திக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
நான் வீடு பற்றிய சிந்தனையில் குறிப்பாகச் சிட்டுக்குருவிகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி விட்டேன்.
இரயில் புறப்பட்டதற்கான ஹாரன் அடித்து வேகம் எடுத்து ஓடத் துவங்கியது.
- ரவி அல்லது