என் அன்றாடங்களில் ஏதாவது உதவி செய்வதும் அதில் மாட்டிக்கொண்டு முழிப்பதும்தான் நடக்கிறது என்றாலும் ஏனோ அப்படியாக நடந்து கொள்வதை மாற்ற முடியவில்லை.
இதில் என் மனைவிக்கும் எனக்கும் பல முறை வம்புகள் நடப்பது உண்டு. சில அற்ப விஷயங்களுக்காக நாங்கள் விவாதங்கள் செய்யும்போது மகள் வீட்டிலிருந்தால் சொல்லும் ஒரே டயலாக் இதுதான்
"நானும் பிறந்ததிலிருந்து பார்க்கிறேன். ஊர் உலகத்தில் புருசன் பொண்டாட்டி எது எதுக்கோ சண்டை போடுவாங்க. இந்த வீட்டுல இவங்க போட்ற சண்டை எப்பவாச்சும் ஏதாவது உருப்படியா ஒன்னுக்காவது போட்றாங்களா. வந்துட்டாங்க சண்டைப் போட்டுகிறதுக்கு." என்பார். அது எங்களுக்குள் சிரிப்பை வரவழைத்து விடும்.
நேற்று முதல்வரின் பொங்கல் பணம் வாங்க அவரைப் பைக்கில் கொண்டு வந்துவிடுகிறேன் என்றேன். அவர் கிளம்பி உட்கார்ந்து விட்டார். நான் கிளம்ப கொஞ்சம் தாமதமாக ஆனது. கிளம்பிய பிறகு பாத்ரூம் போகவேண்டும் என்று தோன்றியதால் சிறுநீர் கழித்துவிட்டு ப்ளஷை அடித்துவிட்டு திரும்பும்போது டாய்லெட் பேஷனில் சிகப்புக் குளவி மிதந்து கொண்டு இருந்தது. டாய்லெட் பேஷனில் விழுந்து ஏறி அதன் மேல் பகுதி இடுக்கில் இருந்திருக்கிறது.
சரி பாவம் என்று கையைவிட்டு வெளியே எடுத்து ஜன்னல் வழி வீசியபோது அது படக்கென்று கொத்திவிட்டது. நான் கீழேயே போட்டுவிட்டு போயிருக்கலாம். சுளீரென்று கடுத்தது. கை முகமெல்லாம் கழுவிவிட்டு கிச்சனில் சின்ன வெங்காயத்தை அறுத்து தேய்த்த பிறகு வலி குறைந்தது.
வெளியே வந்து பார்த்தால் மனைவியைக் காணோம். இன்னொரு பாத்ரூமிலும் காணோம். சரி என்று ஷூவை மாட்டி வெளியே வந்தால் அவர் மாடியிலிருந்து கீழே இறங்கி நின்று கொண்டு இருந்தார். செம கடுப்பில் இருக்கிறார் என்பது அவரைப் பார்க்கும்போதேத் தெரிந்தது. நான் கீழே இறங்கியதும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.
மூவாயிரம் ரூபாய் பணம் வாங்க ‘கார்லயா இறங்கிப் போய் வாங்கிறது’ என்று நினைத்துக்கொண்டேன். மேலே வந்து மழையை அவர் வெறுப்பாக பார்த்துக்கொண்டு இருந்தார்.
பணம் வாங்காமல் இருக்கலாம் என்று முடிவு எடுக்க முடியாது. பக்கத்து வீட்டில் கேட்பார்கள். ஊரிலிருந்து போன் வரும். மகன் என்னாச்சு என்பான். கவுன்சிலர் போன் செய்து கேட்பார். டோக்கன் இரண்டு நாளைக்கு முன்பே வாங்கி தயாராக உள்ளது. நமக்கு பணம் வேண்டாம் என்று நான் இப்போது சொல்ல முடியாது.அதுவும் இப்போது நான் இருக்கின்ற சூழ்நிலையில் சொல்லவே முடியாது.
மழைக்கோட்டை மாட்டிக் கொண்டு நானே போகிறேன் என்று அவரிடம் சொன்னபோது அதை அவர் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. நான் கிளம்பி வந்து பார்த்தால் பல பேர் காரில் தான் வந்திருந்தார்கள்.
கவுன்சிலர் ரேசன் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு 'ஒரு மணி நேரம் கழித்து வாங்க சார்.இல்லை என்றால் நாற்காலியில் உட்காருங்க சார் ' என்றார். சிலர் உட்கார்ந்து இருந்தார்கள். நானும் உட்கார்ந்தேன். மழை நீர் சாமியானம் வழியாக சொட்டியதில் சட்டை ஈரமாகியது.
பலபேர் கார்டைக் கொடுத்துவிட்டு கிளம்பிப்போனார்கள். வரிசையில் பத்து பேர் வருகிற மாதிரி பெயரை அழைத்து வரிசையாக நிற்க வைத்து பணம், சேலை, அரிசி, சீனி, கரும்பு இவைகளை வாங்க கவுன்சிலர் ஒழுங்கு செய்து கொண்டே இருந்தார். கார்டைக் கொடுத்து சென்ற ஒரு சில பேர் பெயரை அழைக்கும்போது அங்கு இல்லை.
என் முறை வந்து நான் கார்டை நீட்டலாம் என்று இருக்கும்போது முன்பு பெயர் வாசித்தவர்கள் சில வந்துவிட அவர்களிடம் கார்டைக் கொடுத்துவிட்டு கவுன்சிலர் போன் அழைப்பு வந்ததும் பக்கத்தில் நகர்ந்து சென்று பேசிக்கொண்டு இருந்தார். அவர்கள் நான்கு பேர் வரிசையாக வாங்கியபோது பக்கத்தில் இருந்தவர்
"உங்க கார்டைக் கொடுங்க சார்." என்றார்.
அவர்களில் நான்காவது ஆள் வாங்கும்போது எனக்கு பின்னால் உள்ளவருக்கு அடுத்து உள்ளவர்
"நீங்கள் கொடுக்குறீங்களா. நான் கொடுக்கவா." என்றார்.
இப்போது புரிகிறதா..!
'நான் பரவாயில்லை போகட்டும்'என இருப்பதிலும் உதவி செய்வதிலும் நான் எப்படி மாட்டி முழிக்கிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.(நான் வாங்கும்போது மேலதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டு என்னோடு புகைப்படம் எடுத்தது எங்கு வெளியாகி என்ன ஆனதென்று பிறகெப்போதாவது சொல்கிறேன்.)
இப்படியாக போகும் என் வாழ்வின் முன்பொரு நாள் நான் வெளியே ரிசப்ஷனில் மதியம் படுத்திருக்கும் போது எனது தலைக்கு மேலே மாட்டி இருக்கும் சுவர் மின் விசிறியில் சிட்டுக்குருவிகள் வந்து கூடு கட்டியது. இதற்கு முன்பு இதுபோல் இரண்டு முறை கூடுகட்டி குஞ்சுகள் பொறித்து சென்றிருக்கிறது. ஆனால் அந்தக் குருவிகளாக இது இருக்க வாய்ப்பில்லை.
அவைகள் பட்டுப்போன சிறு செடிகளின் இலையின் காய்ந்த நரம்புகளை வைத்து கூடு கட்டியது. இது பச்சைப் பசேலென உள்ள புற்களின் தோகையால் கூடை கட்டுகிறது. இப்போதே விரட்டி விடலாமா என்று யோசித்தேன். இந்த ஏரியாவில் எத்தனையோ வீடுகள் உள்ளது அவைகளைத் தேர்ந்தெடுக்காமல் இங்கு வந்திருக்கிறது. பாவம் அவைகள். என்னை மட்டும் தான் அவைகளுக்கான ஆளாக நினைத்திருக்கலாம்.(இவரைப் பார்த்தாலே ஏமாத்தலாம்ன்னு தோனும் போலட அஸ்மி என்று நண்பர் சொன்னது நினைவுக்கு வந்தது).
இதற்கு முன்பு வந்த குருவிகள் இருந்தபோதே வீட்டில் சலசலப்புகள் வந்தது. அதற்கும் காரணம் இருக்கிறது. அந்த மின்விசிறி வாங்கியதிலிருந்து அது ஓடியதைவிட அதில் குருவி கூடு கட்டி வாழ்ந்து இருந்ததுதான் காரணம். ஐந்தாயிரத்தி ஐநூறு இருந்த விலையை நான்காயிரத்து அறுநூறுக்கு இன்ஜினியர் என்பதால் சம்பூர்ணா எலக்ட்ரிக்கல் சதீஷ் குறைத்துக் கொடுத்தார். கொசுக்கடிப்பதைத் தவிர்க்க வாங்கியது.என்னைத் தவிக்க வைக்கிறது.
பத்து நாட்கள் குருவிகளைக் காணவில்லை என மனைவி கூட்டைப் பிரித்துவிடாம் என்றார். ஒரு நாள் சாயந்திரம் 'உள்ளேன் ஐயா' என்று எனக்கு முன்னால் இருந்த ஜன்னல் கம்பியில் உட்கார்ந்து இருந்தது.
"குருவிகள் வந்துவிட்டது" என்று மனைவியிடம் சமயலறையில் சென்று சொன்னேன்.
"அதுக்கும் சேர்த்து சமைக்கவா." என்றார்.
"அது என்ன சாப்பிடும்ன்னு தெரியலையே."
"கேட்டு வந்து சொல்லுங்க."
நான் அங்கிருந்து ரிசப்ஷனுக்கு வந்து என் கட்டிலில் படுத்த போது அவர் கிச்சனிலிருந்து கொஞ்சம் நகர்ந்து வந்து என்னைப் பார்ப்பது திரைச்சீலையின் வழியாக தெரிந்தது.
'நான் குருவிகளிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறேனா' என்று அவர் சந்தேகப்பட்டு பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லைதான். நான் அதுமாதிரியான ஆள்தான்.
இரண்டு மாதங்கள் கடந்திருக்கும் குருவிகள் குஞ்சு பொறித்ததற்கான அறிகுறிகள் தெரிந்தது. எப்பொழுதாவது குஞ்சுகள் கத்தியது.
எனக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது. இன்னும் கொஞ்ச நாளில் அவைகள் போய்விடும் இந்தக் கொசுக் கடியிலிருந்து தப்பித்துவிடலாம். இந்த முறை கொசுக்கள் வீடு முழுவதும் வந்து கடிக்கிறது.
"அப்ஸ் வீட்ல மாதிரி. நம்ம வீட்லையும் நெட் அடிங்கப்பா." மகள்
"அவர் அடிக்கமாட்டாரும்மா. நெட்டு அடிச்சாதான் குருவி உள்ளே வராதே.பேனைப் பாரூ பல வருசம் ஆனது மாதிரி துடைக்காம பழசாக் கிடக்கு." மனைவி.
அப்ஸ் பக்கத்து வீட்டு சிறுமி. அது பூனை ஒன்றை வளர்த்தது. அது குட்டிகள் போட்டதும் அதனுடன் அப்ஸ் படிக்காமல் விளையாடுகிறது என்று அவரின் வாப்பா ஒரு நாள் பையில் பூனைக் குட்டிகளை பிடித்து எடுத்துக்கொண்டு வெளி வந்தார்.
"என்ன சார் அது"
"பூனைக்குட்டிகள் சார். இதோட விளையாடிக்கிட்டு அப்ஸ் படிக்கவே மாட்டேங்குது சார்."
"அப்ஸ் அப்பா. இங்கே இவரோட காலடியிலதான் உங்க வீட்டு பூனை இரவுப் படுத்துக்கிடக்கு." மனைவி மேலே இருந்து சொன்னார்.
நானும் அவரும் அதிராம்பட்டினம் ரோட்டில் உள்ள பழைய முதல்சேரி ரோட்டில் அவைகளை கருவேலம் செடிகளுக்கு இடையில் விட்டுவிட்டு வந்துவிட்டோம். அப்போது நான் போகும் போது பால் பாக்கெட் வாங்கிச் சென்றதால் அதை அவைகளுக்கு முன்பு பாக்கெட் முனையில் கிழித்து வைத்து விட்டு வந்தேன்.
அப்ஷனா பள்ளியிலிருந்து வந்ததும் பூனை குட்டிகள் இல்லை என்று அது அழுது அடம்பிடித்ததில் ஜூரம் வந்ததால் அவர் அடுத்த நாள் பூனைக்குட்டிகளைத் தேடிப் போக வேண்டியதாகிவிட்டது.
இரண்டு பூனைக்குட்டிகளை ஏதோவொன்று தின்றதில் அதன் அடையாளங்கள் இருந்ததாம்.ஒரு குட்டி மட்டும் எப்படியோ தப்பி இருந்திருக்கிறது. அதுவும் வீட்டிற்கு எடுத்துவந்து பிறகு இறந்துவிட்டது.
இப்பொழுது அவர்கள் விலை உயர்ந்த பூனை ஒன்றை வைத்திருக்கிறார்கள். மகள் அதன் பெயர் ஏதோ சொன்னார் மறந்துவிட்டேன்.
இரவு பத்து மணி இருக்கும். குருவிகள் கத்திக்கொண்டு வெளியே போவதும் வருவதுமாக இருந்தது. எனக்கே கவலையாக இருந்தது. பிறகு எதனாலோ மௌனமாகிவிட்டது.
பத்து நாட்களாக எனக்கு வேறு பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. காலையிலும் மாலையிலும் குருவிக் குஞ்சுகள் விடாமல் கத்துகிறது. சில சமயங்களில் வேறு வேறு நேரங்களிலும் கத்துகிறது.
வீட்டில் உள்ளவர்களின் கவனத்தை அது கலைக்கிறது. மனைவி கூட்டைக் கலைத்துவிடவா என்று பலமுறை கேட்டுவிட்டார். எனக்கு கவலையாக இருந்தது. அந்தக் குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்திருக்குமா. இதுவரை வந்து முட்டை பொறித்து சென்ற குஞ்சுகள் இது போலக் கத்தியதில்லை.
நான் வெளியே சென்று வீட்டிற்கு வரும்போதெல்லாம் கூட்டைப் பார்க்க வேண்டியதாகவிட்டது.
மனைவி நல்லவர்தான். அப்படி எல்லாம் நடக்கக்கூடியவர் அல்ல. ஏழைகளுக்கு உதவும் இறக்கம் உள்ளவர்.விருந்து கொடுத்து உபசரிப்பதில் மகிழ்ச்சி காணுபவர். வீட்டிற்கு விருந்தினர் வரவில்லை என்றால் 'யாரையாவது விருந்திற்கு அழைக்கலாமா' என்பார். வித விதமாக சுவையாக சமைப்பதில் வல்லவர்.
நானும் மகளும் சாமான்களை அங்கங்கே போட்டு வைத்திருப்போம். பெரும்பாலும் வீட்டைக் குப்பையாக்குவது நாங்கள் தான். மகனும் மனைவியும் சுத்தத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். நாங்கள் வீட்டில் பொருட்களை ஒழுங்கற்று போட்டு வைத்துவிடுவதில் கடுப்பாகி வீட்டில் உள்ளதை ஒழுங்குபடுத்தி தேவையற்றதை சாக்கில் கட்டி லாப்டரில் போட்டு விடுவார். அவர் சுத்தம் செய்யும் வரை நானும் மகளும் அந்தப் பக்கமே போகமாட்டோம். உண்மையிலேயே வீடு பளிச்சென்று பார்க்க அழகாக இருக்கும்.
நானும் மகளும் பிறகொரு நாள் எதையாவது தேடுவோம். அப்போது அந்த பொருள் எங்களுக்கு கிடைக்காது.'கிளீன் பண்ட்றங்கிற பேர்ல அம்மா நடத்துற ருத்திர தாண்டவம் இருக்கே' என்று நான் சொல்ல ஆரம்பித்ததும் மகள் மரண பயத்தில் என்னை வாயைப் பொத்தி அடக்கிவிடுவார். சந்தோசமாக நாங்கள் சாப்பிடும்போது இதே வார்த்தைகளைச் சொல்லி நான் பலமுறை கிண்டலடித்து இருக்கிறேன்.
அவர் வெள்ளிக்கிழமை எப்போதும் வீட்டை ஒட்டடை அடித்து சுத்தம் செய்யக் கூடியவர். நான் கொசுக்கடியில் துன்பப்படுவதை நினைத்து கடுப்பாகி கூட்டை பிரித்துவிடுவாரோ என்றப் பயம் இருக்கிறது.
கோபிநாத் செங்கல்பட்டில் இருந்து போன் செய்தான். 'அவன் மனைவி சங்கீதாவின் பாட்டி அடையாறில் இறந்துவிட்டதாகவும் இன்று நடவு வைத்திருக்கிறோம் வைக்கலாமா இல்லை அபசகுணமாகிவிடுமா' என்றும் கேட்டான். 'அது பற்றி எனக்குத் தெரியாது.நேற்று பறித்த நாற்றை இன்னைக்கு நட்டுவிடு. தள்ளிப்போட்டா வேர்கள் பின்னிவிடும்' என்றேன்.
கொஞ்ச நேரத்தில் மீண்டும் போன் செய்தான். 'கூகுளில் தேடிப் பார்த்தேன். நடவு நடுவது நல்ல விசயம். துக்க நாளிலும் நடலாம்' என்று போட்டுல்லதாகச் சொன்னான்.
நானும் குருவிகள் வீட்டில் இருப்பது நல்லதா என்று தேடிப் பார்த்தேன். 'அது நல்ல சகுணம். வீட்டில் பண வரவுகள் மிகவும் அதிகம் வருவதற்கான அறிகுறிகள்' என்று போட்டு இருந்தார்கள். அப்படியொன்றும் பெரும் வரவுகள் வந்ததாக என்னிடம் குறிப்புகள் இல்லை.
நானும் பல நேரங்களில் குருவிக்குஞ்சுகள் கத்துவதை கைபேசியில் பதிவு செய்திருக்கிறேன். நெறைய குஞ்சுகள் கத்துவது போலத் தோன்றும். அதில் குருவிகளின் கீச்சலும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
நான் சிங்கப்பூரில் இருக்கும்போது பங்களாதேஷ்காரங்க, பீகாரிலிருந்து வந்தவங்க சாயந்திரமானால் மேளம் ஒன்றை எடுத்து பாட ஆரம்பித்துவிடுவார்கள். அது ஆயிரம் பேர் தங்கி இருக்கும் கேம்ப். பல இடங்களில் இரண்டு பேர்,நான்கு பேர்,பத்து பேர் என்று ராகம் போட்டு பாடுவார்கள். அவர்கள் ஊரிலும் மாலையானாலே பாட ஆரம்பித்துவிடுவார்களாம்.
அதுபோல இந்தக் குருவிகள் காலை மாலை கச்சேரி நடத்துகிறதா.
கொஞ்ச நேரத்திற்கு முன்பு மகள்,
"அப்பா குருவிக் கூடுகள் எல்லாமே போகிறதுக்கு வழி வைத்து அழகாக ஒவ்வொரு மாதிரி கட்டி இருக்கும். இதுமட்டும் ஏம்பா போக வழியே இல்லாமா ஒரு டைப்பாக கட்டி இருக்கு." என்றதும் அவைகள் கத்த ஆரம்பித்தது.
"பேனோட அடியில் அதுக்கு வழி வச்சிருக்கு. அது வழியாக குருவி போனதை பல நேரம் பார்த்திருக்கேன்."
உடனே அவைகள் கத்தியதும் அவர் பயந்து போனார்.
"தந்தையாரே குருவிகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்துட்டீங்க போல." என்று சொல்லிவிட்டு அவரின் அறைக்கு சென்றுவிட்டார்.
இதை எழுதிக்கொண்டு இருக்கும் போதும் என் தலைக்கு மேலே அவைகள் கத்திக்கொண்டு இருக்கிறது. உங்களுக்கு யாருக்காவது குருவி பாஷை தெரிந்தால் கீழே உள்ள மெயில் ஐடியில் உங்கள் போன் நம்பரை அனுப்புங்கள். நான் உங்களுக்கு போன் செய்கிறேன் அவைகளிடம் 'தயவு செய்து தர்மசங்கடப் படுத்தாமல் கிளம்பிவிடுங்கள். இந்த வீட்டு தலைவி எந்த நேரத்திலும் கடுப்பாகி ருத்ர தாண்டவம் ஆடலாமென' சொல்லிவிடுங்கள்.
அதுபோதும் இப்போது எனக்கு.
பிறகொரு நாள் நான் உங்களிடம் ஆன் லைன் கிளாஸ் சேர்ந்து கொள்கிறேன்.
******
பிகு: இதை நான் மகளிடம் சொன்னாள்.'அப்போ கொசுவுக்கு நெட் அடிக்கிறதா உத்தேசமே இல்லையா.. தந்தையாரே... என்பார்.
- ரவி அல்லது