கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மதியால் இயங்காமல், மதத்தால் இயங்கும் சமூகத்தில், - அறிவியலை முதன்மைப்படுத்தாமல் ஆன்மிகத்தை முதன்மைப்படுத்தும் சமூகத்தில், -பகுத்தறிவை வளர்க்காமல் பக்தியை வளர்க்கும் சமூகத்தில் கோர விபத்துகள்தான் நடக்கும். பத்தடி குழியில் விழுந்த குழந்தை சுஜித், உடல் சிதைக்கப்பட்டு மீண்டும் குழிக்குள் புதைக்கப்பட்டிருக்கிறான். இதைத்தான் இந்தச் சமூகத்தால் அந்தக் குழந்தைக்குச் செய்ய முடிந்திருக்கிறது.

sujith 250தீயணைப்பு வீரர்கள், தேசிய / மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், ஐஐடி குழுவினர், தன்னார்வக் குழுவினர் எனப் பலர் முயற்சித்தும் எதுவும் செய்ய முடியவில்லை. நான்கு நாள்கள் நடந்த மீட்புப் பணிகளில் என்ன திட்டமிடப்பட்டு, அது எப்படிச் செயல்படுத்தப்பட்டது என்பதை எண்ணிப் பார்க்கும் போது, நாம் தொழில்நுட்பத்திலும், திட்டமிடலிலும் எவ்வளவு பின் தங்கியிருக்கிறோம் என்பது விளங்குகிறது.

இந்த நான்கு நாள்களிலும் நாம் நேரலையில் கண்டது இந்த நாட்டின் இயலாமையைத்தான்.

குழந்தைகளுக்குத்தான் பள்ளிகளில் தேர்வு வைப்பார்கள். இங்கு குழந்தையே பதவியில் இருப்போர்க்குத் தேர்வு வைத்திருக்கிறது. இவர்கள் எப்படித் தேர்வு எழுதினார்கள் என்பதைத்தான் இந்த நான்கு நாள்களும் நாம் நேரலையில் பார்த்தோம். எப்போதும் தேர்வைச் சரியாக எழுத முடியாமல் கோட்டை விடுபவர்கள்தான் தோற்றுப் போவார்கள். ஆனால் இங்கு நம்மவர்கள் கோட்டை விட்ட ஒவ்வொரு இடத்திலும் குழந்தைதான் குழிக்குள் போனது. இறுதியில் குழந்தையைக் கோட்டை விட்டோம்.

பொதுவாக, தேர்வில் யாரும் அடுத்தவர்களைப் பார்த்து எழுத அனுமதியில்லை. ஆனால் இங்குதான் அதுபோன்ற தடைகள் இல்லையே. அடுத்தவர்களை (அடுத்த நாட்டவர்களைப் பார்த்தாவது தேர்வில் இவர்கள் வெற்றி பெற்றிருக்கக் கூடாதா? நேரலையின் மூலம் மீட்புப் பணிகளைப் பார்த்த எல்லோரும் அதைத்தானே எதிர்பார்த்தோம்.

நாம் குழந்தைக்கு நிலவைக் காட்டினோம். அது இன்று நிலத்தைக் காட்டிச் சென்றிருக்கிறது. விண்ணைப் பார்க்கும் தொழில்நுட்பம் இனி மண்ணைப் பார்க்கட்டும்.

இந்தத் துன்பியல் நிகழ்வு, நாம் இனி எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறது. இனியாவது இங்குள்ள ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சட்டங்களை மதித்து, நீதிமன்ற ஆணைகளை மதித்துச் சரியாகச் செயல்பட வேண்டும். பேரிடர் மீட்புக்குழுவினர் தொழில்நுட்பக் கருவிகளாலும், தொழில்நுட்பப் பயிற்சிகளாலும் பலப்படுத்தப்பட வேண்டும், பரவலாக்கப்பட வேண்டும்.

இங்குள்ள அமைச்சரின் உறவினருக்குக் கிடைத்த இராணுவ ஹெலிகாப்டர், சாமானிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும். குறைந்தபட்சம் இது போன்ற நிகழ்வுகளின் போதாவது மீட்புக் குழுவினர் விரைந்து செல்ல இராணுவ ஹெலிகாப்டர் தயாராக இருக்க வேண்டும். மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு இராணுவம் அனுப்பப்படுகிறது. ஆனால் மக்களைக் காக்க இராணுவம் அனுப்பப்படுவதில்லை.

குழந்தையைக் காப்பாற்ற இங்குள்ளவர்களால் என்ன செய்ய முடிந்தது? அவர்களிடம் என்ன இருக்கிறது? இங்குள்ள மக்களால் பிரார்த்தனைதான் செய்ய முடிந்தது, தெருவுக்குத் தெரு கோவில்களும் வீட்டுக்கு வீடு பூஜை அறைகளும்தான் இருக்கின்றன. அறியாமை இருளில் இருக்கும் இந்த மக்களால் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? நமக்கு வேண்டியது தெருவுக்குத் தெரு கோவில்கள் அன்று. நூலகங்களும், முதலுதவி மையங்களும்தான்.

“மரணத்திலிருந்து பாடம் கற்கும் சமூகம் மடமைச் சமூகம்” என்று கவிப்பேரரசு வைரமுத்து சொன்னார். இது மடமைச் சமூகம் என்பதை உணர வைக்கத்தான் ஊடகங்களின் வெளிச்சத்தையெல்லாம் தன்மீது ஈர்த்து, இருளை நமக்குக் காட்டிச் சென்றிருக்கிறான் போலும் குழந்தை சுஜித்.

சமூகத்திடம் இருந்து பாடம் கற்க வேண்டிய குழந்தை, சமூகத்திற்குப் பாடம் கற்பித்துச் சென்றிருக்கிறது. இன்று ஆழ்துளைக் கிணறுகள் அடைக்கப்படுகின்றன. இனி அடைக்கப்பட்டிருக்கும் நம் அறிவுக் கண் திறக்கப்படட்டும்.