அத்தியாயம்-8

கதைத்தளங்கள் அதிகமாகிறது.

ஒவ்வொரு பயணிக்குள்ளும் கதைகள் வெடித்து வெடித்துக் கிளம்புகிறது, பூதாகரமாக. கதைகளின் சாரமும் சூடேறுகிறது. சூடேறி..., வெப்பம் புத்தியைச் சூடேற்ற, புத்தி, நரம்புகளை சூடேற்ற, .... என தொடரும் வெப்பப் பரிமாற்றம் ஒவ்வொருவரின் எலும்புகளையும் சதைகளையும் சூடேற்றி நெருப்புப் பிழம்பாக கனன்று கொண்டிருக்கும் இரும்பாக ஒவ்வொருவரும் சிவந்து, சூழலைச் சூடேற்றிக் கொண்டே செக்கச் செவேலென்று போய்க்கொண்டிருக்கிறார்கள்.

ரிமிந்தகனை வெப்பம் வாட்டியது. ஆரம்ப வெப்பத்திலிருந்து மிதவெப்பம் வரை சந்தோசமாக அனுபவித்து, பின் இன்னும் அது கூடக்கூட உடலை உதறிக்கொண்டு அங்குமிங்கும் தாறுமாறாக ஓடத்தொடங்குகிறான். உள்ளுக்குள் வெப்பமில்லாததால் சூழலின் வெப்பத்தைத் தாங்காமல்....
வெளிவெப்பத்தின் காரணமாக ‘தாமும் எரிந்து சாம்பலாகிவிடுவோமோ?’, என்ற பயத்தின் உச்சத்தின் போது “ஓ.....” வென அலறியபடி, அருகிலிருந்த ஓடையில் குதித்துக் கதறுகிறான். மக்கள் நடையை நிறுத்திவிட்டு, கனன்றுகொண்டே அவனைப் பார்க்கிறார்கள்.

அவனைச் சுற்றி நெருப்புக்காடு. சூரியனுக்குள் ரிமிந்தகன். வெப்பக்கதிர்கள் மெல்ல ஒலிக்கதிர்களாக கூடுவிட்டுக் கூடுபாய்ந்தது. வெப்பமனைத்தும் வார்த்தைகளற்ற ஒலிகளாக தாறுமாறாகக் கேட்டு, பின் நேரம் செல்லச் செல்ல ஒருவித இசைக்குக் கட்டுப்பட்டதுபோல, இசையாக தெளிவாகக் கேட்கிறது.
வெப்பத்தின் தாக்கம் அவனைத் தவிர வேறெதற்கும் இல்லை. மரம், செடி, கொடி அனைத்தும் பசுமையாக பளிச்சென்று இருக்க, அவ்வப்போது பறவைக் கூட்டம், அந்த இடத்தைக் கடந்து சென்றவனை விநோதமாகப் பார்த்தவாறு. அப்போது ஒரு வயோதிகன் தன் சிவப்புக்கண்களை பளிச்சென்று அவன் மீது பாய்ச்சி,

“நாம் எங்கே போகிறோம்?” என்று வீசிய வார்த்தைகள், எதிரொலியாகக் கேட்க, ரிமிந்தகன் வார்த்தைகளை கவனிப்பதற்காக, கிழவரின் வாய்க்கு நேராக காதுகளை திசை திருப்பி வைத்துக் கேட்கிறான். இருந்தும் அந்த வார்த்தைகள் உடனே அவனது செவிக்கு வரவில்லை. மெல்ல இந்த இடத்தை முழுவதும் ஒரு சுற்று சுற்றிவிட்டுத்தான் வார்த்தைகள் அவனை அடைந்தது,

“நாம் எங்கே போகிறோம்?”

குளத்தைவிட்டு மெல்ல எழ முயற்சித்தவனை நோக்கி, சட்டென பல வார்த்தைகள் கணைகளாக பாய்ந்தன, அனைத்துக் கேள்விகளையும் ஒருவனே கேட்பதாகக் கோர்க்கப்பட்டிருந்தாலும், அர்த்த, அனர்த்தங்களுக்கு, எந்த பங்கமும் வரவில்லை. அப்படிப்பட்ட ஒரே கருத்தை நோக்காகக் கொண்ட கேள்விகள்.

Man in fire “நாம் எங்கே போகிறோம்? வாழ்க்கையை போர்செல்லும் பயணத்திலேயே கடந்துவிடுவேனா?. பயமாயிருக்கிறது. நான் வாழ்க்கையில் சில விசயங்களைச் செய்ய ஆசைப்படுகிறேன். அது என் வாழ்க்கையின் முழுமையை நான் பெறுவதற்கு உதவும். அது கெட்டுப்போய்விடுமோ என்று அஞ்சுகிறேன். எங்கே போகிறோம்? நம் எதிரி எங்கே? அதோ அங்கே இங்கே என்று எதையாவது காட்டி போரை நிறுத்தினாலும் பரவாயில்லை. உடனே இந்த பயணம் நின்றுபோய், குந்தி குடிசை கட்டி என் தனி வாழ்க்கையை நான் சில காலம் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதை எனக்கு வாய்க்க ஏது செய்யுங்கள். இந்த பயணம் முடியுமா?...தொடங்கினது தான் தெரியும். கடந்து வந்தது எவ்வளவு நாட்கள்? எவ்வளவு ஆண்டுகள்? எத்தனை பேர் நடையைத் தொடங்கினோம்.....?” என அவன் பேசிக்கொண்டே இருக்க, ரிமிந்தகனின் உடல் முற்றிலுமாக தீவிட்டு எரிந்து அக்னி ஜ்வாலையாக மேலெழும்பி தீமேகமாக அனைவரையும் சூழந்தது.

மக்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள். தீமேகம் அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவர்கள் ஆளுக்கொரு அக்கினிக்குஞ்சுகளாகப் போய்க்கொண்டே இருந்தார்கள். வயதானவனின் வார்த்தை மீண்டும் தொடர்ந்தது,

“தொடங்கினபோது இருந்த அத்தனை பேருமா இப்போது இருக்கிறோம். எல்லோரும் தேய்ந்து விட்டார்களே...”

அவரோடு அனைவரும் சேர்ந்துகொள்ள, வார்த்தை மேல் வார்த்தைகளாக எல்லாம் அலையலையாக அதிர்வெடுக்கிறது. அனலாய் தகித்துக்கொண்டிருப்பவர்களின் வார்த்தைகள் அனைத்தும் தீயாய் வெளியேறியது. ஒவ்வொருத்தரது வாக்கும் ஒவ்வொரு வெப்ப நிலையில், அவரவர் வலி வேதனைகளைப் பொருத்து மேலே அனற்காற்றாய் அலைந்தபடி அவர்களைக் கவனித்து வருகிற ரிமிந்தகனை சுட்டது.

“ஆடுமாடுகள் மேய்த்துக்கொண்டிருந்த புல்வெளிகளில் காக்கைக் குருவிகள் இறகு விரித்து கடந்து செல்லும் அழகில் லயித்துக் கிடந்தேன். ஆகாயம் நொடிக்கொரு முறை நிறம்மாறி நிறம்மாறி என்னுள் ஓடும் ஆயிரமாயிர நரம்புப் பின்னல்களின் ஊடாக ஊடுவிச் சென்று என் கவிக்கருவை கொளுத்தின கனவில் கிடந்தேன். பனியடர்ந்தக் காலை வேளையில் என் பாதம் பட்டு உண்டான பாதையை அவசர அவசரமாக எத்தனை பேர் தொடர்ந்திருப்பார்கள்? இப்போது நான்....! என்ன காரணம் என்று இன்னமும் தெளிவுபெறாமல் கட்டளைக்கு கைகால்களைக் கொடுத்துவிட்டு சவமாய் செல்வது என்ன நியாயம்? சவமாவதற்கா? அப்படியானால் பாதிச் சவமாகிவிட்ட நான் இப்போது கேட்கிறேன் யாருடன் போர்?”

அவனைத் தொடர்ந்து இன்னொரு குரல்,

“ஐயா!, உறக்கத்தில் எழுந்ததுதான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்போது முதல் நடந்துகொண்டே இருக்கிறேன். என்னை கட்டியணைத்துக் தூக்கிவந்த தாயார் பாதியிலேயே என்னை இறக்கிவிட்டு, ‘நீ போ... நான் பிறகு வருகிறேன். நீ போ’ என்று உடலாய் மறைந்து, பின் குரலாகவும் மறைந்து இப்போது என் நினைவில் அடிக்கடி வந்து வந்து நிற்கிறாள். எங்கே என் தாய்? கூட்டம் என்னை அவளோடு இருக்க விடவில்லை. தள்ளிக்கொண்டே வருகிறது. கூட்டத்தை விடுத்து என்னால் ஒதுங்க முடியவில்லை, அங்கேயும் நிற்க முடியவில்லை. பிறகு எப்படி எதிர்த்து எதிர்திசையில் செல்லமுடியும்?. ஆனால் இப்போது எனக்கோ உடல் தளர்ந்துவிட்டது. நான் என் தாயைக் காணவேண்டும்.. ஒன்று எனக்கு வழிவிடுங்கள் இல்லையேல் நீங்கள் செல்லும் இலக்கையாவது தெளிவுபடுத்துங்கள். எப்போது போர் முடியும்? நான் என் துன்புறும் தாயைக் காணவேண்டும்”

சட்டென ஒரு குரல் கரகரத்து, கோபத்தோடு வெளிவருகிறது,

“எதற்குப் போர்?”

அதனைத் தொடர்ந்து, அடுத்தொரு குரல்,

“யாரை அழித்து யாரோடு வாழ்வதற்கு இந்தப் போர். இது என்ன எண்ணாயிரம் பேரை கழுவேற்றப்போகும் போரா? இல்லை நச்சுப்புகை வீசி லட்சோப லட்சம் பேரை அழித்த அரக்கனைக் கொல்லும் போரா? சோற்றுக்கு வழியில்லாமல் தமக்கு முன் பட்டினிவதை தாங்காமல் இறந்த, சதையற்ற கருப்பின மக்களைக் காப்பாற்றுவதற்கா? அல்லது குள்ள மனிதர்களைக் கேலிசெய்து குட்டிப் பையனென்ற வெடிகுண்டினை ஏவியவர்களுக்கு எதிரான போரா? என்ன காரணத்திற்காகப் போர்? இனப்போரா? இனப்படுகொலைகளுக்கு எதிரான போரா? மதக்கலவரங்களை அடக்குவதற்கா? சாதிப் பிரிவினைகளைக் களைவதற்கா.... எதற்கு? எதற்காக போர்?”

“போர் முடிந்து எல்லோரும் மாண்டபின் தனியனாகத் தலையில் கிரீடத்தைச் சுமந்துகொண்டு பைத்தியமாய் பிணங்களின் மேல் நடக்க ஆசைப்படுவதாக இருக்கிறது. யாருக்காகப் போர்?”

இப்படியாக ஒவ்வொருத்தரும் தம் மனதில் எழும் வலிகளை வார்த்தைகளாக வெளியேற்ற வெளியேற்ற ரிமிந்தகனின் முன் குவிந்துள்ள வலிகளின் குவியல் மலையாக எழும்பியது. நெருப்புக்குவியலின் அணலிலிருந்து நெருப்புக்கோழிகள் கழுத்தை வளைத்து, வளைத்து கரகரத்த குரலில் அலறிக்கொண்டு வரிசையைவிட்டு அங்குமிங்கும் தாறுமாறாக ஓடின. முட்டி மோதிக்கொண்டு ஓடும் கோழிகள் அனைத்தும், ஒன்றையொன்று ஒதுக்கியும் விலகியும் ஓடிய ஓட்டமானது, மலையைச் சுற்றியொரு பெரிய விட்டத்தில் ஓடும் விதத்திற்கு அவற்றைக்கொண்டு சென்றது. வட்டத்தின் விட்டம் அதிகரிக்க, அதிகரிக்க மத்தியில் ரிமிந்தகன் மலையின் விளிம்பில் பதுங்கி பதுங்கி கோழிகளின் ஓட்டத்தையும், ஒரு ஒருங்கமைவில் அமைந்த அவற்றில் வட்ட நிலையையும் கவனிக்கிறான், சிவப்பேறிய கண்களோடு.

அப்போது இதுகாலமும் வெகுதொலைவில் இவர்களின் எண்ணத்தோடு அலைந்தகொண்டிருந்த கழுகு மீண்டும் அந்த தீநிலப் பகுதிக்கு விரைகிறது. நொடியில் எண்ணத்தின் வேகத்திற்கு வந்தடைகிறது. அங்கே ரிமிந்தகன் மலையைச் சுற்றிச் சுற்றி விளிம்போடு நகர்ந்துகொண்டிருக்க, மக்கள் அனைவரும் நெருப்புக்கோழிகளாக மலையைச் சுற்றியொரு பெரிய வட்டத்தில் தம் இறகை விரித்து, தீயின் உந்துதலால் சுற்றுவதைக் கவனிக்கிறது, கழுகு.

கழுகின் கண்களும் அக்காட்சியின் தீநிலையை பிரதிபலிக்க, நெருப்புக்கோழிகளின் நகர்வு மெல்ல ஒரு நிறுத்தத்திற்கு வருகிறது. ரிமிந்தகனின் மீது கழுகின் நிழல்படிய, அண்ணார்ந்து பார்க்கிறான், கழுகின் பரந்துவிரிந்த ரெக்கையின் உள்பகுதியின் மெல்லிய பளபளக்கும் அதன் ஒவ்வொரு இறகின் ஒளியால் கண்கூசப்பட்டு அதைத் தாங்க முடியாமல் போக எரியும் மலைக்குள் தலையைச் சொருகிக்கொள்கிறான், ரிமிந்தகன்.

மக்களின் ஓட்டம் முற்றிலுமாக நிற்கிறது. மலைக்குள் தலைவைத்து ஒளிந்துகொண்டிருக்கும் ரிமிந்தகனைப் பார்த்தவாறு அவன் வெளிவந்து தாம் இதுவரைக் கேட்ட கேள்விகளுக்கும், கேட்கவிருப்பதற்கும் பதிலைச் சொல்வான் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கழுகின் நிழலால் அந்த இடத்தின் வெப்பம் கொஞ்சம் குறைகிறது. உள் இறகின் பளபளப்பு ஒளியால், பளீரென்ற ஒளியும் குடியேறுகிறது. மக்கள் கழுகின் இந்தச் செயலுக்காக மனதார ஒருவித நிம்மதியையும், ரிமிந்தகனின் செயலால் அவன் மீது கண்மமுமாக இருநிலையில் தத்தளித்துக்கொண்டிருந்தனர். அப்போது கழுகு மெல்ல அசைந்து நிழலை கலைத்து, தன் கரகரத்தக்குரலில் ரிமிந்தகனுக்கு மட்டும் கேட்பதாக,

“ஆ.... ரிமிந்தகா...! தருணம் வந்துவிட்டது. நீ பதில் சொல்லியாகவேண்டிய கட்டம் வந்துவிட்டது. என்ன பதிலை கோர்த்துவைத்திருக்கிறாய். நான் போனதும் அவர்களை திசைதிருப்பும் அந்தக் கதை என்ன?”

ரிமிந்தகன் மலைக்குள் இருந்து தலையை வெளியே எடுக்காமல் கழுகை உணர்ந்து, அதுசொல்லும் சொல்லையும் உள்வாங்கிக்கொண்டிருந்தான், பதில் சொல்லக்கூடாது என்ற தீர்மானத்தோடு.

“உண்மையைச் சொல். நீ எதற்காக இவர்களை அழைத்துச் செல்கிறாய்?”

பதிலில்லை. தொடர்ந்து இதுபோன்ற பல கேள்விகளை அடுக்கடுக்காய் கேட்கும் கழுகிற்கு பதில் கிடைக்கவில்லை. அதனால்,

“நீ உன் நிலையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. அதனால் சொல்கிறேன். உன் அழிவின், கடைசி நொடியில் நீ காணும் காட்சியில் ஒரு வாடாமல்லியின் நிழல் கிடைக்கும் அப்போது உன் கண்களிலிருந்து வெளிவரும் கண்ணீரின் உப்பு உன் கடைசி இறுப்பை உறைய வைக்கும்” என சொல்லிவிட்டு கழுகு சர்ரென பறந்துசென்றுவிட, மக்கள் இன்னமும் கழுகின் நிழல் தொடர்ந்து இருப்பதை உணர்ந்து கண்களை மூடி கழுகின் உருவத்தை உள்ளத்துள் வைத்து பெரிதாக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வெகுநேரம் அப்படியிருந்தவர்கள் திடீரென ஒரு அலறல் கேட்டு கண் விழித்துப் பார்க்கும் போது அவர்களுக்கு முன் இருந்த அந்த நெருப்பு மலையானது மறைந்து போயிருக்க அங்கே ரிமிந்தகன் தீநிறத்தில் கண்கள் சிவந்து, அவர்களை சுற்றியொரு பார்வைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனிக்கிறார்கள். கவனித்தவர்கள் அப்படியே, அவனது இந்த ஆக்ரோச நிலையினால் நிலைகுலைந்துபோய் வாயடைத்து கண்சிமிட்டாமல் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அவன்,

“இந்த ஒரு நிலையினை அடையத்தான் நான் இவ்வளவு காலமும் காத்திருந்தேன் போலும். வந்துவிட்டது. தருணம் வந்துவிட்டது. நம் எதிரியின் வியர்வைக்காற்றை நான் நுகர்கிறேன். உங்களுக்கு அந்த உணர்வு கிடைக்கிறதா? இதோ இங்கே தான் எங்கேயோ அவன் இருக்கிறான். பெரும் படையுடன் இருக்கிறான். அவனை நான் கொன்றுவிட்டு வருகிறேன். அதுவரையில் நீங்கள் உங்களது களைப்பைப் போக்கிக்கொண்டு இங்கேயே இருங்கள்.”

சிறிது இடைவெளி ஏற்படுகிறது அவனது பேச்சில். அந்த இடைவெளி அவர்களிடமிருந்து எதையோ எதிர்பார்த்து நிறுத்தப்பட்டதுபோல், தோன்றினாலும் அவன் ‘தான் எதையும் எதிர்பார்க்கவில்லை’ என்பதாக இருந்தது அவனது வெளிப்பாடு.

அவனே தொடர்ந்து,

“இதுதான் நமது மனித குலத்தின் இறுதிப்போர். இந்தப்போரில் நான் வென்று வருவேன். அதுவரையில் நீங்கள் இங்கே இருங்கள். ஒருகால் எனக்கு உங்களது உதவி தேவையென்று பட்டால்.... அநேகமாகத் தேவைப்படாது. அப்படி ஒருவேளை தேவைப்படடால் அப்போது நீங்கள் வந்தால் போதும் என்ன?”
என சொல்லிவிட்டு அவன் உடலைச் சிலிர்த்துக்கொண்டு வாளை உருவி கையிலெடுத்துக்கொண்டு கூட்டதைக் கிழித்துக்கொண்டு மேற்கு திசைநோக்கி வேகவேகமாக வெறிகொண்ட புரவியாக ஓடினான், புழுதியைப் பின்னால் வாரியிறைத்து அவனது சென்றடைந்த இலக்கை யாருக்கும் தெரிவிக்காமல்.

-அரியநாச்சி
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It