தீபச்செல்வன் - ஈழத்தில் வடக்கில் கிளிநொச்சியில் பிறந்தவர். பல்வேறு பிரதேசங்களில் அகதியாய் இடம் பெயர்ந்து வாழ்ந்தவர். பிறந்த நாளிலிருந்து இடம்பெயர்ந்து... பல்வேறு பாடசாலைகளில் படித்தவர். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்கல்வி பயின்றவர். தமிழ் விசேடப் பட்டப் படிப்பைப் படித்து விட்டு ஒன்றரை வருடங்களாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் ஊடக அலகில் வருகை விரிவுரையாளராகவும் பயிற்சி ஆசிரியராகவும் பணியாற்றி வருபவர்.

       அதே பல்கலைக்கழகத்தில் மாணவராக 2008-09 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பொறுப்பு வகித்தவர். விடுதலைப் புலிகளின் உத்தியோகப் பூர்வ தொலைக்காட்சியில் விவரணப் படத் தயாரிப்பாளராக இயங்கியவர். கற்கை நெறியை நிறைவு செய்த பிறகு முழுநேர சுயாதீன ஊடகவியலாளராகச் செயற்பட்டு வருபவர். யாழ்ப்பாணப் பத்திரிகைகளிலும் கொழும்புப் பத்திரிகைககளிலும் போருக்குப் பிந்திய வன்னி மக்களின் மீள் வாழ்வு மற்றும் நிலம் தொடர்பான பதிவுகள் எழுதி வருபவர். தமிழகத்தில் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா போன்ற சிற்றிதழ்களிலும் குமுதம், நக்கீரன் போன்ற இதழ்களிலும் எழுதிக் கொண்டிருப்பவர். எழுத்தின் வாயிலாக ஈழ மக்களின் வாழக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் இவரது இலட்சியம்.

       போருக்குப் பிறகு 2010 ஆம் ஆண்டு மே மாதம் கிளிநொச்சியில் மீள்குடியேறி தன் தாய் சகோதரியோடு வசித்து வருபவர். போர் நடந்தபோது தாயும் தங்கையும் இவரைப் பிரிந்து போர் வலையத்துக்குள்ளும் பின்னர் ஒரு வருடம் தடுப்பு முகாமிலும் வாழ்ந்தார்கள். இவர் 2007 வரை போர் வலயத்துள் வாழ்ந்து பின்னர் யாழ்ப்பாணத்தில் இராணுவ வலயத்தில் வாழ்ந்தவர்.

       அண்மையில் சென்னை வந்திருந்தபோது தீபச்செல்வன் நமக்களித்த நேர்காணல்.

தமிழீழப் போராட்டத்தில் உங்கள் பங்கு எப்படிப்பட்டது?

       ஈழத்தில் இருக்கிற ஒவ்வொருவருமே ஏதோ ஒருவகையில் ஈழப் போராட்டத்தில் பங்களித்தவர்களாக இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் நிலத்திற்காகவும் வாழ்வுக் காகவும் போராடிக் கொண்டிருக்கிற ஒரு மண்ணில் மக்களோடு மக்களாக வாழ்கிறவன் என்ற அடிப்படையில் ஈழப் போராட்டத்தில் ஈர்ப்பும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத் தோடும் அதனுடைய வெற்றியோடும் தோல்வியோடும் சேர்ந்திருப்பதே ஒரு பங்கென்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு ஈழத்துப் பொதுமகளிற்கும் இது பொருந்துகிறது. இந்தப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் என்னுடைய உடன் பிறந்த சகோதரர் பிரசன்னா (போராளிப் பெயர் வெள்ளையன்) 2001 முகமாலையில் ஏற்பட்ட சமரில் வீரச்சாவு அடைந்தார்.

       எங்கள் குடும்பத்தில் விடுதலைப் போராட்டத்தினை மிக உன்னதமாக நேசித்தவர் அவர். சிறு வயதிலிருந்தே அவருக்குப் போராட்டத்தின் மீது ஈர்ப்பு இருந்தது. அண்ணாவின் வீரமரணத்திற்குப் பிறகு நான் விடுதலைப் போராட்டத்தில் எதாவது ஒரு வகையில் பங்களிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அதன் அடிப்படையில் 2005இலிருந்து எழுத்துத் துறையிலே எமது போராட்டத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று செயற்படத் தொடங்கினேன். எழுத்துத் துறையிலே பங்கெடுத்துக் கொண்டிருந்த போது 2006ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் என்னுடைய நேர்காணல் வெளியானது. அந்த நேர்காணலைப் பார்த்துத் தமிழீழத் தேசியத் தலைவர் என்னைப் பாராட்டிக் கவனப்படுத் தியிருந்தார். வறுமை வாழ்வில் போர்ச் சூழலில் பல்கலைக்கழகத்தில் தேர்வானதையும் போராட்டம் மீதான எனது ஈர்ப்பையும் கண்டு “தீபச்செல்வன் ஒரு நல்ல மாணவர்” என்று தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

       அதன் பிறகு தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் பணியாற்ற எனக்கு வாய்ப்புக்; கிடைத்தது. 2006-07 ஆம் ஆண்டு வரை போர்ப் பகுதியில் இயங்கிய தொலைக் காட்சியில் பணியாற்றினேன். குண்டுகளுக்கும் விமானங்களுக்கும் நடுவில் கல்வி கற்கும் மாணவர்கள், அவர்களுடைய கல்வி, அவர்கள் கல்வியைத் தொடர்வதில் உள்ள.... நெருக்கடிகள், பாடசாலையின் வரலாறு போன்றவற்றைப் பதிவாக்குகிற ஆவண நிகழ்ச்சித் தயாரிப் பாளராகக்...... கடமையாற்றினேன். அதன் பிறகு 2007 இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் எனது கல்வியைத் தொடர்ந்தேன். 2008ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகப் பணியாற்றினேன். எங்கள் போராட்ட வரலாற்றில் யாழ் பல்கலைக்கழகம் பல வகையில் முக்கியப் பங்களித்தது.

       அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக மாணவர்களுக்குத் தலைமை தாங்கி அவர்களின் உணர்வை வெளிப்படுத்தும் பொறுப்பை வகிக்க வேண்டியிருந்தது. அப்பொழுது பல மாணவர்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப் பட்டிருந்தார்கள். மாணவர்கள் பொறுப்பு வகிக்க அஞ்சிய காலம். இராணுவத்தினர் மாணவர் களையும் மாணவத் தலைவர்களையும் அச்சுறுத்தினார்கள். நான் பதவி ஏற்பதற்குப் பத்து நாட்களின் முன்பாகப் புருசோத்தமன் என்ற கலைப்பீட மாணவத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். நான் பதவி ஏற்றுச் சில நாட்களில் இராணுவம் எங்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தது. எல்லோரும் பொறுப்பு வகிக்க அஞ்சியிருந்தார்கள். மறுமுனையில் வன்னியில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அந்த யுத்தத்திற்கு எதிராக எமது மாணவர்களின் குரல் ஒலிக்க வேண்டியிருந்தது. அது தடைப்படாமல் ஒலிக்க வேண்டும் என்கிற அவசியத்தில் அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தேன்.

        அக்காலத்தில் இராணுவம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து விடுத்திருந்தது. அவற்றையும் தாண்டி யுத்தம் முடியும்வரை செயற்பட்டேன். ஒரு கட்டத்தில் தனி ஒருவனாகவும் தலைமை தாங்கிச் செயற்பட்டேன். யுத்தத்தை நிறுத்தி விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டும் என்றும் தமிழர்களின் அடிப்படை இலட்சியங்களான தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை முதலியன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம். மனிதாபிமானமற்ற போரை நிறுத்தி மனிதாபிமானத்தைக் காப்பாற்ற யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று ஆலயம் ஒன்றிற்குள் உண்ணாவிரதப் போராட்டத்தை தினந் தோறும் நடத்தினோம். இராணுவத்தினரிடமிருந்து மாணவர்களைப் பாதுகாக்கவே அந்த ஆலயத்தைத் தெரிவு செய்திருந்தேன். ஒரு பிரார்த்தனை நிகழ்வாகவும் மௌனமாக எதிர்ப்பை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் நடத்தினோம். ஈழப் போராட்டத்தின் ஒவ்வொரு காலத்தின் பொழுதும் நான் ஈடுபாட்டுடன் பங்களித்து வருகிறேன். ஈழத்து மக்களின் போராட்டமிக்க இன்றைய வாழ்வில் நெருக்கடிகளையும் எதிர்ப்பையும் பதிவாக்கும் செயற்பாட்டில் இருக்கிறேன்.

போர்க்காலத்தில் களத்திற்கு அப்பால் யாழ்ப்பாணத்திலும் ஈழத்தின் மற்ற பகுதிகளிலும் மக்களின் எதிர்வினைகள் எவ்வாறெல்லாம் அமைந்தன?

       வன்னியை முழுமையான போர் வலையமாக்கிய பொழுது வெளியில் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு திருகோணமலை, மன்னார், அம்பாறை போன்ற நிலப்பகுதிகள் முழுமையான இராணுவ வலயங்களாக இருந்தன. இந்த வலயங்களில் வன்னியில் நடைபெற்ற போருக்கு எதிரான எதிர்ப்புகளை வெளிப்படுத்த முடியாதபடி ஒரு அடக்குமுறை சூழலை உருவாக்குகிற வேலையில் இராணுவம் இறங்கியிருந்தது. மக்களை அழித்து அவர்களைப் பயம் கொள்ளச் செய்வதற்காக வன்னியைப் போலவே மற்றைய நிலப் பகுதிகளிலும் கொலைகளும் அடக்குமுறைகளும் நடந்துகொண்டிருந்தன. அந்தக் காலத்திலும் மக்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார்கள் என்பதற்கு நாங்கள் இப்போதும் சாட்சியாக இருக்கிறோம். எல்லாவற்றையும் பார்த்து அஞ்சியிருந்த காலம்.

        யாழ்ப்பாணத்தில் வெளியே வரமுடியாது. எதையும் பேச முடியாது. வீடுகளில் சோதனைகள் நடக்கும். வீதிகளில் மக்களைத் தடுத்து நிறுத்தி ஆள் அடையாள அட்டை போன்றவை பரிசீலிக்கப்படும். தொலைபேசிகள், எண்கள் பரிசீலிக்கப்படும். மிகச் சாதாரணமாகப் படுகொலைகள் நடக்கும். ஆட்கள் கடத்தப்படுவார்கள். இவ்வாறான சூழலிலே குறிப்பாகப் போர் நடந்த வன்னிக்கும் ஏனைய பிரதேசங்களுக்குமான தொடர்புகளை இராணுவம் துண்டித்திருந்தது. குறிப்பாக, ஈழப் பிரச்சனை தொடர்பாக வெளிவந்த பத்திரிகைகள், இதழ்கள், தொலைக்காட்சிகள் போன்றவற்றை அரசு தடை செய்தது. வன்னியில் நடைபெறுகிற போருக்கு எதிரான கருத்துக்கள் போருக்கு வெளியிலான பிரதேசங்களில் வெளிவர முடியாதபடி முழுமையான கட்டுப்பாட்டில் கண்காணிக் கப்பட்டு அடக்கப்பட்டு வந்தன.

       வன்னிக்குள் போர் நடைபெற்று வந்தது. வன்னிக்கு வெளியில் இராணுவப் பிரதேசங்களிலும் இராணுவ அடக்குமுறைப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒட்டுமொத்த ஈழமும் ஒரே அச்சத்துடனும் பதற்றத் துடனும்தான் இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதவாகக் கடந்த காலங்களில் யார் செயல்பட்டார்களோ, தற்போது யார் செயல்படுகிறார்களோ, விடுதலைப் போராட்டத் தோடு யார் தொடர்பில் இருக்கிறார்களோ, இவ்வாறான விடயங்களைக் கவனம் செய்து நாளுக்கு நாள் சுமார் பத்துப்பேர் என்ற விகிதத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒருவராக, இருவராக என்று பல பிணங்கள் தெருக்களில் கொல்லப்பட்டுக் கிடந்ததை நான் பார்த் திருக்கிறேன். இப்படி யாழ்ப்பாணமும் பிற நிலப்பகுதிகளும் இராணுவ வலயமானது. கொலை வலயமாக அல்லது கொலை நிலமாக இருக்கும் சூழலைத்தான் படைகள் உருவாக்கி இருந்தன.

       அந்தக் காலகட்டத்தில் மக்கள் பதுங்கி இருந்தாலும் வன்னியில் நடக்கிற போரை எப்படி நிறுத்துவது என்பதிலும் கவனம் செலுத்தியே வந்தார்கள். போரின் அழிவுகளால் மனம் நொந்து போயிருந்தார்கள். அந்தப் போர் எல்லோரையுமே உலுப்பியது. சில மத நிறுவனங்கள், உதாரணமாக கிறித்துவ, இசுலாமிய மத நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், பாடசாலைகள், யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகைகள் போருக்கு எதிரான கருத்துகளைக் கடுமையாக வெளியிட்டன. போரை பதிவாக்கியிருக்கின்றன.

       நாம் மிக அஞ்சி வாழ்ந்த காலப்பகுதியில் சென்றபோது கஸ்தூரியார் வீதியில் மக்கள் சிலுவைகளையும் மெழுகு திரிகளையும் சுமந்துகொண்டு வன்னிப் பகுதி மக்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரி ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர். அந்தக் காட்சி யாழ்ப்பாணம் போல இராணுவத்தால் கட்டுண்ட வலயங்களில் மவுனமாக இருந்த மக்களின் மனத்துள் இருக்கிற உக்கிரத்தின் வெளிப்பாடாகத்தான் இருந்தது. அந்த நேரத்தில் சிலுவைகளையும் மெழுகுதிரிகளையும் ஏந்திச் சென்றது எங்களுடைய போராட்டத்தில் பெரும் குறியீடாகவே இருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த தினக்குரல், உதயன், வலம்புரி போன்ற பத்திரிக்கைகள் போரை நிறுத்தக் கோரியும் மனிதாபிமானத்தை வலியுறுத்தியும் தொடர்ந்து தலையங்கங்கள் எழுதின. அதனாலேயே அந்தப் பத்திரிகை அலுவலகங்கள் அடித்து நொருக்கப்பட்டன. பத்திரிகைகள் கொளுத்தப்பட்டன. பத்திரிகையாளர்களும் பணியாளர்களும் கொல்லப்பட்டார்கள். போருக்கு எதிராகச் செயல்பட்ட தனி மனிதர்கள் பலர் இராணுவ வலயங்களில் கொல்லப்பட்டார்கள். போருக்கு எதிரான ஆவேசமான எழுச்சியை வெளிப்படுத்த முடியாத அளவில் எங்களுடைய சூழலை இராணுவம் மிகவும் அடக்கியே வைத்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

       புலிகள் மக்களுக்காக மரணத்தை எதிர்கொள்ளுகிற போராளிகள். ஒடுக்குமறை மிக்க வாழ்க்கையுள் தள்ளப்பட்டு வாழ்ந்த சனங்களில் இருந்து வெளிப்பட்ட இயக்கம். அதனுடைய செறிந்த கொள்கைதான் மாபெரும் விடுதலை இயக்கமாக அதனைப் பரிணமிக்க வைத்தது. விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களின் பிரச்சினையை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றவர்கள். ஒழுக்கமும் விடுதலை இலட்சியமும் கொண்டவர்கள். கடுமையான உழைப்பின் மத்தியில் தியாகங்களில் போராட்டத்தை வளர்த்தவர்கள். களப் போராளிகளாகவும் சமாதானப் போராளிகளாகவும் பரிணமித்த புலிகளின் போர்க்கள ஆளமைகளும் கட்டுமானங்களும் உலகத்தின் எந்த விடுதலை இயக்கமும் கொண்டிராத பலம் மிகுந்தவை. மக்கள் இயக்கமாக, மக்களுக்கு நெருக்கமான இயக்கமாக, கட்டமைத்து வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் என்பதாலேயே இத்தகைய கட்டுமானத்தைப் புலிகளால் எட்ட முடிந்தது. ஒடுக்குமுறைக்கு எதிரான ஆவேசமும் ஒன்றிணைதலும் புலிகள் இயக்கத்தின் சாதனைகளுக்கு ஆதாரமாக இருக்கின்றன.

       தமிழ் மக்களின் உரிமைகளைச் சமாதான வழியில் பொறுவதற்காக விடுதலைப் புலிகள் சந்திரிகா அரசோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தக் கட்டத்தில் சந்திரிகா அரசு போரைத் தொடங்கி யாழ்பாணத்தைக் கைப்பற்றி கிளிநொச்சியைக் கைப்பற்றி மாங்குளம் வரை கைப்...... பற்றியிருந்தது. யுத்த வலயங்கள் எல்லாப் பக்கமும் விரிந்திருந்த காலப்பகுதி அது. விடுதலைப் புலிகள் மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்த அந்தக் காலப்பகுதியில் ஏற்பட்ட எழுச்சியின் மூலம் புலிகள் பொரும்பாலான நிலப்பகுதிகளைக் கைப்பற்றினர். அந்தக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பெரிய பரிமாணத்தைப் பெற்றிருந்தது. புலிகளின் எழுச்சி பெருகிய காலம் அது. காவல்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை, மருத்துவத்துறை, ஆவணத்துறை, திரைப் படத்துறை, வங்கித்துறை எனப் பல்வேறு துறைகளில் விடுதலைப் புலிகள்..... வளர்ச்சியடைந்திருந்தனர்.

       அதாவது தமிழீழ அரசாங்கம்தான் எங்கள் இலட்சியமாக இருந்த காரணத்தால் ஒரு நிழல் அரசாங்கத்தையே புலிகள் நடத்தி வந்தார்கள். தமிழீழ மக்களுக்கான வாழ்வை, தமிழீழத் தலைமுறைகளுக்கான எதிர் காலத்தை அப்போது விடுதலைப் புலிகள் சாத்தியமாக்கிக் காட்டினார்கள். அதுவே விடுதலைப் புலிகள் இயக்கத்தினுடைய முக்கியப் பங்காக இருந்தது. விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை அவர்களின் தொடர்ச்சியான தியாகங்கள், பயணங்கள் என அவர்கள் சுமந்த விடயங்கள் அனைத்துமே எங்கள் விடுதலை இலட்சியத்தை விட்டு விலகாமல் இருந்தன. எங்களது ஈழக் கனவை முன்னெடுத்த முக்கிய இயக்கமாக, தனித்து நின்று செயல்பட்ட இயக்கமாக, இறுதிவரை போராடும் இயக்கமாக புலிகளே இருக்கிறார்கள். புலிகள் எங்கள் மக்களின் இயக்கம்.

ஈழப் போராட்டம் முள்ளிவாய்க்கால் பேரழிவில் முடிந்ததற்குப் போர்க் காலத்திய தவறுகள் காரணமா இந்தத் தவறுகள் அதற்கு முன்பே வேர் கொண்டிருந்தனவா?

       நாங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை எல்லா விமர்சனங்களோடும் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுக்கென்;று ஒரு நாடு வேண்டும், விடுதலை வேண்டும் என்பது எங்கள் கனவு! அந்தக் கனவை புலிகளால் மட்டுமே நிறைவேற்ற முடியும். அதற்கான வலிமையும் உறுதியும் அவர்களிடம் இருக்கிறது. விடுதலைப் புலிகளை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். விமர்சனம் என்பது ஒரு இயக்கத்திற்கு அவசியமானது. ஆனால் அது இயக்கத்தைப் பலியாக்குவது, கருவருப்பது, காட்டிக் கொடுப்பது, அவதூறுகளை மட்டுமே கொண்டு கேவலமாகச் சித்திரிப்பது போன்ற தந்திர நோக்கம் கொண்டதாய் இருந்து விட முடியாது. ஆனால் பலர் அதைத்தான் செய்தார்கள். அதனால் அவர்கள் ஒரு போராட்ட இயக்கத்தையே பலியாக்கினார்கள். இன்றளவும் அதைச் செய்து கொண்டிருப்பவர்களைப் பற்றி நாம் என்ன பேசுவது?

       ஒரு விடுதலை இயக்கத்தை வளர்தெடுப்பதற்காக விமர்சிப்பதை...... வரவேற்கலாம். அதை விடுத்து வேறு ஒரு சூழலில் வேறு ஒரு கொள்கையில் அரசோடு சேர்ந்தும் விமர்சித்தார்கள். இது போராடும் இயக்கத்தை, அதற்குரிய நோக்கத்தை ஒழித்துக் கட்டுவதற்காகச் செய்யப்பட்டதே அன்றி வேறில்லை. இதனால் எமது மக்களின் கனவும் வெளிப்பாடும் பாதிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் சில தவறுகளைச் செய்தார்கள் என்று சொல்பவர்களும் புலிகளின் ஒட்டுமொத்த நடவடிக்கையையும்.... போராட்டத்தையும் தவறு என்று சொல் பவர்களும் உள்ளார்கள். இந்த அடிப்படையில் போராட்டத்தைத் தவறாகச் சித்திரிப்பதே அவர்களின் தொடர் வேலையாக இருக்கிறது. போராட்டத்தில் ஏற்பட்ட சில தவறான நிகழ்வுகளுக்குப் புலிகளை மட்டும் குற்றம் சொல்லிவிட முடியாது. தவறுகளும் துன்பியல்களும் இடம்பெறுவதற்குரிய சூழலை உருவாக்கியவர்களே அதற்குக் காரண மானவர்கள்.

       இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொலை ஈழப் போராட்டத்தின் தவறு என்று சொல்லப்படுகிறது. விடுதலைப் புலிகள் அது ஒரு துன்பியில் சம்பவம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். நான் எந்தக் கொலையையும் ஆதரிக்கவில்லை. ஆனால் இராசீவ் காந்தியைக் கொலை செய்தது சரி எனச் சொல்கிற தமிழக மக்களும் இருக்கிறார்கள், ஈழத்து மக்களும் இருக்கிறார்கள். ஏனென்றால் இராசீவ் காந்தி என்ற பிரதமர் எங்கள் தாய் மண்ணிற்கு இந்திய - இலங்கை ஒப்பந்தம் எனும் பெயரால் ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினரை அனுப்பினார். அதனால் எங்கள் குழந்தைகள் தங்கள் அப்பாக்களை இழந்தார்கள்.

       நான் என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அதிகாலையில் இந்திய இராணுவம் வீடுவீடாகச் சென்று புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் குடும்பத் தலைவர்களை இளைஞர்களை வரிசையாக அழைத்துச் செல்வார்கள். அவர்களில் பலர் உயிர் தப்பியதில்லை. அவர்களின் பலர் திரும்பி வரவில்லை. நான் சிறுவயதில் முதன்முதலாகக் கண்டது இலங்கை இராணுவத்தையல்ல, இந்திய இராணுவத்தைத்தான். நான் பள்ளி செல்லும் பொழுது எங்கள் தெருக்களில் இந்திய இராணுவத்தின் ரோந்து வாகனங்கள் தான் திரியும். இந்திய இராணுவம் எங்கள் கண் பார்வையிலேயே எத்தனைப் பேரை கடத்திக் கொண்டுபோய் கற்பழித்தார்கள். எத்தனை இளைஞர்களைக் கொன்றார்கள். யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்குள் புகுந்து புலிகள் எனச் சொல்லி வைத்திய ஊழியர்களையும் நோயாளிகளையும் கொன்றார்கள். இப்படி இந்திய இராணுவம் எங்கள் மண்ணில் இழைத்த கொடுமைகள் ஏராளம் இருக்கின்றன. எமது இனம் வாழ்வதற்காக நடத்திய போராட்டத்தை இந்திய இராணுவம் இப்படித்தான் ஒடுக்கியது. எங்கள் போராட்டத்தையும் வாழ்வையும் அழித்தார்கள். அமைதிப்படை என்ற பெயரில் அமைதியைக் கொண்டு வருவதாகச் சொல்லி அநியாயங்களையும்......... அக்கிரமங்களையும்தான்.... செய்தார்கள். இராசீவ் காந்தி கொல்லப்பட்ட விடயத்தில் அதற்கான சூழல்........ இப்படித்தான் உருவானது. இராசீவ் காந்தி என்ற ஒருவரின் ஒப்புதலோடு எடுக்கப்பட்ட தவறான முடிவால், அதாவது இலங்கை அரசோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தால் கொல்லப்பட்டவர்கள்.......... பல்லாயிரம் பேர்............. இருக்கிறார்கள். அந்தப் பலரும் இதற்கு எதிரானவர் களாகத்தான் இருப்பார்கள் எனக் கருதுகிறேன்.

       எங்கள் மண்ணிற்கு நீங்கள் வந்தால் நிறைய இடங்களில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுத் தூண்களைப் பார்ப்பீர்கள். யாழ்ப்பாண வைத்தியசாலைக்குள் வந்தால் இந்தியப் படையால் கொல்லப்பட்ட நோயாளிகள் மருத்துவர்கள் எனப் பெரிய புகைப்படப் பட்டியல் இருப்பதையே பார்க்க முடியும். வாழ்வதற்கான எங்கள் போராட்டத்தின் மீது இந்தியப் பிரதமருடைய கவனம் இப்படித்தான் செலுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்தியா உடன் கொண்டிருந்த உறவு என்பது இந்திரா காந்தி அவர்களின் தொடர்ச்சியாகத்தான் எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறாக ஈழத்தையும் ஈழத்து மக்களின் போராட்டத்தையும் மிதித் தழிக்கிற வேலையைத்தான் இராசீவ் காந்தி செய்தார்.

       ஆகவே இப்படியான ஒரு சூழலின் பின்னணியில் தான் விடுதலைப் புலிகள் மீதான தவறுகள் சித்தரிக்கப்படுகின்றன. சிலநேரம் அவர்களே தவறுகளை ஒப்புக் கொண்டிருக் கிறார்கள். ஒரு போராட்டத்தில் தவறுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. தவிர இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பது பற்றி தொடர்ந்தும் ஆதாரங்கள் வந்து கொண்டிருக் கின்றன. இறுதி யுத்தத்தை வைத்துப் போராட்டத்தையும் போராளிகளையும் தவறாகச் சித்திரிக்கிற நடவடிக் கைகளும் நடக்கின்றன. இதைப் போரின் பொழுதே அரசு உருவாக்கியது. போராளிகள் நிலைகுலைகிற அளவில் யுத்தத்தை அரசு நிகழ்த்தியது. யாருடைய குண்டுகள் இவை என்று மக்களால் உணர்ந்து கொள்ளமுடியாத யுத்தக் களத்தை படைகள் உருவாக் கியிருக்கின்றன.

       புலிகளைப் பயங்கரவாதிகளாக்க வேண்டும்; சொந்த மக்களிடத்திலேயே புலிகள் எதிர்ப்பைப் பெற வேண்டும் என்கிற நோக்கத் தோடு இறுதி யுத்தத்தை சிறிலங்கா அரசு நடத்தியது. ஈழப் போராட்டத்தின் எதிர்காலப் பின்னடைவைக் கருதி அரசு இதை உருவாக்கியது. எல்லோரும் மே மாதத்தின் நாட்களை மையமாகக் கொண்டுதான் புலிகளையும் போராட்டத்தையும் மதிப் பிடுகிறார்கள். அதற்கு முன்னரும் பின்னரும் இருக்கிற காலத்தைப் பற்றி அவர்கள் கருதுவது கிடையாது. நாம் இன்று வாழ்கிற காலத்தைப் பற்றி பலர் அறிந்திராமல் பேசிக் கொண்டிருப் பதுதான் இன்னும் வேடிக்கையையும் துக்கத்தையும் தருகிறது.

இறுதிப் போர்க்காலத்தில் நீங்கள் எங்கிருந்தீர்கள் உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் எங்கிருந்தார்கள் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

       போர் தொடங்கிய காலத்தில் வன்னியில்தான் இருந்தேன். 2007ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில்தான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றேன். நானும் அம்மாவும் தங்கையும் பதுங்கு குழிக்குள் நாள் முழுவதும் இருந்திருக்கிறோம். நான் படிப்பதற்காய் யாழ்ப்பாணம் சென்ற பொழுது யாழ்ப்பாணம் கொலைகளால் உறைந்திருந்தது. அன்று மரணங்களாலும் பொருளாதாரத் தடைகளாலும் யாழ்ப்பாணத்திற்கும் வன்னிக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. பகுங்கு குழிகளிலே விமானங்களுக்கு அஞ்சியிருக்கிற தருணங்களைத் தவிர்த்துப் பார்த்தால் தடை செய்யப்பட்ட ஒரு பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் இல்லை. பல்வேறு பொருட்கள் தடை செய்யப்பட்டிருந்தன. பெட்ரோல் இல்லை, மண்ணென்ணெய் இல்லை. விலையர்வு கடுமையாக இருந்தது. ஆனாலும் வன்னியில் எங்கள் போராளிகளின் பாதுகாப்பில் இருந்ததால் எங்களுக்கு ஒரு நிம்மதி இருந்தது. சுதந்திரம் இருந்தது. எத்தனை மணிக்கும் வெளியே போகலாம் வரலாம் என்ற சூழல் இருந்தது. யாழ்ப்பாணத்தில் எதற்கும் சுதந்திரத்தை நினைத்துப் பார்க்க முடியாது. எப்பொழுதும் எங்கும் செல்ல முடியாது மூடுண்டிருந்தது.

       2007இல் யாழ்ப்பாணத்திற்குச் செல்ல உண்மையில் பயமாக இருந்தது. தினமும் பத்துப்பேர் கொலை செய்யப்படுவார்கள். ஆனாலும் எனது கல்வியைத் தொடர வேண்டியிருந்தது. காலம் வீணடிக்கப்பட்டு விடும் என்பதால் யாழ்ப்பாணத்திற்குச் சென்றேன். பாதை மூடப்பட்டால் கப்பல் வழியாக யாழ்ப்பாணம் சென்றேன். அந்தப் பயணமே எனக்குள் பெரும் அவலத்தை உருவாக்கியது. அம்மாவையும் தங்கையையும் நண்பர்களையும் கொடும் யுத்த களத்தில் விட்டு வந்தது மனதில் பெரும் துயரைக் கொட்டியது. என்னை ஒரு கொலை நகரத்திற்கு அனுப்பிப் பிரிந்திருந்த அம்மாவும் நண்பர்களும் அச்சத்துடனே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனது நண்பர்கள் பலர் யுத்த களத்தில் கொல்லப்பட்டும் காணாமல் போயும் இருக்கிறார்கள். கொடும் யுத்த களத்தில் இருந்து அவர்களுடன் தொலைபேசியில் பேசியிருந்தேன். மரணத்தையும் அச்சத்தையும் தவிர ஒன்றையும் நாங்கள் பகிர்ந்ததில்லை. நம்பிக்கையற்றே வாழ்ந்தோம்.

       அம்மா என்னுடன் தொலைபேசியில் பேசும்போது குண்டுகளின் சத்தம் செல்லடியின் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். கொடும் யுத்த களத்தில் அவர் அனுபவித்த கொடுமைகள் சொல்லி மாளாதவை. அம்மாவையும் தங்கையையும் ஆபத்துப் பொருந்திய களத்தில் கூட, தினமும் கனவில் கண்டு நான் அதிர்ந்தெழுந்து அழுவதுண்டு. விழித்திருந்தும் அழுவேன். அவர்களுக்கு என்ன நடந்ததோ? ஏன் இப்படிக் கனவு வருகிறது என்று என் பொழுதுகள் துடித்தன. பல்கலைக்கழக விடுதியில் என்னைப் போல் பல நண்பர்கள் கனவு கண்டு துடித்து அழுவார்கள். இரவும் நித்திரையும் கனவும் எனக்கு அச்சத்தைத் தந்த காலம் அது. இறுதியில் அம்மாவும் தங்கையும் மே 16 அன்று இராணுவத்திடம் சரணடைந்து உயிர் தப்பி வந்தார்கள். யுத்தம் முடிந்து சில நாட்களின் பின்பே அவர்கள் உயிருடன் தடுப்புமுகாமில் வைக்கப்பட்டிருந்தது எனக்குத் தெரிய வந்தது.

       அப்பொழுது பல்கலைக்கழகமும் விடுதியும் மரண ஓலங்களால் நிறைந்திருந்தது. மாணவர்கள் பலரின் தாய் தந்தை சகோதரர்கள் கொல்லப்பட்டதால் ஓலங்கள் எழுந்து கொண்டிருந்தன. இன்று வரை பல நண்பர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமலிருக்கிறது. இப்பொழுதும் ஆங்காங்கே பலரைச் சந்தித்து வருகிறேன். சந்திக்கும் பொழுதுதான் அவர்கள் உயிருடன் இருப்பது தெரிகிறது. இறுதிப் போர்க் காலம் என்பது எங்கும் வாழ்வில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியிருந்தது. இறுதிப்போர் எமது இனமெல்லாம் காயத்தையும் நிலமெல்லாம் துயரத்தையும் ஏற்படுத்தியது.

****

ஐ.நா. அறிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன? அது வெளிப்படுத்தியிருக்கும் செய்திகள் எந்த அளவில் ஈழ மக்களை சென்றடைந்துள்ளன?

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சிங்கள அரசு எப்படிப் பார்க்கிறது? நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து இன்று மக்களிடையே நிலவும் கருத்து என்ன?

இன்னும் பல கேள்விகள் அடுத்த இதழில்..

Pin It