நட்சத்திரங்கள தூது விடறேன் தான்... எதுக்காம். நிலவு தூரத்துல நீ இருந்தா... தூதாக தோது நட்சத்திரம்தான. நீ காத்திருக்கும் நிலவு. மூச்சு வாங்க வருவேன்.. பொறு. உடன் இல்லாத நாளில் சுமையாகிறேனா நான். இலையாக உன் மேல் விழும் நாளில் உன் இமை திறப்பேன். காத்திரு.

ஆத்து மீன அனுப்பி அழகிய பாத்து வான்னு சொல்றேன்தான்... ஆனாலும் நினைப்பு கடிச்சு வெச்சிரும் போல. உன்னை கடிச்ச நினைப்ப நான் கடிச்சு பார்க்க... இனிக்கும் பாரு...அது இம்சை. இதயத்தில் செதில் திறக்கும் பாரு.. அது இசை.

மலை மேல நிலா...மேகமா திரண்டு நிக்கற வானம்... இரவுல சுத்தற ராப்பூச்சி... சில்லுனு அடிக்கற காத்து... சுடச் சுட இனிக்கற தேநீரு... அப்ப அப்ப படிக்கும் பாரதி வரி... மனம் படைத்தேன் பாட்டு.... எல்லாத்துலயும் நான் இருக்கேனு சொல்ற. அந்த நான் முழுக்க நீ தான் இருக்கேனு சொல்லவும் வேணுமா. இல்ல சொல்ல சொல்ல இனிக்கும் சொல்லை சொல்லாமல் விட்டால் தேனாகுமா.

என்னை பாக்கற வரைக்கும் கண்ணாடி பாக்க மாட்டேனு ஜெயந்திகிட்ட சொன்னியாமா. கண்ணுக்குள்ள வெச்சுகிட்டு கண்ணாடி பாக்க மாட்டேன்னு சொல்றது போங்குடி. காதலுக்கே கவிதை செய்ய கத்துக் குடுத்துட்டு கண்ண மூடிக்கிட்டா ஆகுமா. நாள் முழுக்க என்னையே நினைச்சிட்டு இருக்க பாரு. அது ஆதி காத்துக்கு மூச்சு குடுத்த மாதிரி. என் பேரையே உச்சரித்து என் பெயரையே தெச்சு போட்டுக்க உனக்கு மட்டும் தான் தெரியும்.

என்னை மாதிரி நடந்து பார்த்து என்னை மாதிரி பேசி பார்க்கற உன்ன பாக்கும் போது நானும்கூட உன்ன மாதிரி பார்த்து உன்ன மாதிரி நின்னு உன்ன மாதிரியே பேசி பாக்கறேன். என்ன மாதிரி இந்த இருப்பு. என்னென்னவோ மாதிரி ஆகும் மனக் குறுகுறுப்பு.

வாக்கிங் போற தான. ஏமாத்தின.. கண்டுபுடிச்சிடுவேன். கண்களில் இயந்திரம் உண்டு. காணும் நாளில் இடை கண்டே எடை சொல்லிவிடுவேன். ஜாக்கிரதை.

உன் நிழல்லயும் என் உருவம் தெரியறதுக்கு பேர் தான் லவ்வு. நீ நுழைஞ்சிகிட்ட நாள்ல இருந்து என் நிலைக் கண்ணாடில தெரியுது ஆதி ஏவாளோட ஆப்பிள். நீ மட்டும் தான் என் சட்டை போடுவியா. நானும் தான் உன் பாவாடை கட்டி வேட்டி மாதிரி மடிச்சு கட்டுவேன். மத்தவங்களுக்கு தான் லூசுத்தனமா இருக்கும். நமக்கு லுக்கு கண்ணம்மா. என்ன கன்னம் சிவக்குது. காதும் துடிக்குது. புன்னகைக்கும் போதே வாய் பிதுங்கி அழ எத்தனிக்கும் இதயமே...கண்ணீரைக் கட்டுப்படுத்து. அடுத்த வரிகள் அடித்து செல்லப்படும்.

மத யானை போல கிடக்கும் கரும்பாறையை செல்லமாக கீறிக் கொள். அதில் உனக்கு சேதி வைத்திருக்கிறேன். காதலின் கடவுச்சொல் பாறையிடுக்கில் செடியாய் துளிர்த்திருக்கும். அப்புறம்... உனக்கு புடிச்ச சாமி இங்கயும் நாலைஞ்சு இருக்கு. நீ அங்க வேண்டிகிட்டத எல்லாம் இங்க இது சொல்லிடும். சாமிய தூது விட்ட சண்டித்தனம் காதலுக்கு தகுமடி தங்கமே.

பாதம் படும் கூழாங்கற்களை திட்டி விடாதே. அது நம் நினைப்பில் நதியோரம் பிறந்த குட்டிகள். சிறுவயதில் நாம் வீடு கட்டி விளையாடிய மணல்கூட்ட மந்திரங்கள். இல்லாத கதவுகள் அடைந்தே இருப்பது போல இருப்பது எனக்கும் தான். அது திறக்கும் நாளுக்கு திசைகள் பார்த்து காத்திருக்கிறேன். முணுக்கென்றால் நீ அழுது விடும் காதலைத் தான் முழு நாளும் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆம் காதலைப் போல இன்னபிற வேறு என்ன இருக்கிறது... நம்மைத் தவிர.

நாம் நம்மையே ஒளித்து வைத்த புதையல். நம்புகிறாய் தானே. நாம் நம்மையே ஒளிர விட்ட பேரழகின் இருள். நம்பலாம் காதல் தூணே.

போன முறை உனக்கு வெச்ச மகதலேனா பேர் புடிச்சதுதான. இந்த முறை நம்மூர் பேர் வைக்கட்டா. சொர்ணமுகி.. எப்பிடி இருக்கு. என்ன சிரிப்பு வருது போலயே. சிற்பம் கலைஞ்சு சித்திரம் ஆவது இப்படித்தான். சிரி. பூனை பாய்கிட்ட உன்ன பத்தி சொல்லி இருக்கேன். எப்பவும்... பேச பேச கண்ண மூடிக்கறவன்... உன்ன பத்தி சொல்லும் போது உத்து பாக்கறான். என் உள்ளம் உதிர்வதை உணர்ந்திருப்பானா. புலி வம்சமெல்லாம் பூனை ஆவது உன்னிடம் சாத்தியம்தான் பெண்ணே.

குறும்புக்கு குறைச்சல் இல்லாத ஆள்டி நீ. அதற்காக என் அரும்பு மீசை ஒட்டித் திரிவதா. சிறு வயது என்னை சிலை வடிவில் பார்த்த மாதிரி இருக்கும்.

அரசமர முதுகில் யாருக்கும் தெரிய கூடாதென்று என் பெயரையும் உன் பெயரையும் கொரியன் மொழி போல எழுதி வைத்திருக்கிறாயாம். அந்தக் கருவாயன் கண்டு பிடித்து விட்டான். சரக்கடித்த நாளில் போன் போட்டு போட்டு வாங்க பார்க்கிறான். அப்புறம்... சும்மா எல்லார்கிட்டயும் நான் யாரு தெரியுமா என் மாமா யாரு தெரியுமான்னு வாய் விடாதடி. ஜோடிப் பொருத்தம் தாங்காத கண்கள் ஊருக்குள் நிறைய இருக்கு. போன முறையே வெச்ச கண் வாங்காம பாத்தவங்க நிறைய. இதுக்கும் தள்ளி தள்ளி நின்னுதான் தேர் பார்த்தோம். அதுக்கே அள்ளுச்சு அழகு.

ஊருக்கே அழகு எங்க மாமாதானு சொன்னியாமா. கேள்விப்பட்டேன். கேட்க நல்லா தான் இருக்கு. ஐஸ் கேக் சாப்பிட்ட மாதிரி. ஆனா எனக்கு அழகு நீ தான்... ஊரே கேக்கற மாதிரி சொல்ல போறேன் பாரு.

மாமன் செருப்பை போட்டுக்கிட்டு ஊரெல்லாம் சுத்தாதனு இனி கத்த மாட்டேன். அது உன் கால்களுக்கு பழகிய என் விருப்புகள். ஆனாலும் யாருமில்லாத சந்துகளில் நடை பயில். நடையில் மயில் வந்து காட்டிக் கொடுத்து விடும்.

மாமா மாமானு நீ மனசுக்குள்ள கூப்பிடறதே காடு மலை தாண்டி உச்சிக்கு வந்து கேக்குதே. வாய் விட்டு கூப்பிடும் நாளில் வாயோடு வாய் பேசும் மாமன் மொழி.

அடுத்த மாசம் ஊருக்கு வருவேன். தட்டான் பாக்க போலாம். ஊதா கலர்ல புது தாவணி வாங்கிட்டு வரேன். நதி மேட்டில் நடனம் உண்டு. கடலை மிட்டாய் ரெண்டு பாக்கெட் போதும். கொலுசு மாட்டிக்க மறந்திடாத. புளிச்சோறு கொண்டு வா. இலைச்சோறு சாப்பிடனும். ரெட்டை ஜடை மறக்க வேண்டாம். புது... கவிதை புக்கு கொண்டு வரேன்.

அதுக்கு தலைப்பே மகதலேனா காத்திருக்கிறாள் தான்.

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.