இரவு நேரங்களில்
பூதமாய் மிரட்டிக் கொண்டிருந்தது
அந்த பைத்தியக்காரியின் அலறல் சத்தம்;
பயமின்றி நடமாடித் திரிவதால் அவள்
பக்கத்தில் வருவதில்லை
எவரொருவனும்

முன்னொரு பொழுதில்
வேகங்குறையாமல் உழைக்கத் துணிந்தவளை
சேரியோர கள்ளியென நினைத்து
ருசிபார்க்கத் துணிந்தது அய்யாவீட்டு காளைகள்
மாட்டையடித்து கூறுபோடுகிறவளென தெரியாது
செவக்காட்டுக் கரையில் வழிமறைக்க
பேரிருட்டில் பெருங்குரலெடுத்து
கதறித் துடித்தது எஜமானியின் வாரிசுகள்

தொட்டணைத்த கைகளை
சட்டென வெட்டியெறிந்துவிட்டு
புறமுதுகிட்டு ஓடாது
இரு கைகளையும் வீசி நடந்தாள்
பைத்தியக்காரியென பிரகடனப்படுத்தியது
ஊர்ப் பஞ்சாயத்து

இன்றும்
பயமறியா பைத்தியக்காரியாய்
ஒற்றையடிப் பாதையை கடந்து போகிறாள்
இருளோடு பரவியலைகிறாள்...
இருள் அவளோடு சேர்ந்தலைகிறது...

- வழக்கறிஞர் நீதிமலர், மதுரை

Pin It