வெளிச்சம் உமக்கு அப்பம்
இருளே எனக்கு நுட்பம்
அறிவின் சுவடுகள்
இயல்பிலிக்கிறது
அறிந்தவன் சொல்கிறேன்
இசைபட காத்திருக்கும்
சருகும் தவம் தான்
சாத்திக் கொண்ட கதவுக்குள்
வெளி காண்பது சிற்பம்
ஆருயிர் கவனித்தலில்
நாள் ஒன்று கூடும்
நிலமற்ற போதும் நீர் உண்டு
வாழும் தீவு என்னுள்
உடைந்து நொறுங்குதலோடு
உன்னதம் செய்கிறேன்
கவனிக்க இயலுதா
உண்மை பொய் எனக்கேது
தூரம் வரும் சிறகுக்கு
தூக்கம் இருக்காது
அநியாய அன்புக்குள் அசரீரி
என் மௌனம்
வெறுங் கூச்சல் விளையாடி நீ
காகித கப்பலில் பயணங்கள்
கடை வீதி வரை தான்
கவனித்து நிதானித்து கடக்காமலும்
நின்று விடுவேன்
நானொரு யாத்ரீகன்
நீ வெறும் பயணி

-கவிஜி

Pin It