கீற்றில் தேட...

புறாவென நினைக்கவில்லை
உன் முத்தங்கள்
றெக்கை முளைத்து வந்திருக்கலாம்

*
கைகள் விரித்து வானம் ஏந்துகிறாய்
சாரல் மழையெல்லாம்
இனி தேறல் மழை

*
ஒரம்பரை புள்ளங்க
யார் வந்தால் என்ன
பரம்பரை அழகி நீ தானே

*
வயல் என்ன வயல்
நீ நடந்த வரப்பில் தான்
விளைச்சல்

*
வட்டக்கண்ணாடி
வலை வீசுகிறது
உன் மொட்டுக் கண்களுக்கு

*
நீ கதவொட்டி நின்ற காட்சிதான்
கனவில் வருகிறதோ
கண்களொட்டி தெரிகிறாய்

*
ஜன்னலடைக்கும் உன் கைகளை
இந்த அவசர மழையைத் தவிர
வேறு யார் நன்றாக வரைந்திட முடியும்

*
வளையல் குலுங்க நகங்கள் மினுங்க
இடுப்பில் குடத்தோடு
எந்தக் கவிதை நூலின் அட்டைப்படம் நீ

*
அச்சுவெல்லம் அடைக்குறிப்பில் இருக்க
உன் முழுப் பெயர் என்ன
அனிச்ச மலரழகேவா

*
திருவிழா முடியும் வரை கவனமாய் இரு
சாமிக்கு உனைக்காட்டி
தேருக்குள் அமர்த்தி விடுவார்கள்

- கவிஜி