இன்று நடைப் பயிற்சிக்கு மகளும் வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச நாட்களாக வெளியூரில் இருந்ததால் இரயில் நிலையத்திற்கு நடப்பதற்குச் செல்ல தயக்கமாக இருந்தது.

நாங்கள் கூட்ஸ் வண்டிகள் நிற்கும் நடை மேடையில் ஏறும்போது கூட்டம் குறைவாக இருந்தது. அதிகாலை பனியின் குளிரால் எவரும் வராமலும் இருக்கலாம்.

நேற்று சரக்குகள் இறங்கியதால் நடைமேடையில் அதன் அடையாளங்கள் தெரிந்தது.

"ஏப்பா... ஆங்காங்கே கிடக்கிறதை ஒழுங்கு படுத்தாமல் இருக்கிறார்கள்", மகள்.

"இன்றும் சரக்கு இறங்கலாம்மா. எலக்ட்ரிக் லைன் வேலைகள் நடைபெறுவதால் அவர்கள் இப்படியே விட்டிருக்கலாம்.", என்றேன் நான்.

மகள் மௌனமாக நடக்க ஆரம்பித்தார். எலக்ட்ரிக் லைன் வேலைக்கான மின் கம்பங்கள் அதற்கு தேவையான சாமான்கள் இறக்கி வைத்திருந்தார்கள்.

ஒரு முழு நீள நடை மேடையில் நடந்து திரும்பும்போது அங்கிருந்த மயான இடத்தின் பக்கம் இருந்து டாக்டர் இலியாஸ் நடை மேடையில் ஏறினார். அவரோடு வந்தவர்கள் காம்பவுண்ட் இருந்தப் பகுதியை நோக்கி சென்றார்கள். நான் திரும்பி நடக்காமல் இருந்திருந்தால் டாக்டர் என்னிடம் பேசி இருப்பார். இன்று இன்னார் மௌத்தாகி இருக்கிறார் என்றோ இல்லை ஜமாத்தார்களோடு ஏதாவது வேலையாக வந்திருப்பதைச் சொல்லி இருப்பார்.

மகள் என்னோடு வருவதே சிரித்துப்பேசி விளையாடுவதற்காகத்தான். நான் நடக்கும் போது பேசமாட்டேன் என்பது அவருக்குத் தெரிந்திருக்குமா என்றுத் தெரியவில்லை. இரண்டு மூன்று முறை ஏதேதோ சொல்லி நான் பதில் சொல்லாததால் அவர் மௌனமாக என்னோடு வந்தார்.

புர்க்கா போட்ட பெண்ணும் அவரது நண்பரான இந்துப்பெண்ணும் நாங்கள் நடந்து செல்வதை இரண்டு மூன்று முறைப் பார்த்தார்கள். நான் என் மனைவியுடன் தான் இங்கு நடப்பேன் இன்று மகள் வந்ததால் அவரைப் பார்ப்பதற்காக அவர்கள் பார்த்திருக்கலாம்.

பயணிகள் இரயில் வந்துபோகும் நடை மேடையில் இருந்த இரண்டு புங்க மரங்களை அடியோடு அறுத்து அப்புறப்படுத்தி இருந்தார்கள்.

கடந்த வருடம் அந்த நடைமேடையில் தான் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். அப்போது அது தளிர்த்து பார்க்க அழகாக இருக்கும். அதன் கிளைகள் போகிறவர்களை வழி மறிப்பதாக நீண்டிருக்கும். எங்களைப்போல நடப்பவர்கள் எந்தக் காரணமும் இல்லாமல் அதன் இலைகளை பறித்து கீழேப் போட்டுவிட்டு நடப்பார்கள். எனக்கு அது அப்போது வருத்தை அளிக்கும். போகும் போது இலையைக் கிள்ளிப்போடுவது என்ன விதமான குணமோ என்று என் மனைவியிடம் நடந்து முடித்து வரும்போது சொல்லிக் கொண்டு இருப்பேன்.

அவரது கவலை நான் அந்த ஆட்களிடம் எதுவும் கேட்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் என்பது எனக்கும் தெரியும்.

அன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் அவைகளுக்கு வணக்கம் சொல்கிறேன் என்று நான் யாரிடமும் சொன்னதில்லை. அது பதில் வணக்கம் சொல்ல அநேக சாத்தியங்கள் இருக்கிறது.

பிறகு ஒரு நாள் அதன் கிளைகளை யாரோ ஒடித்து வைத்திருந்தார்கள். ஒரு வழியாக அதை ஒழுங்காக வெட்டி அதன் சிறு கிளைகளைச் சரி செய்திருக்கலாம் என நினைத்தேன்.

நானே உயரம் கொஞ்சம் குறைவானவன். நான் அந்த சிறு கிளைகளைக் கடக்கும்போது என் தலையில் அது உரசியது. நான் ஒதுங்கி நடந்தேன். சில முறை கவனமற்று ஒதுங்காமல் அந்த இடத்தைக் கடக்கும்போது தலையில் உரசும். நடந்துபோகும் நல்லவர்களில் சிலர் இலைகளை பிய்த்துப் போட்டார்கள்.

எனக்கு கோபம் வந்தாலும் அதை இவர்களிடம் காட்ட முடியாது. நடக்க வருகின்ற இடத்தில் ஏன் அசௌகரிய சூழலை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் என்னிடம் பேச முடியாமல் இரயில் நிலையத்தில் ஏதாவது சொல்லி இங்கு நடப்பதை நிறுத்தி விடுவார்கள். மனித அகங்காரம் வரலாறு நெடுகிலும் நிகழ்த்திய துயரங்களை நான் நன்கு அறிவேன். நம்மால் ஏன் மற்றவர்கள் பாதிக்கப்பட வேண்டும் என்று அவர்களிடம் கேட்கும் எண்ணத்தை விட்டுவிட்டேன்.

இந்தச் சுற்று முடிந்து அந்த மரத்திடம் செல்லும்போது தொங்கும் கிளையை ஒடித்து தூரப்போட்டுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மனைவியிடம் சொன்னால் தடுத்துவிடுவார் என்று அவரிடம் சொல்லாமலையே மௌனமாக நடந்து வந்தேன்.

அந்த இடம் வந்ததும் வேறு சிந்தனையில் அதைக் கடந்து விட்டேன். என் தலையில் அந்த கிளை உரசவில்லை. மறுபடியும் திரும்பி சென்று நடந்துப் பார்த்தேன். அப்போதும் உரசவில்லை. அந்த இடத்திற்கு நேராக நின்று கையை வைத்தால் கால் அடிக்கு மேல் விலகல் இருந்தது. என் மனைவி நான் என்ன செய்கிறேன் என்று பார்க்காததால் தொடர்ந்து நடந்து சென்று கொண்டு இருந்தார். நான் ஒடித்துவிடப் போகிறேன் என்று உடனே ஒரு மரத்தால் வளர்ந்துவிட முடியுமா என்று எனக்கு குழப்பமாகவும் இருந்தது. அதன் மேல் எனக்கு தனித்த பாசம் எப்போதும் இருந்தது.

அந்த மரங்களைத்தான் அடியோடு அறுத்து அப்புறப்படுத்தி இருந்தார்கள். இதுபோன்ற பொது இடங்களில்,சாலை ஓரங்களில் தொலை நோக்குப் பார்வையில் திட்டமிடாமல் வைத்த பிறகு மரங்களை வெட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் பொது நல வழக்கு போட முடியுமா என்று தெரியவில்லை.

சரக்கு இறக்கும் ஊழியர்களின் ஓய்வு அறைக்கு முன்பு சிலர் நடந்து முடித்துவிட்டு ஊர்க்கதைகள் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

எங்களின் அடுத்த சுற்று ஆரம்பிக்கும்போது மகள் கீழே நடப்பதற்கு இடஞ்சலாகக் கிடந்த கிழிந்த கறுப்பு நிறத் தார்ப் பாயைச் சுருட்டி ஓரமாக போட்டு விட்டு நடந்தார். நான் அதற்கு அடுத்துக் கிடந்த செங்கல் சிலவற்றை ஓரமாக எடுத்துப் போட்டு விட்டு நாங்கள் நடந்தோம்.

நாங்கள் செய்வதை சிலர் பார்ப்பதைக் கவனித்தேன். இவைகள் எல்லாவற்றையும் ஒதுங்கி ஒதுங்கிதான் இவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

மின் சாதனங்கள் ஏற்றி வரும் இரயில் பெட்டி நிற்கும் இடத்தைக் கடந்து செல்லும் இடத்தில் அலுமினிய வண்ணம் பூசிய போல்டில் முப்பதுக்கு குறைமாமல் வாசர்கள் போட்டுக் கடைசியில் ஒரு நட்டைப் போட்டு இருந்தார்கள்.

நான் அதை எடுத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தேன். அது அரையடி நீளம் இருந்ததாலும் அதில் வாசர்கள் இருந்ததாலும் கனமாக இருந்தது. இதைப் பக்கத்தில் போட முடியாது. அதை யாரும் கவனித்து பயன்பாட்டிற்காக உபயோகிக்கமாட்டார்கள். இதை இந்தச் சுற்று திரும்பி பாதிவரை வந்து அங்கு அடுக்கி இருக்கும் மின் கம்பங்களின் மேல் வைத்தால்தான் அது பயன்பாடுடையதாக மாறும். இல்லை என்றால் அது மண்ணோடு மண்ணாக மக்கிப்போவதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது.

அதைக் கையில் வைத்து நடந்து சென்றது எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

"தந்தையாரே... திருடிகிட்டுப் போறீங்கன்னு புடுச்சிறப் போறாங்க."

நான் சிரித்துவிட்டு எதுவும் பேசாமல் மௌனமாக நடந்தேன்.

எதிரில் கடந்து போனவர்கள் என் கையைப் பார்த்தார்கள். அது இன்னும் எனக்கு அசௌகரியத்தைக் கொடுத்தது. தயக்கத்தோடு இதை எடுத்ததால் கொஞ்சம் தள்ளிக் கிடந்த ஒரு நட்டை நான் எடுக்க மறந்து போனேன்.

அதன் பிறகும் என்னைக் கடந்து போனவர்கள் கையைத்தான் பார்த்தார்கள். நான் நடக்கும் போது பேசமாட்டேன் என்று தெரிந்துதான் பேசாமல் போகிறார்களோ. இல்லை என்றால் மகளைப் போல இவர்களும் கிண்டல் செய்து இருப்பார்கள் தானே. ஒரு வேலை நான் திருடி எடுத்துச் செல்வதாக நினைப்பார்களோ.

நான் அங்கே அடுக்கி இருக்கும் மின் கம்பங்களில் எதன் மீது வைப்பது என்று அதை பார்த்தபடியே நடந்து கொண்டு இருந்தேன். நேராக நிறுத்தும் கம்பம் ஏழு அடுக்கி இருந்தது உயரமாக இருந்தது. நேராக நிற்கும் கம்பத்தில் தண்டாவாளம் பக்கம் இணைக்கும் மின் கம்பிகள் வரும் கம்பி பட்டையாக மின்கம்பத்தில் பாதி அளவில் இரண்டு இருந்தது . அதற்குப் பக்கத்தில் இரண்டு மின் கம்பங்கள் கிடந்தது. நான் எடுத்து வந்த போல்டில் மாட்டப்பட்ட வாசர்களை மின் கம்பிகளை இணைக்கும் பட்டைக் கம்பியின் மேல் வைத்தேன். அது எங்கிருந்து பார்த்தாலும் தெரிந்தது. அப்போது கைபேசி ஒலிக்க எடுத்துப் பார்த்தேன். ஜெயக்குமார் அழைத்தான். வேறு யாராக இருந்தாலும் பிறகு பேசலாம் என கடந்துவிடலாம். அவன் ஏதாவது முக்கியமான செய்திக்குத்தான் பேசுவான்.

"சொல்லுப்பா."

"அப்பாவுக்கு படுத்த படுக்கையாக இருந்ததால முதுகுல புண்ணாயிருச்சாம். ஒரு வாரத்துக்கு நரம்பு ஊசி போடனுமாம். யாராவது கம்பவுண்டர் இருந்தால் வரச்சொல்லு."

"கூத்த பெருமாள் டாக்டரிடம் பாஸ்கர்ன்னு ஒருத்தர் இருக்கார். அவர்தான் எனக்கு ஆபரேசன் செய்த நேரத்தில் வீட்டிற்கு வந்து நரம்புல ஊசி போட்டார். உங்க ஊருக்கு வருவாரான்னு தெரியல. நான் கேட்டுப் பார்க்கிறேன்."

அவன் மனைவி புனிதா தான் பாவம். ஜெயக்குமாரும் அவன் தம்பி சந்துருவும் சண்டைகள் போட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடியவர். இன்று இதுபோல் எண்ணம் உள்ளவர்களைப் பார்ப்பது அரிது. அவன் அப்பாவை வைத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் இருவருக்கும் மன வருத்தங்களை ஏற்படுத்துகிறார்கள் என்று அவனது ஊர்க்காரர்களே என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். கம்பவுண்டர் பாஸ்கரிடம் பேசிவிட்டு அவனிடம் சந்துரு விசயமாக பேச வேண்டும்.

'சந்துரு கோவப்பட்ட நீ பொறுத்துப்போடா. அவருக்கு ப்ரஷர் இருக்கு. நீ ஏதாவது பேசினா அவருக்கு ப்ரஷர் ஹையாக மாறுவிடும். உன் போனை எடுக்காமல் இருப்பதே அதனால்தான்.உன் மேல் வருத்தப்பட்டு இல்லை. உன் மேல் அவர் மிகுந்த மரியாதை வைத்துள்ளார். அப்பா மேட்டர்ல நீ அவரை அனுசரித்துப்போடா' என்று சொல்ல வேண்டும்.

கைபேசியை பையில் வைத்துவிட்டு பார்க்கும்போது நடை பயிற்சிக்கு வந்தவர்கள் எல்லோரும் அவரவர்கள் நடந்து வந்த இடத்தில் இருந்த கற்கள்,கிழிந்த படுதா, சாக்கு போன்றவைகளை எடுத்து ஓரமாக போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

யாவையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. மகள் என்னை இடுப்பால் சிறார்கள் இடிப்பதுபோல இடித்தார். நானும் சிரித்துக்கொண்டே இடித்தேன்.

இந்தச் சுற்று வரும்போது இரயில் நடை மேடை கிட்டத்தட்ட சுத்தமாக இருந்தது. இவர்கள் குனிந்து அவரவர் இடத்தில் இருந்ததை ஒதுக்கிப்போட்டார்கள். அவ்வளவுதான். இடம் சுத்தமாகி விட்டது.

இங்கு நல்லதை ஆரம்பிக்க ஒருவர் வேண்டும். அவர் ஆரம்பித்தால் அப்படியே அதைப் பின்பற்றி நன்மைகளை நடத்திவிடுவார்கள்.

என் மகள் வீட்டில் அவர் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தார்.

"அப்பா ரொம்ப மோசம். நடக்கும்போது பேசமாட்டேங்கிறார். நீங்கள் இத முன்னாடியே சொல்லி இருந்தால் நான் போயிருக்க மாட்டேன். அவரோட வம்பிழுத்து விளையாடத்தான் நான் போனேன். அவர் ரொம்ப மோசம்" என்று மனைவியை வேலைகள் செய்யவிடாமல் சமயலறையில் தொல்லை செய்து கொண்டிருந்தார்.

இனி என் மகள் வரமாட்டார் என்பது எனக்கும் தெரியும்.

காலையில் இரயில் நிலையத்தில் நடக்கும் போது அவர்கள் ஒவ்வொரு நாளும் 'பாப்பா வரலை' என்று கேட்பதில்தான் இருக்கிறது அவர் விதைத்த விசயம்.

'வழியினில் கிடக்கின்ற கல்லையும் முல்லையும் வாகாய் அகற்றுதல் தர்மம் என்றார்' என்று பக்கத்து வீட்டிலிருந்து நாகூர் ஹனீபா 'சிந்திக்கும் ஆற்றலை'ப் பெற்ற மனிதர்களுக்காகப் ஹோம் தியேட்டரில் பாடிக் கொண்டிருந்தது என்னைப்போல பலருக்கும் தெளிவாக கேட்டிருக்கும்தான்.

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.