ஏன் இத்தனை வேகம்... ஏன் இத்தனை அலட்சியம்.. ஏன் இத்தனை கொம்பு. வழியெங்கும் தீபாவளி கொண்டாட்டம் எல்லாம் மீறிக் கொண்டிருக்கிறதோ. ஆங்காங்கே கூடிய இடத்தில் எல்லாம் மனித சஞ்சலங்கள். மாற்றி மாற்றி குரல் ஓங்கும் குயுக்திகள். ஒருவனை ஒருவன் மிஞ்ச வேண்டும் என்ற வேகம். தலை தெறிக்க சென்று எந்தக் கொண்டாட்டத்தை எடுத்து நிமிர்த்த போகிறார்கள்.
யோசனை ஒரு பக்கம் இருந்தாலும்.. மனித முகங்களில் இருக்கும் கணப்பு அதிபயங்கரமாக தெரிந்தது.
எந்தக் கண்ணிலும் கருணை என்பதே இல்லையோ என்ற கேள்வி மயக்கம் நமக்கு. அந்த முகங்களில் அகங்காரமும் ஆங்காரமும் கோர தாண்டவமாடுவது... தென்படுவது எனக்கு மட்டும்தானா.
மிகக் கவனமாக வண்டி ஓட்டினோம். நம்மைக் கடந்து சென்ற எந்த வண்டியும் அதிவேகம் தான். ஏன் இந்த மனிதர்கள் இத்தனை அவசரத்துக்குள் மாட்டினார்கள் என பேசுபொருள் மாறிக் கொண்டிருக்க... சென்று நின்ற இடம் மலை அடிவாரம். சடுதியில் இயற்கை நம்மை ஏந்திக் கொண்டது. படபடவென வந்து கமழ்ந்து கொண்டது... மனம் முழுக்க தீபாவளி வாசம்.
நண்பர் மலையடிவார வேட்டை சாமியை தரிசிக்க.. நான் சிலுவைக் கல் மலை உச்சியை முகர்ந்து கொண்டிருந்தேன்.
அவிழ்த்து விட்ட அரை கிறுக்கர்களின் வெளிப்பாடு போல அந்தக் காட்சி நம்மை முதலில் கவனம் ஈர்க்காவிட்டாலும்.. அது கொண்ட வெளிப்பாடு நம்மை விடாமல் கவனம் கொள்ள செய்தது. என்ன இது அடிச்சுக்கறானுங்க என்று யோசித்தோம். கிசுகிசுத்துக் கொண்டோம்.
படபடவென பற்றிக் கொண்ட பகை... நெருப்பை விட கொடூரமானது. நான்கு பேர் கொண்ட கும்பல் அது. அதில் ஒருவனை போட்டு மற்ற மூவரும் சரமாரியாக அடிக்கிறார்கள். என்ன ஏதென்று யோசிக்க நேரமும் தரவில்லை. இயல்பாகவே வரும் ஒதுங்குதல் எங்களைச் சற்று தள்ளி நகர்த்தி இருந்தது. என்னதான்டா பிரச்சனை... ம்ஹும். நான்கு பேருமே கத்துகிறார்கள். மாற்றி மாற்றி வசை பாடுகிறார்கள். வாய் தகராறு கை கலப்பில் என சாதாரணமாக தெரிந்தாலும்.. அடுத்தடுத்த கை கலப்பு கொலையில் முடிந்து விடும் போல. அப்படி ஒரு கொலை வெறி தாக்குதல். கூட வந்த நண்பனை எத்தனை கோபம் வந்தாலும் இப்படி தாக்க முடியுமா. யோசனையும் படபடப்பும் நம்மை அனிச்சையாக மரத்துக்கு பின் தள்ளி விட்டது.
இத்தனை பகை எங்கிருந்து வருகிறது. இத்தனை வன்மம் எப்படி கூடி இருக்கிறது. எந்த அழுத்தம் இப்படி கூட வந்தவனையே குத்தி போட தூண்டுகிறது. கேள்வியும் இயலாமையும் நம்மை போட்டு பிராண்டி எடுக்கிறது.
வேடிக்கை கண்கள் நின்று பார்க்கிறது. அப்படி அப்படியே நகர்ந்து விடுகிறது. சில்லறை பசங்க சண்டைக்கெல்லாம் உள்ள போனா சரியா வராது என நின்று பார்த்த சில வண்டிகளும் நகர்ந்து விட்டன. சண்டை நடந்து கொண்டிருக்கும் இடம் சற்று உள் வாங்கிய செடி மறைவு என்பதால் மிருக வேட்டை போலவே அது ஒரு தத்ரூப உள்ளுணர்வை கொடுத்தது.
நோம்பி நாளுமா என்ன இப்டி அடிச்சிக்கறானுங்க... கிசுகிசுத்துக் கொண்டோம்.
கண்களில் வெறி. உடம்பில் பித்து. அவர்களின் கால்கள் அங்கும் இங்கும் அலை மோதுகிறது. கையில் கிடைத்த பாட்டிலை எடுத்து அடிக்கிறான் ஒருவன். கல்லை தூக்கிக் கொண்டு முகத்தில் அடிக்க தள்ளாடுகிறான் ஒருவன். அடி பட்டவன் தலையில்... முகத்தில் என ரத்தம் வழிய செய்வதறியாது நிற்கிறான். தள்ளாடுகிறான். விழுகிறான். தடுமாறி எழுகிறான். அலை மோதுகிறான். அடிக்கும் நண்பர்களைப் பார்த்து கையைக் காட்டி காட்டி பொறு பொறு என்கிறான். சொற்களற்ற பாவம் அவன் முகத்தில் சட்டென அவனை ஒரு நல்லவனாக்கி விட்டிருக்கிறது. இயலாத உடல்மொழி கெஞ்சுவதற்கும் சொல்லற்று விக்கித்து தகிக்கிறது.
ஏதோ வாய் விட்டுட்டான் போல...- நண்பர் கிசுகிசுத்தார்.
என்ன வேணா சொல்லிருக்கட்டுமே... அதுக்கு இப்பிடி அடிக்கறதா. வாய் வரை வந்த சொற்கள் கற்களுக்குள் ஒளியும் சிறு பாம்பென நழுவுகிறது எனக்கு.
அய்யய்யோ சாத்தான் சந்து பக்கம் திரும்புதே என பார்க்க பார்க்கவே அடிதடிகாரன்களில் ஒருவன் வெறி கொண்ட நாயின் வெளி நீளும் பல்லை போல அப்படியே எங்களுக்கருகே சற்று தள்ளி பைக்கை சென்டர் ஸ்டான்ட் போட்டு அமர்ந்திருந்த ஒருவன் பக்கம் சென்றான்.
என்ன... வீடியோ எடுக்கறியா... வீடியோதான எடுக்கற...- கேட்க கேட்கவே அவன் கை அந்தாளை அறைந்து தள்ளியது. சற்றும் எதிர்பாராத தாக்குதல். பைக்கோடு கீழே சரிந்து ஒரு புரள் புரண்டு... எழுந்து நிற்க நிற்கவே அடி வயிற்றில் விழுந்த உதை அந்தாளை கதி கலங்க செய்து விட்டது. நின்று நிதானிக்க நொடி நேரம்கூட கொடுக்க வில்லை. அதற்குள் மற்ற இருவரும் வேகமாய் ஓடி வந்து சேர்ந்து கொண்டார்கள். சிவந்த கண்களில்... கனன்ற முகத்தில்... நடுங்கும் உடலில் வெளிவந்தது அத்தனையும் வெறியும் கோபமும். ஒருவன் உதைக்க ஒருவன் முகத்திலேயே சரமாரியாக அடித்தான். முகத்தில் விழும் அடி... வினோதமான சத்தத்தோடு மொத்த உடலையும் குறுக்குகிறது. மிருகக் கொந்தளிப்பை அத்தனை அருகே காண... நமக்கு இதயத்துடிப்பு எகிறியது. செந்நாய்களிடம் சிக்கிக்கொண்ட சிறுத்தை போல சுருண்டு சுழன்ற வீடியோக்காரனைப் பார்க்க பாவமாய் இருந்தது.
செல்போனை பிடுங்கி மரத்தில் அடித்து உடைத்து அதே வேகத்தில் கீழே கிடந்த பாட்டிலை எடுத்து அவன் மண்டையை உடைத்து விட்டார்கள்.
ஒருவன் அருகே கிடந்த வேர் போல அல்லது கிழங்கு போல அல்லது ஒரு கட்டை போல ஒன்றை எடுத்து முதுகு கால் என்று தொடர்ந்து அடித்துக்கொண்டே இருக்கிறான்.
கைக்கு கிடைப்பதை எல்லாம் பிடுங்கி பிடுங்கி அடிக்கிறார்கள். பாட்டில் கிடைத்தால் பாட்டில். கல் கிடைத்தால் கல். கிடைக்காத கையின் வெறிகொண்ட துழாவலில்... அதுவும் ஆ ஆ வென கத்திக்கொண்டு அதையா இதையா என்று எடுக்க அங்குமிங்கும் அலையும் அலசல்... வன்முறையின் வெற்றுத் திரை தீ பிடித்து தகித்தது.
அயோ காப்பாத்துங்க காப்பாத்துங்க என மிரண்டு கத்திய அவனுக்கு... அதிர்ச்சியில் அல்லாடிய அவனுக்கு... அடி பொறுக்காத அவனுக்கு... இந்த திகிலை எதிர்பார்க்காத அவனுக்கு... இந்த நோம்பி நாளில் இப்படி ஆகும் என்று துளி கூட யோசித்திராத அவனுக்கு கெஞ்சுவதைத் தவிர செய்ய ஒன்றும் இயலவில்லை. எங்களை உட்பட அங்கே நின்று நகர்ந்து ஒதுங்கி ஒளிந்து எல்லாரிடமும் கெஞ்சுகிறான். தடுமாறி கீழே விழுந்தவனை கழுத்தில் மிதிக்கத் தொடங்கி விட்டான் ஒருவன். பார்க்கவே பதறி விட்டது.
இதற்கிடையே அடி வாங்கிக் கொண்டிருந்த அவர்கள் கூட்டத்தின் பலியாடு கிடைத்த கேப்பில் வண்டியை எடுத்துக்கொண்டு பறந்து விட்டான்.
ஒருவன் கைக்கடக்கமான கல் ஒன்றை எடுத்து கீழே கிடந்த வீடியோக்காரன் மேல் போடுவதற்கு தயாராகி விட்டான்.
இது கொலை கேசு என்று சுற்றி நின்ற சிலரும் தெறித்து விட.. நமக்கு மனமும் மூளையும் சண்டை போடத் தொடங்கி நிலை கொல்லாமை நிஜமாய் மூஞ்சியில் துப்பிக் கொண்டிருந்தது.
மனதுக்குள் என்னவோ கலக்கம். இயலாமை நம்மை சுத்து போட்டது. முகமற்று நிற்பது போல இருந்தது. வெறும் பேச்சுதான் பேசிக் கொண்டிருக்கிறோமா என்ற சுய கேள்வி நம்மை துளைத்தது. அங்கே பேச்சுக்கு இடமே இல்லையே. கொலை வெறி தாக்குதல் கொடூரமாக இருக்க... நானும் நண்பரும் திகைத்தோம்.
நண்பர் வண்டியை எடுத்து விட்டார். ஏறுங்க. போய்டலாம்... இது ஆகாது என்றார். அவர் முகத்திலும் படபடப்பு. எனக்கும் உள்ளத்தில் தத்தளிப்பு. ஆனாலும் கண் எதிரே இப்படி ஓர் அராஜகம் அட்டூழியம் அத்துமீறல் அடாவடி... கொடுமை... எப்படி கண்டுக்காமல் போவது.
அவனுங்க நிதானத்துல இல்ல. கண்டிப்பா நம்ம பக்கம் திரும்பிடுவானுங்க.. சொன்னா கேளுங்க... என நண்பர் கிட்டத்தட்ட எச்சரிக்கை தந்தார். முகத்திலும் பேச்சிலும் சிறு தடுமாற்றம் வந்திருந்தது. எனக்கும் யோசிக்க முடியவில்லை. வேகமாய் நகர்ந்து வண்டியில் ஏறி விட்டேன். ஏற ஏறவே கிளப்பிய வண்டி... மண் சாலையை விட்டு தார் சாலைக்கு சடுதியில் நகர்ந்து விட்டிருந்தது. வானம் மேக மூட்டத்துள் முடங்கிய போதும் இல்லாத வெப்பம் என்னுள் அங்கலாய்த்தது.
உள்ளுக்குள் யோசனை. என்னவோ மனம் தட்டிய நங்கூரம். ஆழ்ந்து ஆழ்ந்து தத்தளித்தவனுக்கு நீருக்கு மேலே வந்த போது கிடைத்த ஆவ் ஆவ் ஆசுவாசம். கூர்ந்த மனத்தில் சட்டென ஒரு விலகல். வண்டியை நிறுத்துங்க... நிறுத்துங்கன்னு சொல்றேன்னுல என்று குரலை உயர்த்தி... வண்டிய ஆன்லயே வைங்க.. நான் இப்ப வந்தர்றேன்... என்று வண்டி நிற்க நிற்கவே இறங்கி வேகமாய் அவர்களை நோக்கி ஓடினேன். அதே வேகத்தில் என் முகத்தில் கர்சீப் கட்டி விட்டேன்.
தூக்கிய கல்லை போடுவதற்கு அல்லாடி தள்ளாடிக் கொண்டிருக்க... அதற்குள் கீழே கிடந்தவன் உருண்டு புரண்டு தன்னைத் தற்காக்க போராடிக் கொண்டிருக்க... இன்னும் தாக்குதல் மூர்க்கமாகிக் கொண்டிருந்தது. அடி வாங்குகிறவனின் அலறல்... மானுட சமூகத்தில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை மூளையில் சுண்டியது.
டேய்... நிறுத்துங்கடா என்று சத்தமாக கத்தினேன். ஒரு குத்துக் கல்லை தூக்கியவன் அப்படியே தூக்கியபடியே திரும்பினான். பாட்டிலை அடிக்க போகிற வேகத்துக்கு பிடித்திருந்தவன் அப்படியே திரும்பினான். காலை திருகி கொண்டிருந்தவன் அப்படியே திரும்பினான்.
சீக்கிரத்தில் நம்மை பிடித்து விட முடியாத தூரத்தில் நின்று... மூவரையும் பொதுவாக பார்த்த போது மிருகத்தை நேராக காண்பது போலவே ஓர் உதறல். ஆனாலும் குரலை கெட்டியாக்கினேன்.
அறிவில்ல...மெண்டல் மாதிரி பண்றீங்க.. பைத்தியமாடா நீங்க என்றேன். அவர்கள் ஜாம்பிகளை போல என்னை நோக்கி முகத்தை விகாரித்துக் கொண்டு பார்த்தார்கள். ஒழுங்கா போய்டு என்று தமிழ்ப்பட அடியாள்கள் போல ஜாடை காட்டினான் ஒருவன். மற்ற இருவர் யார் இவன் என்பது போல நாக்கை துருத்தியபடி பார்த்தார்கள்.
மயிருல போவாங்க... மடையனுங்களா... அடுத்தடுத்து நான் பேசிய வார்த்தைகளை இங்கே சென்சார் செய்கிறேன்.
யோசித்தது தான். தெரிந்த நாலைந்து கெட்ட வார்த்தைகளையும் சொல்லி விட்டேன். அவர்கள் அங்கேயே நிற்கிறார்கள். இன்னமும் கீழே கிடக்கிறவன் நகர வாய்ப்பில்லை. அவன் அதிர்ச்சியிலும் பயத்திலும் கிடந்தபடியே என்ன நடக்கிறது என தூரமும் கிட்டமுமாக பார்க்கிறான். தலைக்கு மேலே நிற்கும் தருதலைகள் நெருங்கிடக் கூடாது என்ற தவிப்பு... பதற்றம் அவனை தரையோடு தடுமாற செய்து கொண்டிருக்கிறது.
விடாமல் அதே கெட்ட வார்த்தைகளை அடுத்தடுத்து சொன்னேன். போதவில்லை. அடுத்து... இன்னும் வேண்டும்.. இன்னும் வார்த்தைகள் தேவையாய் இருக்க... ஒன்றும் பிடிபடாத நொடியில் சட்டென மனதுக்குள் ஒரு மின்னல். சமூக ஊடகங்களில் பின்னூட்டத்தில் துப்புவார்களே. நல்லது கெட்டது சரி தப்பு எதுவானாலும் வந்து தன் வக்கிரத்தை வாந்தி எடுப்பார்களே... அசிங்கமாக திட்ட... அதைவிட வார்த்தைகள் கொண்ட அகராதி வேறு எங்கு கிடைக்கும். முகத்தில் சடுதியில் ஒரு புத்துணர்வு. அந்த வார்த்தைகள் எல்லாம் சடசடவென என் மனக்கண் முன் ஸ்க்ரோல் ஆனது.
ஹா... கிடைச்சாச்சு என்று மனம் துள்ள... அடுத்தடுத்து விதவிதமாக ரக ரகமாக பதம் பதமாக வார்த்தைகளில் மூவரையும் மாற்றி மாற்றி விளாசினேன். வெறி ஏறி என்னை நோக்கி அவர்கள் ஓடி வரத் தொடங்கி விட்டார்கள். இது தானே எதிர்பார்த்தது. இதானே வேண்டும். சிரித்துக் கொண்டே... போலாம் போலாம் என கத்தியபடி வண்டியை நோக்கி நான் ஓடி வந்தேன். நண்பர் என்ன பண்றீங்க என்று கடிந்து கொண்டே வண்டியை எடுத்து விட்டார். அவர்கள் விரட்டிக்கொண்டே தார் சாலைக்கு ஓடி வரும் வரை திரும்பி பார்த்து பின்னூட்ட சொற்களால் அபிஷேகம் செய்தபடியே கை மூஞ்சி உடல் மொழி என செய்கையிலும் செய்ஞ்சு விட்டேன்.
ஓடி வந்தவர்கள் மண் சாலை முடியும் இடத்தில் அவர்களாகவே நின்று விட்டார்கள். அவர்களுக்கும் எங்களுக்குமான தூரம் அதிகமாகி இருந்தது. தங்களின் பைக் எடுக்க மீண்டும் உள் நோக்கி ஓட வேண்டும். அதைச் செய்யவில்லை. மாறாக சாலையில் நின்றே பதிலுக்கு கெட்ட வார்த்தைகளை வீசத் தொடங்கி இருந்தார்கள். இது போதும். இந்த இடைவெளி போதும்... அவன் எழுந்து ஓட.
வழி நெடுக.. எதிரே வந்த வண்டிகளிடம் சண்டை... கொலை பண்ண முயற்சி என கையைக் காட்டி காட்டி சொல்லிக்கொண்டே வெகு தூரம் வந்து விட்டோம்.
இந்நேரம் விஷயம் வாட்ஸப்பாய் பரவி... போலீஸ் கூட ஸ்பாட்டுக்கு போயிருக்கலாம். அடி வாங்கிக் கொண்டிருந்த வீடியோக்காரன் எப்படியும் தப்பி இருப்பான்.
கெட்ட வார்த்தையும் நல்லதுக்கு பயன்படும்னா பேசலாம் போல... ஆனாலும் பேசிய வாய் என்னவோ போல இருந்தது. ஒவ்வே என்றானது.
கர்சீப்பை அவிழ்த்தேன். காணாமல் போன முகம் மீண்டும் முளைத்திருந்தது. முகம் மோதிய காற்றில் பெரு நிம்மதி.
- கவிஜி