நான்கு மாதம் தாண்டியும்
அடுப்பெரித்து
கொண்டிருப்பது
தாத்தா பாட்டியின்
உழைப்பால்தான்
ஒரு வேளை சாப்பாடு செய்து
கொடுக்கும் அடுப்பிற்கு
லாக்டவுனைப் பற்றிய
அக்கறை அதிகமாகவே இருந்தது
எதைப் பற்றியும் கவலைப்படாத
ஆடுமேய்க்கும் தாத்தா
சுள்ளிகளைப் பொறுக்கி
கருவேலங்காடுகளின்
வழிப்பாதையெங்கும்
ஈரக்குச்சிகளை இழுத்து வந்தார்
அவரால் இப்படித்தான்
எழுத முடியும் தன் வறுமையை
அவர் பின்னால் வந்த
ஒற்றை ஆடொன்று
வழிப்பாதையின் கோட்டில்
ஆங்காங்கே முற்றுப்புள்ளி
வைத்தது
துயரம் மிகுந்த வாழ்வை
காலநதியில் கரைத்தவாறே
களைப்படைந்த தாத்தாவிற்கு
மழையில் நனைவது
பிடிக்கவில்லை
வீடு சேர்ந்த தாத்தாவை
முறைத்துப் பார்த்த பாட்டியின்
கனவுகளில் எரிந்தது அடுப்பு..
அடுக்கு சட்டியைத் திறந்துபார்த்து
வெறும் குரலை உரக்கச்சொன்னது
தாத்தாவின் ஆழ் மௌனங்கள்
அவதானிப்போடு மழையிடம்
அரிசி கேட்டு கை நீட்டினார் தாத்தா
கையில் பட்டு தெறித்த நீர்த்துளிகளை
அரிசியாக நினைத்து ஆனந்தப்பட்டார்
விறகு அடுப்பின் பாத்திரத்தில்
நிரம்பி வழிந்தது அந்தத் துளிகள்
மழை நிரம்பிய பாத்திரத்தை
நோக்கி தொடர்புள்ளியோடு
விரைந்து வந்தது அவரைப்
பின் தொடர்ந்த ஆடு.

- ப.தனஞ்ஜெயன்

Pin It