எழுத்தின் வழியாகவோ பேச்சின் வழியாகவோ செயல்பாடுகளின் வழியாகவோ திட்டப்படவேண்டிய ஒருவனை நாம் திட்டுகிறோமே... அவன் தன் அன்றாடத்தில் என்ன செய்து கொண்டிருப்பான்.

தப்பு பண்றவன போட்டு சாவடிக்கணும்னு சொல்றோமே... அந்த தப்பு பண்றவனின் ஒரு நாள் எப்படி இருக்கும். கொலை பண்றவன் வன்புணர்வு பண்றவன் திருடுறவன் வன்முறைக்கு வித்திட்டவன்... கொலை வெறி தாக்குதலில் ஈடுபடுகிறவன் இவன்லாம் மெல்லிசையையோ மேஸ்ட்ரோ இசையையோ கேட்ருப்பானுங்களா.

லூசு மாதிரி இருக்கான்னு நாம ஒதுங்கி போறோமே... அவனுக்கு குடும்பம் இருக்கும்தான. அவனுங்களுக்கெல்லாம் அம்மா இருப்பாங்கதான. ஒரு தப்பு செய்யும் போது அது தப்புங்கிற நினைப்பு வருமா. இல்ல வராமா பாத்துக்க சாக்கு போக்கோ சரக்கோ ஒத்துழைக்குமா. குற்ற செயல்களில் ஈடுபடுகிறவனின் சுயம் என்னவாக இருக்கும். அவனைக் காட்டும் நிலைக்கண்ணாடி என்னனு பிரதிபலிக்கும்.

குற்ற உணர்வு அற்ற மனிதர்களின் பசி எப்படி இருக்கும். இடம் நேர்த்தி பார்க்காமல் கிறுக்குத்தனத்தில் வண்டி ஓட்டும் வெற்று கெத்துகளின் விழிகளில் மனிதர்கள் எப்படி தெரிவார்கள். ராங் ரூட்டில் வந்து விட்டு குரல் உயர்த்த எந்த அறிவு கற்றுத் தருகிறது. சக மனிதனைக் காயப்படுத்தும் அந்த முரட்டு உடல்களில் உயிர் எப்படி வேலை செய்கிறது. எல்லாம் எனக்கு என்று வெறி பிடித்து அலையும் விநோதத்தை தூக்கி அலைபவர்கள் அந்த உணர்வை உணர்ந்து தான் இருப்பார்களா. செய்திகளில் றீல்ஸ்களில் மேடை பேச்சுக்களில் இந்த மாதிரி ஆட்கள் குறித்தான செய்திகள் வெளிவருகையில் அதையெல்லாம் சம்பந்தப்பட்ட அவர்கள் பார்ப்பார்களா. பார்த்து விட்டு எப்படி தங்களை உணர்வார்கள். கேவலமான மனிதர்களாக இருப்பது மிக பெரிய சுமை என்ற உண்மை புரிந்திருக்குமா... அல்லது எல்லாவற்றுக்கும் ஒரு சுய புராண கதை வைத்து சமன் செய்ய பார்ப்பார்களா.

ஊருக்கு உபதேசம் சொல்லி விட்டு தனக்கு எதுவும் பொருந்தாது போல நடந்து கொள்தலை எப்படி தொடர்ந்து தக்க வைத்துக் கொள்கிறார்கள். பெரிய கார் வாங்கிட்டா வீதியே என்னுதுங்கற திமிர எப்படி நியாயப்படுத்துவது. குற்றங்கள் கூடாது என்று உரக்க கத்திக்கொண்டிருக்கும் உலகத்தோடு கலந்து ஊடாக... குறுக்க மறுக்க.. இணையாக அந்த குற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் உலகம் எப்படி கூச்சமே இல்லாமல் கூடவே சுழன்று கொண்டிருக்க முடியும்.

அடிபட்டவன் அப்படியே ரோட்டில் கிடக்க... தப்பி ஓடிய கார்க்காரன் குடிக்கும் தண்ணீரில் தாகம் அடங்குமா.

புறம் பேசுகிறவன் முகத்தில் எட்டி மிதி என்று பேசும் கூட்டத்தில் புறம் பேசுகிறவன் அந்த பேச்சை எப்படி எதிர் கொள்வான். ஒழுங்கற்ற விட்டேத்தித்தனத்தின் வழியே ஒரு நாளை அணுகும் மனிதர்களின் துக்கம் எது பற்றியதாக இருக்கும். புலம்பலும் குறைகளும் சூழ வாழும் சுவாசத்தில் இயல்பு இருக்குமா. தரமில்லாத கட்டடம் சரிந்து இத்தனை உயிர்கள் பலி என்று செய்தி ஓடுகையில்... அந்த கட்டடம் கட்டின கூட்டம் என்ன யோசிக்கும். திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது பாடலை அந்த திருடனும் கேட்டிருப்பான் தானே.

எல்லா வகை குற்றவாளிக்கும் ஒரு காதலி / காதலன் இருக்கிறாள் என்பது வாழ்வின் எந்த மாதிரியான முரண்.

எல்லாம் தெரிந்தவர் என்று காட்டிக்கொள்ளும் மனிதனுக்கு ஒரு புது செய்தி எந்த நிலையை உணர செய்யும். கேட்க மறுக்கும் செவிகள் கோமாளி காதுகளா. பேசிக்கொண்டே இருக்கும் வாய் பைத்தியத்தின் ஆரம்ப நிலையா. எதிர்மறை எண்ணங்களில் கொழுந்து விட்டு எரியும் உள்ளத்தை அந்த உடல் உணர்ந்திருக்குமா. வெற்றுப்பெண்ணியம் வெற்றுப் புரட்சி வெற்று வேதாந்தம் என்று வெற்றாய் இருக்கும் முகத்திரை கிழிபடுகையில் உள்ளிருக்கும் அகம் அதை எப்படி எதிர்கொள்ளும்.

சனியனுங்க ரோடு போடறேனு ஏமாத்தி கொள்ளை அடிச்சிட்டு ஒரு மழைக்கு கூட தாங்கல என்று மக்கள் வயிறு எரிந்து பேசுவதை கேட்டும் கேட்காமலும் செல்லும் ரோடு போட்டவர்களுக்கு புன்னகைக்க வருமா. நேரத்துக்கு தான் பசி எடுக்குமா. வேர்க்க விறுவிறுக்க பொது வழியில் வரிசையில் நிற்கும் கூட்டத்தை பார்த்துக்கொண்டே காசு கொடுத்த வழியில் ஜம்மென்று சென்று கடவுள் தரிசனம் செய்யும் மனிதர்களின் மதிய சோறு சுவைக்குமா.

குற்றங்களின் மத்தியில்...யார் பேசுபொருளாக இருக்கிறார்களோ அவர்களின் பேசுபொருள் என்னவாக இருக்கும். சமூகத்துக்கு எதிரானவர்களாக இருக்கிறவர்கள்... யாரென்று நாம் தேடிக்கொண்டிருக்கிறோமே அவர்களுக்கு தேடல் என்று ஒன்று இருக்குமா. எல்லாத்துக்கும் நொட்டை சொல்லிட்டே செல்போன் நோண்டிக் கொண்டிருப்பவர்களுக்கு தாங்கள் பெற்றது... பெற்றுக்கொண்டிருப்பது.... அடுத்தவர்களிடம் பேசி ஜெயித்து விட்டதாக நினைக்கும் அந்த நிலை போலியான வெற்றி போலியான நிலை என்று எப்போதேனும் உள்ளே சுடுமா.

பேசத்தெரிந்த குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதும் பேசத் தெரியாத நிரபராதிகள் மாட்டிக் கொள்வதும் எந்த வகை சட்டத்தின் கீழ் கண்டறியப்படும்.

இருப்பவன் தரமாட்டான்.. இல்லாதவன் விட மாட்டான்.... பாடலை இல்லாதவன் கேட்டிருப்பது போல இருப்பவனும் கேட்டிருப்பான் தானே. அதற்கு என்ன மறுமொழி யோசித்து வைத்திருப்பான். குற்றவாளிகளைப் பற்றி ஊரே பேசுகையில்.. அந்த குற்றவாளிகள் காலை உணவை குளித்து முடித்து பூஜை செய்து பிறகு சாப்பிடுவார்களா... இல்லை எப்படி. நிஜ உலகில் இருக்கும் குற்றச்சாட்டுகளை தினம் தினம் எதிர் கொள்ளும் நிழல் உலகத்தின் நிம்மதி எது கொண்டு நிர்ணயம் செய்யப்படும்.

கேள்விகள் தொடரும். பதில்கள்.... என்னவாகும்.

- கவிஜி