pegionஎன்னிடமிருந்த அன்பின் சொற்கள்
தீர்ந்து விட்டன
...
ஈரமற்ற உலகில் தனிமையின்
ஆயிரம் சிறகுகள் படபடக்கின்றன
...
நமக்கான நட்பு பாறைகளை
நாமே வெடி வைத்து
தகர்த்துக் கொள்கிறோம்
...
நம் நட்பின் தாவரத்தை
நாமே வென்னீர் ஊற்றி
அழிக்கிறோம்
...
நட்பின் விரிசலில் அரளிச்செடி
முளைக்கிறது
...
உன்னிடம் பேசுவதற்க்கு
வார்த்தைகள் ஏதும் இல்லை
...
நீண்ட மௌனம் பேரோலமாய்
ஒலிக்கிறது
...
உன் மீதான அக்கறையும் பரிவும்
ஏனோ இப்போது இல்லை
...
என் நேர்மையான இதயத்தை
உன் வார்த்தை அரிவாளால்
இரத்தம் சிந்த வைத்தாய்
...
எத்தனை பெருங்கோபத்துக்கு
பின்பும் பரிவுடன்
பேச முடிந்தது முன்பு
...
இப்போது பார்த்தும் பார்க்காதது போல
திரும்பிக்கொள்ள
மட்டுமே முடிகிறது
....
ஓராயிரம் நட்பை விட
என் நட்பின் உன்னதத்தை
ஒருவேளை பிரிந்த பின்னால்
உணரலாம்
....
நெஞ்சில் புரளும் வலிகளோடும்,
நேசத்தின் வன் துயரத்தோடும்
நாம் பிரிகிறோம்
...
பிரிந்துகொண்டே இருக்கிறோம்
....
பிரிந்து விடுவோம்
...
மஞ்சள் அந்தியில் நிறைந்திருக்கும்
மௌனத்தில்
பிரிவின் மலர்கள் உதிர்கின்றன
....
பார்த்துக்கொள்ளவே முடியாதபடி
பிரிந்த பிறகு ஒருநாள் இருவருமே
அவரவர் தவறுகளை நினைத்துப்பார்ப்போம்
....
நேர்மையான நட்பை இழந்த வலி அப்போது
ஒருவருக்கேனும் இருக்க கூடும்
..
ஆனால் அப்போது நம்மிருவருக்கான
அன்பின் கடவுள் இறந்திருப்பார்
....
சரவணன்.பெ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It