படிக்கட்டில் பறவையாகும் வித்தையா.... இது படிக்கட்டையே பறவையாக்கும் யுக்தியா... ஜூனிக்கு சுலபம் தான் போல எல்லாம்.
சூத்திரமற்ற காலத்தில் ஒரு வானம் செய்ய வாய்க்குமோ அவளுக்கு. உடலை அசைத்து உணர்வை கிளர்த்தும் உள்ளூர ஒரு குட்டி ரயில் கொண்டிருக்கிறாள். கோயிலுக்கு வந்தவள்... சாமிக்கு அருள் கொடுத்தவள் போல அப்படி ஒரு ராணி நடை. ஆனால் ஒன்று கவனித்தேன். முதல் ஐம்பது படிக்கட்டுகள் இறங்கும் வரை அவளின் உடல் இடது பக்கமாக சாய்ந்திருந்தது. இப்போது வலது பக்கத்தில் வேய்கிறது.
இது ஒரு விஷயமா. உடல் களைத்தால் திசை மாறுவது இயல்பு தானே. இந்த கால் வலித்தால் அந்த கால் பக்கம் உடல் சாய்வது அனிச்சை தானே. கூர்ந்து கவனிக்க வைத்த காரணங்கள்... நுட்பத்தில் கூடுதல்.... நடந்து கொண்டு தான் இருக்கிறது.
மதிய நேர வெக்கைக்கு வேர்க்க மட்டும் தான் தெரியும் போல. தொப்பலாக அவள் கழுத்து வேர்த்து... கனவை இப்படி தான் பெருமூச்சு விட்டு ஆற்றுவாளோ. சரி விஷயத்துக்கு வா என்றது உள்மனம். விஷயமே அவள் தானே என்றது அதனுள்ளும் சுழலும் ஆழ்மனம். மனதின் சுழற்சிக்குள் மீண்டும் மீண்டும் சுழலும் உடல் வனம் அவள்.
நேற்று கூட ஸ்கூட்டி ஓட்டுகையில்... அப்படி ஒரு நிதானம். மஞ்சள் வெளிச்சத்துக்கு மரியாதை. சிவப்புக்கு ஸ்டாப். பச்சைக்கு மட்டும் தான் புன்னகை. எங்கு இண்டிகேட்டர் போடனுமோ போடுகிறாள். எங்கு கை காட்ட வேண்டுமோ காட்டுகிறாள். எங்கு வேகம் குறைக்க வேண்டுமோ... எங்கு மித வேகம்.. எங்கு ஒலிப்பான்....என ஒரு முன்னுதாரண புருஷி போல.. பார்க்கவே ஹா என்றிருந்தது. எல்லாம் முதல் பதினைந்து நிமிடத்திற்கு தான். அடுத்து அரக்கி போல அப்படி ஒரு இறுக்கு. ரோடா இல்லை மயான மேடா. அந்த போக்கு போகிறாள். சிக்னல் ஆவது சிக்கினவன் ஆவது. சரிந்து எழுந்து சாதிப்பது போல அப்படி ஒரு இறுமாப்பு. ஒரு தோப்பு கள் அடித்தவள் உடல்மொழி.
என்ன கருமம் இவ. தலையே சுற்றி விட்டது. பின் தொடர்வதில் இருக்கும் பித்தை சுயமாய் தெளிய வைக்க இயலாது. ஆனாலும் தொடர வேண்டும் என்பது தான் தேவை.
பேசாம வேற யாராவது வந்திருக்கலாம். இவ ஒரே குழப்பவாதியால இருக்கா.
நியூ இயர் சர்ப்ரைஸ் இது. அதாவது எங்க ஆபீஸ்ல யாருக்காவது ஏதாவது கிப்ட் தரணும். குடுக்கறவங்க யாருன்னு யாருக்கும் தெரிய கூடாது. வாங்கறவங்க உள்பட. எல்லார் பேரையும் எழுதி ஒரு டப்பாக்குள்ள போட்டு ஒவ்வொருத்தரா எடுக்கணும். யாருக்கு எந்த பேர் வருதோ அவுங்களுக்கு ஏதாவது கிப்ட் குடுத்து ஆச்சரியப்படுத்தனும். கிப்ட் பேக் பண்ணி அவுங்க பேர் எழுதி பாக்ஸ்ல தனி தனியா போய் போட்டறனும். யாரு தனக்கு குடுத்தாங்கன்னு தெரியாது. யாரா இருக்கும்னு தேடுவது ஒரு சுவாரஸ்யம். சிறுபிள்ளை விளையாட்டு தான். ஆனாலும் சீரியஸ்சா நடக்குது. தனக்கு பரிசு குடுத்தது இவுங்களா இவுங்களான்னு எல்லார் மீதும் ஒரு வகை ஈர்ப்பு வரும். இது மூலமா ஒரு அன்னியோன்னியம்... கோ ஆர்டினேஷன் என்று கம்பெனி அது தன் வேலையை சரியாக தான் பார்க்கிறது.
எனக்கு ஜூனி பேர் வந்திருந்தது.
இவளோடு எனக்கு அவ்வளவா பழக்கம் இல்லை. ஏதாவது நூறு ரூபாய்க்கு சோப்பு டப்பா வாங்கி குடுத்திருக்கணும். நான் தான்.. கொஞ்சம் வித்தியாசமா செய்யலாம்னு அவளை அவளுக்கே தெரியாம பின் தொடர்ந்து அவளை வீடியோ பண்ணி... ஒரு பத்து நிமிஷ கட் ஷாட்ஸ்ல பின்னணி இசையோடு போட்டு காட்டி அசத்தலாம்னு நினைச்சேன். அப்போதைக்கு இல்லனாலும்.. எப்படியும் அவளுக்கு நான் தான்னு தெரியும் போது... அதுல ஒரு கெத்து பீல் கிடைக்குமே. மேலும்... எது செஞ்சாலும் புதுமை புரட்சி... இது தான் நம்ம பாலிசி. அதான் இப்படி நாலு நாளா பின் தொடர்ந்துகிட்டு இருக்கேன். ஆனா அவ ஆளே வேற மாதிரி இருக்கா. ஆபீஸ்ல பெரும்பாலும் நான் அவளை கவனிச்சது இல்லை. வேற வேற டிபார்ட்மென்ட்ங்கறதுனால பெருசா அவளை எனக்கு தெரியாது. இருந்தாலும்... மத்தவங்க கிட்ட இருந்து வித்தியாசப்படனும்ங்கறது என் இயல்பு. அதான்.. இப்படி மெனக்கெட வேண்டிருக்கு. இருந்தாலும்...இவ கொஞ்சம் இன்ட்ரஸ்டிங் கேரக்டர் தான்.
ஒருவேளை ஸ்பிலிட் பெர்சனாலிட்டியா இருப்பாளோ. ஏன் சொல்றேன்னா... அவளுடைய மாற்றம் அந்தளவு இருக்கு. அவள பத்தி எங்களுக்கு பொதுவான நண்பன் கிட்ட கேட்டப்ப கூட அவனும் அத தான் சொன்னான்.
"நல்லா பேசிட்டு இருப்பா. சட்டுனு சந்திரமுகி மாதிரி கண்ண துருத்திகிட்டு வேற பேசுவா. முகமே மாறிடும். நெத்தில அழுத்தம் கூடும். அப்ப அது அவளை மாதிரியே இருக்காது. யாரோ மாதிரி இருக்கும். எங்களுக்கு பழகிடுச்சு. எப்பல்லாமா. அப்டி சொல்ல முடியாது. எப்ப வேணாலும் மாறுவா. இந்த பேய் பிடிச்சா பேசுவாங்களே.. அப்பிடி கூட தோணும். ஆனா அது தான் அவ கேரக்டர்னு எங்களுக்கு தெரியறதுனால நாங்க கண்டுக்க மாட்டோம்"
என்ன இது... என்னென்னவோ சொல்றான். எனக்கு ஆர்வம் கொப்பளிக்க ஆரம்பித்து விட்டது. என்னடா அவ பேர் தான் வந்திருக்கா என்றவனுக்கு பதில் சொல்லவில்லை. நகர்ந்து விட்டேன்.
இவ என்ன மர்ம தேசியா... கண்டு புடிக்கறேன் என்று தான் இன்னும் தீவிரமாக பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
ரோட்டுல பிஸ்கட் திங்கற வயசா இது. இப்படி திங்கறா. ஆனா அதே நேரம் பெரிய பிஸ்த்தி மாதிரி பேச்சு. போன்ல யாருனு தெரியல. ஆனா காதலில் விழலாம். அப்படி ஒரு பேச்சு. குரல் வழியே குணம் வழிகிறது. ஒரே ஆள் இரண்டு விதமாக நடக்க முடியுமா. பழக முடியுமா. நடக்கிறாளே. பழகுகிறாளே. பார்க்கிறாளே.
ஊர் கிழவி சொன்னதாக பக்கத்து ஆபீசில் வேலை செய்யும் அவள் தோழி சொன்ன கதை தொடர்பில்லாமல் இல்லை. தொடர்பானதா என்றும் தெரியவில்லை. ஆனாலும் நேரம் கருதி வெட்டி சொல்கிறேன்.
அந்த காலத்துல அவ்ளோ கஷ்டம். கொஞ்சம் நிலம் இருந்துச்சு அவங்களுக்கு. அதுவும் அந்த குருடி மலைக்கு பின்னால... அடிவாரத்துல. அதுல தான் பீன்ஸ்... கத்திரிக்கா... தக்காளின்னு விளைய வைப்பாங்க. அவ அப்பாவோடு சேர்ந்து அவளும் சந்தைக்கெல்லாம் கூட போயிட்டு வருவா. ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும்... கன்னுக்குட்டிய பாக்கறா. அதுக்கு உடம்பு சரி இல்ல. அந்த நேரத்துல... அத இழுத்துகிட்டு கிட்டத்தட்ட அஞ்சு மைல் தூரம் நடந்தே போயி மாட்டாஸ்பத்திரில காட்டிட்டு கூட்டிட்டு வந்தா. ஆடு மாடுக மேல அவ்ளோ பிரியம். நாலு நாள் சேந்தாப்புல பெரியம்மா வீட்டுக்கு போய்ட்டா... திரும்பி வந்ததும் மாட்ட கட்டி பிடிச்சுக்கிட்டு அழுவா. அப்படி ஒரு அன்பு. விளைச்ச காட்டு பக்கம் யானைங்க வந்துட்டா... காட்டுக்காரங்க எல்லாம் சேந்து கொட்டடிச்சு அத சோலைக்குள்ள விரட்டுவாங்க. அப்ப கூட யானைகளுக்கு வரிஞ்சுகிட்டு பேசுவா. பாவம்ல. அதுங்க இடத்துல நாம இருந்துகிட்டு அதுங்களையே அனாதைங்க மாதிரி அடிச்சு விரட்டறது நியாயமே இல்லன்னு பேசுவா. எவ்ளோ அறிவா பேசறாளேன்னு அவ அம்மாவுக்கு ஆனந்தம் தான். ஆனாலும்... வெளி காட்டிக்க மாட்டா. பொட்டச்சி இவ்ளோ பேச கூடாதுனு அடக்குவா.
விடிகாலைல நாலு மணிக்கெல்லாம் அவ அம்மா எழுப்பி விட்ருவா. கூட சேர்ந்து கத்திரிக்கா பறிச்சா... இன்னைக்கு காலேஜ் போலாம். இல்லனா இல்லைன்னு கண்டிசனா சொல்லிடுவா. காலேஜ் போகணுமே. அதனால..கூட சேர்ந்து வேலை செய்வா. கால்ல முள்ளு குத்தும். கல்லு படும். மனசுல என்னவோ கீறும். ஒரு வறண்டு போன வாழ்க்கை தான் அந்த வயசுலயே. அவ அம்மாவுக்கும் வேற வழி தெரியல. சேர்ந்து உழைச்சா தான் சேர்ந்தாப்பல ரெண்டு நேரம் சோறு கிடைக்கும். காலேஜ்க்கு சில நாள்ல வெறும் சோத்து டப்பாவ கொண்டு போயிட்டு கொண்டு வந்திருக்கா. மத்து புள்ளைங்க மத்தில தானும் மதிய சோறு கொண்டு வந்திருக்கேன்னு காட்டிக்க. அத்தனை வறுமை. ஆனாலும் புள்ள படிச்சா. இங்கிருந்து காலேஜ்க்கு மேட்டுபாளையத்துலருந்து வர்ற ரயில்ல தான் போவா. காசிருந்த போவா. இல்லனா வீட்ல இருந்துக்குவா. அப்படி பாதி நாள் போயி பாதி நாள் நிலத்துல வேலை செஞ்சு தான் படிச்சா. இன்னைக்கு நல்ல உத்தியோகத்துல இருக்குறாங்கறதுல சந்தோசம்.
ஆமா....ஆமா அவ கொஞ்சம் கிறுக்கு மாதிரி தான் இருப்பா. திடீர்னு அலுவா. எப்ப அந்த அலுவை சிரிப்பாகும்னே தெரியாது. அலுவுற ஆள் வேற மாதிரி இருக்கும். சிரிக்கிற ஆள் வேற மாதிரி இருக்கும். வரும் போது ஒரு நடை. போகும் போது வேற நடை. வேகமாய் தென்னை மரம் ஏறிட்டு இறங்க தெரியாம தடுமாறுவா. இன்னொரு நேரம்... ஏற தெரியாம தட்டு தடுமாறி ஏறிட்டு சர சரன்னு கீழ இறங்குவா. ஒன்னும் விளங்காது.
மலை அடிவாரத்துல இருக்கற பாறை மேல ஒரு பருந்து மாதிரி உக்கார்ந்துருப்பா. அங்க உக்கார்ந்து தான் படிப்பா. திடீர்னு எழுந்து கரகரன்னு சுத்தி பாவாடைய கூடை மாதிரி ஆக்கி உக்காந்துட்டு சிரிப்பா. சிரிப்பு அப்பிடியே எட்டு திக்கும் எதிரொலிக்கும். பசி பறவை மாதிரி பறந்து போகும். ரயில் சத்தம் கேட்டா தான் நிம்மதி. சத்தம் வந்து போற வரைக்கும் என்ன வேலை செஞ்சிட்டு இருந்தாலும் அதை அப்படியே போட்டுட்டு சத்தம் வந்த திசையையே வெறிக்க பார்ப்பா.
வெயிலும் மழையும் ஒன்றாக அடிப்பது போல இருக்கிறது. தூரமும் கிட்டமும் ஒட்டிக்கொண்டு இருந்தால் எப்படி. எனக்கு எங்கிருந்து ஆரம்பித்தேன் என்றே தடுமாறியது. இத்தனை மாடனாக இருக்கும் ஜூனிக்கு பின்னால்... இத்தனை பெரிய துயரம் இருக்கிறதா. அது தான் அவளை இப்படி ஆக்கி விட்டதா. அவள் மனநிலை சரியாக இல்லாமல் இருக்கிறதோ. இல்லையே. அவள் தெளிவாக தான் இருக்கிறாள். ஆனால்.. சட்டென வேறு ஆள் மாதிரி நடந்து கொள்வது தான் குழப்பம்.
ஒரு வேளை ஸ்பிலிட் பெர்சனாலிட்டியே தானோ...?
அதாவது ஒரே ஆள் இரண்டு பேர் மாதிரி நடந்து கொள்வது. ஆனால் தேடியதில்... படித்ததில்... ஆலோசனை கேட்டதில்.... ஸ்பிலிட் பெர்சனாலிட்டிக்கு உண்டான அறிகுறிகள்.. பெரிதாக அவளிடம் இல்லை. விசாரித்ததில்... கண்டடைந்த முடிவு இது. ஒருவர் இன்னொருவரை ஆளுமை செய்வது பக்கத்தில் இருப்போருக்கு நன்றாக தெரியும். அதாவது பொஸஸ் ஆவது. தன்னை மறந்து இன்னொருவர் மாதிரி நடந்து கொள்வதில் விருப்பம் இருக்கும். இன்னொருவராகவே ஆவது நடக்கும். இவளிடம் அது இல்லை. ஒருவரே இன்னொருவராக இருப்பது போல இருக்கிறாள். மாறுவது இல்லை. உதாரணத்துக்கு மைக்கேல் ஜாக்சனால் ஈர்க்கப்பட்டு... அவர் போலவே தன்னை வெளிப்படுத்தி.. பிறகு ஒரு கட்டத்தில் அவரே நான் தான் என்று பகிரங்க படுத்துவதாக அது இருக்கும். அவளால் இன்னொரு தன்னை உணரும் போது தன்னையும் உணர முடிகிறது என்று தான் நினைக்கிறேன். அப்படி என்றால் ஜூனிக்கு ஸ்பிலிட் பெர்சனாலிட்டி இல்லை.
அப்போ பேய் பிடித்திருக்கும் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த காலத்தில் பேய் பிசாசு...ம்ஹும். அப்படி இருந்தும் காட்டு பூசாரியிடம் கொடுக்க வேண்டியது கொடுத்து...யோசனை கேட்டதில்... ஒரு பேய் பிடித்த ஆளின் உடலும் மனமும் எப்படி இருக்கும் என்று அக்கு வேறு ஆணி வேறாக சொன்னார். மிகை நடிப்பு இருக்கும். ஆழ்மன ஆசை வெளிப்படும். அடக்கி வைத்த கோப தாபங்கள் வெடித்துக் கொண்டு கிளம்பும். அப்படி பார்த்தால் அதுவும் இல்லை.
இங்கே நடப்பதே வேறு. இத்தனை அறிவாளி பெண்ணாக இருக்கிறவளின் உடல்மொழி மட்டும் இரண்டாக இல்லை. அவளின் பேச்சு மொழி கூட இரண்டு தான். பார்வை... பழக்கம் என்று எல்லாமே இரண்டாக தான் இருக்கிறது. ஆனால் ஒன்றை ஒன்று மீறுவது இல்லை. அப்படி ஒரு முயற்சியும் இல்லை. இன்னைக்கு சிவப்பு சட்டை நாளைக்கு நீல சட்டை போல தான். ஒருவரின் பேச்சு முடிந்த பிறகுதான் இன்னொருவரின் பேச்சு. அடக்கி ஆள்வது இல்லை. ஒருவரை ஒருவர் அனுமதிக்கிறார்கள்.
சரி... எப்போதெல்லாம் ஒருத்தி இன்னொருத்தியாக மாறுகிறாள்.
அப்படி சரியாக குறிப்பிட்டு சொல்ல முடியாது. எப்போது வேண்டுமானாலும் அவள் இவளாக மாறுகிறாள்.
எனக்கு ஒரு டிடெக்டிவ் கதைக்குள் சிக்கி கொண்டது போல இருக்கிறது. ஒரு திரில்லர் சினிமாவுக்குள் நடமாடுவது போல இருக்கிறது. திரை முழுக்க இரு முகங்கள்.. ஆனால் ஒரே மாதிரி. ஒரே உடல்.. ஆனால் இரு மொழி. இதை இதோடு விட்டு விடவும் முடியவில்லை. உள்ளிருக்கும் ஆர்வம் விடாதே விரட்டு என்கிறது. என்னதான் நடந்திருக்கும். அவளின் மர்மம் தான் என்ன. அவளின் மீது முதன் முறையாக எனக்கு என்னவோ தோன்றுகிறது. அவளை கனிந்த கண்களோடு பார்க்கிறேன். பேசினால் பேசுகின்ற அளவுக்கு தான் பழக்கம். ஆனால் இப்போது பேச வேண்டும் என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட அவளை கவனித்து பின் தொடர்ந்த கடந்த நாட்களில் அவள் எங்கே வருவாள்... எப்போது வருவாள்... எப்போது எப்படி இருப்பாள் என்று கூட துல்லியம் வந்து விட்டது.
அவள் பற்றிய ஆர்வம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
மதிய நேர மௌனத்தை கலைக்காத அவளின் தனிமை அத்தனை நேர்த்தியாக இருக்கிறது. பல் வரிசை பவள வரிசை போல சிரிக்கிறாள். மர நிழலோ மாலை சூட மயங்குவது போல இருந்தது. மர கிளையோ மையம் கொண்ட மாவிலை உதிர்த்தது. மரங்களின் வனப்பை இத்தனை கிட்டத்தில் காண்கிறேன். இத்தனை அழகானவளுக்கா பரிசு தர எனக்கு வாய்த்திருக்கிறது. நினைத்தாலே என்னவோ நிம்மதி. ஆராய்ச்சி எல்லாம் விட்டு விட்டு வரிகளில் இதயம் செய்து கொடுத்து விடலாமா. யோசனையே இனித்தது.
உள்ளோடிய ஒரு வரிக்கே இரண்டு முகம் வந்து போனது. ஐயோ என்று ஒரு நொடி ஆட்டம் உள்ளத்தில். சூனியம் பார்க்கின்ற பார்வையும்... சூட்சுமம் சிமிட்டுகின்ற கண்களும் நிச்சயம் வேறு வேறு. எப்படி இது சாத்தியம்.
"மதிய வெயில் எவ்ளோ மலர்ச்சி இல்ல.. இந்த புங்கை மரம் தான் எத்தனை வசீகரம். முதன் முதலாக மலர்கிறேன் போல. ஒரு தூரத்து டெலஸ்கோப்க்குள் நான் பெரிதாகி கொண்டே போகிறேன்.
அவள் உடல்மொழி அப்படியே மாறி விட்டது. முகம் கூட வேறு முகம் போல ஆனது போல நம்பலாம். அப்படி ஒரு மாற்றம். பத்தி மறந்த பக்தன் போல. பாதி வழி திரும்பி கொண்டது போல. ஒன்றும் விளங்கவில்லை. அவளின் இயல்பு எனக்கு தான் இப்படி அதிகப்படியாக தெரிகிறதா. டிபன் பாக்ஸ்- ஐ திறந்து மெல்ல மதிய உணவை ஓர் அணில் கொறிப்பது போல உண்கிறாள். நான் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.
வாய் சுவைக்கையில் கண்கள் சிமிட்டவில்லை. கண்கள் சிமிட்டுகையில் கழுத்து அசையவில்லை. அவள் ஒரு கண் கலங்கி இருந்தது. மறு கண்ணில் சிரிப்பிருந்தது. ஒரு பக்கம் வண்ணத்தில் இருந்தாலும்... மறுபக்கம் கருப்பு வெள்ளையில் தெரிந்தாள். கிராமத்து கிழவி சொன்னதாக அவள் தோழி சொன்ன நியாபகங்கள் சட்டென என்னில் மின்னி மறைந்தன. ஒரு வகை பெரும் புரிதல் எனக்குள் படபடவென திறந்தது.
அவள் பால்யத்தை சுமக்கும் ஒருத்தி... எப்போதும் சோகத்தில் இருக்கிறாள். படித்து முன்னேறிய இன்னொருத்தி சமகால சந்தோஷத்தில் இருக்கிறாள். இது தான் அவளின் இரு வேடத்துக்கு காரணம் என்று புரிந்து கொள்ளலாமா. அப்படியே பார்த்தாலும்... வறுமை வளமை ஒப்பீடு... இப்போது தானே. அந்த பாட்டி... அவ சின்ன வயசுலயே இப்படி தான்னு சொல்லுச்சே. மீண்டும் புரியவில்லை.
இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டும். ஒரே நாளில் இரண்டு ஆடைகள் அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறாள். என்ன மாதிரி விருப்பம் இது. விருப்பமா.. பழக்கமா. மதியம் வரை ஒன்று மதியத்துக்கு மேல் ஒன்று. வினோத பழக்கம் தான். ஆனாலும் எல்லாரும் பழகிக் கொண்டார்கள். யாரும் விசாரிப்பதில்லை. புதிதாக பார்ப்பவர்களுக்கு பகட்டுக்காரி மாதிரி தோன்றும். நான் கூட நினைத்ததுண்டு. ஆனால்... இது பகட்டு சார்ந்தது கிடையாது. தினசரி நடவடிக்கை ஆகி விட்டது.
தலை வாரல் கூட அப்படித்தான். ஒரு நாள் இடது வகிடு. அடுத்த நாள் வலது வகிடு. செருப்பின் வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும். ஹீல்ஸ் ஒரு நாள். பிளாட் ஒரு நாள். ஒரே உடல் ஒரே முகம் ஒரே நடை.. ஆனால் வேறு ஒன்றாக மாறுவது தான் ஆச்சரியம்.. கூடவே குழப்பம். நான் கூட ஹேர் ஸ்டைலை மாற்றுவது உண்டு. உடைகளில் வித்தியாசம் காட்டுவது உண்டு. ஆனால்... இப்படி ஒரு உடல்மொழி மாற்றம் எப்படி சாத்தியம். விட்டா ரெண்டு பெயர் வைத்து கூப்பிடலாம் போல. அப்படி ஒருத்திக்குள் இன்னொருத்தி. மனதளவில் அப்படி இரண்டாக இருக்க அறிவியலில் இடம் உண்டா.. தேட தேட அத்தேடல் எல்லாம் வியாதிகளின் வழியே தான் வரிசை கட்டுகிறதே தவிர.... சரியான காரணம் கிடைக்கவில்லை.
சில நாட்களில் ரயில் தாமதத்தால்...ரயிலடியில் இருந்து காடு கடந்து வீடு வருகையில் இருட்டி இருக்கும். வானத்தில் நட்சத்திரங்கள் வழி காட்ட... நிலா ஒளியூட்ட... ஒரு யட்சியை போல ஊர்ந்து வருவாளாம். காட்டு பூனையின் உரத்த சத்தமும்... மயில்களின் கனத்த அகவல்களும் அவளை அலாக்காக தூக்கி வருவது போல இருக்குமாம். இயற்கையோடு இருந்த மனதில் இருந்து... ஒரு ரயில் அவளை வெகு தூரத்துக்கு கொண்டு வந்து விட்டு விட்டதால் இன்னொருத்தி வாய்த்தாளா.
இளமையில் வறுமை கொடிது... என்பதை கண்கூடாக உணர்கையில்... காசில்லாமல் ரயிலில் பாத்ரூம் பக்கம் அமர்ந்து வந்த நாட்கள் மனதுக்குள் கிழவியின் குரலில் ஓடின. அங்கிருந்து பிரிந்திருக்கலாமோ தன்னில் இருந்து ஒரு தான். செடி கொடிகள் கூட நட்பு கொண்டவள் ஒருத்தி. செல்போன் ஸ்மார்ட் வாட்ச் இயர் போன் என்று ஒருத்தி. அந்த வேறுபாடு தானா. எங்கோ பார்க்கையில் ஒருத்தியாக இருக்கிறாள். என்னை பார்க்கையில் ஒருத்தியாக இருக்கிறாள்.
தன்னை வேறொருவராக நினைத்துக் கொள்ளும் போதெல்லாம் அவள் வேறு மாதிரி மாறி விடுகிறாளோ. அவள் ஒரு சுவாரஷ்ய சித்திரம் போல தெரிகிறாள். ஒருவேளை நான் அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டேனா என்று சொல்ல தெரியவில்லை. கன்பார்ம் பண்ண காலம் அனுமதிக்க வேண்டும்.
சீனியை தான் ஜூனி என்று மாத்தி வைத்திருக்கிறாள். சீனிக்குள்ள இருக்கற ஜூனியும் நல்லா தான் இருக்கு. தலையும் புரியாத வாலும் அறுந்த கனவை சுமப்பது... இரவு தாண்டிய விடியலிலும் சுமை தான்.
எங்கெங்கு சென்று யோசித்தாலும்... அரைகுறையாகவே திறந்திருக்கும் ஜன்னலாகவே தெரிகிறாள். உள்ளிருந்து காணும் அவளுக்கு அவள் வானம் போதும் தான் போல. புலி வாலை பிடித்துக் கொண்டேனோ. மொட்டை பாறையில் அவளுக்கு பதிலாக நான் சுழன்று கொண்டிருக்கிறேன். புரிபடாத ஒன்றை அப்படியே விட்டு விட்டு நகர... பழகிக் கொள்ள வேண்டும். அங்கு சுற்றி இங்கு சுற்றி சென்று அமர்ந்த இடம் யுத்த சுவாமிகள் கூடாரம். சட்டை இல்லாத மரம் மாதிரி வந்தவருக்கு கண்களில் சூரியன். நெற்றியில் நிலா.
கும்பிட்டேன். குரல் சிரித்தது.
விஷயம் இவ்ளோ தானா என்பதாக பார்த்தபடியே வானம் உரிந்து கொண்டிருந்தார்.
"இது மேட்டரே வேற..."- மேகம் கொப்பளித்தார்.
நான் யாகமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென போட்டுடைத்தார்.
"அவ ரெட்டை...."
"என்னது... ரெட்டையா...?!" ரெண்டு கண்களும் ஒற்றையடியில் முந்தி அடித்துக்கொண்டு உருண்டன.
"ஆமா அவ ரெட்டை குழந்தை. ஒரே உடம்புல வாழற ரெண்டு உயிர்.
தலை சுற்றினாலும் பரவாயில்லை. உலகம் சுற்றுவதை பார்க்க வேண்டும் எனக்கு. வாங்கும் பெருமூச்சை இறுக்கி பிடித்தபடி கூர்ந்தேன்.
"வழக்கமா ஒரு கரு முட்டைல இருந்து தானா பிரியும் ஒரு விளைவு தான இரட்டை குழந்தைங்க. அப்டி பிரிஞ்ச கருமுட்டை சில நொடிகள்லேயே மறுபடியும் சேர்ந்து ஒரே உடம்பா ஜனிக்க தொடங்கிருக்கு. ஆனா அதுல ஏற்கனவே ரெண்டா ஆன உயிர்ங்க... இப்ப ஒரே கருமுட்டையா ஆன பிறகும்... தங்களை ரெண்டாவே வளர்த்தெடுக்க ஆரம்பிச்சிருக்கு. இன்னொரு உடல் கிடைக்காத காரணத்தால... கிடைச்ச ஒரு உடம்பையே ரெண்டும் பயன்படுத்திக்குதுங்க.."
மூச்சு விடுகிறேனா என்று சந்தேகம் வந்து விட்டது. முகத்தை அனிச்சை துடைத்தது.
இது எப்பிடி சாத்தியம்...
ஏன் ரெண்டா பிரியறது நடக்குதுனா... பிரிஞ்ச ரெண்டும் ஒண்ணா சேர்றது ஏன் நடக்காது...
ஆனா இப்பிடி எங்கேயுமே நடந்து கேள்வி பட்டது இல்லையே...
எல்லாத்துக்கும் ஒரு ஆரம்பம் வேணும்ல..
அப்டியே பார்த்தாலும்.. சைன்ஸ்ல இப்பிடி ஒரு விஷயம் இதுவரை இல்லையே...
அப்போ சூடோ சைன்ஸ்னு வெச்சுக்கோ..
நான் அதிர்வில் இருந்து மீளவில்லை.
புஸ்ப விமானம் பிளைட் ஆகலயா... நிலா சோறு நிலாவுல சோதனையா மாறலயா... ஆணும் பெண்ணும் சேராமயே குழந்தை உருவாக்கலயா... அப்பிடிதான். அமீபா புழுவாகி புதிராகி... அதுவாகி இதுவாகி மனுஷனாகலயா. மனுஷன் தான் மனுஷனோட கடைசின்னு சொல்ல முடியுமா. அடுத்து வேற ஒண்ணா கூட ஆக வாய்ப்பிருக்கு தான. அதான் விஷயம். இன்னைக்கு சூடோ சைன்ஸ்... நாளைக்கு நிரூபிக்க போற சைன்ஸ். ஒருவேளை சூடோவாவே இருந்துட்டு போனாலும் குறை ஒன்னும் இல்லையே. இப்ப ரெட்ட குழந்தைக்கு காரணம் என்ன.... ஏதேட்சை தான. அதே மாதிரி ரெண்டானது மறுபடியும் ஒண்ணாவே மாறிடறதுக்கும் ஏதேட்சை ஏன் காரணமா இருக்கக் கூடாது. ஒன்னு தொடர்ந்து நடந்துகிட்டு இருக்கறதுனால அதை சரின்னு இந்த உடல் நம்ப வைச்சிருது. தொடர்ந்து நடக்கறதுக்கு முதல்ல ஒரு ஆரம்பம் இருக்கும்ல. அது கொஞ்சம் குழப்பமா தான் இருக்கும். அதுவா நடந்ததை அப்புறம் நம்ம வசதியாக்கிக்கறோம். அவ்ளோ தான்.
அவர் பேசியது காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மனதில் போதாமை கொப்பளிக்கிறது. நம்ப முடியாமை இருந்தாலும்... கேட்க நன்றாக இருக்கிறது. என்னவோ ஒரு முடிவுக்கு வந்தது போல மனதில் ஒரு சமநிலை. எப்படியோ... அவள் மீது இதுவரை இல்லாத பார்வை என்னில் ஊற்றெடுக்கிறது.
இரு உயிர்கள் முளைக்க ஆரம்பித்து விட்டாலும்... பிறந்தது ஒரே உடல் அல்லவா. ஓர் உடலில் இரு உயிர்கள். அது அது அதனுடைய இருத்தலை வெளிக்காட்டுகையில் வேறு வேறு ஆட்களாக தெரிய வருகிறாள். இப்போது ஜூனி இரு சித்திரத்தில் அசைவது போல இருந்தது.
நியூ இயர் பரிசு - பென் ட்ரைவ் அவளை சேர்ந்து விட்டது. அதி அற்புதமான நொடிகளை வீடியோ கிளிப்பில் அழகு படுத்தி இருந்தேன். அதிகாலை ஷாட்ஸ்... அவளுக்கு பிடித்த மதிய நேர வெப்ப சலனம்... கூட காக்கைகளின் குரல்... புங்கை மரத்தின் அடியே ஒரு புதிர் போல அமர்ந்திருக்கும் அவள்...மாலை நேர சில் அவுட் ஷாட்ஸ் என்று புதிராக இருந்தாலும்.. புதிதாக இருந்தாள். பின்னணி இசை கோர்ப்பில் "நின்னுக்கோரி வர்ணம்" பாடல் தூரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது....
சட்டென மாறிய அடுத்தடுத்த இரண்டு முகங்களுமே அழகு தான். அது எந்த சைன்சோ... இருந்து விட்டு போகட்டும். டிடெக்டிவ் வேலையை விட்டு விட்டு சீரியஸாக அவள்களை நேசிக்க காலம் அனுமதித்து விட்டது என்று தான் நினைக்கிறேன்.
பாடலோடு அவளே பரிசாக அவள் லேப் டாப் திரையில். பார்க்க பார்க்க சிறகு முளைத்தவளாக பரவசம் ஆகிக் கொண்டிருக்கிறாள்.
"ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்......"
எனக்கு இரு கிளி தனித்திருக்க... என்று தான் கேட்கிறது.
- கவிஜி