எனக்கான உணவை நானே
சமைத்து..
என்னோடு நானேமர்ந்து
உணவருந்தி..

என்னை நானே பார்த்துக்கொண்டு...

எனக்குள் அழுது
என்னை நானே ஆறுதல்படுத்திக்கொண்டு

எனக்குள் சண்டையிட்டு
பின்னோர் பொழுதில் சமாதானங்கள் செய்துகொண்டு
அவ்வளவு
வெறுப்பாயிருக்கிறது..

எப்போதுமல்ல
எப்போதாவது
யாராவது உடனிருக்க
வேண்டும் போலிருக்கிறது.

என்னோடு தேநீர் தயாரித்து
என்னோடு இருந்து அருந்த...

நிமிடத்தில் தோன்றுகிற
நினைவுகளை கொஞ்சம்
கொஞ்சமாய் பகிர்ந்து கொள்ள...

என் அன்பின் கனம்
தாளாது
களைத்துப் போக..

அணையாதெரியும்
அறைவிளக்கை
திட்டிக் கொண்டே
அணைத்து அகல...

எடுத்ததை
எடுத்த இடத்தில்
வைக்காது
இரைந்து கிடக்கிற பொருளை அதனிடம் சேர்த்திட...

சொன்ன நேரத்தில்
திரும்ப இயலாது
பணி அழுத்த
வீடடையும் வேளைகளில்
தேற்றியணைக்க...

எப்போதுமல்ல
எப்போதாவது
யாராவது
உடனிருக்க வேண்டுமெனயிருக்கிறது

தனித்திருக்கிறோம்
என்கிற உணர்வே
மூர்ச்சையடையச் செய்கிறது

அடைத்த வீட்டை
தனித்து திறப்பதைப் போல்
துயரெதுவுமில்லை....

தவிர்த்தமர்கிற
வேளைதனில்
தலைகோதிட...
எப்போதுமல்ல
எப்போதாவது
யாராவது
உடனிருக்க வேண்டும்போலிருக்கிறது.

தனக்குத்தானே
உணவிட்டு
தனக்குத்தானே
தாகந்தணித்து
தனக்குத்தானே
தோற்று
தவித்து தணிந்து
இருப்பதெனக்கு
அசதியாயிருக்கிறது.

எப்போதுமட்டுமல்ல
எப்போதாவது
யாரேனும்
உடனிருக்க வேண்டுமெனயிருக்கிறது.

-இசைமலர்

Pin It