நீலம் பூத்திருக்கும்
கடல் முதுகில்
ஒரு படகாகிறேன்
காலமும் பூத்து விட்டால்
மேலெழும்பி
புதுப் பறவை ஆகுவேன்

*
பச்சை பூத்திருக்கும்
வனம் முதுகில்
அச்சம் ஆகிறேன்
மிச்சமும் வேர்த்து விட்டால்
பிறகு உச்சம் நோக்கி
புதுப் பறவை ஆகுவேன்

*
கோபத்தின் வழி
தாபத்தின் வழி
ஆங்காரத்தின் வழி
அழுகையின் வழி
அதிகாரத்தின் வழி
அடிமைத் தனத்தின் வழி
இரைச்சலின் வழி
அமைதியின் வழி
அப்பப்பா
ஒருவனுக்குள் தான்
எத்தனை எத்தனை வழி

*
மேலே செல்கையில்
உடல் இழந்து
கீழே வருகையில்
உயிர் கூடி
இடையில் எங்கோ
ஓரிடத்தில்
காற்றின் வெளி ஆகும்
இந்த ராட்டினத் துளி

*
அத்தனை மரங்களையும் நட்டது
அவர் தான் என்றார்கள்
மலர்ந்த படியே
அருகில் சென்றேன்
வனம் நிறைந்து நின்றிருந்தவர்
மௌனம் காக்க
மனம் திறந்து பேசத் தொடங்கின
மரங்கள்

*
- கவிஜி

Pin It