இது கனவா... கற்பனையா என்று யோசிக்க முடியவில்லை.

முத்தனுக்கு மூச்சு முட்டியது. ஆங்காங்கே மனிதர்கள் விழுந்து கிடக்கிறார்கள். யாரோ ஒருவர் மயங்கி கிடக்கிறார் என்று தான் முதல் ஒருவரைத் தொட்டு தூக்க முயற்சிக்கும் போது தோன்றியது.

ஆனால் அவர் மரணித்துக் கிடக்கிறார் என்று சில உலுக்கலில் உணர்ந்து கொண்ட போது திக்கென இருந்தது. தூக்கி காலோடு சரித்து அமர்த்திய உடலில் தலை தொங்கியது. அப்படியே மெல்ல உடலை விட்டவன் பேயறைந்தவன் போல பார்த்தான். அவன் கண்கள் அனிச்சையாய் சுழல.. "யாராவது வாங்க....ஹலோ... யாராவது இருக்கீங்களா..." என்று கத்தினான். மைக்ரோ நொடி வித்தியாசத்தில் அந்தக் காட்டுக்குள்ளிருந்து அவன் குரல் எதிரொலித்தது. அதுவே இதயம் உதைத்தது போல இருந்தது.

நிலவொளியைக் கண்களால் வேக வேகமாய் இன்னும் விரித்தான். தொடுதிரை போல விரிந்து கொடுக்கும் வாசலெல்லாம் அடுத்தடுத்து ஆட்கள் விழுந்து கிடக்கிறார்கள். என்ன நடக்கிறது என்ற பதற்றத்தில் பலமாக மூச்சிரைத்தான். ஸ்தம்பித்த உடல்மொழியில் அடித்தல் திருத்தல் சகட்டு மேனிக்கு. அடுத்து ஒருவரைத் தொடும் போது உணர முடிந்தது. அவனும் செத்துக் கிடக்கிறான். ஐயோ என வாய் திறந்தே அலறினான். அதே நேரம் அவன் கால்கள் தடுமாறி வேகமாய் அங்கிருந்து நகர... இன்னொரு வீட்டு வாசலில் இருவர் கீழே கிடந்தார்கள். வேகமாய் ஓடியும் தடுமாறியும் அருகே சென்று குனிந்து பார்த்தவனின் கண்கள் சிமிட்ட மறந்தன. அந்த முகமும் செத்த முகம். திண்ணையில் கிடப்பவரை நடுக்கத்தோடு பார்த்தால்... அதுவும் பிணம்.

அங்கும் இங்கும் அலைபாயும் கண்களோடு பேச்சு வராமல் முகம் இறுகிய முத்தனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அடுத்த வீட்டு வாசலுக்கு சென்று உதவிக்கு கத்தினான். உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை. வேகமாய் உள்ளே சென்று பார்க்க.. கட்டிலில்... தரையில் என்று நாலைந்து பேர் கிடந்தார்கள். மெல்ல அருகே சென்றவனின் பார்வையில் அத்துவானம் நீண்டது. தொட்டபோது சுளீரென உணர்ந்தான். அவர்களும் செத்துக் கிடக்கிறார்கள். என்ன நடக்குது இங்க என்று வேகமாய் வெளிறிய உடலோடு ஓடி வீதிக்கு வந்தான். அங்கும் ஆங்காங்கே சிலர் கிடந்தார்கள். வாசல் திண்ணையில் சிலர் கிடந்தார்கள். உள்ளே சென்று பார்க்க வீட்டுக்குள் சிலர் கிடந்தார்கள். சிலர் போர்வை போர்த்தப்பட்டு கிடந்தார்கள். சிலர் சேரில் அமர்ந்தபடி சரிந்திருந்தார்கள். எல்லாருமே செத்தவர்கள்.

"என்ன எழவுடா இது.....!" அவன் வாய் முணுமுணுத்தது. தொண்டை வறண்டது.

அவசரமாய் போனை எடுத்தான். டவர் இல்லை. டவராய் நின்று பார்த்தான். வானமும் நிலவும் தான் துணை. சுற்றிலும் கோடி கால்களால் விரவிக் கொண்டிருக்கும் நிலா வெளிச்சம் அச்சமூட்டுகிறது. கத்தினான். எதிரொலிக்கும் அவன் குரலே அனிச்சை அரூபமென அல்லாடுகிறது. ஒரு கிராமமே செத்துக் கிடக்கிறது. எப்படி. ஆயிரம் பேய்கள் அவனைச் சுற்றி நிற்பது போல வந்த கற்பனையைக் காற்றை விலக்கி விலக்கித் தள்ளினான்.

காதுக்குள் இரையும் இரவுப் பூச்சிகளின் குரூரம் தாங்கொணாது தவித்தான். அங்கும் இங்கும் ஓடியவன் ஒரு வீட்டு வாசலில் இருந்த மண் குடத்தை எடுத்து அண்ணார்ந்து கவிழ்த்தான். தாகம் தத்தளித்தது. மூச்சு முட்டல் ஒரு பக்கம். காண்பதில் எல்லாம் நடுக்கம் ஒரு பக்கம். இங்கிருந்து ஓடி விட வேண்டும் என்ற பதற்றம் அவனைக் கீழே தள்ளி விழுக்காட்டியது. எப்படி ஒரு ஊரில் எல்லாருமே சாக முடியும். விஷம் ஏதும் குடித்து விட்டார்களா... ஷாக் அடித்து விட்டதா... அப்போதுதான் கவனித்தான். எந்த வீட்டிலும் கரண்ட் இல்லை. எல்லாமே மண் விளக்கு தான். எந்தக் காலத்தில் இருக்கிறோம் என்ற குழப்பமும் அவனுக்குள் சுழன்றது. பெரியவர்கள் சிறியவர்கள் என கண்ணில் பட்ட யாவருமே மரித்துக் கிடந்தது பயமாக இருந்தது. ஊரே மயானம் போல கிடக்க... வேகமாய் அங்கிருந்து நகர முயற்சித்தான். சட்டென அவன் கால்கள் கானலில் நீந்துவது போல நின்றது. நிலா நேராக அந்த வாசலில் தான் நங்கூரமிட்டிருக்கிறதோ என்று தோன்றும் காட்சி பிரமிப்பு அது.

வாசலில் பூ கட்டியபடியே சாய்ந்திருந்தாள் ஒருத்தி.

கண்களில் பழுப்பு கூட... நெஞ்சத்தில் தனக்குப் பிடித்த ஊதா. நெருங்கி பார்த்தான். கொஞ்சம் குனிந்து கவனித்தான்.

முகத்தில் பட்ட நிலவொளியில் நீந்தும் நித்திரை போல. மெல்ல அவள் அருகே சென்று ஹலோ என்றான். கண்கள் மூடி இருக்க... காது மடலருகே காற்றுக்கசைந்தபடி சுருள் முடி. சாவு வீட்டிலும் சித்திரம் இருக்குமோ. தலையைக் கோதிக் கொண்டான். குரலை செருமிக் கொண்டான். பயத்திலும் ஒரு பரபரப்பு. மயானத்திலும் மரம் அசைவது போல அவன் மனம்.

அவளையே ஆழ்ந்து பார்த்தான். இவளுக்காக தான் ஆளாளுக்கு அடித்துக் கொண்டு செத்து விட்டார்களோ. எண்ணத்தில் வண்ண வண்ண பெயிண்ட்.

இவ்ளோ அழகா இருக்கா... இப்ப பயப்படறதா... இவளை ரசிக்கறதா. என்ன நிறம் இது. பால் போல ஆரஞ்சு கலந்து பழுப்பு மிதக்கும் பருவ நிறமா.

அவளைப் பார்த்து கொண்டே அருகே குனிந்தான்.

"ஏங்க... ஹல்லோ...!" என்றான் மெல்லமாக. பயத்துல குரல் அப்படி இருக்கா.. இல்ல அழகிய பாக்கவும் ஹஸ்கிக்கு போயிருச்சானு தெரியல.

"ஏங்க... ஹலோ...."- மறுபடியும்.

பதில் இல்லை. மின்னும் மூக்குத்தியும்... புன்னகை மென்ற இதழும்... கன்னம் குவிந்த கனிவும்.. நெற்றியில் நீந்தும் இவ்விரவும்... சிற்பத்தின் சிறு நினைவு போல தெரிந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு முறை சுற்றிலும் பார்த்தபடியே நடுங்கும் கையோடு... தோளைத் தொட்டான். எந்த வினையுமே தொட்டதால் இல்லை. கண்கள் கூர்ந்தான். இன்னும் கொஞ்சம் அசைத்தான். ம்ஹும். உலுக்குவது போல அசைத்தான்.

அப்படியே மெல்ல சரிந்தாள்.

'ஐயோ நீயுமா...?' என்ற பதட்டம் மேலும் கூடிவிட சரிந்தவளை அப்படியே பாய்ந்து பிடிக்க முயற்சித்தான். ஆனால் நொடி தடுமாற்றத்துக்குள் அவள் தரையோடு பின்னால் சரிந்து விட்டிருந்தாள். அருகே குத்த வைத்து அமர்ந்தபடி கன்னத்தைத் தட்டினான். தோளைப் பற்றி ஆட்டினான். உலுக்கினான். உடலில் சூடு இருக்கிறது. ஒருவேளை உயிர் இருந்தால்... என்னதான்டா நடக்குது இங்க.. அரூபம் அவனை சூழ்ந்து இறுக்குவது போல உணர்ந்தான்.

யோசனை நின்று விட்டது. மேற்கொண்டு எதையும் யோசிக்க முடியவில்லை.

தேவதை மாதிரி இருக்கா. எப்படி சாக குடுக்க. ச்சே... அந்த முகத்தில்தான் எத்தனை அமைதி. அந்த இதழில்தான் எத்தனை மௌனம். அவளை அப்படியே தூக்கி தோளில் போட்டுக் கொண்டு நடையும் ஓட்டமுமாய் அங்கிருந்து கிளம்பினான். இவள் ஒருத்தியையாவது காப்பாற்றி விட வேண்டும். உடலில் சூடு இருக்கிறது. ஒரு வேலை மூச்சு பேச்சில்லாமல் கிடக்கலாம்தானே. ஏதாவது ஷாக் கொடுத்து இதயத்தை இயங்க வைக்க வாய்ப்பு இருந்தால்... வேகமாய் ஓடினான். உடல் இரைக்க ஓடினான். அவள் நிஜமாக கனக்கவே இல்லை. காற்றில் மிதக்கும் பஞ்சு மிட்டாய் போல.. என்ன இது இந்த நேரத்தில் காதல் வந்து இந்தப் பாடு படுத்துகிறது. காலம் காலமாய் பழகிய நினைப்பு போல வந்த எண்ணத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

இதெல்லாம் ஏன் நடக்கிறது. முதலில் இங்க என்ன நடக்கிறது. தலைக்குள் ஆயிரம் கேள்விகள். இதயத்தில் அவள் ஒருத்தியின் தாவல்.

எத்தனை தூரம் வந்தான் என்று தெரியவில்லை. இன்னும் எத்தனை தூரம் போக வேண்டும் என்றும் தெரியவில்லை. நடந்து கொண்டேயிருந்தான். சட்டென கால் ஒரு குழிக்குள் மாட்ட அதே நேரம் முதுகு பக்கம் மூச்சு வெடிக்கும் சப்தம்.

திக்கென தடுமாறி கீழே விழுந்தான். தோளில் கிடந்த அவள் ஒரு பக்கம் சரிந்து கிடக்க.... இவன் எதிர் பக்கம் புரண்டு எழுந்தான்.

கண்கள் திகைக்க... கீழே கிடந்தவள் கண்கள் திறந்திருந்தன. மூச்சு வாங்கியது அவள் முகம். பளீர் நிலவொளியில் புது மலராக அவள் முகம் ஜொலித்தது.

'என்ன.... உயிர் வந்திருச்சு...!' மீண்டும் குழப்பம் முத்தனுக்கு. இதெல்லாம் நிஜமாக நடக்கிறதா.. ஏதும் கனவா.. தன்னையே மூச்சிழுத்து உணர்ந்து பார்த்தான்.

அவளைப் பார்த்து கொண்டே முகத்தருகே சென்றான். தன் முன்னால் குனிந்தபடியே முகம் நடுங்க நெருங்கும் அவனை அவளும் கூர்ந்து பார்த்தாள்.

"என்னாச்சு.. உனக்கு என்னாச்சு. இவ்ளோ நேரம் மூச்சு இல்ல. இப்ப முழிச்சிகிட்ட. எப்பிடி. என்ன நடக்குது. ஏன் உங்க ஊர்ல எல்லாரும் செத்து கிடக்கறாங்க... ஒன்னும் புரியல..." மூச்சில் பாதி பேச்சு தத்தளித்தது. வியர்த்த உடலில் மீதி மூச்சு கொந்தளித்தது.

அவன் கண்கள் நாலாபுறமும் சுழன்று விட்டு வேகமாய் அவள் முகத்தில் வந்து விழுந்தது. என்ன மாதிரியான இடம் இது. பொட்டல்வெளியுமற்ற மேட்டாங்காடுமற்ற சரிந்து விசிறிய மைதானம் போல. இடைச்செருகல் எண்ணத்தில் சுத்து போட்டது. அவள் மிரட்சியோடு அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

"சரி... சரி.. எந்திரி" என்று அவளைப் பிடித்து தூக்க முயற்சித்தான்.

அவள் மெல்லமாக "இரு... கொஞ்சம் சொல்றத கேளு" என கரகரத்தாள். அப்போதுதான் கவனித்தான். அத்தனை அழகிய முகம் நடுங்கி கொண்டிருக்க... அவள் உடலை அசைக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறாள்.

"ஏன் என்னாச்சு... ஏன் இப்பிடியே கிடக்கற..." என்ற தவிதவிப்போடு அவள் கால்களை தொட்டுத் தொட்டுப் பார்த்தான். கைகளும் துவண்டு கிடந்தன. முகத்தில் வாய் மட்டுமே ஏதோ கடினப்பட்டு பேசுகிறது. கழுத்துக்கு கீழே அசைவில்லை.

கண்களில் ஆந்தை இரவு. நெஞ்சத்தில் ஆழ பிளவு.

"ஓ.... என்ன நடக்குது இங்க...." யோசித்தவனுக்கு யோசனை கூடவில்லை. மருத்துவமனைக்கு செல்ல சீரும் நோக்கத்தோடு சரி வா என்று மீண்டும் தூக்க முயற்சித்தான்.

"கொஞ்சம் சொல்றத கேளு.." என்று கண்களைத் திரட்டி சொன்னவளை பார்க்க பயமாக இருந்தது. குரலில்கூட கருங்கல் அழுத்தம்.

தூக்க சென்ற வேகத்தை துக்கத்துக்கு தந்து விட்டு அவள் என்ன சொல்ல போகிறாளோ என்று நடுக்கத்தோடு பார்த்தான்.

"என்ன மறுபடியும் எங்க ஊருக்கு தூக்கிட்டு போ..."

நெற்றி சுருங்கினான். ஏன்... என்றான்... சின்ன குரலில் குழப்ப சுருள்.

"ஏன்னா... இங்கிருந்தா நான் நிஜமாவே செத்துருவேன்..."

நிஜமாவே செத்துருவியா... என்ன பதில் இது.. சாகறதுல என்ன நிஜம் பொய்.... - குழப்பம் கூடியது.

"அதுவும் விடியறதுக்குள்ள என் ஊர்ல என்ன சேர்த்திடு..." -அவள் கண்களில் தீர்க்கம். குரலில் கட்டளை.

அவளையே பார்த்தான். ஒருவேளை விளையாடறாளோ.

"ஐயோ இது விளையாட்டு இல்ல. என்னால நடக்க முடியாது. என் உடம்பு வேலை செய்யாது. தூக்கு..." என்று கத்தினாள். குரல் வழியே வழியும் காற்றில் உயிர் வலி.

எந்த நொடியில் அவளைத் தூக்கி தோளில் போட்டான் என்று தெரியவில்லை. நடக்கத் தொடங்கினான். இடையிடையே ஓடவும் செய்தான். மேலும் மேலும் மர்மம் கூடிக்கொண்டே போனதை நினைத்தாலே பயந்தது. இதெல்லாம் தேவையா. தலையும் புரியல. முண்டமும் புரியல. என்ன மாயம் இது.

ஏழு கிலோ மீட்டரை குறைக்கலானு நண்பன் சொன்னதை நம்பி இந்த காட்டு வழியா வந்து பைக் டயர் கிழிஞ்சு... உதவி கேக்கலானு தூரத்துல தெரிஞ்ச வெளிச்சத்தை நம்பி இந்த ஊருக்குள்ள வந்தது ஒரு குத்தமா. இவனுங்கெல்லாம் மனுஷங்களா... பிசாசுங்களா. கடவுளே.. இப்பிடி வந்து மாட்டிகிட்டேனே. முன்ன இறகு மாதிரி இருந்தவ.. இப்ப பொணம் கனம் கனக்கறா.

முதுகு பின்னிருந்து மூச்சோடு பேச்சும் பிராண்டியது.

"வேகமா போ. விடியறதுக்குள்ள ஊருக்குள்ள இருக்கணும். இல்லனா நான் செத்துருவேன்..."

"போறேம்மா... கொஞ்சம் பொறு..." என்றவன் "என்னவோ இப்ப மட்டும் உயிரோட இருக்கற மாதிரி. இதுவே செத்த மாதிரிதான் இருக்கு..." என்று முனங்கினான். தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

ஏன் எல்லாரும் செத்துக் கிடந்தாங்க. இவ ஏன் இப்பிடி என்னென்னவோ சொல்றா. உடம்புல எந்த இயக்கமும் இல்ல. மறுபடியும் ஊருக்குள்ள போனாலும் சாகத்தான போறா...- கால் முட்டியில் மூளை கொந்தளிப்பை உணர்ந்தான். உடல் எதிர்காற்றில் ஸ்தம்பித்தது. பேசாம இங்கயே விட்டுட்டு ஓடிடலாமா. எண்ணத்தில் குண்டும் குழியும் வந்து வந்து சமநிலைப் பட்டது.

மெய்ன் ரோட்டுல இருந்து எவ்ளோ தூரத்தில் இந்த ஊர் இருக்குன்னும் தெரியல. வெளிய போகணும்னாலும் எந்த வழியா போகணும்னு இப்ப புரிபடல.

அவள் முகத்தைக் கொண்டே முதுகில் 'வேகம் வேகம்' என்றாள். வானில் வெளுப்பு மெல்ல மேலேறிக் கொண்டிருக்கிறது. செந்நிற சூரியன் சிங்க முகத்தில் வந்து கொண்டிருப்பதன் அறிகுறி... பனை அளவில் இருந்த இரவு கீழே செடி அளவில் குறைந்து கொண்டிருப்பதில் உணர முடிந்தது.

விஷயம் தீவிரம் தான். உள்மனம் அடித்து ஓடு என்றது. இதயம் துடித்து துடித்து வெடித்தாலும் வெடித்து விடுமோ என்பதாக உடல் முழுக்க கடிகார டிக் டிக்.

ஊர் எல்லைக்குள் வந்து விட்டான். முன்பு செத்துக் கிடந்தவர்கள் இன்னும் அதே போல தான் கிடந்தார்கள். மயானம் மீண்டும் மண்டைக்குள் சங்கு ஊதியது.

அவளை அவள் வீட்டு வாசலிலேயே கிடத்தினான். அவள் கண்கள் வேகமாய் சிரித்தன. இதழில் அமைதி.

"ரொம்ப நன்றி. நீ இங்கிருக்கறது சரி இல்ல... உடனே கிளம்பு...."- அவள் பேச்சில் அவசரம் தெரிந்தது.

ஏன்... சத்தம் வராமல் கேட்டான். என்னவோ ஆப்பு போல என்று புரிந்தது.

"ஐயோ அதுக்கெல்லாம் நேரம் இல்ல. முதல்ல இங்கிருந்து நீ கிளம்பு...." அவள் கண்கள் சொருகின.

ஏன்.... மறுபடியும் எச்சில் விழுங்கியது கேள்வி. கழுத்தில் எதுவோ ஏறி அழுத்துவது போல கற்பனை.

"ஏன்னா... ஏன்னா...." அப்படியே பார்த்தபடியே அவள் மரித்துப் போனாள்.

அந்தப் பார்வை அந்தக் காட்டில் அத்துமீறி நுழைந்த அரூபத்தை விரட்டுவதாகவே பட்டது.

"அய்யயோ... என்னடா கருமம் இது.....?" முத்தன் எழுந்த வேகத்தில் நின்று பார்த்தான். அவள் மீண்டும் செத்தே விட்டிருந்தாள். மீண்டும் கண்கள் சிமிட்டா அதிர்வு. இனி இங்க நிக்க கூடாது. வேகமாய் ஓடத் தொடங்கினான்.

பின்னால் ஊர் மெல்ல விடிந்து கொண்டிருக்கிறது. முன்னால் உடல் தெறிக்க ஓடினான்.

ஒரு ஏழு கிலோமீட்டரை குறைக்கிறதுக்கு இப்பிடி வந்து மாட்டிகிட்டோமே. எந்தச் சாமியை வேண்டுவது என்று கூட மறந்து விட்டிருந்தது. நாமளே வேற யாரோவா தெரியறது பயத்தை கொப்பளித்தது. நின்று தலை தலையாய் அடித்துக் கொள்ள கூட நேரம் இல்லை. நிதானத்தை விட்டு விடக் கூடாது. ஓடினான். ஓடினான். பல இடங்களில் கைகளால் கூட ஓடினான்.

ஓடி குப்புற விழுந்து புரண்டு சரிகையில் ஆலமரத்தை கடந்திருந்தான். அவளோடு விழுந்த இடம் அது. அவனையும் அறியாமல் மெல்ல நின்றான். அப்படியே அந்த மரத்தடியே அமர்ந்தான். இனி முடியாது என்று யோசிக்க யோசிக்க அப்படியே சரிந்தான்.

கர் கர்ரென... தான் மூச்சு வாங்கும் சத்தம் அந்த வெறுங்காட்டில் வெங்காயம் முளைப்பது போல கேட்டது.

*
கனவில் வந்த தேவதை மாதிரி அல்லவா இருந்தாள். தேவதை என்றாலே மர்மம் இருக்கும் தான் போல.

முத்தன்... மயக்கத்தில் இருக்கிறானா... மர்மத்தில் இருக்கிறானா தெரியவில்லை. விழித்துக் கொண்டே கண்ட கனவா... விழிக்க விழிக்க கலைந்த நிஜமா. அந்த ஊரில் ஏன் எல்லாரும் செத்து கிடந்தாங்க. இவ யாரு. இவளுக்கு ஏன் இப்பிடி ஆச்சு. திரும்ப ஊருக்குள்ள போயி பார்த்தா என்ன.. அங்க என்ன தான் நடக்குது... தெரிந்து கொள்ள வேண்டும். என்ன ஆனாலும் சரி.

நினைவு வந்து மடமடவென எழுந்தபோது மாலை மடங்கி கொண்டிருந்தது.

அப்ப முழு நாளும் மயங்கி கிடந்துருக்கோம் என்றுணர்ந்த போது உடல் வலித்தது. பசி உடலை கிழித்துக் கொண்டிருந்தது.

அருகில் இருந்த ஆலமரம் ஆவென திறந்து கிடக்க... நிலவொளி மெல்ல இறங்க தயாராகிக் கொண்டிருந்தது.

திரும்பவும் ஊருக்கு செல்லும் வழியில் வேகமாய் ஓடத் தொடங்கினான். ஓடியே பூமிக்கு வெளியே போய் விடுவது மாதிரி ஓட்டம் அது. வெறிகொண்டு வேகம் கடகடத்தது. கால்களில் சக்கரம் இணைந்து கொண்ட ஓட்டத்தில் திக் திக் திக்.

வேகம் உள்ளே இருக்க வழியில் பயணம் குறுகி விடும் போல. அவன் ஊர் எல்லையில் நின்றான். வேலை முடிந்து மக்கள் ஆங்காங்கே வீடு நோக்கி சென்று கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. இவுங்கெல்லாம் யாரு... அப்ப நேத்து செத்தவங்க... என்ன ஆனாங்க. இன்னும் கொஞ்சம் முன்னால் நகர்ந்தான். முன்னால் சென்று கொண்டிருந்தவர் நேத்து செத்து கிடந்தவர்தானே... இன்னும் கண்களை கூராக்கி கண்டான். மூலையில் படபடவென காட்சிகள் நேற்றும் இன்றுமாக மாறி மாறி விழுந்தன. நேத்து செத்து கிடந்தவர்கள் தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறார்கள். உணர முடிகையில் உச்சந்தலையில் கிறு கிறுவென்றிருந்தது. என்ன மாதிரி ஊர் இது. ஏன் இப்படி மாயத் தன்மையோடு இருக்கிறது. இன்னும் ஆர்வம் அதிகமானது. இரவு கூட கூட மெல்ல மெல்ல ஊருக்குள் மறைந்து மறைந்து சென்று விட்டிருந்தான்.

ஆங்காங்கே நின்ற மனிதர்கள்.. பேசிக் கொண்டிருந்தவர்கள்.. அப்படி அப்படியே சரிந்தார்கள். ஓ... இப்படித் தான் நேற்றும் ஏன் ஒவ்வொரு இரவும் நடக்கிறது போல. அவன் இன்னும் ஊருக்குள் அடுத்தடுத்து செல்ல செல்ல.. அவனுக்கு இரவு வழி காட்டியது. அதே நேரம் வாசலில் நின்றவர்கள்.. அப்படி அப்படியே சரிவதையும் பார்க்க முடிந்தது.

திகைப்பும் ஆச்சரியமுமாக விரிந்த கண்களில் அடுத்தடுத்த விழுந்த காட்சிகள் சாகசங்கள் போல தெரிந்தன.

"அதான் தெரியுமில்ல. சட்டு புட்டுன்னு சாப்ட்டு தயாரா இருக்க வேண்டாமா..." பெருசு ஒன்று கம்பளி போர்த்தி சாவதற்கு தயாராக.... சற்று நொடியில் கழுத்து சரிந்தது.

ஆச்சரியம் தாங்காமல் ஆழ விரிந்த கண்களோடு இன்னும் ஒளிந்து ஒளிந்து முன்னேறினான்.

"ஏய்... மருவா.... என்கிட்டே வந்து வந்து சாகாதனு எத்தனை வாட்டி சொல்றது.. விடியும் பொது புருஷன் பொண்டாட்டி மாதிரி தெரியுதுடா... என் புருஷன் கேள்வி மேல கேள்வியா கேக்கறான்... மரியாதையா தள்ளி போய்டு..." சொல்ல சொல்லவே சரிந்தாள். அருகே அவளுக்கு ரூட் விடும் மருவன் எப்போதோ மரித்திருந்தான்.

சிலர் திண்ணையில் படுத்தபடியே சாவதற்கு தயாராக இருந்தார்கள். அப்படியே செத்தார்கள்.

பெரியசாமி பைய்யன் தான.. எதுக்கு நம்ம வீட்டு வாசல்ல வந்து வந்து சாகறான் என்ற முத்துசாமி பொண்டாட்டி வழக்கம் போல முனங்கி கொண்டே செத்தாள். அவள் பதின் பருவத்து பிள்ளை பார்வதி அவனைப் பார்த்தபடியே சரிந்தாள்.

ஆச்சரியமும் திகைப்பும் கூடிக்கொண்டே போனது. கால்கள் நடக்கின்றனவா.. மிதக்கின்றனவா... தெரியாத அலசல். ஏதோ மாயாவி கதைக்குள் இருப்பதாக தோன்றியது. இது இந்த உலகம் தானா... வேற உலகத்துக்குள்ள வந்து விட்டோமா என்றுகூட யோசித்தான். வேற்று கிரக மனிதர்களா.. தலை சுற்றி தானும் இப்போது செத்து விடுவோமோ என்ற பதற்றமும் அவனை சூழ்ந்து கொண்டிருந்தது.

"அட சீக்கிரமா ரெண்டு வாய் தின்னு..சாமி " என்று குழந்தைக்கு ஊட்டியவள் அப்படியே சரிந்தாள். வாய்க்குள் சோற்றை அடக்கிய குழந்தை வேகமாய் மென்றும் மெல்லாமலும் முழுங்கி விட்டு அடுத்த வாய்க்கு திறந்தபடியே அழ... அதை பார்த்துக் கொண்டே நின்ற முத்தன்...வேகமாய் அதனருகே அனிச்சையாய் சென்று சோற்றை எடுத்து ஊட்டினான். அந்த குழந்தையும் சட்டென அழுகையை நிறுத்தி விட்டு சமத்தாக சாப்பிட்டது. ஆனால் அடுத்த இரண்டு வாய் தான். பிறகு அப்படியே சரிந்து விட்டது.

தலைக்குள் ஆயிரம் கிளிகள் நுழைந்து ஒற்றை மூளையை கொத்துவது போல உணர்ந்தான். திகைப்பும் தவிப்பும் ஒருசேர அவனை சூழ்ந்து கொத்தியது. ஊரே படபடவென மயானம் ஆவதை பார்க்க நடுக்கமாய் இருந்தாலும்... ஏதோ புரிவதாகப் பட்டது. நேற்றிருந்த மரண பயம் இன்றில்லை. எப்படியும் விடிகையில் எழுந்து விடுவார்கள் என்று தெரிந்ததால்... இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது எப்படி இதெல்லாம் நடக்குது.. ஏன் நடக்குது என்பது தான். யோசனையோடு நடந்தவனுக்கு திக்கென வந்த தேடல்... "அவள் எங்கே..."

அவன் கண்கள் தேவதையைத் தேடியது. வேகமாய் அந்த வீட்டு வாசலுக்கு ஓடினான். வாசலில் அமர்ந்திருந்தாள்.

முகம் கொப்பளிக்க முன்னே ஓடி நின்றவனை... அர்த்ததோடு பார்த்தாள். நீ வருவன்னு தெரியும்.... என்றாள். மொழியில் சிலை அசைவு.

"ஹேய்... உனக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லையே.." என்றான். எத்தனையோ கேட்க வேண்டும் தான். இதை முதலில் கேட்டான்.

"ஊரை விட்டு வெளியே போனா தான் நிஜமா சாவோம். இங்க சாவறது வழக்கம் தான். தினமும் ராத்திரியானா இப்பிடித்தான். நீங்கெல்லாம் தூங்கற மாதிரி நாங்க சாவறது. சரி சரி... உள்ள சோறு குழம்பு இருக்கு. சாப்ட்டு விடியறதுக்குள்ள ஓடிடு...." என்றபடியே சரிந்தாள்.

ஆச்சரியம் அவனை சூழ்ந்தாலும்.... "ஏய் உன் பேர் என்ன.. பேர் பேர்..." என்பதற்குள் அவள் செத்திருந்தாள்.

"இது தான் இங்க நடக்குதா..." வேக வேகமாய் சாப்பிட்டான். நாள் முழுக்க கிடந்த பட்டினி... வேக வேகமாய் தின்ன செய்தது.

இந்த ஊருக்கு எப்படி இப்படி ஒரு மாயம் கிடைத்தது. இவர்கள் எல்லாம் யார். சொன்னால் நம்புவது மாதிரியா இருக்கிறது. மீண்டும் ஆற அமர ஒவ்வொரு பிணத்தையும் தொட்டுப் பார்த்தான். பயம் போயிருந்தது. கேள்வி சூழ்ந்திருந்தது. ஊரே அந்தரத்தில் மிதப்பதாகப் பட்டது. நிலவும் அருகே தொங்குவதாகப் பட்டது. அவனுக்கு அவளிடம் பேச வேண்டும் போல் இருந்தது. வீதியில் ஒரு வெளிப்பட்ட ரகசியமாய் அலைந்து விட்டு மீண்டும் அவளின் வாசலுக்கு வந்தான். அவள் முகத்தையே பார்த்தான். செத்தும் முத்து முளைக்கும் முகம் அது... வழித்து நெட்டி முறித்துக் கொண்டான்.


*
மறுபடியும் தூக்கிக் கொண்டு நேற்றைப்போலவே நடந்தான். ஆலமரம் தாண்டி கொஞ்ச தூரத்தில் அதே போல விழித்து விட்டாள். ஆனால் உடல் நேற்றைப்போலவே இயக்கமற்றிருந்தது.

"நீ இப்பிடி தான் பண்ணுவேன்னு எனக்குத் தெரியும்.. நடந்துக்கிட்டிருக்கற காலத்தையும் நடக்கப்போற காரியத்தையும் ஒன்னும் பண்ண முடியாது. நீ இந்த ஊருக்குள்ள வந்துருக்கவே கூடாது..."

"ஹலோ டெட் பாடிஸ் கொஞ்சம் இருங்க...பிலாசபி அப்புறம் பேசலாம்... முதல்ல நீங்கெல்லாம் யாருன்னு சொல்லுங்க... இங்க ஏன் இப்பிடி நடக்குது... இதெல்லாம் தெரியாம தலையே வெடிச்சிடும் போல.. இதுல நீ வேற இத்தனை அழகா இருக்க. உன்ன விட்டு போக மனசு வரல. லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேனுதான் நினைக்கறேன். உன்கூட பேசணும்னு தோணுச்சு. அதான் நேத்து தெரியாம பண்ணினத இன்னைக்கு தெரிஞ்சே பண்றேன்.."

அவள் கடினப்பட்டு சிரித்தாள்.

"இப்பதான வந்திருக்க. போக போக புரிஞ்சுக்குவ. செத்த இரவுல முழிப்பு வந்துட்டா இப்பிடித்தான் உடல் இயங்காம ஆகிடும். இந்த எல்லைய விட்டு வெளியே போய்ட்டா நிரந்தரமா மூச்சு நின்னுரும்.. அதனால இப்ப ஊருக்கு தூக்கிட்டு போ. விடிஞ்சுருச்சுனா.. அப்புறம் பே தான்" என்றாள்... நாக்கை வெளியே நீட்டி டொய்ங் என்பது போல.

என்னது... போக போக புரிஞ்சுக்குவேனா... அதெல்லாம் ஆகாது... நான் கிளம்பறேன். உன்ன வேணா ஊருக்குள்ள விட்டர்றேன்... ஆனா கண்டு பிடிக்காம விட மாட்டேன். வெளியே போயி என் பிரெண்ட்ஸ கூட்டிட்டு வரேன். அப்புறம் கண்டு பிடிக்கறேன். சரி என் பேர் முத்தன்... என்றான்.

அவள் மர்ம புன்னகையோடு "நான் முள்ளங்கி" என்றாள். என்னது முள்ளங்கியா... அவன் குழப்பத்தில் கும்மி அடிப்பதாக பார்த்தான்.

அவள் முத்து பற்கள் முளைக்க சிரித்தாள். "ஏன் முத்தன்னு இருக்கும் போது முள்ளங்கினு இருக்க கூடாதா..."

சிரித்துக் கொண்டார்கள்.

அவளைத் தூக்கி கொண்டு மீண்டும் ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

நிலா வெளிச்சம் நில்லாமல் அவர்களை போர்த்திக் கொண்டே இருந்தது.

"உங்களுக்கு தூக்கம் மாதிரி எங்களுக்கு மரணம். அவளோ தான். ஏன் தூங்கறோம்னு நீங்க ஆராய்ச்சி பண்றீங்களா... அப்பிடித்தான் நாங்களும் ஏன் சாகறோம்னு ஆராய்ச்சி பண்றது இல்ல. "

ஆனாலும்... அவனுக்கு போதவில்லை. இந்த ஊர் எங்க இருக்குனு தெரிய வேண்டும் என்றான்.

*
அந்த ஊரில் இருப்போரெல்லாம் இப்படி முத்தன் போல வந்தவர்கள் தான். திரும்பவே இல்லை என்பது தான் அவர்கள் வாழ்வின் திருப்பம். அந்த மண்ணுக்கு ஏற்ற மனதும் உடலும் பெற பெற... மற்றவைகள் மறந்து போயி... இதோ இவர்கள் போலவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இந்த மரங்களும் நிலாவும் தான் சாட்சி. முத்தனும் இப்போது அந்த ஊரில் ஒருவனாக ஆகிப் போனான். அது பற்றிய எந்த கேள்வியும் அவனிடம் இப்போது இல்லை. அவன் ஆதி பற்றிய மறதி இன்றைய மரணத்துக்கு அவனைத் தயாராக்கி விட்டது.

"ஐயோ... தள்ளி போடா... விடியும் போது மானம் போகுது..." வீட்டு வாசலில் அமர்ந்திருந்த முள்ளங்கி முனங்க.... முத்தன் முத்தமிட நெருங்க... அப்படியே சரிந்தார்கள்.

கண் கொள்ளா காட்சியை பார்த்தபடியே சரியும் 'இவன்' கடந்த வாரம் வந்து மாட்டிக் கொண்டவன். கொஞ்சம் மிச்சமிருக்கும் நினைவுகள் முனங்குவது நன்றாக கேட்கிறது.

"இந்த பூமில நாம வாழ்ந்து கொண்டிருப்பது நிஜமா கற்பனையானு யாருக்குத் தெரியும். இது ஒரு உலகமா.. கூட இன்னொரு உலகமா. கண்ணுக்கு தெரியறது தான் இருக்குதுனு அர்த்தம் இல்லையே. எத்தனையோ அதிசயங்கள் இருக்கு. மனுஷனால பாக்க முடியாத எவ்ளோ விஷயங்கள் இங்க இருக்கே. அப்பிடினா அதெல்லாம் இல்லைனு ஆகிடுமா. ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மேல பறக்கற விமானம் காணாம போயிடுதுங்கிறாங்க. கடல்ல காணாம போன கப்பல் தனியாவே சுத்திட்டு இருக்குங்கிறாங்க. வேற கிரகத்துல உயிர்கள் இருக்குங்கிறாங்க. எதோ ஒரு நாட்டுல ஒரு குறிப்பிட்ட இடத்துல நாம நேரா நடந்தாலும் பாக்கறவங்களுக்கு சரிவா நடக்கற மாதிரி தெரியுமாமா. கருந்துளைங்கறான்... காற்று வெளிங்கறான். சாவுக்கு அப்புறம் என்னனு யாருக்கும் தெரியல. கடவுள் இருப்பு பற்றி சர்ச்சை ஓயல.

இந்த ஊரு வேற எங்கயோ இல்ல. இங்க தான்.. பக்கத்துல. ஆனா பக்கத்துல இருக்கறது எல்லாம் பக்கத்துல இருக்குனு சொல்ல முடியாதுல்ல. காற்றில் இருக்கும் திரை அசைந்து கொண்டே தான் இருக்கின்றன. யாருக்கு என்ன தெரிகிறதோ அதுமட்டுமா காட்சிகள்.

தேவை இல்லாததை நினைவில் வைத்துக் கொள்வது தான் பெரும் பிரச்சனை. அது இங்க இல்ல. குறட்டையே உடம்ப தொந்தரவு செய்யற கருவிதான. அது வராத தூக்கம் எவ்ளோ நிம்மதி. அதுவும் அது சாவு மாதிரி நிகழ்ந்தா நல்லதுதான..."

பல எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தாலும்...திரும்ப திரும்ப மனசுல ஓடிட்டே இருக்கறது... இது தான்... எப்போ மறக்குமோ தெரியல... அதுக்குள்ள ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டான். கண்கள் சொருக சொருக....

உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.