Man in sadகடலையொட்டிய ஒரு மலைப் பகுதியில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கடலோடு படுத்து உறங்குபவர்கள் நாங்கள்.

கடல் சம்பந்தப்பட்ட பணிபுரியும் ஒரு அரசாங்க
அலுவலரின் பிழையால்
ராட்சத மிருகங்கள் மலைகளுக்குள்
பிரவேசிக்க ஆரம்பிக்கின்றன.

எங்கும் பெரு மழை, வெள்ளம், பேரழிவு
தொடங்கியிருந்தது.
எங்கும் மக்கள் கூட்டம் சிதறி ஓட ஆரம்பித்தது.
குழந்தைகள், பெண்கள், ஆண்கள்-
மரண பயத்தால் ஓட ஆரம்பித்திருந்தனர்.
நோவா காலத்து பெரு வெள்ளம் போலுள்ளது.

வெள்ளம் வராது, பேரழிவு வராது என
பொய்களை கூறிய
அரசாங்கத்தினரை மக்கள் வெள்ளம்
சபித்தபடியே ஓடிக் கொண்டிருக்கிறது,
போக்கிடம் தெரியாமல்.
இயேசு கூறிய கடைசி கால
அழிவு ஆரம்பித்து விட்டது,
என எண்ணியபடி ஓட ஆரம்பிக்கின்றேன்.

தெளிவாக கணக்கிட முடியாத
காலங்களுக்கு அப்புறம், நான்
ஒரு மழை வாழிட கிராமத்தில் இருக்கின்றேன்.

எங்கும் பிணங்கள், சிதிலங்கள், இடிபாடுகள்-
ஒரு பெரும் சமூதாயமே ஏறக்குறைய அழிந்து போனது,
என அறிகிறேன்.
என் குடும்பமும் முற்றிலுமாக அழிந்து போனது
என அறிகிறேன்.

எனக்கு அருகே ஒரு பெண்-
என்னைப் போல் தப்பித்தவள்
அவர்கள், அவளை என் மனைவி எனக் கொள்கின்றனர்.

வானொலியில் அழிவு பற்றிய
செய்திகளை அறிவிக்கின்றனர்.
அரசாங்கத்தினர் அனைவரும்
அழிந்து போயினர்.
ஆனாலும் புதியவர்களால்
அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

எனக்கு அந்த சிறு வயது கிராம அதிகாரி
"செங்கோலன்" எனப் பெயரிடுகிறான்.
பிறந்த தேதி 10 அல்லது 19 எனக் கூறுகிறேன்.
அரசாங்க ஏடுகளில் அவற்றைப்
பதிவு செய்யும் அதிகாரி அவன்.
மிகுந்த எரிச்சலுடன் காணப்படுகிறான்.

இரவானதும், அம்மக்கள் எங்களுக்கு
உணவு கொண்டு வருகின்றனர்.
உணவைப் பார்த்ததும் எனக்கு 'சுய நினைவு' வருகிறது.
'ஆ', உணவு எனக் கத்துகிறேன்.
என் புதிய மனைவியும், மற்ற அனைவரும்
கொல்லென சிரிக்கின்றனர்.

நான் திடுக்கிட்டு விழித்து விடுகிறேன்.
பெரும் திகிலும், மனக் கிலேசமும்,
சூழ்ந்து என்னை அமிழ்த்துகின்றன.


ம.ஜோசப் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It