கடலின் சத்தம் சிலருக்கு ஒரு இசை, சிலருக்கு ஒரு நினைவு. ஆனால் கவிநிலாவுக்கு அது ஒரு அழைப்பு.

அவள் கல்லூரி முடித்த பின்பு வேலைக்காக கடற்கரை அருகில் ஒரு சிறிய கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டிருந்தாள்.

புதிதாக வாழ்க்கை ஆரம்பித்திருந்தாலும், மனதில் ஒரு வெறுமை. மக்கள் அவளிடம் பேசும்போது கூட, அவளது கண்கள் கடலைத் தேடிச் செல்லும்.

அவளுக்கு கடல் ஒரு கண்ணாடி — அதில் தன் உள்ளம் முழுவதும் பிரதிபலிக்கும். அவளுக்கு ஒரு பழக்கம் இருந்தது. ஒவ்வொரு மாலையும் கடற்கரையில் அமர்ந்து ஒரு நோட்புக்கில் ஏதாவது எழுதுவாள், சில நேரங்களில் கவிதை, சில சமயம் ஒரு வரி மட்டும். அந்த நோட்புக்கின் மேல் அவள் எழுதியிருந்தாள்:

“நிஜத்தை எழுதுவதில் உயிரில்லை; கனவை எழுதினால் தான் மனம் உயிர்வாங்கும்.”

அவள் பெயர் போலவே — கவிநிலா, அவளது மனம் ஒளியும் நிழலும் கலந்தது.

ஒரு நாள் மாலை, கடலின் மேல் சூரியன் மங்கியபோது, அலைகள் வழக்கத்தை விட மெதுவாகவும் ஆழமாகவும் ஒலித்தன. அவள் கடற்கரையில் அமர்ந்திருந்தபோது, தூரத்தில் ஒரு மங்கலான நிழல் தெரிந்தது.

முதலில் அது மாயை போல இருந்தது, ஆனால் சில வினாடிகள் கழித்து — தெளிவாக ஒரு தீவு. அதில் பச்சை மரங்கள், மெல்லிய ஒளி.

அவள் விழிகளை நசுக்கினாள். இல்லை, அது நிஜமாகத்தான் இருந்தது. அடுத்த வினாடியில் அது மறைந்தது. அலைகள் தன் குரலில் மூழ்கின. அவள் வீட்டுக்குத் திரும்பினாலும் அந்தக் காட்சி மனதில் மிதந்தது.

அவளது உள்ளம் சொன்னது:

“அது உனக்கான அழைப்பு.”

அந்த இரவு அவள் உறங்கியதும், கனவில் அதே தீவு மீண்டும் தோன்றியது. இந்த முறை கடல் அமைதியாக இருந்தது. அவள் நீரின் மேல் நடந்தாள் போல. தீவின் நடுவே ஒரு பழைய விளக்குக் கோபுரம். அதில் மெதுவாக திறந்த கதவு.
அதனுள் யாரோ ஒருவரின் குரல்:

“கவிநிலா… வழி தெரியும். நீ வந்து சேரு.”

அவள் விழித்தாள். மணி மூன்று. வீட்டில் அமைதி, ஆனால் மனதில் அலை. அவளது கரங்கள் நடுங்கின.

அடுத்த நாள், கல்லூரியில் வகுப்பு இருந்தாலும், மனம் அதே கனவில்தான் இருந்தது. அவளது தோழி மாயா கேட்டாள்:

“நீ சரியா இருக்கியா, லா? கண்கள் முழுக்க கனவில்தான் மிதக்குது.”

அவள் சிரித்தாள், ஆனால் அந்த சிரிப்பு மனம் சேராதது. அவள் இணையத்தில் தேடினாள் — புதுச்சேரி கடற்கரைக்கு அருகே தீவுகள் உள்ளதா என்று.

அவள் ஒரு பழைய வரைபடம் கண்டாள் — அதில் “திரைத் தீவு " என்று சிறிய எழுத்தில். அதன் கீழே ஒரு வரி:

“1972 ஆம் ஆண்டு புயலால் மூழ்கியது. அதன் பின் மீண்டும் காணப்படவில்லை.”

அவள் திடுக்கிட்டாள். அவளது கனவில் அந்த தீவில் விளக்குக் கோபுரம் இருந்ததே!

அவள் நோட்புக்கைத் திறந்தாள் — அதில் ஒரு பாதி நிறுத்தப்பட்ட கதை: “திரைத் தீவு”. அவள் அதைக் கடந்த வருடம் எழுதத் தொடங்கியிருந்தாள், ஆனால் முடிக்க முடியவில்லை — ஏனெனில் அதில் முடிவு அவளுக்கே தெரியவில்லை.

அவள் மனதில் ஒரு சத்தம்:

“நீ தொடங்கியதை முடிக்காம விட்டால், அது உன்னைத் தேடி வரும்.”

மழை பெய்யவில்லை, ஆனால் காற்று ஈரத்துடன் இருந்தது. கவிநிலா கண் திறந்ததும் அவளுக்கு உடல் எடை இல்லாதது போல உணர்ந்தது. சுற்றிலும் பசுமையும், மந்தமான ஒளியும். அவள் புரிந்துகொண்டாள் — இது கனவு இல்லை. அல்லது கனவு மட்டுமல்ல.

அவள் கடலை கடந்து வந்திருந்தாள் — திரைத் தீவு. தீவின் மணல் வெண்மையாக, தண்ணீர் நெகிழ்வுடன் இருந்தது. அலைகள் மெல்ல வந்து அவளது பாதங்களைத் தொட்டன. அந்த தொடுதல் அவளது நினைவுகளை கிளறியது. சிறுவயதில் அவளது அம்மா சொன்ன கதையை நினைத்தாள்:

“மனிதரின் கனவு என்பது கடல் போல, எவ்வளவு ஆழமாக நீந்தினாலும் முடிவில்லை.”

அவள் ஒரு முறை சிரித்தாள். அவள் தாய் இப்போது உயிருடன் இல்லை. ஆனால் அந்தக் குரல் அவளது உள்ளத்தில் இன்னும் ஒலித்தது.

தீவின் நடுவே அவள் பார்த்தது — அதே விளக்குக் கோபுரம், கனவில் கண்டது போலவே. அது பழைய கல் கட்டிடம், மஞ்சள் பாசி படிந்த சுவர்கள். மீன் வாசமும், ஈரத்து நெகிழ்ச்சியும் கலந்த காற்று.

அவள் நிதானமாக கதவின் பக்கம் சென்றாள். கதவு சற்றே திறந்திருந்தது. அவள் தள்ளினாள். கதவு கீச்சென ஒலித்தது — அந்த ஒலி முழு கோபுரத்தையும் அதிர வைத்தது.

அவள் உள்ளே நுழைந்தபோது, சுவரில் பழைய கடிதங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. கண்களுக்கு ஒரு கடிதம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது — அதில் அவளது பெயர்இ “கவிநிலா”.

அவள் மூச்சை அடக்கி அதைத் திறந்தாள். அதில் எழுதப்பட்டிருந்தது:

“நீ எழுதும் கதைகள் உண்மையா, கனவா என்று நீயே தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் நீ நம்பியவை இங்கே உயிர் பெறுகின்றன. ஒவ்வொரு எழுத்தும் ஒரு உயிர். நீ எழுதியதை மீண்டும் வாசிக்காதே — அது உன்னை வாசித்து விடும்.”

அவள் நடுங்கினாள். அவளது கைகள் பனியாய் மாறின. மேலே மாடியிலிருந்து யாரோ மெதுவாக இறங்கும் சத்தம். அவள் தலை தூக்கிப் பார்த்தாள்.

ஒரு பெண் — வெள்ளை உடையில்இ நீளமான முடி. அவளது கண்களில் வெளிச்சம் இருந்தது, ஆனால் அந்த வெளிச்சம் நிஜம் போல தெரியவில்லை. அவள் பேசினாள்:

“கவிநிலா, நீ தாமதமாக வந்தாய்.”

கவிநிலா வியப்புடன் கேட்டாள்:

“நீ யார்? என் பெயரை எப்படி தெரியும்?”

பெண் சிரித்தாள்:

“நான் நீயே. நீயே எழுத மறந்த கதையின் முடிவு.”

அவளது மனம் அதிர்ந்தது. அவள் பின்னால் பின் வாங்கினாள். கோபுரத்தின் சுவர்கள் மெல்ல மாறின — எழுதப்பட்ட எழுத்துகளாக. ஒவ்வொரு கல்லிலும் அவள் எழுதிய வரிகள் தோன்றின. அவள் அதிர்ச்சியடைந்தாள். அவளது கதை சுவர்களில் உயிர் பெற்று இருந்தது.

பெண் மெதுவாக அவளிடம் வந்தாள்:

“நீ என்னை முடிக்காத வரை, இந்தக் கனவு முடிவதில்லை. நீ எழுதின உலகம் உன்னை விழுங்கிவிடும்.”

அந்தச் சொற்கள் மின்னல் போல தாக்கின. அவள் விழித்துக் கொள்ள முயன்றாள் — ஆனால் விழிக்க முடியவில்லை. அவளது உடல் கனவில் பூட்டப்பட்டிருந்தது.

கடலின் அலைகள் அவளை சுற்றின. அந்த நிமிடம் — அவள் முழுவதும் வெளிச்சம் ஆனது. அவள் மனதில் ஒரு வரியை எழுதினாள்:

“நிஜம் கனவை விழுங்கும் முன்இ நான் கனவை நிஜமாக்குகிறேன்.”

அந்த வெளிச்சம் திடீரென முழு தீவையும் மூடியது.

கடல் அமைதியாக இருந்தது. வெளிச்சம் மெதுவாக மங்கியது. அவள் மீண்டும் கண் திறந்தபோது, மணலில் படுத்திருந்தாள் — உடல் சோர்வாக, கைகள் ஈரமாக. சுற்றிலும் அமைதி. அந்த கோபுரம் இப்போது பழைய சிதைந்த கற்களாய் இருந்தது.

அவள் மெதுவாக எழுந்து நடந்தாள். அவளது பாதங்களில் இரத்தம், ஆனால் வலியில்லாத வலி — கனவு போல. அருகில் நோட்புக் திறந்து கிடந்தது. பக்கங்கள் காற்றில் அசைந்தன. ஒரு பக்கம் தானாக திறந்தது. அதில் எழுதப்பட்டிருந்தது — அவளது கையெழுத்தில்:

“நான் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது எழுத்து என்னை எழுதுகிறது.”

அந்த நேரம், கடலின் ஓரம் ஒளி தோன்றியது — ஒரு சிறிய படகு. படகில் முதிய மீனவன் அவளை பார்த்தான்:

“அம்மா, நீ எங்கிருந்து வந்தே?”

கவிநிலா மெதுவாக சொன்னாள்:

“நான் திரைத் தீவிலிருந்து.”

அவன் முகத்தில் அதிர்ச்சி. அவள் சிரித்தாள் — அமைதியான சிரிப்பு.

அடுத்த நாள், மாயா அவளது அறையைத் திறந்தாள். மேசையின் மேல் நோட்புக் மட்டும். பக்கத்தில் ஒரு வரி:

“நான் திரைத் தீவில் இருந்து எழுதுகிறேன்.”

அந்த நேரம் காற்று ஜன்னல் வழியே வந்தது — பக்கங்கள் தானாகத் திரும்பின. ஒரு பக்கத்தில், புது எழுத்துகள் தோன்றின. அவை தாமாகவே எழுதப்பட்டன:

“நீயும் வழி தேடுகிறாயா?”

அந்த ஒளியில், கடலின் வாசனை அறைக்குள் நிரம்பியது. அந்த இரவு மாயா கனவில் கடலைப் பார்த்தாள். அலைகளின் நடுவே — ஒரு பெண். அவள் புன்னகைத்தாள்:

“முடிவில்லை, மாயா… ஒவ்வொரு எழுத்தும் ஒரு தொடக்கம்.”

அவள் விழித்தாள். வெளியில் மழை பெய்துக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே ஒரு கண்ணாடி பாட்டில் விழுந்தது — அதில் காகிதம்:

“கனவின் வழி — திறந்தே இருக்கும்.”

- பிரியதர்ஷினி.வே

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.