ஏழரை மணி வண்டியும் போய்விட்டது. அடுத்த வண்டி ஒன்பது மணிக்குதான். நியாயமாக எனக்கான பேருந்து ஐந்தரை மணிக்கு கோட்டையூர் நோக்கி போகும் எட்டுப்பட்டி ராசா பேருந்துதான். எங்கள் ஊர் பள்ளி மாணவர்கள் அனைவரும் முண்டியடித்து அந்த வண்டியில்தான் செல்வார்கள். ஆனால் நான் வழக்கமாக செல்வது ஏழரை மணி வண்டியில்தான். அது வரையிலும் என் வேலை மனம் போன போக்கில் ஊர்ச்சுற்றுவது.

‘நாலரை மணிக்கே பள்ளிக்கூடம் முடிஞ்சுரும்ல. அப்புறம் ஏண்டா இவ்ளோ லேட்டு...?’ ஆரம்ப நாட்களில் அம்மா கேட்க ஆரம்பித்தாள்.

நான் ‘கல்யாணி டீச்சர் ஸ்பெஷல் க்ளாஸ் வச்சாங்க. அதேன் லேட்டு… இந்த பள்ளிக்கூடத்துல நெதமும் ஒரு சார் க்ளாஸ் வப்பாங்களாம்…’ என்று நிரந்தரமாக அந்தக் கேள்விக்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.

man 247ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் ஊர் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்துவிட்டு, நத்தம் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆனது. அது முதல் காலை மாலை இருவேளைகளிலும் எனது பயணம் பேருந்தில்தான். பெரும்பான்மையாக நான் தேர்ந்தெடுப்பது ஏழரை மணி வண்டிதான். ஆனால் அன்று அதிலும் போக முடியாத சூழல் வந்தது.

ஒன்பது மணி வண்டியில் கண்டிப்பாக நான் ஏறியாக வேண்டிய கட்டாயம். இல்லாவிடில் அம்மாவும் அப்பாவும் கதறிவிடுவார்கள் என்ற நினைப்பு எனக்குள் மேலோங்கியது. கண்டிப்பாக அடுத்த வண்டியில் ஏறிவிட வேண்டுமென சபதம் எடுத்தேன். ஆனால் அதற்கு முன்னதாக என் புத்தக பையை கண்டுப்பிடித்தாக வேண்டும்.

பள்ளிக்கு எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்தம் எனக்கு பிடிக்காத ஒன்று. அங்கு எப்போதுமே நான் பேருந்துக்காகக் காத்திருப்பது கிடையாது. பள்ளியில் இருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கும் செந்துறை விளக்கு பேருந்து நிறுத்தம்தான் என் தேர்வு என்பது என் தாய் தந்தையருக்குத் தெரியாது. இரண்டு மைல் தூரம் நடராசா வண்டியில் செல்வேன். சில நாட்களில் பள்ளி மைதானத்தில் விளையாடுவதும் உண்டு. அது எப்போதாவது அரிதாக நடக்கும்.

பள்ளியில் இருந்து செந்துறை விளக்கு வரை நடந்து செல்ல எனக்கு தெரிந்த வழிகள் மூன்று. செந்துறை செல்லும் பிரதான சாலை வழியை நான் கடைசித் தேர்வாகத்தான் வைத்துக்கொள்வேன். மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் அதை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. எங்கள் ஊர் ஆட்கள் பார்த்துவிட்டால் அப்பாவிடம் சொல்லிவிடுவார்கள்.

சின்னையாத் தோப்பு வழியாகச் செல்வது சற்று கடினமான வேலை. பள்ளியின் கழிவறை சுவரில் ஏறி அந்தப் பக்கமாகக் குதித்தால் சின்னையாத் தோப்பு. அதை தாண்டினால் வரும் மாந்தோப்புக்குள் காவக்காரன் கண்ணில் அகப்படாமல் சென்றால் செந்துறை விளக்கை அடைந்துவிடலாம். அதற்கு முன்னர் ஆசிரியர் கண்ணில் மாட்டாமல் சுவர் ஏற வேண்டும்.

என் மனம் சின்னையாத் தோப்பு வழியை தேர்ந்தெடுத்தால் அன்று நான் படிப்பாளியாக மாறி விடுவேன். ‘பள்ளி முடிந்ததும் மரத்தடியில் அமர்ந்து படிப்பது போல சிறிது நேரம் பாவ்லா செய்ய வேண்டும். பின்னர் ஆசிரியர்கள் அனைவரும் சென்றவுடன், மாணவர்கள் யாரும் விளையாடிக் கொண்டிருந்தால் அவர்கள் கண்ணிலும் சிக்காமல் புத்தக பையுடன் கழிவறை நோக்கி செல்ல வேண்டும். ஒன்னுக்கு இருக்கும் பகுதியில் யாரும் இல்லையென்றால் சிறிது கூட யோசிக்காமல் சட்டென ஏறி குதித்துவிட வேண்டும்’ என என் மூளை கட்டளையிடும்.

ஒரு நாள் அதை அப்படியே இம்மி பிசகாமல் நிறைவேற்ற நினைத்து சுவர் ஏறும் போது காலில் ஏதோ ஒரு கைப்பட்ட உணர்வு. திரும்பினால் ‘6D’ ஆசிரியர் சகாயம். மனுசன் கழிவறைக்குள் இருந்துள்ளார். அடி வெளுத்துவிட்டார். போதாக்குறைக்கு என் அம்மாவை அழைத்து வரச்சொல்லி அவளிடம் புகார் வேறு. அன்றிலிருந்து ‘கழிவறை உள்ளுக்குள் யாரும் அமர்ந்துள்ளார்களா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்’ என்ற புதிய கட்டளை.

நான் அதிகமாகத் தேர்ந்தெடுக்கும் வழி செட்டியார் குளம் பாதை. செட்டியார் குளம் வழியாக செல்வது எனக்கும் மிகவும் பிடிக்கும். சுற்றிலும் வீடுகள் அமைந்திருப்பதால் அவ்வீடுகள் வெளியேற்றும் கழிவுகள் செட்டியார் குளத்தில்தான் சரணடையும். குளத்துப்பக்கம் காலை கடன்களை கழிப்பதோடு சரி. மற்ற நேரங்களில் யாரும் சீண்ட மாட்டார்கள். ‘உலகம் இருக்கும் வரை உன்னை நினைத்துக்கொண்டிருப்பேன்’ என்பதை போல எருமை மாடுகளும் பன்றிக் கூட்டங்களும் சதா சர்வகாலமும் செட்டியார் குளத்தைத் தழுவிக்கொண்டிருக்கும். ஆள் அரவம் இல்லாத மாலை வேளைகளில் அவைகளுடன் நானும் கலந்துக்கொள்வேன்.

மனித குரல்களின் ஒலி சற்றும் இராது. புத்தக பையை ஒரு ஓரத்தில் பத்திரமாக வைத்துவிட்டு, கரையோரத்தில் அமர்ந்திருக்கும் கல்லில் அமர்வேன். குளத்தில் அந்த சைக்கிள் டயரை யார் அங்கே கொண்டு வந்து போட்டார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகட்டும்.

அக்குளத்திற்கு வந்த முதல் நாளிலேயே டயரில் கயிறு கட்டி வைத்துவிட்டேன். எப்போது குளத்திற்கு வந்தாலும் நான் மீனவனாக மாறிவிடுவது வழக்கம். டயரை சிறிது தூரம் தண்ணீருக்குள் தூக்கி எறிந்து சலம்பல் இல்லாமல் மெதுவாக இழுத்தால் மீன்கள் கரை வந்துசேரும். அந்த ஊரிலேயே அக்குளத்தில் மீன் பிடிக்கும் ஒரே ஆள் கண்டிப்பாக நானாகத்தான் இருப்பேன். இருள் சூழும் நேரத்தில் பொடி நடையாக நடந்தால் சரியாக இருக்கும்.

இதுபோலத்தான் பள்ளி முடிந்ததும் எனது ஊர்வலம் ஏதோவொரு பாதையை நோக்கி தொடங்கும். ஒவ்வொரு பாதையிலும் வெவ்வேறு ரசனைகள். நான்கரை மணிக்கு பள்ளி முடிந்ததும் அன்றைக்கு என் மனம் எந்த வழி மீது விழி வைக்கிறதோ அவ்வழி நோக்கி கால்கள் நடைபோடும். அன்றைக்கு நான் சென்றது செட்டியார் குளத்திற்கு. கண்டிப்பாக எனது புத்தகப்பை அங்கேதான் இருக்கும்…

பேருந்து நிறுத்தம் அருகில் சென்றவுடன்தான் எனக்கு பகீரென்றது. உடம்பில் திடீரென்று எடை குறைந்தது போன்றதொரு உணர்வு. சட்டெனப் புரிந்தது, புத்தக பை உடம்பில் இல்லை. மூளை வேகமானது. குளத்தை நோக்கி புறப்பட்டேன். வேகமாக நடந்தேன். எங்கள் அய்யாவை போல தூர எட்டு வைத்து நடந்தேன். ஓட ஆரம்பித்தேன். பை கண்டிப்பாக அங்கேதான் இருக்கும். பந்தையத்தில் ஓடுவதை போல ஓடினேன் குளத்தை நோக்கி…

எங்கள் சொந்த ஊர் நத்தம் அருகில் இருக்கும் ஆவிச்சிப்பட்டி. ஊருக்குள் பங்குக்கு விதைக்கும் கருப்பையா என்றால் அனைவருக்கும் தெரியும். கருப்பையா என் அப்பா. சொந்த நிலம் என்று எதுவும் இல்லை.

பங்கு முறைப்படி விதைப்பதுதான் அப்பாவின் தொழில். மாங்கன்று தென்னங்கன்று இருக்கும் தோட்டங்களை பங்கு வாங்குவதில் அதிகம் விரும்புவார். அதன் படி தோட்டத்து வருமானத்தில் நிலத்துக்காரர்களுக்கு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. மரங்களை காப்பாற்றி கொடுத்தால் போதும். விதைப்பு முறையாக இருந்தால் உரம், ஆள் கூலி போன்றவற்றிற்க்கு ஆகும் செலவில் இருவரும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் உழைப்பு நிலத்துக்காரனுக்கு இல்லை. வருமானத்தில் பாதி பாதி. நிலத்துக்காரர் விருப்பம் போல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம்.

சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பது அப்பாவின் கனவு. அதற்கான காலம் எப்போது அவருக்கு கை கூடுமோ? கடுமையான உழைப்பாளி. அவரை நாள் முழுவதும் பார்க்க வேண்டும் என்றால் விடுமுறை நாட்களில்தான் சாத்தியமாகும். அதுவும் வீட்டில் இல்லை, தோப்பிற்கோ வயற்காட்டிற்கோ போக வேண்டும். அப்பாவின் நினைவு வரும் நாட்களில் அவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று தூரத்தில் அமர்ந்து கண் வலிக்க பார்த்துக்கொண்டே இருப்பேன்.

அவர் வேலை செய்யும் அழகே தனி. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசிக்கலாம். பச்சை வண்ண டவுசருடன் தலையில் துண்டை கட்டிக்கொண்டு அவர் வேலை செய்யும் உழைப்பில்தான், சுற்றியுள்ள மலைகளும் காடுகளும் அழகாகத் தெரிகிறதோ? கண்டிப்பாக இருக்கலாம்.

அம்மா அப்பாவுக்கு கொஞ்சமும் சளைத்தவள் இல்லை. முன்று ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை இவள் ஒருத்தியே செய்து விடுவாள். காலை நேரத்தில் நான் அப்பாவை பார்ப்பதே அரிது. அம்மா எனக்காக காத்திருந்து உணவு செய்து கொடுத்துவிட்டு அரக்க பரக்க வயலை நோக்கி ஓடுவாள்.

எப்போதுமே காலை அடுப்பு எரிவது எனக்கு மட்டும்தான். இட்லி தோசை இரண்டில் ஏதாவது ஒன்று அம்மா தயார் செய்வாள். ஒரு நாளும் அதை அம்மா சாப்பிட்டதாக எனக்கு நினைவில்லை. எங்கள் ஊர் விவசாயிகள் வாய் ருசியைக் கட்டித்தான் பிழைக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. விசேச நாட்களில்தான் ருசியான பண்டங்கள் வீட்டில் புழங்கும். இரவுகளில் நான் அப்பா அம்மா மூவரும் ஒன்றாக சாப்பிடுவோம். மற்ற நேரங்களில் அவர்கள் இருவரும் எங்கே சாப்பிடுகிறார்கள், அம்மா எங்கே சமைக்கிறாள் என்பது எனக்குத் தெரியாது.

இருவருக்குமே என் மீது கொள்ளைப் பிரியம். நான் ஊமையன் போலவே இருந்து குசும்பு செய்வது, சேட்டை செய்வது என்று இருந்தாலும் நன்றாகப் படிக்க கூடியவன் என்பதில் இருவருக்குமே மகிழ்ச்சி. படிப்பில் சிறந்தவனாக இருக்கும் மாணவர்களின் தந்தையர்கள் யாராக இருந்தாலும் மகிழ்வார்கள். அதிலும் அவர்கள் விவசாயிகளாக இருந்துவிட்டால்?

நான் ஒவ்வொரு முறை ரேங் கார்டு கொண்டு வந்து கொடுக்கும் போதும் எனது தந்தை அடையும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. மனுசன் மனசுக்குள் நெகிழ்ந்து உருகி விடுவார். நான் எத்தனாவது ரேங் என்பது கூட அவருக்கு பார்க்கத் தெரியாது. அம்மாதான் பார்த்து சொல்வாள். திண்னையில் அமர்ந்து மேலிருந்து கீழாக ஒவ்வொரு பாட மதிப்பெண்களையும் மெதுவாகத் தடவிப்பார்ப்பார்.

மறுநாள் காலை வேலைகளை ஒதுக்கிவிட்டு நான் பள்ளிக்கு செல்லும் நேரத்தில்தான் வயலுக்கு செல்வார். அது வரையிலும் கை ரேகைப்படலம் தொடரும். அவருக்கு கையெழுத்துப் போடத் தெரியாது. கைநாட்டுதான் என்றாலும் அதை என் ரேங் கார்டில் வைப்பதற்கு அவர் அடையும் மகிழ்ச்சி இரண்டு மூன்று டாக்டர் பட்டம் வாங்கியவருக்கு கூட வராது. கைரேகை வைப்பதற்கு நான் மை கொடுத்தாலும் வேண்டாம் என்பார். கார்டை வலது கையில் வைத்துக்கொண்டு, ஊரே தன்னை பார்ப்பது போன்ற எண்ணத்தில் எங்கள் ஊரில் இருக்கும் ஒரே பெட்டிக்கடைக்கு நடப்பார். கடைக்கு வருபவர்களிடம் என்னைப்பற்றி பெருமையடித்துவிட்டு பொறுமையாக அங்கேயே மை வாங்கி ரேகை பதிந்துவிட்டு வந்தால்தான் அவருக்கு திருப்தி. எனக்கும்தான்.

இப்படியாக எங்கள் குடும்பத்தின் வாழ்க்கை ஓடியது. கையில் பணம் சிறிது புரளும் போது உடனே நத்தம் கனரா வங்கியில் சேமித்து விடுவார். இரவு வீட்டில் கவுச்சி சமைத்திருந்தால் அன்று அப்பா வங்கி சென்றுள்ளார் என்பது எனக்கு புரியும். சொந்தமென்று ரெண்டு குழி நிலம் இருந்தாலும் நிம்மதிதானே? அதற்காகத்தான் மனுசன் போராடுகிறார்.

அந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் சுப்பிரமணி தோப்பில் விதைத்திருந்தார் அப்பா. முந்தைய ஆண்டில் விளைச்சல் நன்றாக இருந்தும் சந்தையில் விலையில்லை. அப்பாவிற்கு அதில் சிறு நஷ்டம். வரும் பருவத்திலாவது லாபம் பார்த்துவிட எண்ணி கடுமையாக உழைத்தார். நன்றாக சம்பாதிப்பதற்கு விவசாயிகளுக்கு தெரிந்த ஒரே வழி உழைப்புதான். பொருளாதாரம், சந்தை நிலவரம் போன்ற மயிரு மண்ணாங்கட்டியை பற்றி வியர்வையை விதைக்கும் அவனுக்கு என்ன தெரியும். என் அப்பன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் ஏசி அறையில் இருக்கும் சோம்பேறி பயதானே விலையை நிர்ணையிக்கிறான்?

இரவும் பகலும் கடுமையான உழைப்பு. விடுமுறை நாட்களில் ஊர் சுற்றுவதை கூட விட்டுவிட்டேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆரம்பித்தேன். நான் வயல் வேலைகள் செய்வது மட்டும் அப்பாவுக்கு பிடிக்காது. அதனால் அம்மாவிடம் சொல்லி வீட்டில் இருக்க சொன்னார். நான் சிரமபடுவதாக என் தகப்பன் நினைத்துக் கொண்டார் போலும். எந்தத் தகப்பனுக்குதான் மகன் கஷ்டப்படுவது பிடிக்கும்?

பயிர் நல்ல வளர்ச்சியாகத் தெரிந்தது. அப்பா முகத்தின் உள்ளுக்குள் சிறிய மகிழ்ச்சி தெரிந்தாலும் அவர் வெளிக்காட்டவில்லை. அம்மாவின் முகம் வாடி போய்விட்டது எனக்கு நன்றாக தெரிந்தது. அவளின் சுறுசுறுப்பில் ஒரு தேக்கம். ஆனாலும் வழக்கம் போலவே செயல்பட்டாள்.

‘ரெண்டு நாளைக்கி வீட்லேயே இருஞ்சே… காட்டுக்கு வர வேணாம்’ அப்பா சொன்னார். அவருக்கும் அவளின் இயலாமை தெரிந்திருந்திருந்தது. அவள் கேட்கவில்லை. இது நடந்து மூன்று நாட்கள் சென்றிருக்கும். அம்மா படுத்துவிட்டாள். காலையில் அவளால் எழுந்திருக்க முடியவில்லை.

‘இனைக்கி நா வரல… வீட்ல இருக்கேன்’னு அப்பாவிடம் சொல்ல முடியாமல் தவித்தாள்.

அப்பா புரிந்து கொண்டு ‘ஒரு எட்டு ஆஸ்பத்திரி போயிட்டு வந்துருவோமா…?’ அம்மாவிடம் கேட்டார்.

‘அதெல்லாம் வேணாம். ரெண்டு நா செண்டா சரியாயிரும்…’

‘சரி நா பொறப்பட்ரேன்…’ விர்ரென வயலுக்கு பாய்ந்தார்.

வாசல் வரை சென்று ஓடாத குறையாக நடக்கும் தன் கணவனை அழுகாத குறையாகப் பார்த்தாள் என் தாய் அழகம்மாள். உண்மையிலேயே பெயருக்கேற்றார் போல அவள் அகத்திலும் புறத்திலும் அழகுதான். நானும் பள்ளிக்கு புறப்பட்டேன். மாலை ஐந்தரை மணி வண்டியில் வந்துவிட வேண்டும் என அப்போதே முடிவு செய்துவிட்டேன். நான் பள்ளி சென்ற சிறிது நேரத்தில் அம்மா முடியாமல் இருப்பதை கேள்விபட்டு விசயா கிழவி வீட்டுக்கு வந்திருக்கிறாள். விசயா கிழவி எங்கள் சொந்தம்தான். எனக்கு சிறு வலி ஏற்பட்டாலும் அவள் உயிருக்கு மேலாகத் துடித்துப் போவாள். அம்மாவின் உடம்பு அனலாக கொதிக்க பதறி போய்விட்டாள் கிழவி.

‘எந்திரிடி பாவி மகளே…’ என்று அவள்தான் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளாள். நான்கைந்து நாட்கள் மருத்துமனை வாழ்க்கை. அப்பா காலையில் வேலை ஆட்களை ஏவிவிட்டு நத்தம் வந்துவிடுவார். விசயா கிழவிதான் உதவியாக இருந்தாள். நான் பள்ளிக்கு செல்ல மறுத்தேன். ‘சரி’ என்று அப்பாவும் ஒன்னும் சொல்லவில்லை.

‘ரெண்டு நாள் கலிச்சி வாங்க. ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் ரிப்போட்சலாம் அப்பதான் வரும். அப்புறம் என்ன செய்யாலாம்னு பாக்கலாம்…’ என்று அம்மாவை வீட்டுக்கு அழைத்து போக சொன்னார்கள். அப்பாவும் கிழவியும் கையெடுத்துக் கும்பிட்டு விடை பெற்றார்கள். இப்போது அம்மா சிறிது தெம்பாக இருப்பதாக எனக்கு தோன்றியது.

இரண்டு நாள் கழித்து மருத்துவர் எங்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அம்மாவுக்கு வயிற்றில் கட்டி இருப்பதாகவும், சின்ன ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் கூறியது எங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆபரேஷன் இங்கு செய்ய முடியாது என்றும், மதுரையில் தனியார் மருத்துவமனையில்தான் செய்ய முடியும் என்றும், அங்கு செல்லுமாரும் ஒரு பரிந்துரைக் கடிதம் கொடுத்தார்.

கடிதம் வாங்கிய மறு நாளில் அப்பா கனரா வங்கி சென்றார். இம்முறை முதன் முறையாக பணம் எடுப்பதற்காக. அதற்கடுத்த நாளில் கடிதத்துடன் மதுரைக்குப் பயணப்பட்டோம். அங்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக கடிதம் கொடுத்தவரே கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்!

அறுவை சிகிச்சை நடந்த சமயத்தில் அப்பா பாண்டி கோவிலில் இருந்தார். எல்லாம் நல்லதாகவே நடந்தது. அம்மா கண் விழித்தவுடன் அப்பா பாண்டி கோவில் திருநீறை அம்மாவுக்கும் எனக்கும் பூசிவிட்டார். ஏற்கனவே கையில் இருந்த பணம் செலவாகி இருந்தது. மேலும் முன்று நாட்கள் தங்க வேண்டும் என்றனர். அப்பா மீண்டும் கனரா வங்கி போனார். சேமித்த மொத்த பணமும் காலியாகிப் போனது எனக்கு தெரிந்தது. அப்பா கவலை படுவார் என நினைத்தேன். ஆனால் அவர் எப்பவும் போலவே இருந்தார். அம்மாவின் மனதில் ஏதும் குற்றவுணர்ச்சி வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

நான் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் சேர்ந்து இரண்டு வாரங்கள் முழுதாக முடியவில்லை. அதற்குள் இத்தனை நாட்கள் விடுமுறை. விசயா கிழவி வந்த போது அவளுடன் என்னை அனுப்பிவைத்தார் அப்பா. நான் கிழவி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்றேன். பள்ளியில் விடுமுறை எடுத்ததற்காக அபராதம் வசூலித்தார்கள். கிழவியிடம் வாங்கி கட்டினேன். இரண்டு வாரங்களில் நான் ஐந்து நாட்கள் செல்லவில்லை. பாக்கி சொச்ச நாட்களில் என்னிடம் அந்த பள்ளி நிர்வாகம் பணம் வாங்கியது இது இரண்டாவது முறை. முதல் தடவை சட்டையைத் தேய்த்து போடாமல் வந்ததற்கு.

‘ஐஸ் ஸ்கூல்லயே சேப்போம். எதுக்கு வெளியில…? காச புடுங்கிப்புடுவாங்ஙே…’ என்றாள் அம்மா.

எப்பவாவது கோவமடையும் அப்பா அன்று ‘காசாடி முக்கியோம். பொல்லாத காசு. போடி ஓ சோலிய பாத்துக்கிட்டு…’ கத்தினார்.

ஆனால் அம்மா சொன்னத்துதான் சரியாக இருந்தது. முதல் நாளிலேயே அம்மா சொன்னது நிரூபிக்கப்பட்டது. அலுவலகத்தில் சேர்க்கைக்கான பணம் கட்டியதும் பக்கத்து அறைக்கு போகச் சொன்னார்கள். ‘என்ன? ஏது?’ என்று அப்பாவும் கேட்கவில்லை. எந்த கிராமத்தான் அப்படி கேட்டிருக்கிறான். அங்கு மூன்று பேர் அமர்ந்திருந்தனர். எங்களின் தோற்றத்தைப் பார்த்ததும் அவர்கள் மனதிற்குள் யூகித்து விட்டார்கள் போல.

சிறிது கூட முகமலர்ச்சியும் வரவேற்பும் இல்லாமல் ‘டொனேசன் குடுக்குறீங்களா…?’ மொட்டையாகக் கேட்டார் ஒரு வழுக்கை வாத்தியார்.

அப்பா மெதுவாக மேசைக்கு அருகில் சென்றார். ‘ரெண்டாயிரத்தி ஒர்வா ஏ மவே பேர்ல எலுதிக்கங்க…’ பையில் இருந்த பணத்தை எடுத்து அவர்களிடம் நீட்டினார். அப்பாவின் முகம் மலர்ந்திருந்தது, கூடவே அவர்களின் முகங்களும்.

அம்மா ‘கூறு கெட்டு போச்சா ஒனக்கு…? அவே ஓங்கிட்ட ரெண்டாயிரம் வேணும்னு கேட்டானா…?

அப்பா ‘நாலப்பின்ன அம்ம பயல ஒன்னுக்கும் வக்கில்லாதவன்னு நெனச்சுட கூடாதுடி… அவே மரியாதையோட படிக்கனும்…’.

அவரை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த அம்மா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. மெல்லிசாகப் புன்னகைத்தாள்.

அம்மாவும் அப்பாவும் மூன்றாம் நாள் மாலையில் வந்தார்கள். நான் அன்று எங்கும் போகாமல் ஐந்தரை மணி வண்டிக்கே வந்துவிட்டேன். மாத்திரை மருந்தென அம்மா வாழ்ந்து கொண்டிருக்க, அப்பா வீடு வயல் என அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்தார். நான் வாங்கிய பணத்தை அப்பாவிடம் வாங்க மறுத்தாள் கிழவி.

‘நீ படுச்சு சம்பாதுச்சு இந்தக் கெளவிக்கு செய்யணும்’ என்றாள் என் கன்னத்தை கொஞ்சி.

நான் ஒரு அவசர கொடுக்கையாக அவர்கள் வந்த நாளின் இரவில் பள்ளியில் கொடுத்த புத்தகங்களுக்கான விலைப்பட்டியலை அப்பாவிடம் கொடுத்தேன். அவர் எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொண்டார்.

மறுநாள் காலையில் சுப்பிரமணியிடம் அப்பா பணம் வாங்கியதை தூரத்தில் இருந்து கவனித்தேன். அவர்கள் என்னை பார்க்கவில்லை. என்னுடன் பள்ளிக்கு வந்து பணத்தை கட்டிவிட்டு சென்றார் அப்பா. பங்குத் தொகைக்கான பணம் கூட அவரிடம் இல்லையென்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அதனால்தான் சுப்பிரமணியிடம் கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தில்தான் என்னுடைய புத்தக பை வாங்கப்பட்டது. அதைத்தான் தொலைத்துவிட்டேன். அதை நான் கண்டிப்பாக கண்டுப்பிடித்தாக வேண்டும்.

குளத்தை நோக்கி ஓடினேன்… புத்தகப்பை அங்கில்லை. அங்குமிங்கும் ஓடினேன். கண்ணீர் கொட்டியது. இத்தனை நாளில் அன்றுதான் குளத்தை முழுமையாக சுற்றியிருப்பேன். மூலை முடுக்கெல்லாம் என் கண்ணும் கைகளும் சென்றன. ஒரு பயனும் இல்லை. எந்த நினைப்பில் சென்றேன்…? ஊர் ஊருணியில் விளையாடியதாக நினைத்து விட்டேனா? என் மீதே எனக்கு கோவம் வந்தது. நொந்து கொண்டேன். நாக்கு வறண்டது. கண்கள் சூடேறி காய்ச்சல் வருவது போலானது. அதே கல்லில் மீண்டும் அமர்ந்தேன். ‘இன்னைக்கி சின்னையா தோப்பு வழியிலத்தானே வந்தோம்’. கிறுக்குத் தனமாக பொய்யாக யோசித்தேன்.

சிறிது நேரம் சென்றது. சுற்றிலும் செவ்வக வடிவங்களில் ஒளிக்கீற்றுகள். குறுக்கே கம்பிகள் இருந்தது ஜன்னல் எனப்பட்டது. தண்ணீருக்குள் ஏதோ முண்டுவதை உணர்ந்தேன். அது பன்றி. எல்லாமே என் மண்டைக்கு தாமதமாகப் உரைத்தது. வெகு நேரத்திற்கு பின்னர்தான் வீட்டு ஞாபகம் வந்தது. சிவந்த கண்களோடு பள்ளியின் முன்பு இருக்கும் பேருந்து நிலையத்திற்கு சென்றேன்.

பேருந்துக்குள் அனைவரும் என்னையே கவனிப்பதாக இருந்தது. முக்கியமாக எங்கள் ஊர் ஆட்கள். சட்டையை வாரி முகத்தைத் துடைத்துக் கொண்டேன். என் அருகில் அமர்ந்திருந்த பெரிய சாமியாடி மச்சான் கண்ணுசாமி என்னை தழுவிக்கொண்டார். அந்தத் தழுவலின் சுகம் அதுவரை நான் உணராதது. இதமாக இருந்தது. பையைத் தொலைத்த குற்றவுணர்ச்சியில் இருந்து என்னை மீள வைத்தது.

மந்தையில் பேருந்து நின்றவுடன் இறங்குவதற்கு முன்பே அம்மாவின் கதறல் கேட்டது. கீழே இறங்கியவுடன் அம்மா என்னை தழுவிக்கொள்ள ஊர்க்காரர்கள் என்னை சூழ்ந்துக் கொண்டனர். பேருந்தின் பின்பக்க வாசலில் ஏறி என்னை தேடிய அப்பா சத்தம் கேட்டு இறங்கி வந்து ‘எங்கடா போன… சாமி…’ என கதறினார். சில நாட்களாக அவருக்குள் இருந்த ஒட்டுமொத்த துன்பங்களும் இதன் மூலமாக வெளியேறியது கண்டிப்பாக எனக்கும் அம்மாவுக்கும் மட்டும்தான் தெரிந்திருக்கும்.

காலை கடன்களை முடிக்க குண்டப்பத்தா தோப்புப் பக்கம் செல்கையில் சுப்பிரமணி களத்தில் அப்பாவைப் பார்த்தேன். சுப்பிரமணி பணம் கொடுத்தாரா என்பதை கவனிக்கவில்லை. அப்பா பணம் வாங்கியிருந்தால் திங்கள் கிழமை காலையில் அவரும் என்னுடன் பள்ளிக்கு வந்திருப்பார். ஆனால் அவர் வரவில்லை. திங்கள் கிழமை காலையில் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டார்கள்.

அப்பா “சுப்ரமணிக்கிட்ட அதுக்கு மேல கேக்க முடியல. அம்ம நெலமய தெருஞ்சுக்கிட்டு பங்கு தொகய கூட அவரு கேக்கல. அதுக்கு மேல அவர்கிட்ட என்ன’னு கேக்குறது”

அம்மா ‘வானக்காரர்ட்ட கேட்டியா…?’

‘ம்ம்ம்…’

சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள்.

அம்மா ‘பேங்கல லோன் போடலாமா…?’

அப்பா ‘சொல்லி வச்சுருக்கேன்… ஆனா கைக்கு பணம் வர ஒரு மாசத்துக்கு மேல ஆகுமாம்… பெருமாலு சொன்னியான்…’

அம்மா ஏதோ சொல்ல வாயெடுக்க ‘ஊர்ல எல்லார்ட்டயும் கேட்டாச்சு. ஒன்னூம் பிரயோசனம் இல்ல…’ குரல் உடைந்து சொன்னார் அப்பா.

அம்மா ‘இதுக்குத்தேன் அப்பவே சொன்னேன். ஐஸ் ஸ்கூல்ல சேப்போம்னு… இப்ப பாரு புத்தகத்துக்கே ரெண்டாயிர ரூவா வேணும்ங்கிறியான் வாத்தியான்…’

அப்பா எதுவும் பேசவில்லை.

அம்மா ‘ஸ்கூல்ல ஒரு ரெண்டு நா டயம் கேட்டு பாக்காலாமா?’

‘அது வரைக்கும் ஏம்புள்ள என்னத்த வச்சு படிக்கும். போனா புத்தக பையோட போகனும். அம்ம கஷ்டத்த அவே மேல போட வேண்டாம். மத்த பயலுகள பாத்து ஏங்கி போயிருவியான்…’

நான் தூங்குவதாக நினைத்து இருவரும் பேசிக்கொண்டனர். நான் வந்தக் கண்ணீரையும் அடக்கிக்கொண்டு படுத்திருந்தேன். நாட்கள் ஓடியது. இரண்டு வாரங்களுக்கு மேலானது. அப்பாவின் கையில் பணம் வந்ததாகத் தெரியவில்லை. போதாக்குறைக்கு அம்மாவும் முயன்று பார்த்தாள். பெரும்பாலான சமயங்களில் நான் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் அமர்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருப்பார் அப்பா.

வயல்களிலும் தோப்புகளிலும் புகுந்து வெளியேறினேன். தனியனாக உணர்ந்தேன். பள்ளியை மறந்தேன். மதிய வேளையில் ஊருணியில் அமர்ந்து தனிமையை ரசித்தேன். இந்த உலகத்திலே நான் மட்டும்தான் இருப்பதாக நினைப்பு. அந்த ஊருக்குள் யாருமே கால் வைக்காத இடத்திற்கு செல்ல ஆசைப்பட்டேன். அதை மற்றவர்களிடம் நிரூபிக்கவும் வேண்டும். காடு கரையெல்லாம் அலைந்து திரிந்தேன். அருமையாக இருந்தது. பள்ளிக்கூடத்தையும், சிரமமான சூழ்நிலையிலும் அப்பா வாங்கிக்கொடுத்த புத்தகப்பையையும் சுத்தமாக மறந்தேன். அப்பாவும் மறந்திருப்பாரா?

நான் எவ்வளவு ஊர் சுற்றினாலும், என்ன தவறு செய்தாலும் கண்டிக்காத அப்பா, அவருக்கு துணையாக வயல்களில் சிறு வேலை செய்தாலும் தடுத்துவிடுவார். அது பற்றிய பயம் இருந்தும் அன்று மதியம் சாப்பாடு எடுத்துப் போனேன். வியர்வைத் துளிகள் மினுமினுங்க நடுகாட்டில் வேலையில் இருந்தார் அப்பா. நான் வேப்ப மரத்துக்கடியில் வரப்பின் மீது அமர்ந்தேன். வரும் போதே என்னை கவனித்துவிட்டார். வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. இங்கிருந்தே நான் சத்தம் கொடுத்தேன். அவர் என்னை போகச் சொல்லி சைகை செய்தார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கூடவே கவலையும் ‘ஏ மேல இருந்த பாசம் கொறஞ்சுருச்சோ…? என்று. சாப்பாட்டுக் கூடையை வரப்பில் வைத்துவிட்டு கிளம்பினேன். நான் சிறிது தூரம்தான் சென்றிருப்பேன், அதற்குள் அப்பாவின் உருவம் நகர்ந்தது. எனக்குள் சிறு சந்தேகம். நான் ஆற்றுக்குள் பதுங்கிக்கொண்டேன்.

அப்பா வரப்பில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே குலுங்கி குலுங்கி அழுததது பின்பக்கமாக இருந்து பார்த்தாலும் எனக்கு நன்றாகத் தெரிந்தது.

- பிச்சையம்மான்

Pin It