ஒரு
வார்த்தை பிரமாண்டம்
நிகர் செய்யவியலாத
நித்திய துயரில்
தவிக்கிறது
துரோகக் கூப்பாட்டில்
இழுத்து வந்த முட்கள்
துயர தைத்தலாக
வாழ்நாளெல்லாம்
நீதியாக குத்துமாறு.

வடிவமைத்த
முழக்க வார்த்தை
பசி போக்கவில்லை
பல காலமாக
கோஷமிட்டு
கொய்து கொடுத்த
அதிகாரத்தால்
உழைத்தவர்கள்
நொந்து ஓடாகி ஓடி
பகுத்தறிவுப் பூமியில்
பசியடக்கியதைத்தவிர.

பகுத்தறிவுப் பூமியில்
பணம் பார்க்க வந்தவர்களின்
குணம் மாறிப் போனது
வினோதமாக.
இறை நம்பிக்கையோடு
இவர்கள்
பகுத்தறிவையும் பழுதாகாமல்
பார்ப்பதை நினைத்து.

நின்று கொன்றது
வாக்குகள்
பிறழ் நாக்கில்
இனி பேசாமல்
இருப்பதற்கும்
வாடகை வாய்களுக்கு
வாய்க்கரிசி போடுவதற்கும்.

விமோசனமடையலாம்
விளைவிக்கிறவன்
வீதிகளில் இனி
மல்யுத்தம் புரிந்து
மாண்டு போகாமல்
மரியாதையாக
மதிக்கும் படியாக.

இனியொரு பொழுதும்
உச்சரிக்கவே முடியாது
ஒரே...
என்ற வார்த்தையை
ஒருபொழுதும்
தொங்கும் கத்தி
தொண்டை அறுக்குமென்பதை அறிந்து,
விடியலுக்காக வென்றவர்கள்
வீழ்ந்து துரோகமிலைக்காமல் இருந்தால்.

முடியும் தருவாயிலும்
முழக்கமிட்டான்
மூத்திரைப் பையோடு
முழு நாட்டையும்
சுற்றிய வயோதிகச் சிறுவன்.
கழிவு நீர் கழிவு நீர்தான்
தீர்த்தமெனும் பொய்யில்
தீர்வாகாதென
விதைகளை நாடெங்கும் வீசி.

ஒரு வார்த்தை.
ஒரே வார்த்தை
பிரமாண்டம் தான்
எப்பொழுதும் எங்கும்
அது சமூக நீதி
அதற்கு சான்றான
என் பூமி.

- ரவி அல்லது

Pin It