சாதியை முன்னிருத்தி - தினம்
சண்டைகள் செய்கிறார் வீணரிங்கு
ஊதிப்பெ ரிதுபண்ணி - பல
உன்மத்தர் வளர்க்கிறார் சாதிப்பகை
வீதியில் நடப்பதற்கும் - தடை
விதிக்கிறார் சாதிய ஆணவத்தால்
சோதியில் நந்தனைத்தான் - அன்று
சூதினில் கொன்றிட்ட பாவியர்தான்

காதலில் விழுபவரை - வெட்டிக்
காக்கைகள் தின்றிடப் போடுகிறார்
மோதலில் மக்களைத்தான் - தினம்
மூழ்கிடப் பாவியர் பண்ணுகிறார்
பாதகம் பலபுரிந்து - சாதிப்
பகைமையை வளர்க்கிறார் வேதியரும்
ஆதர வேதுமிலா - மக்கள்
அனுதினம் சாகிறார் சாதியினால்

எனன்னடா சாதியிது! - இதை
இறைவனே வகுத்தனன் என்பதுபொய்
பன்னெடுங் காலமிந்தப் - பொய்யைப்
பரப்பிட வேதபு ராணம்செய்து
தன்னகங் காரமது - கொண்ட
சனாதனம் பின்னிய சதியெனல்மெய்
இன்னமும் சாதிமுறை - மண்ணில்
இருப்பது மனிதற்குத் தலைக்குணிவு

நாங்களும் கோயிலுக்குள் - சென்றால்
நாசமாய்ப் போகுமோ கோயிலது!
தீங்குகள் நேர்ந்திடுமோ! - அங்கு
தெய்வங்கள் யாவையும் செத்திடுமோ!
ஏங்கிடும் எங்களைத்தான் - அந்த
இறைகளுப் பார்த்திட அஞ்சிடுமோ!
போங்கடா போக்கிரிகாள்! - சாதிப்
போதையில் வாழ்கிற பைத்தியங்காள்!

கோயிலின் கருவறைக்குள் - சென்று
கும்பிடத் துப்பில்லா நடுவினமே!
வாயிலில் நிற்பதற்கும் - எங்கள்
வம்சத்தைத் தடுப்பது வீரமாமோ!
வாயில்வ ருகுதுபார்! - கெட்ட
வார்த்தைகள் யாவையும் ஒன்றிணைந்து
தீயில்எ ரித்திடுவோம் - சாதித்
தீமைவ ளர்த்திடும் பூமிதனை!

- மனோந்திரா

Pin It