சென்னை தேனாம்பேட்டை “அன்பகத்தில்” 09/12/2018 அன்று நடைபெற்ற திராவிடச்சிறகுகள் கருத்தரங்கில் வழக்கறிஞர் அ. அருள்மொழி அவர்கள் பழமையும் பகுத்தறிவும் என்னும் தலைப்பில் ஆற்றிய உரை...

‘திராவிடச் சிறகுகள்’ தோழர்களுக்கு வணக்கம்.

எனக்குப் பிறகு பேராசிரியர் அண்ணன் சுப.வீ. அவர்கள் மிகச் சிறந்த ஒரு வகுப்பை நடத்த இருக்கிறார்கள், வரவேற்புரை நிகழ்த்திய தோழர் கார்த்திகேயன் அவர்களும், இணைப்புரையாற்றிய தோழர் சூரியா அவர்களும், எங்களைப் பற்றிப் பெருமையாக அறிமுகப்படுத்திய நல்லெண்ணத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர் சூரியா அவர்கள் சொன்னதை கேட்ட பொழுது எனக்கே பயமாக தோன்றியது, அய்யய்யோ இவ்வளவு பேசியிருக்கிறோமா என்று. ஏனெனில் பேசிய ஒவ்வொரு சொல்லிற்கும் நாம் பொறுப்பானவர்கள், ஏதோ ஒன்றை பேசிவிட்டு நாளை மாற்றிக்கொள்கிறவர்கள் அல்ல. நம்முடைய கருத்து, கொள்கை, நிலைப்பாடு மாறலாம். ஆனால் நாம் சொல்கின்ற சொல்லிற்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இருக்கக்கூடாது. அது நமது நேர்மையை கேள்விக்குள்ளாக்கி விடும். என்கிற பொறுப்புணர்ச்சிதான் பகுத்தறிவாளருக்கு அடையாளம். என்னைப் பற்றி இவ்வளவு நீண்ட ஒரு தொகுப்பைச் சொல்லியிருப்பது எனக்கே வியப்பைக் கொடுத்திருக்கிறது. அதற்காக மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

arulmozhi 400என்ன தலைப்பில் பேசப் போகிறீர்கள் என்று தோழர் கார்த்திகேயன் அவர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார், எந்த தலைப்பை சொல்வது? நாம் பேசிக்கொண்டிருக்கின்ற செய்திகள் அடிப்படையில் மூன்றே மூன்று தான். சமத்துவம், சுயமரியாதை, சமநீதி. இந்த மூன்றுக்குள் தான் அனைத்தும் அடங்குகின்றன, இதில் எந்த தலைப்பை எடுத்துக்கொண்டு நாம் பேசுவது என்று தொடர்ச்சியாக இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து அந்த கேள்வி வந்து கொண்டே இருந்தது, அப்பொழுது தான் நாம் நீண்ட நாட்களாக நிதானமாகப் பேச வேண்டிய ஒரு பொருள் பேசப்படாமலேயே இருக்கிறது, அது தான் இந்த ‘பழமை' என்பதாகும். அதை பகுத்தறிவோடு நாம் எப்படி அணுகுவது என்பதை இப்படி ஒரு கூட்டத்தில் நம்முடைய தோழர்களோடு நிதானமாக, கலந்துரையாடிப் பேச வேண்டும் என்று விரும்பினேன், அதனால் இந்தத் தலைப்பை நானே விரும்பி அவரிடம் சொன்னேன்.

அதைப் போல என்னுடைய சிறிய வேண்டுகோளாக ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எங்களுக்கு முன்னால் இரண்டு புதிய இளம் பேச்சாளர்களை பேச வையுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். பேச விரும்புகிறவர்களைக் கண்டு அவர்கள் பேசக்கூடிய தலைப்பைக் கொடுத்து கண்டிப்பாக அவர்களைப் பேச வைக்க வேண்டும். ஏனென்றால் புதியவர்கள் பேச ஆரம்பித்தால் தான் நாங்கள் வேறு வேலையை செய்ய முடியும், எங்கள் நேரத்தை குறைத்துக்கொண்டு அவர்கள் நேரம் அதிகமாவது தான் நம்முடைய வளர்ச்சி.

 அதன் படி தோழர் பாலா அவர்கள் மூன்று இடத்தை எடுத்து அதிகாரம் என்றால் என்ன என்று மிகச் சுருக்கமாக ஆட்சி, அரசமைப்பு, நீதித்துறை ஆகிய மூன்றிலும் அதிகாரம் வழங்கப்பட்டதா? இல்லையா? என்கிற கேள்வியோடு தொடங்கினார்.

அதை நாம் இன்னும் கொஞ்சம் நீட்டித்தால் உண்மையிலேயே இன்றைக்கு நாம் பேசவேண்டிய பொருள் அது, அதிகாரத்தில் பங்கீடா? என்று கேட்டால் உண்மையில் அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை, இவர்கள் எதை அதிகாரம் என்று சொல்கிறார்களோ அதில் பங்கு வழங்கப்பட்டிருக்கிறது.

 ஆனால் நடப்பது என்னவென்றால் சமூதாயத்திலே நடக்க வேண்டிய மாற்றம் இன்னும் நடக்காமல் இருக்கிறது, பதவிக்கு வந்தாலும், பொருளாதாரச்சூழ்நிலை மாறினாலும், அதிகாரத்திலே இடம்பெற்றாலும், சமுதாயத்திலே பார்வை என்னவாக இருக்கிறது?

சமுதாயத்திலே தீண்டாமையும் சாதியும் ஒழிகிறதா? அதை மாற்றுவதற்கு நாம் என்ன செய்கிறோம், என்ன செயல்திட்டத்தை வரைய வேண்டியிருக்கிறது, இதைத் தான் நாம் அதிகமாகப் பேச வேண்டி இருக்கிறது. அதை நோக்கி நம்முடைய சிந்தனையை குவிக்க வேண்டியதற்கான தொடக்கப் புள்ளியாக தோழர் பாலா அவர்கள் வைத்த அந்த புள்ளி விவரங்கள் நமக்கு ஒரு பெரிய வலிமையைக் கூட்டும்.

அதற்கடுத்து தங்கை தேவி அவர்கள் பேச நினைத்ததைப் பேசி விட்டார். அடுத்து வரும் நிகழ்ச்சிகளில் ஒரு பொருளை எடுத்து இன்னும் அதிகமாகப் படித்துப் பேசக் கூடிய ஆற்றலைப் பெற வேண்டும் என எதிர்பார்த்து அவருக்கும் என்பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்றைக்கு பழமை என்பதை நாம் ஏன் யோசிக்க வேண்டும்? எது பழமையானது?

பழமையானதைப் பற்றி ஆராய்ச்சிப் பூர்வமான கேள்விகளுக்குள் போவது ஒரு பக்கம். ஒரு மதம் மிக பழமையானது என்பதைப் பற்றி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் சொன்ன விளக்கம் மிகவும் முக்கியம். ஒரு மதம் எவ்வளவு காலமானது, எவ்வளவு பழமையானது, எதில் இருந்து எப்படி தப்பித்து பிழைத்து இருக்கிறது என்பதைப் பொறுத்து அதனுடைய சிறப்பு அமைவதில்லை. ஒரு நாணலைப் போல தழைந்து, மறைந்து, ஒளிந்து, தப்பி வாழ்வதில் பொருள் இல்லை, அதற்கு பதிலாக நீங்கள் சுயமரியாதையோடு எதிர்த்து நின்று அழிந்து போவதே மேல்.

காலம் மிக சுருக்கமாக இருந்தாலும் கூட அது வாழ்க்கையாக இருக்க வேண்டும். மிக நீண்ட நாள் வாழ்கிறது என்கிற காரணத்தினால் எந்த நச்சு விலங்குகளுக்கும் மரியாதை கிடையாது. ஆகவே காலம் என்பது மட்டுமே ஒரு கருத்திற்கான மரியாதையைச் சேர்த்துவிடாது.

அடுத்து, தந்தை பெரியார் அவர்கள் பழமையானது என்பதைப் பற்றி ஒவ்வொரு இடத்திலும் வைக்கிற விமர்சனங்களை நாம் தேடித் தேடி தெரிந்துகொள்ள வேண்டும். அதில் தனக்கு உடன்பாடானது என்று புத்தர் அவர்களின் சொற்றொடர்களைத் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். புத்தரைப் படித்துவிட்டு பேசமாட்டார். இந்த கருத்தைத் தான் புத்தரும் சொல்லியிருக்கிறார் என்று சொல்வார். இது எனது கருத்து இந்தக் கருத்தை தான் புத்தரும் சொல்லியிருக்கிறார் என்பார்.

யாரையும் பெரியார் மறைத்தது கிடையாது, வள்ளலாரை முன் வைக்கின்ற பெரியார் அவருக்கு முன்னால் யாரையும் சொல்லாமல் விடுவார் என்று சொன்னால் ஒருவேளை அவர்களின் கருத்தில் பெரியாருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அவர்களைக் குறை சொல்ல மனமில்லாமலும் இருந்திருக்கலாம். அப்படி சில பேரை வேண்டாமென்று விட்டுவிட்டாரா என்பது தெரியவில்லை.ஆனால் யாரையும் அவர் குறிப்பிட்டுச் சொல்லும் பொழுது தன் கருத்தை எடுத்துக்காட்டி இதைத்தான் வள்ளுவனும் சொல்லியிருக்கிறான். இதைத் தான் இத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் புத்தனும் சொன்னான் என்பார்.

அப்படிப்பட்ட புத்தருடைய எடுத்துக்காட்டு இது. ஒரு கருத்து எவ்வளவு பழமையானது என்பதற்காகவோ, அது யாரால் சொல்லப்பட்டது என்பதற்காகவோ, அதை சொன்னவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதற்காகவோ அதை நம்பாதே, அத்தகைய காரணங்களுக்காக ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை, அதனை உனது அறிவிற்கு உட்படுத்தி, அது உனக்கும் உனது வாழ்க்கைக்கும், காலத்திற்கும், உன்னுடைய மேம்பாட்டிற்கும் எந்த அளவிற்கு பொறுத்தமானது என்பதைக் கொண்டு தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்கிற விளக்கத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் புத்தர் சொல்லியிருக்கிறார்.

இப்பொழுது நாம் அதை ஏன் எடுத்துப்பேச வேண்டி இருக்கிறது?

ஏன் என்றால் இன்றைய காலகட்டம்தான் குப்தர் காலத்திற்குப் பின் பொறுத்தமான காலம், ரினெய்சான்ஸ் எனும் (Renaissance) மறுமலர்ச்சியின் காலம்.

மறுமலர்ச்சி என்று சொன்னாலே அது யாருடைய மறுமலர்ச்சி என பார்க்க வேண்டும். எது ஒன்று அழிந்து கொண்டிருக்கிறதோ அதற்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பது தான் மறுமலர்ச்சி. அந்த அடிப்படையில் இந்தியாவில் சீர்திருத்தக்காரர்களால் ஒடுக்கப்பட்டு தேய்ந்து கொண்டிருந்த சனாதான வெறி இப்பொழுது மறுமலர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.

இந்து மதம் மறுமலர்ச்சி கொள்கிறதென்றால் ஏற்க வேண்டாம், இந்து மத நம்பிக்கை மறுமலர்ச்சி கொள்கிறது என்றாலும் அது பொய். எது மறுமலர்ச்சி கொள்கிறது என்றால் சனாதான வெறி மறுமலர்ச்சி அடைகிறது.இந்த மறுமலர்ச்சிக்கு அவர்களுக்கு எது அணையாக இருக்கிறது, எது காப்பாக இருக்கிறது என்றால், இந்தியாவில் இருக்கக்கூடிய ஆட்சி காப்பாற்றுகிறது. அவர்களுக்குத் துணையாக இருக்கிறது. அதற்கான பொருளாதார வளம் அவர்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கிடைக்கிறது. அதற்கு எந்தவித வரி, வரிவிலக்கு என்பதெல்லாம் கிடையாது. என்.ஜி.ஓ.க்களுக்கு வருகின்ற பணம் அதிகமாக வருவது ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்புகளுக்கு தான் அதிகமாக வருகிறது. அவ்வளவு பணமும் இங்கு பிள்ளையாராக மாறும், ஊர்வலமாக நடக்கும்.

ஆனால் இது எல்லாவற்றையும் எது காப்பாற்றும் என்று சொன்னால், இவை யாவும் இப்பொழுது வந்தது கிடையாது. இந்த நாட்டில் இருந்தது மறைத்து வைக்கப்பட்டது. நாங்கள் இப்பொழுது மீண்டும் பழையதை பேசுகிறோம். இது தான் இந்த நாட்டின் பூர்வ வரலாறு என்று பேச ஆரம்பிக்கப்படுகிறது, அதுதான் காப்பாற்றுகிறது.

பழமை என்று சொல்லிக்கொண்டு எந்த டி.வி.யையும் தொட முடியாது, சன் டி.வி. உட்பட, அந்த டி.வி. தான் எல்லாவற்றிற்கும் முன்னோடி, என்பது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. சகோதரர்கள் சிந்திக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் முன்னோடியாக ஒரு முதல் தொலைக்காட்சியாக நமக்கு கிடைத்தது. ஆனால் அதில் பிள்ளையாரிலிருந்து தொடங்கி இராமாயணம், மகாபாரதம், சொப்பன சுந்தரிகள் வரை வந்திருக்கிறது. இது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் வேதனையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. மற்ற தொலைக்காட்சிகளில் பார்த்தால் ராதாகிருஷ்ணன் வரைக்கும் வந்து விட்டார்கள், ராதா கிருஷ்ணனை உண்மையிலேயே பழமை என்று எடுத்துப் பேச ஆரம்பித்தால் ராதா யார்? கிருஷ்ணன் யார்? ராதை கிருஷ்ணனுடைய மனைவியா? காதலியா? ராதைக்கு திருமணம் நடந்ததா? என்னும் கதையை அவர்களே எடுத்து சொல்ல வேண்டும். இன்றைக்கு அந்தம்மா ஓடிவிட்டார்கள். குழந்தையைக் கொன்று விட்டார். இதெல்லாம் கள்ளக் காதல் என்று சொல்கிறோம். கணவனை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் காதல் கொண்டால் அதற்கு பெயர் கள்ளக் காதல். இதெல்லாம் அன்று முதல் இருந்து வருகிறது, இதல்லாம் தான் பழமை.

பழமை என்பது என்னவென்றால் பிளாஸ்டிக் சர்ஜரி என்பது மிகப் பெரிய அறுவை சிகிச்சை, சீனியர் சைன்டிஸ்டான நமது பிரதமர் சொல்கிறார் நாங்கள் புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி வைத்திருந்தோம். அந்த பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பிள்ளையார் தான் உதாரணம். சரியாகச் சொன்னால் அது ஆர்கன் ரீ-பிலேஸ்மென்ட் (renaissance), நாம் நினைக்கலாம் ஆர்கன் என்பது உள் உறுப்பு ஆனால், இவர்கள் தலையை மூளையோடு சேர்த்து வைத்து சர்ஜரி செய்திருக்கிறார்கள்.

சில தோழர்கள் விவாதத்தில் சொல்வார்கள், நீங்கள் இருப்பதை நம்புகிறீர்களா இல்லை என்பீர்களா? என்பார்கள், பெரியார் இருப்பதை நம்புகிறீர்களா? பெரியார் பிறந்தாரா இல்லையா? அது மாதிரி தான் ராமர் பிறந்தாரா இல்லையா என்பது, அதை ஏன் நீங்கள் நம்பக் கூடாது, சரி நம்பலாம் நீங்கள் பெரியாரைப் பற்றி விமர்சனம் செய்யுங்கள், பேசுங்கள், அதைப் போலவே ராமரைப் பற்றி நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

நீங்கள் சொல்லும் பழமையை இலக்கியம் என்றோ காவியம் என்றோ சொன்னால் பிரச்சனை இல்லை. ஆனால் அதை வரலாறு என்று சொல்லும் பொழுது தான் கேள்வி கேட்கிறோம். இலக்கியம் என்றால் கூட இலக்கியச் சுவைக்காக சொல்லப்பட்டது என்றால் அதில் பிரச்சனை இல்லை. நீ அதைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் பொழுது தான் நான் கேள்வி கேட்கிறேன். இது ஒரு வகையான பழமை.

இன்னொரு வகையான பழமை இருக்கிறது, நாங்கள் தண்ணீர் குடித்ததே சையின்ஸ் தான் என்பது. வேப்ப மரத்தை சாமி என்று பார்த்த பொழுது மரங்கள் பாதுகாக்கப்பட்டன. பகுத்தறிவு வந்ததால் மரத்தை வெட்டி விட்டோம் என்பது, அட அறிவாளிகளே, பகுத்தறிவாதிகள் யாராவது உன்னை மரத்தை வெட்டச் சொன்னார்களா. எல்லோரும் இயற்கையை காப்பாற்ற தான் சொன்னார்கள். வேப்பமரம் மிகவும் நல்லது. அதுஅரிய மருந்து இருக்கிறது. நல்ல காற்று இருக்கிறது என்று சொல்லியிருந்தால் உங்கள் பரம்பரை அதைக் காப்பாற்றியிருக்கும். அதை விட்டு அதில் பேய் இருக்கிறது. ராத்திரியில் அந்தப் பக்கமாகச் சென்றால் ஒரு சாவி அல்லது கறித் துண்டை எடுத்துக்கொண்டு போ என்று சொல்வார்கள். இவையெல்லாம் மன ரீதியான ஒரு அச்சத்தை உண்டாக்குவது.

மஞ்சள் மருத்துவத்திற்கு உதவும், மஞ்சள் பயனுள்ளது, கிருமி நாசினி, ஆனால் மஞ்சள் பூசினால் முகத்தில் முடி முளைக்காது என்று சொல்லப்பட்டது. ஆண்கள் மஞ்சள் பூசினால் மீசை முளைக்காது என்று யாராவது சொன்னார்களா? ஆனால் புருவம் மட்டும் முளைக்குமா? ஏன் ஆண் குழந்தைகளுக்கு மஞ்சள் பூசவில்லை, கிருமி நாசினி என்றால் ஏன் ஆண் குழந்தைகளுக்கு பூசவில்லை. பெண் குழந்தைகளுக்கு பூசிக் கொண்டே வந்தீர்கள். சரி அதுவும் கணவன் இறந்தவுடன் பூசக்கூடாது. என்றால் கணவன் இறந்த பின் அப்பெண்ணிற்கு கிருமி வரலாமா?

மருந்து என்றால் மருந்து என சொல். மூட நம்பிக்கை என்றால் மூட நம்பிக்கை என்று சொல். நம்பிக்கை என்றால் நம்பிக்கை என்று சொல். அது சரியா தப்பா என்பதை அறிவினால் யோசிப்போம்.

எல்லா நம்பிக்கையையும் மூடநம்பிக்கை என்று சொல்லவில்லை. அது ஒரு நம்பிக்கையா, மருந்தா, அறிவா என்பதை விளக்கிச் சொல்ல வேண்டும். சாணியில் என்னென்ன சயின்ஸ் இருக்கு. அதனால் சாணியை கரைத்து தெளித்தோம். இப்பொழுது விட்டுவிட்டோம், என்பார்கள், இன்று மாட்டிற்கு என்ன உணவு போடுகிறோம், புல் போடுகிறோமா? போடுவதற்கு புல் இருக்கிறதா? இன்னொன்று சாணி தெளிப்பதற்கு மண் சாலையில் குடியிருக்கிறோமா? இப்பொழுது மாடு போடும் சாணியை எடுத்து தெளித்து பாருங்கள், தெரியும்.

கிராம சீர்திருத்தம் பற்றி அய்யா சொன்னார் அதை படித்து காட்டுகிறேன், ஏனென்றால் அய்யா அவர்களின் பேச்சு மனப்பாடம் செய்து கொண்டு பேச முடியாது, ஏனென்றால், நடுவில் ஒரு கமா போட்டிருப்பார், அவரைப் பார்த்தால் கால் புள்ளிகளும், அரைப் புள்ளிகளும் பயந்து ஓடும் என்று கல்கி எழுதியுள்ளார்.

அய்யா சொல்கிறார்.

கிராமத்தைக் காப்பாற்றுவது எதற்காக?

"கிராம புணர் உத்திரானம் என்பது கிராமங்களின் பழைய நிலையை மறுபடியும் புதுப்பிப்பது என்கிற அர்த்தத்தில் வேலை செய்வதானால் இனி இந்த தேசத்தில் கிராமம் என்பதே இல்லாமல் போய்விடும், அந்தப்படி இல்லாமல் போவதே மேல், இருக்கும்படி செய்யவேண்டுமானால் கிராமத்திற்குள் தன்மைகளைப் புகுத்த வேண்டும்.

நமது கிராமங்களைப் பற்றி மேயோ சொல்லியிருக்கும் நிலையில் தான் நமது கிராமங்கள் இருக்கின்றன, நமது அரசியல் துறையில் பாடுபடும் பெரியார் ஒருவர் சமீபத்தில் ஒரு கிராமத்தைப் பார்த்து, இந்த கிராமத்தை பார்க்கும் பொழுது எனக்கு பழைய கால கிராமத்தின் காட்சி தென்படுகிறது, நானும் கிராமவாசி என்பதால் பழைய கிராமக் காட்சியை கண்டு நெகிழ்ச்சி அடைகிறேன் எனபதாக பேசினாராம், பழைய மாதிரி கிராமங்கள் இருப்பதானால் கிராமங்கள் ஒழிந்தே போய்விடட்டும் யாரும் கிராமங்களில் இல்லாமல் எல்லோரும் பட்டணங்களுக்கே போய்விடட்டும்"

கிராமங்களை பட்டணம் ஆக்க வேண்டும், என்று மேலும் அய்யா சொன்னார்.

“என்ன வழி வைத்திருக்கிறீர்கள், என்ன செயல்திட்டம், பட்டணவாசிகளின் வாழ்வு முழுவதும் கிராமவாசிகளின் உழைப்பேயானாதால், கிராமவாசிகளே தான் உலக போகியங்களை அடைய உரியவர்கள் ஆவார்கள்.

கிராம வாழ்க்கை ஒரு விதம், நகர வாழ்க்கை ஒரு விதம் என்பது பித்தலாட்ட காரியமேயாகும்.

கிராமவாசிகளின் வாழ்க்கையைப் பார்த்து கண்ணீர் வடிக்கிற பட்டணவாசிகளான முதலாளியும் வக்கீலும் உத்தியோகஸ்தரும் பார்ப்பனரும் பித்தலாட்டக்காரர்களே ஆகும். அவர்களது வஞ்சகமும் கெட்ட எண்ணமும் தான் கிராமவாசிகளான பெரும்பான்மை மக்களை கால்நடைகளாகவே வைத்திருக்கிறது.

ஆகவே, ஒவ்வொரு விசயத்திலும் கவலைகொண்டு பகுத்தறிவை பயன்படுத்தி தக்க முறையில் சேவை செய்ய வேண்டுகிறேன்,"

என்று சென்னிமலையில் வாலிபர் சங்க ஆண்டு விழாவில் 1931-இல் பேசியுள்ளார்.

இன்று கிராம வாழ்க்கையைப் பற்றி அதிகமாக பெருமையாகப் பேசி வருவதற்கு காரணம் அது காப்பாற்றி வருகிற பேதங்கள் நிறைந்த வாழ்க்கை முறை. அதோடு இணைக்கப்பட்டிருக்கிற ஜாதி, அந்த ஜாதிய அடையாளம், அதில் இவர்கள் காண்கிற பெருமை.

இந்த ஜாதி ஏன் இவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்று பார்த்தால் ஜாதி என்பது ரொம்ப காலமாக இருந்து வருகிறது. ரொம்ப காலமாக இருப்பதென்றால் நோய் முற்றிப் போனது என்று அர்த்தம். அது உடலை ஒன்றும் வாழ விடாது.

எவ்வளவு காலமாக இருப்பது ரொம்ப காலம் என்று பார்த்தால், இன்றைக்குச் சொல்லப்படுகின்ற ஜாதியின் பெயர்களை சில தோழர்கள் பழைய இலக்கியங்களான சங்க இலக்கியங்களில் தேடிப் பார்த்திருக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகின்ற இனம், குலம் என்று சொல்லும் எல்லாவற்றையும் எடுத்துப்போட்டால் கிட்டத்தட்ட ஒரு 80 - 90 பேர்கள் வருகின்றது, ஆனால் அதில் இன்றைக்கு நாம் குறிப்பிடுகின்ற எந்த ஜாதிப் பெயர்களும் இல்லை.

அப்போ ஒரு வேளை நாம் தமிழரா? இல்லையா? அல்லது சங்க இலக்கியம் நமது இல்லையா? இவர்கள் பெருமை பேசுகின்ற நெய்தல் நிலத்து தமிழர்கள் எல்லாம் தமிழர்களா? இல்லையா?. சங்க இலக்கியம் என்பது மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் என்று கூறப்படுகிறது,

அப்படியென்றால் ஜாதி என்பது 3-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் வருகிறது, அப்படியானால் இந்த ஜாதி பழமையானதா? அல்லது 3-ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய வாழ்க்கை முறை பழமையானதா? பழமையிலேயே எது மிகப் பழமையானது, என்று பாரத்தால் ஜாதிகள் இல்லாத சங்க காலத்து வாழ்க்கைப் பழமையானது.

 சரி அது பழமையானது என்பதற்காக அந்த பழமையை எடுத்துக்கொள்ள முடியுமா, இந்த இடத்தில் தான் தந்தை பெரியாரைப் பற்றியும் அவர் சொன்ன கருத்துக்களைப் பற்றியும் கடுமையான விமர்சனங்கள் வந்திருக்கிறது, எதிர்ப்புகளும் அவர் காலத்திலேயே வந்திருக்கிறது, அதற்கு என்ன காரணம் என்று சொன்னால் சங்க இலக்கியத்தில் பக்தியையும் காதலையும் விட்டுவிட்டால் வேறு என்ன இருக்கிறது என்று தந்தை பெரியார் கேட்டார்.

புலவர்களைப் பற்றி தந்தை பெரியார் சொன்ன கருத்துகளில் நிறைய பேருக்கு வருத்தமும் வந்தது. ஆனால் அவர்கள் என்ன விளக்கம் கொடுத்தார்கள் என்பது தான் முக்கியம், அய்யா அவர்கள் சொல்கிறார் இன்றைக்கு தொல்காப்பிய வாழ்க்கையை மீண்டும் கொண்டு வருவோம் என்கிறீர்களே, தொல்காப்பியப் பெருமையிலிருந்து எதை நிறுவப் பார்க்கிறீர்கள் என்று கேட்டார், இந்த இலக்கியங்களை எடுத்துக்கொண்டால் அதில் இரண்டு வகையான கருத்தியல் இருக்கிறது, ஒன்று எல்லா காதல் பாடல்களிலும் (சில நாட்களுக்கு முன்னர் கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் சார்பாக 4 புத்தகங்கள் வெளியிடப்பட்டன, அதில் நற்றிணை நயம் பற்றி ஒரு நூல், அதில் ரொம்ப முக்கியமானது, ஒரு பெண்ணின் புலம்பல், என்ன உங்கள் முதலாளி அங்கேயே இருந்துவிட்டாரா? என்று கேட்கும் ஒரு மனைவியின் வருத்தம் தான் அந்தப்பாடல். அந்த மனைவி கூறுகிறாள்.

"அவன் வரமாட்டான், ஏனென்றால் நான் குழந்தையைப் பெற்றுவிட்டு அதற்கான உணவு முறைகளால் நெய், பால் மணம் என் உடலின் மீது படர்ந்துள்ளதால் என்னை அவனுக்குப் பிடிக்காது, எனவே வர மாட்டான்;, பரத்தையின் வீட்டிலேயே இருக்கட்டும்' என்று அந்த இளம் பெண் புலம்புகிறாள்.

சங்க இலக்கியத்தை புகழுபவர்கள், அந்தப் பெண் தனது மகளாக இருந்தால், தனது தங்கையாக இருந்தால், என்கின்ற கேள்வி வரும் போது தான் ஒருவர் யோசிக்க முடியும், பரவாயில்லை பொறுத்துக்கொள் என்று சொல்லும் அப்பாக்களும் உள்ளனர். அதே சங்க இலக்கியப் பாடலை எப்படி ரசிக்கிறார்கள் என்றால் இவர் அவராக நினைத்துக்கொண்டு ரசிக்கிறார்,

அதே சங்க இலக்கியம் இயற்கையைப் பேசுகிறது, அறிவைப் பேசுகிறது, அறிவியலைப் பேசுகிறது, இன்றைக்கு நாம் பேசுகிற சுற்றுப்புறச் சூழலியலைப் பேசுகிறது.

நமது கணியன் பூங்குன்றனாரைப் பற்றி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடல் மூலம் அறிவோம். அவரது மற்றொரு நற்றிணைப் பாடலில் ஒரு கருத்து உள்ளது,

“மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்

உரஞ்சாச் செய்யார் உயர்தவம்”

என்பதாகும். ஒன்று மரத்திற்கு தீ வைக்க மாட்டான் மனிதன், மரங்களை அழிக்க மாட்டான். 2-வது உடல் உரம் அழிய தவம் செய்ய மாட்டான். உயர்ந்த மனிதன், நீ செய்யம் தவம் என்பது உனது திறமை, ஆற்றல், உடலோட ஆற்றல் அழியும் படி செய்யக்கூடாது. "வளம் குறைய பொன் வேண்டார் மன்னர்" என்கிறார், அப்படிஎன்றால் வரி மன்னனுக்குத் தேவை தான் ஆனால் மக்களைச் சாகடிக்கும் அளவிற்கு வரி வாங்குவது மன்னன் வேலை இல்லை. இப்பொழுது பேசினால் ஜி.எஸ்.டி.க்கு எதிராகப் பேசுவதாக வழக்கு போட்டுவிடுவார்கள். விவசாயிகளுக்கு உதவி இல்லை, வியாபாரிகள் சாகிறார்கள் அவர்களுக்கு வழி இல்லை, முன்னர் சொன்ன கணக்குப்படி இந்தியா முழுக்க 18 பணக்காரர்கள், இப்பொழுது குஜராத்தில் மட்டுமே 10 பணக்காரர்கள், அவர்களுக்காகவே ஒரு ஆட்சி நடக்கிறது. மன்னர் இப்படி இருக்கக் கூடாது. ஆகவே பழமையிலும் சரியானதை அறிய வேண்டும்.

இதற்கு முன்னால் ஒரு பழமை உள்ளது, பார்ப்பனர் போற்றும் பழமை, சங்க இலக்கிய பழமையில் நம் தம்பிகள் தான் வருவார்கள். அதற்கும் முன்னால் போனால் அவாள் வந்து நிற்பார்கள். அந்தப் பழமை எதுவரை என்று பார்த்தால் வேதங்கள் வரை போகிறது, அது தான் அவர்களைப் பொறுத்த வரை இந்தியாவின் பழமை.

இந்த வேதங்களுக்கு முன்னால் இருந்த பழமை சிந்து சமவெளி நாகரிகம்.

முதலில் ஜாதி பழமையானது என்றால், அதற்கு அதாவது ஜாதிக்கு முந்தைய பண்பாடு சங்க இலக்கியம். அதில் இந்த ஜாதியே இல்லை, அன்று மாடு மேய்ப்பவர் யாராக இருந்தாலும் அவர ஆயர் என குறிப்பிடப்பட்டார். அவரின் மகள் ஆயர் மகள் என்று சொல்லப்பட்டார். குறவஞ்சி என்றால் மலைப் பகுதியில் வாழ்ந்தவர் குறவர். மலையில் வாழ்ந்த முருகன் குறத்தியான வள்ளியைக் கல்யாணம் செய்திருந்தால் அது இயற்கையானது. அவர்கள் அந்த நிலத்தின் தலைவன் தலைவி என்று சொல்லப்பட்டிருக்கும். அந்த முருகன் சுப்பிரமணியன் ஆனது தான்முரண்பாடு. இதற்கு முன்னர் முருகனுக்கு தேவலோகத்தில் ஒரு கல்யாணம் செய்திருக்கிறார்கள். ஏன் என்றால் மலையிலிருந்து தேவலோகம் பக்கம், தேவலோகத்தில் தேவயானையுடன் திருமணம். தேவலோகம் போனார், தேவயானையை மணந்தார் சுப்பிரமணியன் ஆனார் என்று ஒரு கதை.

அதேபோல அந்தக் கால வேதத்தில் இன்றைக்கு இருக்கும் எந்த கடவுளும் இல்லை, யாகங்கள் பற்றி எழுதப்பட்டு இருக்கிறது. கொழுத்த மாடுகளை கொழுந்து விட்டு எரியும் தீயில் இறக்கி விட்டு, நெய்யிட்டு வடியும் ஊண், சுற்றி நின்ற அந்த வேத கால மனிதர்களால், சுவைத்து உண்ணப்பட்டன. அப்பொழுதும் சுவாஹா என்று சொல்லிக்கொண்டு தீயில் போடுவதும். சுவாஹா என்று பங்கிடுவதை சொல்லிவிட்டு உண்ணுவதும் அன்று முதல் உள்ளது. ஆனால் இன்று அதற்கு வேறு விளக்கங்களைச் சொல்கிறார்கள். யாகத்தில் தீயில் இருப்பது மாடல்ல. உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை எப்படி பலி கொடுப்பது என்கிறார்கள். மனதில் இருக்கும் எண்ணங்களைப் பலி கொடுப்பதற்கு நெய் வேண்டுமா, உப்பு மிளகாய் சேர்ப்பீர்களா? என்று கேட்டால் மனம் புண்பட்டு விடுகிறது.

வேதம் தான் பழமையா, என்று பார்த்தால் அதற்கு முன்னாடி சிந்து சமவெளி நாகரிகம் இருக்கிறது. அதை ஏன் பார்ப்பனர்கள் இந்த நாட்டின் பழமை என்று சொல்வதில்லை? இந்த நாகரிகத்தை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு என்ன தயக்கம்?

இது வரையில் கிடைத்துள்ள கீழடி ஆய்வு அகழ்வாய்வுப் பொருட்கள், சிந்து வெளி நாகரிகத்தினுடைய பொருட்கள், இவை எதிலும் இந்து மத அடையாளம் இல்லை. அவர்கள் நாகரீகமாக வாழ்ந்துள்ளனர். ஆனால் அவர்களிடம் மத அடையாளம் இல்லை. உன்னை விட சிறந்த நாகரிகம் கொண்டு வாழ்ந்த மனிதனிடம் (எங்கள் முன்னோரிடம்) இந்த மத அடையாளம் இல்லை. உங்கள் கடவுள்களின் அடையாளம் இல்லை என்பதால் எங்கள் பழமையை மறுக்கிறவன் தான் எங்களிடம் வந்து பேசுகிறான் நீங்கள் பழமையை மதிக்க மாட்டேன்கிறீர்கள் என்கிறான்.

அவர்களுடைய பிரச்சனை எது பழமை என்பது அல்ல, அவர்களுக்கு எது உதவும் என்பது தான். தனக்கு வேண்டியதை நிறுவுகின்ற ஒரு சதிகார கூட்டம் இந்த நாட்டில் எல்லா அறிவுத் துறைகளிலும் இருக்கிறது. அறிவுத் துறை முழுக்க அவர்கள் கையில் இருக்கிறது. இந்த ஆராய்ச்சியைத் தான் அவன் என் வரலாறு என்று சித்தரிக்கப் பார்க்கிறான்.

மறைந்த ஐராவதம் மகாதேவனைப் பற்றி நிறையப் பாராட்டி சொல்லியிருக்கிறார்கள். அவரது பணியை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர் ஏன் அந்த கல்வெட்டு எழுத்துக்கு தமிழ் பிராமி என்று பெயர் வைத்தார். இந்த அடிப்படையில் பகுத்தறிவாதியாகிய நாம் எதை எப்படி பார்க்க வேண்டும்.

அது பழமையானது என்பதற்காக ஏற்க முடியாது, அந்த பழமையில் சிறந்தது இருக்குமானால் நாம் அதை ஏற்றுக்கொள்வோம்.

அப்படியே வாழ வேண்டும் என்பதற்காக அல்ல.

டாக்டரிடம் போகிறோம், உங்களுக்கு சரக்கரை இருக்கிறதா என்று டாக்டர் கேட்கிறார். இல்லை என்றால், உங்கள் அப்பா அம்மாவிற்கு இருந்ததா என்கிறார் இல்லை என்கிறோம். அவர்களுடைய அப்பா அம்மாவிற்கு இருந்ததா என்கிறார். அவர்களுக்கு இருந்தால் நமக்கும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும் நமது வரலாறு தேவை என்பதற்காகக் கேட்கப்படும் கேள்வி. ஒரு நோய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் இந்த நோய் எத்தனை தலைமுறையாக இருந்து வருகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும், நாம் வலிமையானவர்களாக இருந்தால் நமது பண்பாட்டில் என்ன கூறுகள் இருந்தன. என்பது ஒரு உதவித் தகவல் மட்டுமே.

அந்த தகவலால் பெரிய உயர்வோ, புனிதமோ, பெருமையோ கிடையாது, அது வெறும் தகவல் தான்.

அந்தத் தகவலை ஆய்வுக்கு உட்படுத்துங்கள். இதைத் தான் தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார். அண்ணா அவர்கள் உலகத் தமிழ் மாநாடு நடத்தியபொழுது பெரியார் மூன்று நாட்கள் விடுதலையில் கட்டுரை எழுதி அதைக் கண்டிக்கிறார். இப்படியெல்லாம் கொண்டாடி ஒரு மொழியைக் காப்பாற்ற முடியாது என்று கண்டிக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, பழைய இலக்கியத்தைப் பற்றி எல்லாம் இவ்வளவு சொல்கிறோமே அதைப்படிக்க வேண்டுமா என்றால், கண்டிப்பாகப் படிக்க வேண்டும். தெரிந்து கொள்ள வேண்டும். அய்யா சொல்கிறார் "அதிலேயே மனதை இழந்துவிடக்கூடாது" என்கிறார்,

தமிழைப் படிக்க வேண்டும், எதைப் பாடமாக வைக்க வேண்டும், நாங்கள் படிக்கும் பொழுது இனியவை நாற்பது, இன்னா நாற்பது, மூதுரை, திரிகடுகம், நாலடியார், போன்ற நல்ல கருத்துடைய இலக்கியங்கள் பாடமாக வைத்திருந்தனர். அவற்றையெல்லாம் ஒழித்துவிட்டு கம்பராமாயணத்தில் 4 பாட்டும் பெரிய புராணத்தில் 4 பாட்டும் வைத்தால் தமிழ் வாழ்ந்துவிடும் என்று நம்புகிற மடமையை எப்படி நாம் பாராட்டுவது என்பது தான் தந்தை பெரியாரின் கேள்வி.

புராணங்களைப் பாராட்டுகிறவர்கள் நாலடியாரையும் திரிகடுகத்தையும் பாராட்டுவது கிடையாது, அது சமண முனிவர்களுடையது, தமிழர்களான பொழுதும் சமணர்கள் எழுதியது என்ற பாகுபாடு, எதிலும் இந்து மதத்தின் கூறுகள் இருந்தால் தான் அது பழமை, மூடநம்பிக்கைக்கு ஏதாவது இருந்தால் தான் அது பழமை, மற்ற பழமையை அவர்கள் ஏற்பது இல்லை.

நாம் அப்படி இல்லை. நாம் வரலாற்றின் வழியாக பழமையைப் படிப்போம். பழமையிலிருந்து பாடமும் படிப்போம். பழமை என்பதற்காக ஒன்றை நிராகரிக்க வேண்டியது இல்லை. பழமை என்பதற்காக ஒன்றை புனிதம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதும் இல்லை, என்று உணர்வது தான் பகுத்தறிவு.

அந்த அடிப்படையிலே அய்யா அவர்கள் எழுதும் பொழுது ஆத்மாவைப் பற்றிக்கூட ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி இருக்கிறார். இதெல்லாம் சுயமரியாதைக்காரருடைய வேலையா என்று ஒரு கேள்வியை தோழர்களே எழுப்பினார்கள். அந்த கேள்வியை எல்லாம் ஒதுக்கிவிட்டு "நாம் வேலையை பார்ப்போம்" என்று பெரியார் கூறுகிறார்.

வருங்கால அறிவியலையும், சமகால அரசியல் சூழ்நிலையையும் பழங்கால வாழ்க்கை வரலாறுகளையும் ஒரு சேர ஆய்வுக்கு உட்படுத்தி அதற்குரிய இடத்தைக் கொடுத்து ஆய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் தான் பகுத்தறிவாளர்களுடைய வேலை.

நன்றி வணக்கம்.

Pin It