சில நேரம்
நின்று ரசிக்கிறாய்

சில நேரம்
கண்டு நகைக்கிறாய்

சில நேரம்
வென்று சிலிர்க்கிறாய்

சில நேரம்
கொன்று வதைக்கிறாய்

சில நேரம்
கனிந்து குழைகிறாய்

சில நேரம்
கடிந்து நகர்கிறாய்

சில நேரம்
காணாது போகிறாய்

சில நேரம்
கால் நோக காத்திருக்கச் செய்கிறாய்

சில நேரம்
மடி சாய்க்கிறாய்

சில நேரம்
மனம் நோகிறாய்

உன்னை அப்படியே
ஏற்றுக் கொள்ளும்
ஆனந்தத்தை
ஒருபோதும் ஒருவருக்கும்
தரப் போவதில்லை

மெனக்கெடலில்
மாறிடும் சாயலை
ஒருபோதும் அனுமதியேன்.

நினைக்கும் போது வா
தோன்றும் போது பேசு
உரக்கச் சிரி
விசிலடி
கைகள் பற்று
கண்ணீர் சிந்து
முத்தமிடு
மோகக்கனல் ஏற்று
மடி சாய்
இடை பிடி
அள்ளி அணை
கைரேகை சேர்த்துக் கொள்.

நீ நீயாயிரு
சுழித்தோடும் நதியாய்
ஆர்ப்பரிக்கும் அருவியாய்....

- இசைமலர்

Pin It