பிலிப்பைன்ஸ் அதிபர் அண்மையில் ஒரு துணிச்சலான கேள்வியைக் கேட்டுள்ளார். “கடவுளை எனக்கு முன்னால் கொண்டு வந்து காட்டுங்கள் அல்லது கடவுளுடன் செல்பியாவது எடுத்துக்காட் டுங்கள். உடனடியாக நான் கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கைக் கொண்டு பதவி விலகி விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

பாலினீஸிய பெருந்தீவுகளை ஒருங்கிணைத்து உருவான நாடு பிலிப்பைன்ஸ். பசிபிக் கடல் தொழில் மற்றும் குறுகியகாலப் பயிர் விவசாயம் என்று தொழில் செய்துவரும் பிலிப்பைன்ஸ் மக்கள் காலனி ஆதிக்கத்திற்கு முன்பு அவர்களுக்கென்று இயற்கையான பல வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தனர். கிழக்காசிய நாடுகளில் பெரிதும் பரவி இருந்த புத்த மதமும் அங்கு ஒரு மதமாக இருந்தது. இவர்களின் வழிபாட்டு முறைகள் அனைத்தும் மூடநம்பிக்கையற்றக் கொள்கை வடிவிலான நம்பிக்கையான ஒன்றாகவே இருந்தது.

philiphines presidentகாலனி ஆதிக்கம், அய்ரோப்பியர்களின் வருகை தொடர்ந்ததால் கிறித்துவம் மற்றும் இசுலாம் பரவியது. இருப்பினும் அந்த மதங்கள் மற்ற நாடுகளில் ஆழமாக இருக்கும் நிலையில் கடவுள் மற்றும் கட்டுக்கதைகள் தொடர்பான நம்பிக்கைகள் இன்றி ஒரு வாழ்வியல் நெறிகளாகவே பிலிப்பைன்ஸ் மக்கள் அதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

அங்கு இருந்த பெரும்பாலான அதிபர்கள் மதச்சார்பற்ற தன்மையையே கடைப்பிடித்து வந்தனர். 2016ஆம் ஆண்டு பதவியேற்ற தற்போதைய அதிபர் ரோட்ரிகோ டுட்ர்டே சமரசமில்லாத பகுத்தறிவுவாதி மற்றும் கடவுள் மறுப்பாளராவார். இவர் வழக்குரைஞராக இருந்து பிறகு அரசியலுக்கு வந்தவர். மேலும் உலக வரலாற்றில் அதிக ஆண்டுகள் ஒரே நகரத்தில் மேயராக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு. பிலிப்பைன்ஸ் அரசமைப்புச் சட்டத்தின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேயர் தேர்தல்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

நீண்ட ஆண்டுகள் மேயராக இருந்தபோதும் அவர் தன்னுடைய மதச்சார்பற்றக் கொள்கையை தேர்தல் வெற்றிக்காக விட்டுக் கொடுக்கவில்லை. இவரது கண்டிப்பான பகுத்தறிவுக் கொள்கை காரணமாக இவர் மேலை நாடுகள் மற்றும் மதம் சார்ந்த அமைப்புகளின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். ஆனாலும் பிலிப்பைன்ஸ் மக்கள் இவரைப் பெரிதும் விரும்பிய காரணத்தால் அரசியல் குழப்பம் ஏற்படுத்த வழியின்றி எதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர்.

இவர் மூடநம்பிக்கை மற்றும் மதம் சார்ந்த கொடுந்துன்புறுத்தல், செயல்பாடுகளுக்கு எதிரான கடுமையான கொள்கைகளை உடையவர். இப்படிப்பட்ட தன்மையை “சூன்ய சகிப்பு” என்று கூறுவர். ஒரு நாட்டுத் தலைவருக்கு இக்கொள்கைகள் இருப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். இவர் மேயர் ஆவதற்கு முன்பு “டிகோங் நகரம் பிலிப்பைன்ஸ் கொலைகளின் நகரம்” என்று அழைக்கப்பட்டது. இவர் மேயர் ஆன பிறகு எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக “தென்கிழக்கு ஆசியாவின் மிகவும் அமைதியான நகரம்” என்ற புகழ்நிலையை எட்டியது.

இவரை பிலிப்பைன்ஸ் அதிபராக போட்டியிட இவர் சார்ந்திருந்த பிலிப்பைன்ஸ் புரட்சிகர குடியரசுக் கட்சி பலமுறை வேண்டுகோள் விடுத்தும், தனது தனது மதச்சார்பற்ற கொள்கைக்கு அதிபர் பதவி சரிப்பட்டு வராது, மக்களிடம் செல்வதற்காக என்னுடைய கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும் என்று கூறி மறுத்துவிட்டார். இருப்பினும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க 21.11.2015 அதிபர் பதவிக்கு போட்டியிட இவரது பெயர் முன்மொழியப்பட்டது. பிறகு 2016ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு பிலிப்பைன்ஸ் அதிபரானார்.

இவர் அதிபர் ஆகும் முன்பும், அதிபர் ஆகிய பிறகும் இவரது பல்வேறு கருத்துகளால் உலக அளவில் பிரபலமாகி இருந்தார். முக்கியமாக, “போராளிக் குழுக்களுக்கு எதிராக நடந்த ராணுவ நடவடிக்கையை நிறுத்தி, நீங்களாக மக்களின் பாதைக்குத் திரும்பி விடுங்கள்”என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் போராளிக் குழுக்கள் அவரது வேண்டுகோளை ஏற்க மறுத்த பிறகு, “இராணு வத்தினர் போராளிகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களது பிறப்புறுப்புகளைச் சிதைத்துவிடுங்கள்'' என்று கூறினார். இது மனித உரிமை ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது,

கடந்த ஆண்டு பிலிப்பைன்சில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது, “கிறித்துவ தேவாலயங்கள் பிரார்த்தனை என்ற பெயரில் நேரத்தை வீணடிக்காமல், மழையில் இருந்து தப்பிக்க நல்ல வழிவகைகளைச் சொல்லித்தர வேண்டும்” என்று கூறியிருந்தார். அதிலிருந்தே கிறித்துவ அமைப்புகள் இவர்மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்தன. ஜூலை 7 ஆம் தேதி நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர், “என்னை மத நம்பிக்கையுள்ளவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. நான் கடவுளை கடுமையாக விமர்சிக்கிறேன்” என்றார் அவர்.

Pin It