அதே கூட்டம்
அதே கசகசப்பு
வாழ்ந்து ஜெயிச்சவன்
வாழ்ந்து கெட்டவன்
ஒரு வெங்காயத்துக்கும்
புரிபடுவதில்லை
முண்டி அடிக்கிறார்கள்
முகம் வேர்க்க விரும்பாதோர்
காசு வழியில் சென்று விட்டார்கள்
மூச்சு பிடித்து முழி பிதுங்கி
சக தோளைச் சரித்து
உள்ளே நகர்ந்தவர்கள்
கொஞ்ச நேர கூண்டு சாத்தான்களாய்
பக்தி முத்திய படபடப்பில்
தானாக தலைகுனிந்து
உடல் கூனி விட்டது உள்ளே
கை எடுக்க மனமில்லை
கண் சிமிட்டாமல் கவனித்தேன்
சொந்த மொழி சூனியத்தில்
பழைய பல்லவி பகட்டாய்
கவனம் திருப்பினேன்
கல் பேசவில்லை
கல் பார்க்கவில்லை
கல் அசையவில்லை
காசுக்கு நீட்டிய தட்டில்
நெற்றிக் கண்கள் போட்டேன்
கண்களை வாங்கிய நூல் உதடு
சபித்திருக்கலாம்
முனகியது
உள் சென்று வந்தவனுக்கு
மீண்டும் புரிந்தது
கல் பேசவே பேசாது
அதே நேரம்
கல் காசு கேட்கவும் செய்யாது

- கவிஜி

Pin It