war
விளக்குகளை பாம்புகள்
விழுங்கிச் செல்ல
குடிசைகளை எறிகனைகள்
எரித்து தின்கிறது.
சாம்பலிரவில் சனங்களை தின்று
முடிக்கிற சிங்கம்
மண்ணை கிழறிக் குதிக்கிறது.

நெருப்புக்குடிகளில் சாம்பல் எழுகிறது.

சிலைகளென இறுகிய சனங்களின்
சொற்கள் தகிக்கிற
நெருப்பில் பற்கள் சிவக்கிறது.
ஆறாத பெருநெருப்பு எலும்புகளிலிருந்து
திரும்ப மூழ கடல் எரிகிறது.

இராணுவ தொப்பிகளில் வெக்கை நுழைகிறது.

நெருப்பு குடிசைகளை புகுந்து எரிக்கிறது
சாம்பல் கண்டெடுக்கிற
குழந்தையின் கண்களிலிருந்து
வரலாறு சாம்பலாகி உதிருகிறது.
இருக்கிற துண்டு
வானமும்
தீப்பிடித்து எரிய
சூரியன் சாம்பால் படிந்திருக்கிற
துண்டாகி விழுகிறது.

மூங்கிலாற்றில் சாம்பல் பாய்கிறது.

பாராளமன்றம் நடத்துகிறபோரில்
ஜனநாயகம் வைத்த கொடுந்தீயில்
இனம் எரிந்து கருகுகிறது.
நெருப்புக் கொள்ளி
நம்பிக்கைமீது சுடுகிறது.
பற்கள் எரிய மறுக்கிறபோது
வெள்ளை ஆடை உடுத்திருக்கிற
ஜனநாயகத்தை
ஒற்றைப் பெருஞ்சொல் கிழிக்கிறது.

மூடுண்டு எரிந்து முடிகிற குடிசைகளுடன்
சாம்பலின் நாகரிகம் தொடங்குகிறது.

துட்டகைமுனுவின் கைத்தீ
கூரைகளில் பிடித்து
நிலத்தை எரித்து வருகிறது.
கொடு வாள் மூட்டுகிற
நெருப்பு
உயிரை தின்றுபோயிருக்க
சாம்பல் வளருகிற முகங்கள்
நெருப்பை எரித்துக்கொண்டிருக்கிறது.

கொடு முடி கறித்துண்டாகிறது.

நமதினத்தை எரித்த சாம்பலால்
துட்டகைமுனுவின்
வரலாறும் வெற்றிகளும் நிறைக்கிறது.

சாம்பலாக மறுத்த வாளிகளிலிருந்து
ஒரு கோணல் தடி கொண்டு செல்லுகிற
நெருப்பில் அழிக்க முடியாத
பெருங்கனவு கனன்று கொண்டிருக்கிறது.

மூங்கிலாற்றில் எறிகணைத் தீயில் குடிசையிலிருந்த சனங்கள் எரிந்து கருகினர்.
14.02.2009 அதிகாலை 02.42.

தீபச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It